Published:Updated:

ஆறாம் திணை - 27

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 27

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
ஆறாம் திணை - 27
##~##

குதிரைவாலி இனிப்புப் பொங்கல், காட்டுயான அரிசிச் சோறு, நாட்டுக் கோழி கறிக்குழம்பு, ஆவாரை சாம்பார், கொள்ளுப் பொடி, கடலைத் துவையல், நாட்டு வெண்டைக்காய் பொரியல், தூதுவளை ரசம், 60-ம் குருவை அரிசியில் தயிர்ச்சோறு... சமீபத்தில் இப்படி ஒரு விருந்தை, பாரம்பரிய விவசாயத்தில் அதீத அக்கறைகொண்ட நண்பர் ஒருவரின் இல்லத்தில் சாப்பிட வாய்ப்பு கிடைத்தது. அண்மை நாட்களில் இவ்வளவு சுவையான ஒரு விருந்தை நான் சாப்பிட்டது இல்லை. என்னோடு வந்த இன்னொரு மருத்துவர், 'இத்தனையையும் சமைக்க எவ்வளவு நேரமாகும்? இந்தப் பொருட்களை எங்கெல்லாம் தேடிச் சென்று வாங்கினீர்கள்? இது எல்லாருக்கும் சாத்தியமா?’ எனக் கேள்விகளாக அடுக்கினார். அதற்கு விருந்தளித்த தம்பதி சொன்ன பதில் ஆச்சர்யமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''குதிரைவாலிக்கு என்றோ, 60-ம் குருவை அரிசிக்கு என்றோ தனியாக மெனக்கெட வேண்டியது இல்லை. மாதம் ஒரு நாள் இந்தத் தானியங்கள் விற்பனை செய்யும் சிறு வணிகரிடம் பெறுகிறோம். வெண்டைக்காயையும், தூதுவளைக் கீரையையும் வீட்டுத் தொட்டியில் சமையலறை மிச்சங்களை உரமாக இட்டு வளர்க்கிறோம். சொல்லப்போனால் இந்த விருந்துக்காக நாங்கள் செலவிட்ட நேரமும் பணமும் குறைவு. ஆனால், பாரம்பரியத்தைச் சமைக்கும்போது, தொலைந்துவிட்ட கிராமத்துக் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து சாப்பிட்ட நிலாச் சோறு நினைவுக்குவருகிறது. அந்த ருசியான, ஆரோக்கியமான உணவு நம்மை மட்டும் மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை. அதற்கென எள்ளளவும் உரமிடாததால், பூச்சிக்கொல்லி விஷம் தெளிக்காத தால் மண் மகிழ்ந்திருக்கும்; மண்ணுக்குள் பொதிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள், 'எங்களைக் காயப்படுத்தாத உணவு’ எனக் களிப்படைந்திருக்கும். அந்தச் சிறுதானியமும் மரபரிசியும் விளைவித்த விவசாயியின் முகம் மலர்ந்திருக்கும். நம் மரபோடு இணைந்திருக்கும் உணவைப் பார்த்ததில், உடலின் கோடானுகோடி நுண்ணுயிர்கள் மகிழ்ந்திருக்கும்!'' என்ற அவர்களின் பதிலில் ஒளிந்திருக்கும் சமூக அக்கறை, சூழல் கரிசனம், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஏன் இல்லை?

ஆறாம் திணை - 27

சிறுதானியச் சமையல் என்றாலே, 'அதற்கு அனுபவம் வேண்டும்’ என்றோ, 'சமைத்தால் நன்றாக வருமா?’ என்றோதான் சந்தேகம் எழுகிறது. சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி. பெண்கள் கிளப், 'சிறுதானியச் சமையல் போட்டி வைத்திருக்கிறோம். நீங்கள் நடுவராக வர முடியுமா?'' என்று கேட்டபோது, 'அட... ராக்கெட், நானோ துகள், ஸ்டெம் செல் என்றுதானே இவர்கள் பேசுவார்கள்? கொள்ளும் குதிரைவாலிபற்றியும் இவர்கள் எந்த அளவுக்கு அறிந்திருப்பார்கள்?’ என்ற சந்தேகத்துடன்தான் சென்றேன். ஆனால், அந்தப் போட்டியும் அதில் அவர்களின் பங்களிப்பும் எனக்குப் பெரும் வியப்பளித்தது.

வரகு அரிசியில் டோக்ளா, தினை அரிசியில் ஆஸ்ட்ரிச் எக், குதிரைவாலியில் ஃபலூடா, சாமை அரிசியில் அம்ப்ரோசியா கஞ்சி, இன்னும் கோஃப்தா, கொழுக்கட்டை, தட்டை, பர்ஃபி, அல்வா என அவர்கள் முழுக்க முழுக்கச் சிறுதானியங்களைக்கொண்டே அசத்தியிருந்தார்கள். கடைசியில் யாருக்குப் பரிசளிப்பது என நான் திக்குமுக்காடிவிட்டேன். சிறுதானியங்களை அதன் மருத்துவ, உணவியல் தன்மை சிறிதும் மாறாமல், கூடுதல் சுவையுடன், கண்ணுக்கு அழகாக அலங்கரித்து அவர்கள் பரிமாறியிருந்த விதம், நாளை இந்த உலகை சிறுதானியங்கள் ஆளும் என்ற நம்பிக்கையை எனக்குள் உருவாக்கியது.

ஆறாம் திணை - 27

அதே சமயம், இப்போது நான் அடிக்கடி எதிர்கொள்ளும் இரண்டு கேள்விகள்... 'அடிக்கடி நீங்கள் கம்பு, குதிரைவாலி, தினை, ஆர்கானிக் காய்கறிகள் எனப் பேசுகிறீர்கள். ஆனால், அவை எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லையே?’ இன்னொன்று, 'அவை விலை மிகவும் அதிகமோ?’ என்பது. இரண்டு கேள்விகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. காலையில் கம்பு தோசையும் கடலைச் சட்னியும், இரவில் மாப்பிள்ளைச் சம்பாவில் சோறும்தான் சாப்பிடுவோம் என இனி எல்லோரும் அடம்பிடிக்க ஆரம் பித்தால், எல்லோருக்கும் இனி எல்லாம், எப்போதும் விலை மலிவாகக் கிடைக்கும். அதுதான் வணிக ம(த)ந்திரம். ஆஸ்திரேலிய ஓட்ஸும், ஆப்பிள் ஐபோனின் லேட்டஸ்ட் வெர்ஷனும், நெதர்லாந்து சீஸும் தெருமுக்குக் கடையில் கிடைக்கும்போது, நம்மோடு 2,000 வருடங்களாகப் பயணிக்கும் கேழ்வரகும் நாட்டுக் கத்தரிக்காயும் கிடைக்காமல் போவது யார் தவறு? அதற்கு யார் காரணம்? இதை யோசிக்கும்போதுதான் இதற்குப் பின்னால் இருக்கும் திட்டமிடப்பட்ட பன்னாட்டு வணிகச் சூத்திரங்களும் சூழலைச் சிதைத்து பூவுலகின் ஒரே தாதாவாகிவிட நினைக்கும் பேராசைப் பெருநிறுவனங்களின் அரசியலும் விளங்கும்.

வங்காரி மாத்தாய்... அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற கறுப்பின சுற்றுச்சுழல் போராளி. அவரது நோபல் பரிசு உரையைச் சமீபத்தில் படித்தேன். 'எங்கள் வீட்டின் அருகில் இருந்த ஓடையில் இருந்து அம்மாவுக்காகத் தண்ணீர் பிடித்து வரும் சிறு வயது அனுபவத்தை இந்த உரையில் நினைவுகூர்கிறேன். அப்போதெல்லாம் நேரடியாக நான் ஓடையில் இருந்து தண்ணீர்

ஆறாம் திணை - 27

குடித்திருக்கிறேன். அரோரூட் இலைகளுக்கு இடையில் விளையாடியவாறு, மணிகள் என நினைத்து தவளைகளின் முட்டைகளை எடுக்க முயற்சி செய்வேன். ஆனால், ஒவ்வொரு முறையும் நான் எனது சிறு விரல்களை அதன் மீது வைக்கும்போது அது உடைந்துவிடும். பிறகு, ஆயிரக்கணக்கில் தவளைக் குஞ்சுகளைப் பார்ப்பேன். கறுப்பு நிறத்தில் உற்சாகத்தோடு தண்ணீரின் ஊடாக அவை கடந்து செல்லும். என் பெற்றோரிடமிருந்து நான் பெற்ற உலகம் இதுதான். இன்று சுமார் 50 வருடங்கள் கழித்து, ஓடைகள் காய்ந்துவிட்டன. தண்ணீர் பிடிக்கப் பெண்கள் வெகுதூரம் நடக்க வேண்டியிருக்கிறது. அப்படிப் பிடிக்கும் தண்ணீரும் எப்போதும் சுத்தமாக இல்லை. குழந்தைகளுக்கு தாங்கள் எதைத் தொலைத்தோம் என்பதே தெரியவில்லை. தவளைக் குஞ்சுகளின் வீடுகளை மீட்டெடுத்து நமது குழந்தைகளிடம் எழிலும் அதிசயமும் நிறைந்த உலகத்தை ஒப்படைப்பதுதான் நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால்!’ வங்காரி மாத்தாயின் இந்த சொற்கள்தான் நமக்கான சவாலைச் சமாளிப்பதற்கான சூத்திரமும் கூட!  

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism