
##~## |
நாகு பற்றி கிருபா சொன்னது நினைவில் புரண்டது. கத்தி வீசுவதிலும் வெடிகுண்டு வைப்பதிலும் ஒலிம்பிக் தேர்ச்சி. 27 கொலைகள் பண்ணியதாக வரலாறு. எனவே, 'நாக் அவுட் நாகு’ என்ற பட்டப் பெயர். எந்தக் காவல் நிலையத்திலும் அவன் மீது எந்தக் குற்றப்பத்திரிகையும் இல்லை. அவ்வளவு அரசியல் செல்வாக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆதிமூலத்துக்கு நாகு செக்யூரிட்டி என்றால், நாகுவின் தம்பி அவனுக்கு ஒரு பாதுகாப்பு. அவனும் ஒரு டஜன் தலைகள் வாங்கியவன். நாகுவை இன்னும் நெருக்கமாகப் பார்க்க விரும்பி, பாரி தெருவைக் கடக்க முதல் அடி எடுத்துவைத்ததும், அந்தப் பேரொலி கேட்டது. இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய தொமேல் ஓசை!
திரும்பிப் பார்த்தான். தெருத் திருப்பத்தில், ஒரு ஸ்கூட்டி சரிந்திருந்தது. அதன் அடியில் இருந்து சுரிதார் போட்ட கால் நீண்டிருந்தது. கீழே கிடந்த இளம்பெண் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயல, அவள் மீது விழுந்திருந்த ஸ்கூட்டியின் பாரம் அவளைத் தடுத்தது. பக்கத்தில் மோதிய ஆட்டோ. அவளிடம் ஓட்டுனர் இளைஞன் கத்திக்கொண்டு இருந்தான்.
'கண்ணு தெரியல..? டர்னிங்ல இவ்ளோ வேகமா வர்ற? பாரு, பாடி எப்படி நசுங்கிப்போச்சுனு. சேட்டு என்னை இல்ல தாளிப்பான்! உங்கப்பனா குடுப்பான் துட்டு..?'
பாரி ஒரே எட்டில் அந்த இடத்தை அடைந்தான். ஆட்டோ டிரைவரின் சட்டையைப் பிடித்து உலுக்கினான்.
'அறிவிருக்காய்யா உனக்கு..? விழுந்துகிடக்கறவங்களைத் தூக்காம வெசவு பாடிட்டு இருக்க?'
குனிந்து ஸ்கூட்டியை நிமிர்த்தினான். முகத்தில் வலிச் சுழிப்புடன் அவள் கையூன்றி எழுந்தாள். தார் ரோட்டில் உராய்ந்து, ஆடை அங்கங்கே கிழிந்திருந்தது. சிராய்ப்பும் ரத்தக் கோடுகளும் தென்பட்டன.

'த பார்றா... வன்ட்டாரு ஹீரோ! அப்ப நீ குடு துட்டு...' என்று ஆட்டோ இளைஞன் நெஞ்சை நிமிர்த்த, பாரி பொளேரென்று அவன் கன்னத்தில் அடித்தான்.
'தாறுமாறா ஓட்டிட்டு வந்தவன் நீ. ஸ்கூட்டியை ரிப்பேர் பண்ண நீ கொடுக்கணும் காசு. மவனே, நிக்காம ஓடிப்போ.'
உடற்பயிற்சி மையத்தில் இருந்த இளைஞர்கள் ஒன்றிரண்டு பேர், வாக்குவாதத்தைக் கவனித்து, 'என்னா பிராப்ளம்..?' என்று அங்கிருந்தே குரல் கொடுக்க...
'கூட்டமா வந்துருவானுங்க, நாயம் பேசினு...' என்று முணுமுணுத்துக்கொண்டே, ஆட்டோ சரக் என்று கிளம்பிப்போனது.
இப்போதுதான் பாரி அந்தப் பெண்ணை முழுமையாகப் பார்த் தான். அவனுடைய தோளுயரம் இருந்தாள். அழகான, திருத்தமான முகம். புருவங்களைச் செதுக்கி, வடிவமைத்து இருந்தாள். நேரான நாசி. ஆரஞ்சுச் சுளை உதடுகள். கட்டான உடலமைப்பு. கழுத்து நீளம் மட்டும் சற்றுக் குறைவாக இருந்திருக்கலாம். நிமிர்த்திய ஸ்கூட்டியை அவனிடம் இருந்து வாங்கிக்கொண்டாள்.
'தேங்க்ஸ்...' என்றாள். 'பக்கத்துலதான் மெக்கானிக் ஷாப். விட்டுட்டு வீட்டுக்குப் போயிருவேன்...' என்று வண்டியைத் தள்ளப்பார்த்தாள். அது நகரவில்லை.
'ஹேண்டில்பார் பெண்டு ஆயிருச்சு... நான் தள்ளிட்டு வரேன்' என்று பாரி பொறுப்பெடுத்துக்கொண்டான். ஸ்கூட்டியைச் சற்று சாய்த்தவாறு தள்ளியபடி அவளுடன் நடந்தான். அவள் சற்றே விந்தினாள்.
'ரொம்ப அடிபட்டுருச்சா..? ஒரு ஆட்டோ பிடிக்கவா..?'
'வேணாம்... சின்ன சிராய்ப்புதான்... பக்கத்துல தான் வீடு... போய்டலாம்.'
ஒலிபரப்புகளிலும் தானியங்கித் தொலைபேசி அறிவிப்புகளிலும் கேட்டால் சுகமாக இருக்கக்கூடிய குரலாக, அவளுடைய குரல் வசீகரமாக இருந்தது. 'நீங்க இந்த ஏரியாவா..?'
'இல்ல... ஒரு ஃப்ரெண்டைப் பார்க்க வந்தேன்' என்ற பாரி, 'உங்களை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கு?' என்றான்.
'பார்த்திருப்பீங்க... நிறைய சினிமால பார்த் திருப்பீங்க.'
'ஓ... நடிக்கறவங்களா?'
'நடிகையா இருந்தா பேரோட ஞாபகம் வெச்சிருப்பீங்களே? கதாநாயகிக்குக் கனவு வந்தா, எங்களைப் பாக்கலாம்... க்ரூப் டான்ஸர்.'
'சூப்பர் ஸ்டார் கூட ஆடி இருக்கீங்களா?'
' 'சந்திரமுகி’, 'சிவாஜி’, 'எந்திரன்’...'
'ரொம்ப லக்கி நீங்க...'
போக்குவரத்து இரைச்சலாக அவர்களைக் கடந்துசென்றது.
'என் பேரு தேவி.'
அந்தக் கணத்தில் பாரியின் இதயத்தில் ஒரு தேனூற்று பீறிட்டது.
'என் பேரு பாரி...' என்று முணுமுணுத்தான்.
சட்டென்று அவளை விட்டுப் பிரிந்துபோக மனம் வரவில்லை. எத்தனையோ வலிமையான ஆண்களைத் தைரியமாக எதிர்கொண்ட அவன் கண்கள் தழைந்தே இருந்தன.
'உங்களுக்குக் கால்ல அடிபட்டு இருக்கு... வீட்ல விட்டுட்டுப் போறேன்.'
'நீங்க ஐ.டி. கம்பெனி... கரெக்ட்?'
பாரி திடுக்கிட்டான். 'எதைவெச்சு சொல்றீங்க..?'
'உங்க லுக். முகத்துக் களை. நீங்க போட்டிருக்கற டிரெஸ். பெரிய படிப்பு முடிச்சிட்டு...'
பாரி புன்னகைத்தான். 'தப்பு... நான் காலேஜ்லாம் படிக்கல.'
'பின்ன..?'
'தொழில் செய்றேன்.'
'தொழில்னா..?'
என்ன பதில் சொல்வது என்று பாரி திகைத்தான்.
- தடதடக்கும்...