Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி
##~##

வித்தியாசமான ஓர் இலக்கை நோக்கமாக வைத்துச் செயல்படும் லாப நோக்கமற்ற ஒரு நிறுவனத்தை இந்த வாரத்தில் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தபடியே இருந்தாலும், இன்னும் தேவையான அளவுக்கு புரொகிராமிங் செய்ய ஆட்கள் கிடைப்பது இல்லை என்பதே உண்மை. கணினித் தொழில்நுட்பம் படித்தவர்கள்தான் புரொகிராமிங் செய்ய இயலும் என்ற  தவறான எண்ணம் ஒரு முக்கியக் காரணம். இதைக் களைய வேண்டுமானால், குழந்தைகளின் தொடக்க நிலைப் படிப்பு அளவிலேயே புரொ கிராமிங் என்பது சேர்க்கப்பட வேண்டும். கணிதம், வரலாறு, அறிவியல் என்பதோடு புரொகிராமிங் அடிப்படைப் பாடமாக இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேற்படி நோக்கத்தைக்கொண்ட CODE  நிறுவனம் சமீபத்தில் தங்களது நிறுவனத்தின் இலக்கின் முக்கியத்துவத்தைப் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. பில் கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க் போன்ற டெக் பிதாமகன்களோடு இசை, விளையாட்டு எனப் பல துறைகளிலும் உள்ளவர்கள் புரொகிராமிங்கின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சுருக்கமாகப் பேசுகிறார்கள். வீடியோவின் உரலி: http://youtu.be/nKIu9yen5nc

நிறுவனத்தின் வலைதளம் இன்னும் பயனுள்ளதாக இருக்கிறது. அதில் இருக்கும் Codecademy என்ற பகுதியில் இது வரை புரொகிராமிங் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கற்றுக்கொள்ள வசதி இருக்கிறது. ஒரு விசிட் அடியுங்களேன்... www.code.org/learn/codecademy

அறிவிழி

இந்த வாரத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்ற ஒரு லாப நோக்கமற்ற நிறுவனம்  விக்கிபீடியா. எந்தவிதமான விளம்பர வருமானமும் இல்லாமல், பயனீட்டாளர்கள் அளிக்கும் நன்கொடையின் மூலமாக மட்டுமே இயங்கி வரும் விக்கிபீடியா ஒவ்வொரு நாட்டுப் பயனீட்டாளர்களிடமும் நன்கொடை அளிக்கும்படி கேட்டுக்கொள்வது உண்டு. இப்போது இந்தியாவில் நன்கொடை திரட்டும் முயற்சியில் இருக்கிறது. இந்தியாவில் இருந்து எந்த விக்கி தளத்துக்குச் சென்றாலும், இந்த நன்கொடை பற்றிய தகவல் இருக்கும். விக்கிபீடியாவை அடிக்கடி பயன்படுத்தும் பழக்கம் உண்டென்றால், இரண்டு நாள் காபி டேசெலவை அவர்களுக்கு நன்கொடையாகக் கொடுக்க முயலுங்கள்.

வருடாந்திர Mobile World Congress மாநாடும் முடிவுக்கு வந்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டின் நிகழ்வுகளைத் தொடர்ந்தபடியே இருந்ததில் தெரிந்து/புரிந்துகொண்டவற்றை புல்லட் லிஸ்ட்டில் கொடுக்கிறேன்.

சாம்சங் ஆப்பிளுக்குப் போட்டியாகக் கிடுகிடுவென வளர்ந்துவருவது கூகுளுக்குப் பயத்தை வரவழைக்க ஆரம்பித்துவிட்டது. கூகுளின் ஆண்ட்ராயிட் இயங்கு மென்பொருளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் அலைபேசிச் சாதனங்களில் 40 சதவிகிதம் சாம்சங் தயாரிக்கிறது. கூகுள் மொபைல் சாதனங்களில் வெளியிடும் விளம்பரங்களில் இருந்து வரும் வருவாயில் கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தை சாம்சங்குக்குக் கொடுக்கிறது. சாம்சங் சாதனங்கள் விற்கப்படும் வேகத்தைப் பார்க்கும்போது, இதைவிடவும் அதிகம் வேண்டும் என்று சாம்சங் கேட்கலாம். ஆப்பிளின் போட்டியைச் சந்திப்பதற்கு என்றே மோட்டோரோலா நிறுவனத்தை வாங்கிய கூகுளின் முடிவு அத்தனை ஸ்மார்ட்டாக இருப்பதாகத் தெரியவில்லை.

சாம்சங் பற்றிய மற்றொரு கொசுறு செய்தி: வாலட் என்ற அலை மென்பொருளை வெளியிட்டு இருக்கிறது சாம்சங். இந்த மென்பொருளை உங்களது சாம்சங் அலைபேசிக்குள் தரவிறக்கிக்கொண்டால், தள்ளுபடிக் கூப்பனில் இருந்து, விமானப் பயண போர்டிங் பாஸ் வரை பல வகையான மென் கோப்புகளைச் சேகரித்துவைத்துக்கொள்ள முடியும். இந்த வாலட்டுக்குள் மேற்படி கோப்புகளை நிறுவனங்கள் அனுப்பும் API வசதியையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது சாம்சங். அடிக்கடி மலேசியாவுக்குப் பயணம் செல்லும் ஆனந்த், மதுரை தியேட்டரில் ரிசர்வ் செய்த திரைப்பட டிக்கெட், கோலாலம்பூர் உணவகத் தள்ளுபடிக் கூப்பன், சென்னை வரும் விமானத்தின் போர்டிங் பாஸ் அனைத்தையும் எளிதாக சாம்சங் வாலட்டுக்குள் சேமித்துக்கொள்ளலாம். இவற்றைக் காகிதத்தில் பத்திரப்படுத்தும் தேவை இருக்காது.

அறிவிழி

மொபைல் சாதனங்களை இயக்கும் பேட்டரியின் இயங்குதிறன் தொடர்ந்து சவாலாகவே இருக்கிறது. எந்த வயரும் இல்லாத வயர்லெஸ் பேட்டரி சார்ஜிங் சாதனங்களும், எளிதாக எடுத்துச் செல்லும் விதத்தில் சூரிய ஒளியில் இயங்கும் சோலார் பேட்டரிகளும் அதிகமாக அறிமுகப் படுத்தப்படுகின்றன. ஸ்மார்ட்போன் அத்தியாவசியமான சாதனம் என்ற நிலை வந்த அதே நேரத்தில், ஸ்மார்ட்போன் சாதனத்தை கறுப்பு - வெள்ளைத் திரையுடன் எளிமைப் படுத்தினால், விலையையும் குறைக்க முடியும்; அதோடு பேட்டரி வாழ்க்கையையும் அதிகரிக்க முடியும் என்ற எண்ண ஓட்டங்களை உணர முடிகிறது.

'எனது பதின்ம வயது மகள் அலைபேசியின் சாட்டில் நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறாள். இதை எப்படிக் கண்காணிப்பது?’ 'எனது மூன்று வயது மகன் எழுதுவதற்கு வசதியாக ஐபேட் ஆப் ஏதாவது இருக்கிறதா?’ 'எனது 10 வயது மகளுக்கு அலைபேசி கொடுக்கலாம் என எண்ணுகிறேன். சரிதானா?’

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்த நாட்களில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்னை, 'எப்படி இவை எல்லாவற்றையும் தெரிந்துகொள்வது?’ அதுவும் குறிப்பாக இளம் குழந்தைகள் இருக்கும் பெற்றோருக்கு அவர்களுக்கு எதைப் பற்றி, எப்படிச் சொல்வது என்பதில் இருந்து அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தும்போது எது நல்லது/கெட்டது என்பதைப் புரிந்து வழிநடத்தும் அளவுக்குத் தகவல்களைத் தெரிந்துகொள்ள நேரம் கிடைப்பது இல்லை. இதற்கு நல்ல தீர்வு ஒன்றைக் கொடுக்கிறது ஒரு வலைதளம்.

www.quib.ly என்ற இந்தத் தளத்தில் உங்கள் மனதில் இருக்கும் கேள்விகளுக்குப் பதில் ஏற்கெனவே இருக்கலாம். இல்லையெனில், கேள்வியை எழுதுங்கள். அந்தத் துறையில் திறம்பட்ட ஒருவரிடம் இருந்து தெளிவான பதிலைப் பெற்றுக்கொள்ளலாம்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism