Published:Updated:

பட்ஜெட்: புரிந்ததும் புதிரானதும்!

பட்ஜெட்: புரிந்ததும் புதிரானதும்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

பட்ஜெட் அலசல் என்பது தனித்துவமான வேலை. பல நூறு பக்கங்கள்கொண்ட பட்ஜெட்டை முழுக்கப் படித்துப் பார்த்து அதன் தாத்பரியத்தைப் புரிந்துகொண்டு விமர்சனம் செய்வது அதைவிட கடினமான விஷயம். சென்னைப் பல்கலையின் பொருளாதாரப் பேராசிரியர் சீனிவாசன் அந்தக் கடினமான வேலையை நாணயம் விகடன் நடத்திய பட்ஜெட் மீட்டிங்கில் எல்லோருக்கும் புரியும்படி எளிதாகச் செய்தார். அந்தக் கூட்டத்திற்கு வர இயலாதவர்கள் பயன்பெறும் வகையில் அவர் பேசியதன் சுருக்கம் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது;

''ஒரு பொருளாதாரத்தில் இரண்டு அமைப்புகள் மிகவும் முக்கியம். ஒன்று அரசு, இன்னொன்று சந்தை. இந்த இரண்டும் இருந்தால்தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் செழிப்படைய முடியும்.

ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் (மார்க்கெட் எக்கனாமி) அரசாங்கம் என்னென்ன வேலைகளைச் செய்யவேண்டும்? இதற்கு பலரும் பல பொருளாதார விளக்கங்களைச் சொல்கிறார்கள். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், நான்கு வேலைகளை அரசாங்கம் செய்யவேண்டும்.

முதலாவது வேலை, சந்தையை ஒழுங்குபடுத்துவது (ரெகுலேட்). இது பட்ஜெட் சாராத விஷயம். இதற்கு தனியாகப் பணம் வாங்கி அரசாங்கம் செலவு செய்வது கிடையாது. செபி., ஐ.ஆர்.டி.ஏ., ஆர்.பி.ஐ. இவற்றின் பாதுகாப்பு முறைகள், வட்டியைக் கூட்டுவது அல்லது குறைப்பது பற்றிய விஷயங்கள் பட்ஜெட் சாராதவை. எனவே, இதுபற்றி பட்ஜெட் உரையில் அதிகம் இருக்காது. இதற்கடுத்து சொல்லப்படும் மூன்று வேலைகளுமே பட்ஜெட்டுடன் நெருங்கிய தொடர்புகொண்டது.  

பட்ஜெட்: புரிந்ததும் புதிரானதும்!

அரசாங்கம் செய்யவேண்டிய இரண்டாவது முக்கியமான வேலை, நிதி ஒதுக்கீடு (அலகேஷன்). நாட்டில் இருக்கும் வளங்களை எதற்கு செலவிடுவது என்பதை நிர்ணயம் செய்வது. எனக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் என்றால் அந்த ஒரு லட்சம் ரூபாயை எப்படி செலவு செய்யவேண்டும் என்று திட்டமிடுவது. தனிமனிதர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இதைச் செய்யலாம். ஆனால், அரசாங்கம் மக்களிடம் வரி வசூலிப்பதால் எதற்கு எவ்வளவு செலவு செய்யவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அறிவிக்கவேண்டும். எப்போதெல்லாம் அரசினுடைய வரிகளும், செலவுகளும் அதிகமாகின்றதோ அப்போ தெல்லாம் வளங்களை எவ்வாறு செலவு செய்யவேண்டும் என்பதில் அரசின் பங்கு  அதிகரித்துக்கொண்டே போகிறது.

பட்ஜெட்: புரிந்ததும் புதிரானதும்!

அரசாங்கம் செய்யவேண்டிய மூன்றாவது முக்கியமான வேலை, மறுவிநியோகம் (ரீடிஸ்ட்ரிப்யூஷன்). அதாவது, பணக்காரர் களிடமிருந்து வளங்களை வாங்கி ஏழைகளுடைய மேம்பாட்டிற்கு செலவு செய்வது.

நான்காவது முக்கிய வேலை, நிலையான தன்மையை உருவாக்குவது (ஸ்டெபிலைசேஷன்). ஒரு சந்தை பொருளாதாரம் நிலையாக இருக்க வேண்டும். ஏன்? எந்த ஒரு பொருளின் விலை அதிகமாக ஏறுகிறதோ, அந்தப் பொருளில் அதிகமாக ரிஸ்க் இருக்கிறது என்று அர்த்தம். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் ரூபாய் அல்லது நாணயத்தின் மதிப்பு. அது உள்நாட்டு மதிப்பாக இருந்தால் பணவீக்கத்தின் அடிப்படையில் அளவிடுவதும், வெளிநாட்டு மதிப்பாக இருந்தால் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் அடிப்படையிலும் அளவிடப்படுகிறது. எந்த ஒரு மதிப்பின் அடிப்படையில் பார்த்தாலும், நாணயத்தின் மதிப்பு அடிக்கடி மாறினால், அந்த நாட்டில் ஸ்திரதன்மை இல்லை என்பது தெளிவு. எனவே, இந்த ஸ்திரத்தன்மையை எடுத்துவரவேண்டியதும் அரசின் வேலை.

ஒரு பட்ஜெட்டை அலசி ஆராயும்போது இந்த மூன்று வேலைகளையும் அந்த பட்ஜெட் செய்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

இனி அந்த வேலையை நாம் செய்வோம்.

ஒரு பட்ஜெட்டுக்கு முன்னால் பல கேள்விகள் இருக்கும். எல்லா பட்ஜெட்டுக்குமே ஒரு நோக்கம் இருக்கும். அந்த நோக்கம் பொருளாதாரமாக இருக்கலாம். அரசியல் அல்லது சமூக சித்தாந்தத்தின் அடிப்படையிலும் இருக்கலாம். ஆனால், நமது பட்ஜெட்களின் பின்னால் இருக்கும் நோக்கம் என்ன என்று புரிந்துகொள்வதில் நிறைய குழப்பம் இருக்கிறது. இந்தக் குழப்பத்தைப் புரிந்துகொள்ள சுருக்கமான ஒரு வரலாறு சொல்கிறேன்.

பட்ஜெட்: புரிந்ததும் புதிரானதும்!

1955-ல் இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் ஆரம்பித்தபோது ஜவஹர்லால் நேரு, 'இந்தியாவில் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களைத் தொடங்கவேண்டும், அதற்கான முதலீடுகள் எதுவும் தனியார் வசமில்லை, அதனால் எல்லா முதலீடுகளையும் அரசாங்கமே செய்யவேண்டும்’ என்றார். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் 1956-ல் தொழிற் கொள்கைகள் உருவாக்கப்பட்டன.

அப்போது சொல்லப்பட்ட ஒரு விஷயம், பொதுத்துறை நிறுவனங்கள் நம் பொருளாதாரத்தை வழிநடத்திச் செல்கிற அளவுக்கு உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதே. இதன் அடிப்படை என்னவென்றால், அரசாங்கமே எல்லா முதலீடுகளையும் செய்து, அதன்மூலம் கிடைக்கும் பயனை அடித்தட்டு மக்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதே.

பட்ஜெட்: புரிந்ததும் புதிரானதும்!

ஆனால், பல ஆண்டுகள் இப்படிச் செய்தபிறகும் சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.  அப்படி கிடைக்காதபோது அரசாங்கம் என்ன நினைக்கும்? அதை மேலும் தீவிரமாகச் செய்யவேண்டும் என்றே நினைக்கும். 1968-ல் பிரதமர் இந்திராகாந்தி வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றை தேசியமயமாக்கினார். ஆனால், அதன்பிறகும் மக்களின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிடவில்லை.

இதன்பிறகு 1975-ல் வறுமையை ஒழிக்கவேண்டும் என்று ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். வறுமையை  நேரடியாகத் தாக்கி ஒழித்தால்தான், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால், இதன்பிறகு ஜனதா ஆட்சி, காங்கிரஸ் என அடுத்தடுத்து ஆட்சி மாற்றம் நடந்ததால், அந்தத் திட்டம் நடக்காமலே போனது.

எல்லாமே அரசாங்கமே செய்யவேண்டும் என்கிற சிந்தனை முதலில் கேள்விக்குள்ளானது 1980-ல்தான். இனிமேலும் பொதுத்துறை நிறுவனங்களைத் தொடங்கவேண்டியதில்லை என்று அப்போதுதான் பேச  ஆரம்பித்தனர். இடைப்பட்ட காலத்தில் 20 அம்சத் திட்டத்தைக் கொண்டு வந்திருந்தார் இந்திராகாந்தி.

ஆனால், அவருக்குப் பிறகு பிரதமர் ஆன ராஜீவ்காந்தி, இந்தத் திட்டங்களின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னார். அப்போது மன்மோகன் சிங்தான் ப்ளானிங் கமிஷன் துணை சேர்மனாக இருந்தார். அவர் நம்முடைய வெளி வர்த்தகத்தைக் கொஞ்சம் தாராளமயமாக்கினார். யமஹா மோட்டார் பைக் உள்பட சில வெளிநாட்டுத் தயாரிப்புகள் இந்தியாவுக்குள் வந்தது அப்போதுதான்.

1980-க்குப் பிறகு புதிய பொதுத்துறை நிறுவனங்கள் எதையும் அரசு தொடங்கவில்லை. 85-க்குப் பிறகு வெளிவர்த்தகத்தை இன்னும் விரிவுபடுத்தினோம். தொழில்நுட்பத்தையும் நிதி ஆதாரத்தையும் இறக்குமதி செய்தோம். அப்போதும் மக்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றமில்லை.

1991-ல் பொருளாதாரத்தை இன்னும் தாராளமாக்கினோம். அதற்குப் பிறகு அடிக்கடி காங்கிரஸ், பா.ஜ.க. என ஆட்சி மாற்றம் நடந்தது. இந்தியா ஒளிர்கிறது என்கிற கோஷமெல்லாம் வந்தது. ஆனாலும், மக்களுக்கு எதுவும் போய்ச்சேரவில்லை என்பதை பல ஆராய்ச்சிகள் சொல்லின. மீடியாக்களும் அதையேச் சொன்னது.

திட்டம் போட்டு செய்கிற செலவை மக்களுக்கு நேரடியாக கொண்டுபோய் கொடுக்கவேண்டும் என்கிற சிந்தனை உருவானது. இதன்பிறகு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சர்வ சிக்ஷா அபியான், நேஷனல் ரூரல் ஹெல்த் மிஷன் (என்.ஆர்.ஹெச்.எம்.), ஜவஹர்லால் நேரு அர்பன் ரினிவல் மிஷன் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தார்கள். பாரத் நிர்மான் என்ற கிராமங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தத் தொடங்கினார்கள்.

ஆக, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையைத் தீர்மானிப்பதில் நமக்கு பல குழப்பம் இருக்கிறது. நேரு காட்டிய ஜனநாயக சோஷலிசம் ஆகட்டும், பொருளாதாரத் தாராளமயமாகட்டும் நாம் எதிலும் சிறந்து விளங்கவில்லை. இதனால் நாம் சந்தித்தப் பொருளாதாரப் பிரச்னைகள் என்னென்ன?

(தொடர்ந்து ஆராய்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு