Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி
##~##

ணையப் பெருவெளியில் சில நிகழ்வுகள் அவ்வப்போது பிரமாண்ட மாகப் பிரபலமாகும்; அதே வேகத்திலேயே மறக்கப்பட்டும் விடும். ஆனால், பிரபலமாவதன் வேகம் சிலருக்குத் தளங்களை அமைத்துத் தருகிறது. 'வொய் திஸ் கொல வெறி’, 'கங்ணம் ஸ்டைல்’ போன்றவை சில உதாரணங்கள். கடந்த சில மாதங்களாக வைரல்ரீதியில் பரவி வரும் ‘harlem shake’ சமீபத்திய ட்ரெண்ட். ஆனால், ஹார்லம் ஷேக் நடனத்துக்கு 30 ஆண்டு கால வரலாறே இருக்கிறது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் இருக்கும் ஹார்லம், பொருளாதாரத்தில் பின்தங்கிய கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. ஆனால், கேளிக்கை இரவுகளுக்குப் புகழ்பெற்றது ஹார்லம். 80-களின் தொடக்கத்தில் ஹார்லம் பகுதியில் இருந்த அல் என்றவர் இரவு நடன விடுதி ஒன்றில் தொடங்கிவைத்த இந்த நடன வடிவு இந்த வருடத் தொடக்கத்தில் யூ-டியூப் வீடியோ ஒன்றின் மூலம் மிகப் பிரபலமாகிவிட்டது. சடலங்களை இறுக்கிக் கட்டி வைத்திருக்கும் எகிப்திய மம்மி போல உடை அணிந்து உடலை உதறும் கோணங் கித்தனமான நடன அசைவுதான் harlem shake. இந்த ஸ்டைலில் பலரும் படம்பிடித்துப் பதிவேற்றம் செய்யும் ஆயிரக்கணக்கான வீடியோக்களை யூ-டியூபில் பார்க்கலாம். கூகுளில் harlem shake என்று தேடிப்பார்த்து, நடன அசைவு பிடித்திருந்தால், வீட்டில் யாரும் இல்லாதபோது உதறிப்பாருங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு Guerrilla Marketing என்ற பதம் பரிச்சயமாக இருக்கும். அச்சு, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடுவதுபோன்ற பாரம்பரிய முறைகளைப் பின்பற்றாமல், வித்தியாசமாக, வழக்கத்துக்கு மாறாக, அதிரடியாக எதையாவது செய்து தங்களது பொருள்கள் அல்லது சேவைபற்றி மக்கள் மனதில் தங்கவைக்கும் முறைக்குப் பெயர்தான் கெரில்ல மார்க்கெட்டிங் டெக்னிக். அப்சலூட் வோட்கா மதுபான நிறுவனம் சமீபத்தில் செய்த கெரில்ல மார்க்கெட்டிங் டெக்னிக் இது.

அறிவிழி

விமான நிலையங்களில் விமானத்தில் இருந்து பயணிகளின் பெட்டிகளை எளிதாக எடுத்துச் செல்ல சுற்றி வரும் வகையில் baggage carousel  என்ற அமைப்பு இருக்கும். பயணிகள் இறங்கி வந்து தங்களது பெட்டிகளை எடுத்துச் செல்ல இதைச் சுற்றி நிற்கும்போது அவர்களது கவனம் அதன் மேலேயே இருக்கும். விமான நிலையம் ஒன்றின் baggage carousel-களில் பாதி திறக்கப்பட்ட பெட்டிகளில் ஓரிரண்டு வோட்கா பாட்டில்கள் மட்டும் தெரியும்படி பெட்டிகளுடன் சுழல்விட்டது அப்சலூட். பார்ப்பவர் களுக்கு பயணி ஒருவர் பெட்டி முழுக்க வோட்கா பாட்டில்கள் கொண்டுவந்திருப்பதுபோலவும், அதை உடைத்து சில பாட்டில்களை யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்களோ என்றும் தோன்றும். இந்தக் கவனம் அவர்களது பிராண்டான அப்சலூட் என்பதுடன் கலந்து மனதில் நிற்கும். மிகக் குறைந்த செலவில் செய்யப்பட்ட இந்த கெரில்ல மார்க்கெட்டிங் நிகழ்வு அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றி. இந்த நிகழ்வின் யூ-டியூப் வீடியோ உரலி... www.youtube.com/watch?-feature= player_embedded&v=LO2D42Ol0Nk

கெரில்ல மார்க்கெட்டிங்பற்றி இந்த வாரம் சொல்ல வந்ததற்குக் காரணம்... வருடந்தோறும் ஆஸ்டின் நகரில் நடக்கும் SXSW மாநாடு. கலை, இசை ஆர்வலர்கள் தங்களுக்குள் அறிமுகம் உண்டாக்கிக்கொள்வதற்காகத் தொடங்கப்பட்ட South By South West என்ற இந்த மாநாடு, சமீபத்திய வருடங்களில் டெக் நிறுவனங்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்ளவும், பிரபலப்படுத்திக் கொள்ளவும் என மாறிவிட்டது. சென்ற வாரம் நடந்து முடிந்த இந்த மாநாட்டில் சென்ற இடமெல்லாம், கெரில்ல மார்க்கெட்டிங் முயற்சிகள்.

பார்க்கிங் செய்யும் வசதி தேடி தவியாகத் தவிப்பவர்களுக்கு உதவியாகும் விதத்தில் Park Me என்ற பெயரில் மென்பொருள் தயாரித்து இருக்கும் இளைஞர் குழு, கார்களின் டயர்களில் காரை நகர்த்த முடியாதபடி இருப்பதைப் போலத் தோன்றும் சாதனத்தை பேப்பரில் செய்து ஒட்டிவைத்து, போலீஸ் கொடுக்கும் வார்னிங் போன்ற நோட்டீஸையும் ஒட்டிச் சென்றது சுவாரஸ்யம்.

கேள்விக்குறிகளை ராமராஜன் சட்டை இருக்கும் நிறத்தில் உள்ள கோட் ஒன்றை அணிந்தபடி தனது மார்க்கெட்டிங் திறமைகளைக் காட்டிய நபர், ஷேர் ஆட்டோ போன்ற சேவை ஒன்றைப் பிரபலப்படுத்த, 'எனது கழுத்தில் ஏறிக்கொள்ளுங்கள்; உங்களுக்கு நான் piggyback ride கொடுக்கிறேன்!’ என்று திரும்பிய இடமெல்லாம் வித்தியாச, காமெடி மார்க்கெட்டிங் நிகழ்வுகள்.

கூகுள் கண்ணாடி அணிந்திருந்தால் வர அனுமதி இல்லை என அறிவித்திருக்கிறது சியாட்டில் நகரில் இருக்கும் பார் ஒன்று. கூகுள் கண்ணாடி வருவதற்கு முன்னதாகவே வந்திருக்கும் இந்த அறிவிப்பு, இந்த சாதனத்தைப் பற்றிய ப்ரைவஸி வாதங்களை ஆரம்பித்துவைத்திருக்கிறது. ஆனால், விரைவில் வரும் இண்டஸ்ட்ரி டிரெண்ட், அணிந்துகொள்ளும் கணினி சாதனங்களே. இதை அடுத்த வாரம் விரிவாகப் பார்க்கலாம்.

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism