Published:Updated:

காவல் நிலையம் கண்ட பயங்கரம்!

காவல் நிலையம் கண்ட பயங்கரம்!

காவல் நிலையம் கண்ட பயங்கரம்!

காவல் நிலையம் கண்ட பயங்கரம்!

Published:Updated:
காவல் நிலையம் கண்ட பயங்கரம்!
##~##

1993 மார்ச் 25. மதியம் மணி 12.20

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை-கொரட்டூர் காவல் நிலையம். இன்ஸ்பெக்டர் தயாநிதியிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்த விஷயம்பற்றிப் பேச ஆரம்பித்தோம். அதே சமயம், அந்த அலறல் சத்தம் கேட்டு ஸ்டேஷனில் இருந்தவர்கள் திடுக்கிட்டனர். அலறி அடித்துக்கொண்டு ஸ்டேஷனுக்குள் ஓடிவந்த ஒரு போலீஸ்காரர் மூச்சுவாங்க,

''சார்... ஒரு கொலை... ஸ்டேஷன் வாசல்லயே ஒரு வெள்ளை காரில் இருந்து 'பாடி’யைத் தள்ளிவிட்டுத் தப்பிப் போயிட்டாங்க. அப்ப பக்கத்து டீக்கடையில நான் இருந்தேன்... நல்லவேளையா கார் நம்பரைக் குறிச்சுட்டேன். சார்... மூச்சு இருக்குது!'' என்று அரக்கப்பறக்க அலறினார். மற்ற கான்ஸ்டபிள்கள் வாரிச் சுருட்டி எழுந்து வாசலுக்கு ஓடினார்கள். இன்ஸ்பெக்டர் 'தபதப’வென எழுந்து ஓட, நாமும் அவரைப் பின் தொடர்ந்தோம்.

ஸ்டேஷனுக்குச் சற்றுத் தள்ளி... ரோடு வளைவில் ஏகக் கூட்டம். கொளுத்தும் வெயில்... பேன்ட்-ஷர்ட் அணிந்த ஒரு இளைஞர் தலைகுப்புறக் கிடந்தார். முதுகில் கத்தி குத்தப்பட்டு ரத்தம் ஊற்றிக்கொண்டுஇருந்தது. பொதுமக்கள் திகைத்து விலகி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டுஇருந்தனர். இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிள்களும் அவர் கிடந்த இடத்தைச் சுற்றிலும் முதலில் கவனமாக நோட்டம்விட்டனர்.

அந்த வழியாக அப்போது வந்த பல்லவன் பேருந்துகள் ஓரங்கட்டி நின்றன. அதில் இருந்து பயணிகள் தலையை வெளியே நீட்டிப் பார்த்தனர். ஒரு குழந்தை எட்டிப் பார்க்க, அதன் கண்களை மூடியபடி குழந்தையின் முகத்தைத் திருப்பினார் அதன் தாய். டிராஃபிக் ஜாம். கான்ஸ்டபிள் ஒருவர், விசில் ஊதி ஒழுங்குபடுத்தியும் வாகனங்களை ஒழுங்காக நகர்த்த முடியவில்லை.

காவல் நிலையம் கண்ட பயங்கரம்!

இன்ஸ்பெக்டர், ''என்னய்யா நடந்துச்சு இங்கே... முதல்ல பார்த்தது யாரு?'' என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார். கான்ஸ்டபிள்கள் சிலரையும் கூப்பிட்டு, ''இங்கே இருந்து யாரையும் நகரவிடாதீங்க... 'ரவுண்ட்அப்’ பண்ணி விசாரிங்கய்யா'' என்று விரட்டினார்.

இளைஞரின் மூக்கு அருகே ஒரு கான்ஸ்டபிள் கைவைத்துப் பார்த்துவிட்டு, ''மூச்சு இருக்கு... ஆளு சாகலை!'' என்று கத்தினார். இன்னொரு கான்ஸ்டபிள் அருகில் இருந்த இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி நோக்கி ஓடினார். அந்த நேரம் ஆஸ்பத்திரியில் யாரும் இல்லைபோல! போன வேகத்திலேயே திரும்பி வந்தார். அவரே, டீக்கடையில் இருந்து டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து இளைஞரின் முகத்தில் தெளித்ததும்... இளைஞரின் உடல் மெள்ள அசைந்தது. ''ஐயா... என்னைக் காப்பாத்துங்க'' என்று ஈனஸ்வரத்தில் கண்ணீருடன் சொன்னார். அந்த இளைஞர் - பார்க்க வசதியான வீட்டுப் பிள்ளைபோல் இருந்தார்.

''நீ யாருப்பா... யாரு உன்னைக் குத்தினது? சீக்கிரம் சொல்லிடுப்பா...'' என்றெல்லாம் கான்ஸ்டபிள் கேள்வி மேல் கேள்வி கேட்க... இடைமறித்த இன்ஸ்பெக்டர்... ''அதெல்லாம் அப்புறம் விசாரிக் கலாம். முதல்ல ஆளை ஆஸ்பத் திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போக வழி பண்ணுங்கய்யா'' என்றார். ஸ்டேஷன் வாசலில் நின்ற போலீஸ் ஜீப் 'தள்ளு மாடல்’ வண்டிபோல் இருக்கிறது. கான்ஸ்டபிள்கள் இளைஞரைத் தூக்கும்போது... உதவிக்குப் பொதுமக்களை அழைத்தனர். கூடி நின்றவர்கள் பதறிப்போய் நைஸாக நழுவ ஆரம்பித்தனர். ஒருவழியாக, கான்ஸ்டபிள்கள் சிலரே இளைஞரைத் தூக்கி ஜீப்பில் கிடத்தினர். இன்ஸ்பெக்டரும் ஏறிக்கொண்டார். ஜீப் நகர்ந்தது.

காவல் நிலையம் கண்ட பயங்கரம்!

சம்பவம் நடந்த இடத்தருகே சிமென்ட் மூட்டை விற்பனை செய்யும் ஒரு கடை. அதில் பொதுத் தொலைபேசி இருந்தது. அந்தக் கடையில் நின்றபடி நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் பொதுமக்கள். அந்தக் கடைக்காரரிடம் போலீஸ்காரர் போய் விசாரிக்க, ''சார்... நான் இதய நோயாளி. குனிந்து போன் பண்ணிக்கிட்டிருந்தேன். எதையுமே பார்க்கலை... நிமிர்ந்து பார்த்தப்ப ஒரு ஆள் கிடந்தார்'' என்று சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டார். அடுத்து மோட்டார் பைக் மெக்கானிக் ஷாப்காரரும் மற்றவர்களும்கூட, 'நடந்த சம்பவத்தைக்

கவனிக்கவில்லை’ என்றே சாதித்தார்கள். இதில் முரண்பாடு என்னவென்றால், கண் இமைக்கும் நேரத்தில் அந்த இளைஞரைத் தள்ளிவிட்டுச் சென்ற கார் நம்பரை மட்டும் பலரும் குறித்துவைத்திருந்தனர். ''சீக்கிரம் போய் அந்த காரை மடக்குங்க ஐயா!'' என்றனர். டீக்கடைக்காரரும் இதே மாதிரி சொல்ல... ''யோவ்! எல்லாரும் கதை விடுறீங்களா? முட்டிக்கு முட்டி தட்டிடுவோம். பார்த்ததை மறைக்காமச் சொல்லுங்க'' என்று கான்ஸ்டபிள் ஒருவர் சீறி விழுந்தார்.

அடுத்த 10-வது நிமிடம்... இன்ஸ்பெக்டரின் ஜீப், ஸ்டேஷன் வாசலில் திரும்பி வந்து பிரேக் அடித்து நின்றது. ஒருவித கலவரப் பீதியுடன் நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர்களிடத்தில் பரபரப்பு.

இன்ஸ்பெக்டர், ''என்னய்யா... ஏதாவது எனக்கு டெலிபோன் வந்துச்சா..?'' என்று கேட்ட படியே தன் சீட்டில் அமர்ந்தார். இளைஞரைக் கொண்டுசென்றபோது இருந்த பதற்றம் அவரிடம் இப்போது இல்லை.

''என்ன சார்... ஆள் பிழைச்சுட்டாரா..?''

பதில் சொல்லாமல் இன்ஸ்பெக்டர் லேசாகப் புன்னகைத்தபடி இருந்தார்.

''நாங்க பதறிக்கிட்டு இருக்கோம். ஐயா, ஒரு ரியாக்ஷனும் காட்டாம இருக்கீங்களே...?'' - பொறுக்க முடியாமல் ஒரு போலீஸ்காரர் கேட்டேவிட்டார்.

இன்ஸ்பெக்டர் நம்மைப் பார்த்தார். நாமும் முதல் தடவையாகப் புன்னகைத்தோம்.

''சரி... இதுக்கு மேலயும் சஸ்பென்ஸை நாங்க வளர்க்க விரும்பலை... சொல்லிடறோம்'' என்று அறிவித்தோம். போலீஸ்காரர்கள் ஆச்சர்யமாக நம்மைப் பார்த்தனர்.

''கொஞ்ச காலத்துக்கு முன்னால, மீனம்பாக்கம் விமான நிலையத்துல திடீர் பதற்றம்... விமானம் ஒன்று Crash Landing ஆகப்போறதா அறிவிச்சாங்க... அது ஒரு செட்டப் நாடகம். ஒருவேளை நிஜமாகவே எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால், அதை முறியடிக்கும் வகையில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கையா செயல் படுறாங்களானு சர்வே பண்ணும் நோக்கத்தில் தான் அப்படிச் செய்திருக்கிறார்கள். அந்த இன்ஸ்பிரேஷனில்தான் எங்களுக்கு இப்படி ஒரு ஐடியா தோன்றியது. அதற்கு எஸ்.பி-யான ராமநாதனிடம் 'ஓ.கே.’ வாங்கினோம். செயல்படுத்தினோம். சற்று முன்பு நடந்த சம்பவம் முழுக்க முழுக்க செட்டப்'' (விவரம் தனி பாக்ஸில்) என்று விவரமாகத் தெரிவித்ததும் 'அப்பாடா’ என்று பெருமூச்சுவிட்டனர் அனைவரும்.

அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் இருந்து தொடர்ச்சியாக போலீஸ் ஸ்டேஷனுக்குத் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம் பித்தன. சம்பவம் நடந்த சமயத்தில்... பல்லவன் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் பலர்; இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்கள்... கொரட்டூர் ஏரியாவாசிகளில் வீட்டில் டெலிபோன் வசதியுள்ள சிலர்... இவர்கள் அனைவரும் சென்னை மாநகரம், செங்கல்பட்டு (கிழக்கு) மாவட்ட போலீஸ் கன்ட்ரோல் ரூம், டி.ஜி.பி. ஆபீஸ்... ஆகியவற்றுக்குக் கொலை சம்பவத்தைப் பற்றி கார் நம்பரைக் குறிப்பிட்டுத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பெயர் சொல்ல விரும்பாத வாசகர் ஒருவர் ஜூ.வி. அலுவலகத்துக்கு டெலிபோன் செய்து கார் எண்ணைப் பதற்றத்துடன் தெரிவித்திருக்கிறார். இதெல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிய... விளைவு... கொரட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தொடர்ச்சியாகத் தொலைபேசி அழைப்புகள். கொரட்டூர் வியாபாரிகள் சங்கத் தலைவர், ஸ்டேஷனுக்குத் தொடர்புகொண்டு ''பல்லவன் பஸ் டிரைவர் சற்று முன்பு நடந்த கொலை சம்பவத்தைப் பற்றிச் சொன்னார். அம்பாஸடர் கார் நம்பரைச் சொல்லிவிட்டுப் போனார். என்ன சார்... கடைகளை அடைக்கச் சொல்லட்டுமா? பட்டப்பகலில் இப்படி ஒரு சம்பவம். அநியாயமா இருக்கே'' என்று ஆவேசப்பட்டார்.

காவல் நிலையம் கண்ட பயங்கரம்!

இன்ஸ்பெக்டர் தனது டெலிபோனை டயல் செய்து, வியாபாரிகள் சங்கத் தலைவர், போலீஸ் கன்ட்ரோல் ரூம்... இன்னும் சிலருடன் பேசினார்.

''பொது இடத்துல ஒரு அசம்பாவிதம் நடந்துட்டா, உடனடியா போலீஸ் எப்படி ரியாக்ட் பண்றாங்க... பொதுமக்கள் எப்படியெல்லாம் உதவுறாங்க என்றெல்லாம் சர்வே பண்ணும் நோக்கத்தில் நடத்தப்பட்ட 'செட்டப் நாடகம்’ அது... எந்த ஒரு உண்மைக் கொலைச் சம்பவமும் நடக்கலை...'' என்று தெளிவுபடுத்தினார். ஒவ்வொருவராக போனில் அழைத்து அவர்களின் பீதியை அகற்ற அரை மணி நேரம் பிடித்தது! கடைசியில் போலீஸாரிடம் சொன்னார் இன்ஸ்பெக்டர், ''இதையெல்லாம் நான் செய்யலேப்பா... இதோ உட்கார்ந்திருக் காங்களே... 'ஆனந்த விகடன்’ ஆட்கள்... அவங்க நடத்தின நாடகம்!''

''சார்... ஒண்ணுமே தெரியாத மாதிரி கூட இருந்தாங்களே!'' என்று கோரஸாகச் சொன்னார் கள் போலீஸ்காரர்கள்!

சம்பவம் நடந்த இடத்தருகே இருந்த கடைக்காரர்களை நாம் நேரில் சந்தித்து உண்மையை விளக்கிய பிறகும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. குறிப்பாக, அந்த டெலிபோன் பூத்காரர். நாம் விஷயத்தை விளக்கிச் சொல்லிய பிறகே, ''அப்படியா... எங்களைக் கதிகலங்கடிச்சுட்டீங்களே'' என்று ஒருவழியாகச் சிரித்தார்.

மற்றவர்களும், ''சார்... உதவுகிற எண்ணம் இல்லாட்டி கார் நம்பரைக் குறிச்சுவெச்சிருப்போமா? கோர்ட் கேஸ் வந்தால் கஷ்டம் சார். அதான் ஒதுங்கிட்டோம்!'' என்று நம்மிடம் சொன்னார்கள்.

கத்திக் குத்துப்பட்டவராக நடித்த தனுவிடம் ''அனுபவம் எப்படி?'' என்று கேட்டோம்.

''எசகுபிசகா ஓவர் ஆக்ட் பண்ணி அடி, உதை விழுந்திடுமோங்கிற நடுக்கம் வேற. அதெல்லாம் ஒரு பக்கம்... என் சட்டை பாக்கெட்ல பத்து ரூபாய் வெச்சிருந்தேன். நாடகம் முடிஞ்சு

பாக்கெட்டைப் பார்த்தா அதைக் காணலை... எப்படி மாயமா மறைஞ்சுதுனு தெரியலை. நல்லவேளைங்க... முன் கூட்டியே உஷாரா என் செயின், மோதிரம், வாட்ச் இதையெல்லாம் கழற்றி நண்பர்கிட்டே கொடுத்துவெச்சிருந்தேன். இல்லேன்னா... அதெல்லாம் அம்பேல்தான்'' என்று சொல்லிச் சிரித்தார் தனு.

- சூரஜ்

படங்கள்: கே.ராஜசேகரன்

ர்மா பஜாரில் 'பளபளா’ கத்தி ஒன்று வாங்கும்போதே, ஒரு மாதிரியாக நம்மைப் பார்த்தனர் கடைக்காரர்கள்! கத்தியை அலுவலகத்துக்குக் கொண்டுவந்து, அதைப் பாதியாக அறுத்து, கைப்பிடியுடன் கூடிய பாதிக் கத்தி யைச் சதுர வடிவிலான ஸ்டீல் தகட்டு டன் கச்சிதமாகப் பற்றவைக்கப்பட்டது. அந்த ஸ்டீல் தகட்டின் இரு புறமும் எலாஸ்டிக் பட்டை இணைத்துத் தைக்கப்பட்டது. இளைஞர் தனு முதுகில் வைத்து அதைக் கட்டினோம். அதை அடுத்து, சினிமாவுலகில் உபயோகப்படுத்தும் செயற்கை ரத்தத்தைக் கத்தி முனைபட்ட இடத்திலும், முதுகிலும் தெளித்துவிட்டோம். தத்ரூபமாக அமைந்துவிட்டது.

 கத்திக் குத்துப்பட்டவராக நடிக்க ஏற்பாடு செய்யப்பட்ட அந்த இளைஞர் தனு. மயிலாப்பூரைச் சேர்ந்த அவர், வீடியோ கேமராமேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism