யட்சன்
##~##

செந்தில் தீபாவைக் குழப்பத்துடன் பார்த்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சுயநலமா, என்ன சொல்றே?'

'நாளைக்கு நீ பெரிய ஸ்டாரா ஆயிட்டா, என்கூட இப்படி பீச்சுக்கு வர முடியுமா..? துரத்தித் துரத்தி ஆட்டோகிராஃப் கேப்பாங்களே... அதான் டப்புனு இப்பவே தள்ளிட்டு வந்துட்டேன்.'

'ச்சீ... நாயி...' என்று அவள் பின் கழுத்தில் கைகொடுத்துத் தூக்கி, நெற்றியால் செல்லமாக முட்டினான். எழுந்தாள். கடற்காற்று அவள் உடையில் படபடத்தது.

'நைட் உன் ரூம்லதான் ஸ்டே!'

அவன் தவிப்புடன் பார்க்க, குபீர் என்று பொங்கிச் சிரித்தாள்.  

'பயந்துட்டியா? கடைசி பஸ்ல ஏத்திவிடு... போயிடறேன்.'

அவளுடன் கைகோத்து, மணலில் கால்கள் புதையப் புதைய நடந்து, பல்லவனில் அருகருகே அமர்ந்து, கைகளைப் பின்னிக்கொண்டு, கோயம்பேடு வரை பயணம் செய்து, ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஜன்னலோரம் இடம் பிடித்துக்கொடுத்தான்.

இருக்கையில் அமர்ந்ததும், சட்டென்று அவன் கையைப் பற்றி புறங்கையில் முத்தமிட்டாள். 'ஜெயிச்சதும், என்னை மறந்துர மாட்டியே..?'

யட்சன்

'அடி செருப்பால...' என்றான். சந்தோஷ மாகச் சிரித்தாள். பேருந்து புறப்பட்டபோது, தன் பர்ஸ் திறந்து கற்றையாகப் பணம் எடுத்து, அவன் பாக்கெட்டில் திணித்தாள்.

'நல்லா சாப்டு...' என்றாள்.

பேருந்துடன் முட்டாள்தனமாகச் சற்று தூரம் கூடவே ஓடினான். ஓர் அங்கத்தை வெட்டி அனுப்புவதுபோல் உணர்ந்தான். கண்கள் நனைந்து நின்றான்.

பாரி தூக்கம் வராமல் மொட்டைமாடியில் அலைந்தான். அங்கிருந்து பார்த்தபோது, கூவத்தை ஒட்டி அடர்ந்திருந்த பல குடிசைகளின் வாசலை மூடிய கோணித்திரைகளின் ஊடே, உள்ளே தொலைக்காட்சிப் பெட்டிகளின் நீல வெளிச்சம் ஆட்டம் போடுவது தெரிந்தது. தகரக் கூரைகளில் நிலா வெளிச்சம் சிதறியிருந்தது.

திடீரென்று ஏன் இன்றைக்கு இப்படி மனம் அலைமோதுகிறது? தேவியைச் சந்தித்த பின், நாகுவைப் பார்த்தபோது ஏன் வெறி அடங்கிப்போயிற்று?

வேண்டாம் பாரி... நீ அயர்ந்தால் அடுத்தவன் முந்திக்கொள்வான். உயர்த்திய வாளை வீசாமல் தழைக்காதே!

பின்னந்தலையில் தட்டிக்கொண்டான்.

'ஆதிமூலம்! குறிச்சுக்கடா... உனக்குப் பதினெட்டாம் தேதி முகூர்த்தம்'' என்று சற்றே உரக்கச் சொன்னதும், இழந்த சக்தி மீண்டு வந்ததுபோல் உணர்ந்தான்.

தீபாவுடன் செலவான சந்தோஷத் தருணங்களை  அசைபோட்டபடியே கண்ணயர்ந்திருந்த செந்தில், அகாலத்தில் செல்போன் ஒலித்ததும், திடுக்கிட்டு எழுந்தான்.

'ஹலோ' என்றான் தூக்கக் கலக்கத்துடன்.

'செந்தில், குணா பேசறேன்...'

தூக்கம் எகிறியது.

'நாளைக்கு டைரக்டர் ஹைதராபாத் போறாரு. அதுக்கு முன்னால உங்களப் பாக்கணும்னு சொன்னாரு. காலைல ஏழரை மணிக்குள்ள ஆபீஸ் வந்திருங்க.'

'வந்துருவேன் சார்...' என்றான் பரபரப்பாக.

'ஸாரி... தூக்கத்தக் கெடுத்திருந்தா...'

தூக்கம் அறுந்துதான் விட்டது. ஆனால், இரவு எவ்வளவு உற்சாகமானதாக மாறிவிட்டது. தீபா வாங்கிக்கொடுத்த போனில் வரும் முதல் இன்கமிங் கால். இந்த போன் இல்லாவிட்டால், இந்த அழைப்பையே தவறவிட்டிருப்பான். நினைப்பு அதிரடித்தது. இரவு முழுதும் விழித்திருந்து, குளித்து உடை மாற்றி, தயாரிப்பாளர் அலுவலகத்தின் வாசலில் அவன் காத்திருந்தபோதுதான், வானம் கறுப்பை உதிர்க்க ஆரம்பித்தது. ஒரு குவாலிஸ் வந்து கதவு திறந்தது.

'வண்டில ஏறுங்க...' என்றது குணாவின் குரல். செந்தில் ஏறியதும் கார் புறப்பட்டது.

'இவர்தான் டைரக்டர்...'

'வணக்கம் சார்...'

'ஜோசஃப் தங்கராஜ்...' என்று புன்னகையுடன் கையை நீட்டிய இளைஞன், விளிம்பில்லாத கண்ணாடி அணிந்திருந்தான். அவனிடம் கும்மென்று ஒரு சுகந்த வாசம்!

'செந்தில்... வாழ்த்துக்கள். உங்க பெர்ஃபார் மன்ஸ் சூப்பர். நீங்கதான் என் படத்து ஹீரோ. ஏன் கை நடுங்குது?'

செந்திலுக்கு மூச்சு அடைத்தது. 'தேங்க்ஸ் சார்...'

'உங்க பேர இளைய செந்தில்னு மாத்தலாம் இல்லியா?'

'மாத்திக்கிறேன் சார்...'

'ஹீரோயினை முடிவுபண்ண ஹைதராபாத் போயிட்டிருக்கேன். உங்களுக்கு மட்டும் இல்ல... எனக்கும் இது மொதல் படம். நாம சேர்ந்து கலக்கணும்.'

'கலக்குவோம் சார்...'

'அப்புறம் முக்கியமான விஷயம்... எங்க டைரக்டர் ஷங்கர் சார், இதப் பெரிய பப்ளிசிட்டியோட ஆரம்பிக்கணும்னு பிளான் பண்ணியிருக்கார். அவரா செய்தி கொடுக்கறவரைக்கும் மீடியாவுக்கு லீக் ஆகக் கூடாது. உறவுக்காரங்க, நண்பர்கள்கிட்டகூடச் சொல்ல வேண்டாம்.'

'சரி சார்...'

'நம்ம படம் முடியற வரைக்கும் வேற படத் துக்குக் கமிட் ஆகக் கூடாது.'

'ஓ.கே. சார்.'

'எத்தன சார்? ஜோசஃப்னே சொல்லுங்க...'

வெளியே வானத்திலும் வெளிச்சம்.

'ஜோசஃப் சார்... நான் ஜெயிக்கணும்னு உண்மையா ஆசைப்படற ஒருத்தர்கிட்ட மட்டும் சொல்லலாமா?'- தயக்கத்துடன் செந்தில் கேட்டான்.

'அம்மாவா..?'

'இல்ல...'

'லவ்வரா?'

'ஆமா... சத்தியமா அவ வேற யார்கிட்டயும் சொல்ல மாட்டா.'

ஜோசஃப் சிரித்தான். 'சொல்லிக்கோ’ என்பதுபோல் கையை அசைத்தான்.

விமான நிலையத்தில் இறங்கியபோது, 'பெரும்பாலும் பதினெட்டாம் தேதி பூஜை இருக்கும்...' என்றான்.

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism