Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி
##~##

ல்வேறு வகையான அணிந்துகொள்ளும் தொழில்நுட்ப ( Wearable Computing) சாதனங்களைப் பற்றி கடந்த இரண்டு வாரங்களும் பார்த்தோம். அணிந்துகொள்ளும் தொழில்நுட்பப் பிரிவில் நடந்துவரும் மிக முக்கியமான ஆராய்ச்சி, நேரடியாகவே அணிந்துகொள்ளும் துணி வகைகளில் நடந்துவருகிறது. விளையாட்டு வீரர்களுக்கும் நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் போன்ற அவர்களுடைய உடலின் முக்கிய அளவீடுகளைத் (Vital Signs) தொடர்ந்து அளந்துகொண்டே இருப்பதற்காக அணிந்துகொள்ளும் சட்டையாகத் தயாரித்தால் என்ன என்பதில் தொடங்கிய ஆராய்ச்சி, இப்போது இசை கேட்பது போன்ற பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தப்படும் சாதனமாகவே அணிந்துகொண்டால் என்ன என்ற கோணத்தில் சென்றபடி இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்டு இழைகளை மின்சாரம் கடத்தும் விதத்தில் தயாரித்து, அவை தண்ணீரால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் சந்தைக்கு மேற்படி 'ஸ்மார்ட் சட்டைகள்’ இன்னும் வரவில்லை. ஜீன்ஸ் தயாரிப்பதில் புகழ்பெற்ற Levi நிறுவனம் Musical Jacket ஒன்று தயாரித்திருக்கிறது. எம்ப்ராய்டரி செய்யப்பட்டதுபோல இருக்கும் கீ போர்டு மூலம் இசை இயக்கி கேட்டுக்கொள்ளலாம். அடுத்த வருடம் முடிவதற்குள் அணியும் தொழில்நுட்ப ஸ்மார்ட் சட்டைகள் நுகர்வோருக்குக் கிடைக் கலாம்.

ஏப்ரல் 5-ம் தேதி Global Crowdfunding Day. 'பெரு மக்கள் முதலீடு’ என்று தமிழாக்க முடிகிற Crowdfunding கடந்த வருடத்தில் கிடுகிடுவென வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. Crowdfunding பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கு ஒரு க்விக் விளக்கம்.

அறிவிழி

தொழில் முதலீடு என்பது பொதுவாக, உங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நீங்கள் ஆரம் பிக்கும் தொழிலுக்கு முதலாகக் கொடுப்பதாக இருக்கலாம்; அல்லது தொழில் முறையில் முதலீடு செய்பவர்கள் உங்களது தொழில் ஐடியாவை நன்கு பரிசோதித்து அறிந்து முதலீட்டுப் பணத்தைக் கொடுக்கலாம். (வங்கி போன்ற நிறுவனங்களில் இருந்து பெறப்படும் கடனை முதலீடு எனச் சொல்ல முடியாது). உங்களது தொழிலில் உங்களுக்கு நேரடியாகத் தெரியாத ஆயிரக்கணக்கானவர்கள் முதலீடு செய்ய முடிகிற சாத்தியக்கூறுக்குத்தான் Crowdfunding என்று பெயர்.

Crowdfunding பிரிவில் முன்னோடிகளாக www.Kickstarter.com, www.Indiegogo.com  தளங்கள் இரண்டையும் சொல்லலாம். இந்தத் தளங்களில் உங்களது ஐடியாவைப் பதிவுசெய்து முதலீடு கேட்கலாம். ஆனால், முதலீடாக நேரடியாகப் பணம் திரட்ட அனுமதி இல்லை. மாறாக, நீங்கள் மறைமுகமாகப் பணம் திரட்டலாம். உதாரணத்துக்கு, தொழில் முனைவு முயற்சிகளில் துடிப்பாக இருக்கும் கடலூர் ஜெயராம் பிரகாஷ், அவரது புதிய தொழிலாக ஸ்டிக்கர்போல ஒட்டிக்கொள்ளும் கடிகாரம் ஒன்றைத் தயாரித்துச் சந்தைப்படுத்த முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். மேற்படி இரண்டு தளங்களில் அவரது Crowdfunding முயற்சி இப்படி இருக்கலாம்:

'50 ரூபாய் கொடுப்பவர்களுக்கு ஜெயராம் நன்றி இமெயில் அனுப்புவதுடன், உங்களது பெயர், கடிகார வலைதளத்தில் நிரந்தரமாக இடம் பெறும்.’

'100 ரூபாய் கொடுப்பவர்களுக்குக் கடிகாரம் படம் பொறித்த டிஷர்ட்’ '500 ரூபாய் கொடுப்பவர்களுக்கு ஒரு கடிகார ஸ்டிக்கர் முன்பதிவில் அனுப்பப்படும்’ (சந்தைக்கு வருகையில் ஸ்டிக்கர் கடிகாரத்தின் விலை 1,000 ரூபாய்)

ஆக, பணத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, நன்கொடையாகவோ அல்லது முன்பதிவாகவோ பெற்றுக்கொள்வதுதான் இதுவரை இருந்துவந்த Crowdfunding டெக்னிக். ஆனால், இப்போது உங்களது தொழில் முனைவுகளுக்கு நேரடியாகப் பணத்தையே  முதலீடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற மாற்றம் வந்துவிட்டது. இதற்கான விதிமுறைகள் முழுமையாக வறையறுக்கப்படவில்லை என்றாலும், சில தொழில் முதலீட்டு நிறுவனங்கள் இந்தப் பிரிவில் நுழையத் தொடங்கி இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லும் புதிய நிறுவனம் www.99funding.com

'முதலீட்டு முயற்சிகளில் ஜனநாயகத்தைக் கொண்டுவருவோம்’ என்ற ஸ்லோகனுடன் Crowdfunding பிரிவுக்குள் நுழைந்திருக்கிறது இந்த நிறுவனம்.

பை தி வே, Crowdfunding-ஐச் சிறப்பாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ள ஒரு துறை சினிமா. சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்க டி.வி. நெட்வொர்க் ஒன்றில் Veronica Mars என்ற சீரியல் வந்தது. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும், இந்த சீரியலுக்கென தீவிர ரசிகர் கூட்டம் ஒன்று உண்டு. இந்த டி.வி. சீரியலை அடிப்படையாக வைத்து சினிமா ஒன்று தயாரிக்க வேண்டும்; அதற்கு 2 மில்லியன் டாலர்கள் தேவை எனும் புராஜெக்ட் 15 நாட்களுக்கு முன்னால் உருவாக் கப்பட்டது. ஆரம்பித்த சில நாட்களுக்குள் இரண்டு மில்லியன்களைத் திரட்டிவிட்ட இந்த புராஜெக்ட், இந்தக் கட்டுரை எழுதப் படும் நாளில் 4 மில்லியன்களுக்கு மேல் சேகரித்துவிட்டது. புராஜெக்ட் வலைப்பக்கம் http://kck.st/Z1HJRS

10 டாலர் கொடுத்தால், படத்துக்கான திரைக்கதை, வசனம் அடங்கிய PDF கொடுக்கப்படும் என்பதில் இருந்து, 500 டாலர் கொடுத்தால் படத்தின் நாயகி உங்களை ட்விட்டரில் ஒரு மாதம் முழுக்கத் தொடர்வார் என்பதெல்லாம் கடந்து, 10,000 டாலர் கொடுத்தால் படத்தில் ஒரு சின்ன ரோல் கொடுக்கப்படும் என்று ரொம்பவே கிரியேட்டிவாக அமைக்கப்பட்டிருக்கிறது இந்த புராஜெக்ட்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism