Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன் - 1

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ்

மறக்கவே நினைக்கிறேன் - 1

மாரி செல்வராஜ்

Published:Updated:
மறக்கவே நினைக்கிறேன்
மறக்கவே நினைக்கிறேன் - 1
##~##

"பைத்தியத்துக்கும் எனக்கும் உள்ள ஒரே வேறுபாடு
நான் பைத்தியம் இல்லை என்பது மட்டுமே!''

- டாலியின் டைரிக் குறிப்பில் இருந்து...

டுத்தவரின் டைரியை அவருக்குத் தெரியாமல், அவருடைய அனுமதி இன்றி அத்தனை பிரியத்துடன் படிக்க விரும்புபவர் ஒரு மனநோயாளியா? அப்படி எனில், அடுத்தவர்களுக்குத் தெரியக் கூடாது என தான் நினைக்கும் தன் குறிப்புகளை ஒரு காகிதத்தில் எழுதிவைத்துக்கொண்டு, தினமும் தனியாக அதைப் பார்ப்பதும், படிப்பதும், அதை ஒளித்துவைப்பதும்கூட ஒரு வகை மனநோய்தானே. எது எப்படியோ, எனக்கு அந்த மனநோய் இருந்தது.

'முட்டாள்... அடுத்தவரின் டைரியைப் படிக்காதே...’

'நண்பா... வேண்டாம் படிக்காதே!’

‘Please don't read this...’

முன் அட்டையில் இப்படிப்பட்ட வாசகங்களை எழுதியிருந்த டைரிகளைத்தான் நான் ரொம்பவே விரும்பிப் படிப்பேன். ஆப்பிள் பழமோ, ஆனந்த விகடனோ அதை எங்களுக்கு அண்ணன்தான் அறிமுகப்படுத்துவான். டைரியையும் அவன்தான் அறிமுகப்படுத்தினான். அப்போது, அண்ணன் நடுக்கூட்டுடன்காட்டில் உள்ள தங்கம்மை ஆச்சியின் குச்சிலுக்குள் தங்கி, தூத்துக்குடி வ.உ.சி. கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். எப்போதாவது பள்ளி விடுமுறைக்கு தங்கம்மையின் குச்சிலுக்குச் செல்லும் நான், அங்கு இருக்கும் அண்ண னின் தகரப் பெட்டியையும், பழைய சூட்கேஸையும் உருட்டிப் புரட்டுவேன். கலர் கலராக... புதுசு புதுசாக புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு, பைபிள்கள் மாதிரி புதுப் புது வடிவங்களில் புது நோட்டுகள் இருக்கும்.

''என் டைரிய எடுத்துப் படிச்சியாள?'' என என் உச்சிமுடியைச் சிக்கென்று பிடித்துக்கொண்டு உரலில் மாவாட்டுவதுபோல ஆட்டியபடி அண்ணன் கேட்டபோதுதான் எனக்குத் தெரிந்தது, நான் திருடிப் படிக்கும் அந்த நோட்டுகளின் பெயர் டைரி என்று.

மறக்கவே நினைக்கிறேன் - 1

'டைரியைப் படித்தால் ஏன் இப்படி அடிக்கிறார்கள்? ஒரு காகிதத்தில் ஒன்றை எழுதினாலே, அது இன்னொருவர் படிப்பதற்குத்தானே! சினிமாவில்கூட டைரி எழுதியவர் அதை அவரே படிப்பதாக ஒருபோதும் ஒரு காட்சியில்கூடக் காட்டியதில்லையே. யாரோ ஒரு போலீஸ் அதிகாரியோ, அல்லது எழுதியவரின் நண் பனோ, மனைவியோ, காதலியோதானே படிப்பதாகக் காட்டுகிறார்கள். பிறகெதுக்கு அண்ணன் இந்த அடி அடிக்கிறான்?’

அதுவரை, 'நண்பா படிக்காதே’, 'முட்டாளே படிக்காதே’ என்று முதல் பக்கங்களில் எழுதியிருந்த அண்ணன், நான் டைரியைப் படிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்து 'மாரி வேண்டாம். சொன்னாக் கேளு... படிச்ச... அடி பிச்சிருவேன்’ என்று முதல் பக்கத்தில் எழுதிவைத்துவிட்டுத்தான் அடுத்தடுத்த பக்கங்களில் எழுதத் தொடங்கியிருப்பான். ஆனால், டைரியைத் தூக்கிக்கொண்டு குருட்டுமலைக்கோ, சானாமேட்டுக்கோ, ரயில் ரோட்டுக்கோ, ஆச்சிமுத்தா கோயில் ஆலமரத்துக்கோ, குட்டிப்பறம்புக்கோ போய்விடுவேன்.  

'இன்று கிழவி தங்கம்மையை நான் திட்டியிருக்கக் கூடாது. அதுக்காக பேரீச்சம்பழக்காரனிடம் என் புக் எல்லாத்தையும் தூக்கிப்போட்டா, அவளத் திட்டாம என்ன பண்றது? ரொம்பத் திட்டிட்டேன். மன்னிச்சிரு தங்கம்ம... இனிமே அப்படிப் பண்ணாத.’

'இன்று பெருமாள் கோயில் மலையில் அவளுக்காகக் காத்திருந்தேன். அவள் வரவேயில்லை. ஆனால், மழை வந்தது. வந்த மழையை அவளாக நினைத்து நனைந்து சொட்டச் சொட்ட வீடு வந்தேன்!’

'உலகம் வெற்றிபெற்றவர்களையே பாராட்டுகிறது. விளக்கம் கூறுகிறவர்களை அல்ல!’ - இப்படி எழுதியிருக்கும் அண்ணனின் டைரியின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டு போனால், அதில் அதிகப் பக்கங்களில் நான் ஆச்சர்யப்பட்டுப் படிக்கும் அளவுக்கு என்னைப் பற்றித்தான் எழுதியிருப்பான்.

'இன்று தம்பி மாரி 'அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா’ பாடலுக்கு ஆடிக் காட்டினான். அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. சேர்ந்திருந்த கவலைகள் எல்லாம் அவன் ஆடிக் கிளப்பிய புழுதியில் பறந்ததைப் போல் இருந்தது.’

மறக்கவே நினைக்கிறேன் - 1

'இன்று எனக்கே வலிக்கும் அளவுக்குத் தம்பி மாரியை அடித்து வெளுத்துவிட்டேன். எனக்கு அவனை மட்டும்தான் அவ்வளவு பிடிக்கிறது. இருந்தாலும், இந்த சின்ன வயதில் அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனைக் கொன்றுபோட்டுவிடலாம்போல் இருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன் பள்ளியை கட் அடித்துவிட்டுப் படத்துக்குப் போனவன், நேற்று என் பையில் இருந்து 50 ரூபாய் திருடியிருக்கிறான். அவன் திருடினான் என்பதற்காக மட்டும் அவனைத் தெருவில் முட்டி போடவைத்து, கையிரண்டையும் தூக்கச் சொல்லி அடித்து தண்டனை கொடுக்கவில்லை. அந்த 50 ரூபாய் இருப்பதாக நினைத்து பஸ்ஸில் ஏறி நான் பணம் இல்லாமல் அவமானப்பட்டு வந்த வெறி என்னை அப்படிச் செய்யவைத்துவிட்டது.’ - படிக்கும்போது எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வரும். இனிமேல் தவறே செய்யக் கூடாது என்று முடிவெடுப்பேன். ஆனால், நான் செய்வதில் எது தவறு... எது சரி என்று எனக்கே தெரியாதே.

சின்ன அண்ணனின் டைரிகளைப் படிப்பதுஎன்பது, ஒரு கிறிஸ்துவ காமிக்ஸ் கதையைப் படிப்பதுபோல அவ்வளவு நகைச்சுவையாக இருக்கும். டைரியின் முதல் பக்கத்திலேயே அவன் எனக்குச் சிரிப்பை வரவழைத்துவிடுவான். 'சாத்தானே... போதும் அடுத்த பக்கத்தைப் புரட்டாதே. புரட்டினால், உன் தலை சுக்குநூறாக உடைவதாக இயேசுவின் மீதாக ஆணையிடுகிறேன்’ என்று எழுதிவைத்திருப்பான். அவன் என்னைத்தான் சாத்தான் என்கிறான் என்பதால், அவ்வளவு சிரிப்பு வரும். எனக்குத் தெரிந்து அவன் ஒருவன்தான் டைரியைப் புனைபெயரில் எழுதியவன். இயேசுவின் மீது உள்ள பிரியத்தால் தாவீதுராஜா என்ற பெயரில் தான் டைரி எழுதுவான். டைரி எழுதுகிறேன் என்ற பெயரில் டைரியின் அத்தனை பக்கங்களிலும் அவன் இயேசு வுக்குக் கடிதம்தான் எழுதிவைத்திருப்பான். இருந்தாலும், அவனுக்கும் ஒரு நாள் பெரிய அண்ணனிடம் இருந்து அடி கிடைத்தது. அப்படி அவன் அடி வாங்கிய அன்றுதான் அவன் டைரி எழுதுகிறான் என்றே எனக்குத் தெரியவந்தது.

அண்ணனுக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா, டைரியைப் படித்தாலும் அடிக்கிறான். டைரி எழுதினாலும் அடிக்கிறானே என்று நான் யோசித்துக்கொண்டு இருக்கும்போதுதான், அண்ணன் சின்ன அண்ணன் எழுதிய டைரியை எல்லாரிடமும் காட்டினான்.

'நேற்று இரவு இயேசு என் கனவில் வந்தார். தாவீதே கலங்காதே... வரும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நீ விரும்பிய 1,200 மார்க்கைக் காட்டிலும் கூடுதலாக உனக்கு 1,400 மார்க்குகளை வாங்கித் தருவதாகக் கூறிச் சென்றார்’ என எழுதியிருந்தான். எப்போதாவது அடி வாங்கும் சின்ன அண்ணனால் பெரிய அண்ணனின் அடியை அவ்வளவு தாங்கியிருக்க முடியாதுதான். அப்படி அழுதான்.

மறக்கவே நினைக்கிறேன் - 1

இதற்குப் பிறகான நாட்களில்தான் எனக்கு சின்ன அண்ணனின் டைரியைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 'கர்த்தரே... ரொம்ப நாட்களுக்குப் பிறகு நான் இன்று வாழைக்காய் சுமக்கச் செல்கிறேன். நீரே எம்முடன் இருந்து எனக்கு சின்னச் சின்ன தார் கிடைக்குமாறு செய்யும்’ என்று எழுதிவைத்துவிட்டு, வாழைக்காய் சுமக்கப் போவான்.

'கர்த்தரே... இன்று ஆத்தாங்கரை சுடலைமாடன் கோயிலுக்கு சேவல் பலி கொடுக்க அப்பா என்னை அழைத்துப்போனார். அந்த சேவலின் தலையை என்னைப் பிடிக்கச் சொல்லித்தான் அவர் அரிவாளால் அறுத்தார். சேவலின் ரத்தம் என் மீதும் அப்பா மீதும் அதிகமாகவே தெறித்துவிட்டது. எனக்காக என் அப்பா செய்த இந்தப் பாவத்தை நீர் மன்னிப்பீராக!’ என்று எழுதிவைத்துவிட்டு ஆற்றுக்குக் குளிக்கப் போயிருப்பான்.

அப்போதெல்லாம் எனக்குப் படிக்கக் கிடைத்தது அண்ணன், சின்ன அண்ணன், அக்கா இந்த மூன்று பேரின் டைரிகள்தான். அண்ணன்கள் டைரியைத்தான் நான் தினமும் எப்படியும் தேடிப் பிடித்துப் படித்து அடி வாங்குவேன். ஆனால், அக்காவின் டைரி எந்தப் பாதுகாப்பு பந்தோபஸ்துகளும் இல்லாமல் அப்படியே நடுவீட்டில் அநாதை யாகக் கிடக்கும். அவள் டைரியில் எதையும் எழுதிவைத்திருக்க மாட்டாள். அதிகமாகப் பால் கணக்குகளும் அவளிடம் டியூஷன் படிக்க வரும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களின் பரீட்சைப் பதிவெண்களும்தான் இருக்கும். சில நேரங்களில் எப்போதாவது புள்ளிகள் வைத்துக் கோலம்விட்டுப் பழகியிருப்பாள். அதையும்விட்டால் ஸ்தோத்திரம்தான்... அல்லேலுயாதான்.

டைரி படிப்பதில் இவ்வளவு ஆர்வம் வந்த பிறகு நாமே ஏன் நமக்கென ஒரு டைரி எழுதக் கூடாது என்று எனக்கும் தோன்றத்தான் செய்தது. 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்று சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால், சென்னையில் உள்ள பெரிய ஜவுளிக் கடை வேலைக்கு நண்பன் செந்திலு டன் ரயில் ஏறினேன். அதுதான் முதல் ரயில், முதல் சென்னை. 'அங்காடித் தெரு’ படத்தில் நடித்தவர் களில் யாரையாவது ஒரு கறுப்பான, ஒல்லியான பையனை நினைத்துக்கொள்ளுங்கள். அவன் நான்தான்.

சாதியை மாற்றிச் சொன்னதால்தான் வேலை கிடைத்தது. அன்றே சீருடையும் கொடுத்தார்கள். ஆனால், வேலை மறுநாள்தான். 'போய் ஓய்வெடுத்துக்கொள்’ என்று தங்கும் அறைக்கு அனுப்பினார்கள். ஒரு புது டைரி வாங்கிக்கொண்டு அறைக்கு வந்தேன். அறை என்றால் அந்த அறையை நீங்கள் 'அங்காடித் தெரு’வில் பார்த்ததை விட, கொஞ்சம் அதிகபட்சமாகக் கற்பனை செய்துகொள்ளவும். இருந்தாலும், நான் மட்டுமே அப்போதிருந்ததால் மிகுந்த நம்பிக்கையோடு என் முதல் டைரியை எழுதத் தொடங்கினேன். நன்றாக நினைவிருக்கிறது. நான் எழுதிய முதல் வார்த்தைகள்...

'முதலில் சென்னைக்குத் தகுந்தவனாக என்னை மாற்றிக்கொள்ளுதல். பின் சென்னையை எனதாக்கிக்கொள்ளுதல்!’  

அதோடு சரி... அடுத்த ஒரு மாதத்தில் அந்த டைரியின் அடுத்த பக்கத்தில், 'இனி வேண்டாம் எனக்கு சென்னை... கிடைத்தால் போதும் அன்னை’ என்று எழுதி, மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் தலையைச் சுற்றி வீசியெறிந்துவிட்டு, எந்தச் சம்பளமும் வாங்காமல் திருட்டுத்தனமாக கள்ள ரயில் ஏறி ஊர் போய்ச் சேர்ந்தேன். காரணம், 'அங்காடித் தெரு’ பார்த்துத் தெரிந்துகொள்க.

அதன் பின் நெல்லை சட்டக் கல்லூரி. எனக்குக் கிடைத்த நண்பர்கள் யாருக்கும் பெரிதாக டைரி எழுதும் பழக்கம் இல்லை. ஆனால், எல்லாரும் வகுப்புக்கு ஒரு டைரியோடு மட்டும்தான் வருவார்கள். அந்த டைரியில்தான் ஃபேமிலி லா குறிப்பு எடுப்பார்கள். அதில்தான் தீங்கியல் சட்டங்களை எழுதிவைப்பார்கள். அந்த டைரி யில்தான் ரஜினி, விஜய் படங்களுக்குத் தனி ஆளாக விளம்பரம் செய்திருப்பார்கள். அதோடு மட்டும் அல்லாமல் அந்த டைரியில்...

'தகரப் பெட்டிக்குள்
தங்கக் கட்டிகள்...

மறக்கவே நினைக்கிறேன் - 1

அரசு மகளிர் பேருந்து!’ போன்ற ஹைக்கூக் களையும் எழுதிவைத்திருப்பார்கள். ஆனால், ஜோ எனக்காக டைரி எழுதுவாள். நான் படிப்ப தற்காக மட்டுமே எழுதப்பட்ட முதல் டைரி அவள் டைரிதான். தினமும் வகுப்புக்கு வந்தவுடன் டைரியை என்னிடம் நீட்டுவாள். 'நீ கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாம் மாரி’, 'இன்னைக்கு நீ ஏன் வாட்ச் கட்டல?’ இப்படி ஒரு நாளைக்கு ஒரு பக்கத்தில் ஒரு வரிதான் எழுதிக்கொடுப்பாள். ஆகவே, நான் அதை டைரியாக என்றைக்குமே நினைத்தது இல்லை. அது என்னிடம் மட்டுமே பிரியத்துடன் புள்ளிவைத்துக் கோலமிட்டு நீட்டப்படும் ஜோவின் உள்ளங்கை... அவ்வளவுதான். படிப்பதற்கான சுவாரஸ்யத்துடன் அடுத்தவர்களின் டைரிகள் அவ்வளவாகக்  கிடைக்கவில்லை.

ஒரு நாள் திருநெல்வேலி பேருந்து டிப்போவில் வேலை செய்யும் நண்பன் ஒருவன் இரவு அறைக்கு வரும்போது, 12-ம் வகுப்பு மாணவி ஒருத்தியின் புத்தகப் பையோடு வந்திருந்தான். இருவரும் சேர்ந்தமர்ந்து அந்தப் பையைத் திறந்து பார்த்தோம். அந்த மாணவியின் பெயர் செல்வலெட்சுமி. அப்படித்தான் அதில் இருந்த எல்லாப் புத்தகங்களிலும் நோட்டுகளிலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. பைக்குள் இருந்த ஜாமென்ட்ரி பாக்ஸைத் திறந்து, அதற்குள் கிடந்த சாக்லேட்டுகளை எடுத்துத் தின்று, அந்தப் பைக்குள்ளாகவே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடித்தோம். அப்புறம் நண்பன் ஒவ்வொரு நோட்டாக எடுத்துப் புரட்டினான். அப்போதுதான் அதற்குள் ஒரு நீலக் கலர் எல்.ஐ.சி. டைரி இருந்ததைப் பார்த்தேன். ரொம்ப நாளாகிவிட்டது, அடுத்தவரின் டைரியைப் படித்து என்ற ஆவலில் திறந்தால், அந்த டைரி அத்தனையும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும், அந்த டைரிக்குள் ஒரு பிள்ளையார் படம், அப்புறம் நாற்பது வயது மதிக்கத்தக்க ஓர் ஆணின் படம் (அது செல்வலெட்சுமியின் அப்பாவாக இருக்கலாம்.) கொஞ்சம் சாப்பிட்ட சாக்லேட் தாள்கள், ஒரு பத்து ரூபாய், அப்புறம் நடிகை சினேகா குத்துவிளக்கு ஏற்றுவதைப் போன்ற ஒரு படம் இருந்தது. கடைசியாக, பள்ளிச் சீருடையில் இருக்கும் ஒரு தேவதைபோல ஒரு பெண்ணின் புகைப்படம். நிச்சயமாக அது செல்வலெட்சுமியாகத்தான் இருக்க வேண்டும். மாறிமாறிப் பிடுங்கிப் பிடுங்கி இருவரும் பார்த்துக்கொண்டோம். பார்த்தவர்கள் அடுத்தவரிடம் திருப்பிக் கொடுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கச் செய்யும் அழகு. இன்னும் சுதந்திரமாக, தைரியமாகக் சொல்லப்போனால், சினேகாவைவிட செல்வலெட்சுமி அழகாக இருந்தாள். ஆனால், அந்தப் பெண் டைரி முழுவதையும் ஆங்கிலத்தால் நிரப்பிவைத்திருந்தாள். அவளைப் பற்றி எதுவுமே என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு டிக்ஷனரியோடு ஒரு பக்கத்தைப் புரட்டிப் பார்த்தேன். ம்ஹூம்... வாய்ப்பே இல்லை. அவ்வளவு வலிமையான ஆங்கிலம். எது வலிமையான ஆங்கிலம்? 'வாட் இஸ் யுவர் நேம்’ இது தாண்டி எழுதப்படுகிற எல்லா ஆங்கில வார்த்தைகளும் எனக்கு வலிமையான வார்த்தை கள். ஏனெனில், என் மொழி வளர்ப்பு அப்படி!

கல்லூரிக்குப் போனதும் ஜோவிடம் கொடுத்து இந்த டைரியை வாசித்துக் காட்டச் சொல்ல வேண்டும் என்று டைரியை எடுத்து அறையில் வைத்துவிட்டு, செல்வலெட்சுமியின் புகைப்படத்தை என் பர்ஸில் வைத்துக்கொண் டேன். மறுநாள் செல்வலெட்சுமியைப் பார்க்கும் ஆசையிலும், அவளிடம் நேரில் பேசப்போகும் ஆசையிலும் புத்தகப்பையோடு அந்தப் பள்ளிக்குச் சென்றோம்.  

முழுக்க முழுக்கப் பெண்கள் படிக்கும் பள்ளியின் மத்தியில் சினேகாவைவிட அழகான செல்வலெட்சுமியிடம், அவள் தவறவிட்ட புத்தகப் பையைக் கண்டுபிடித்து திருப்பிக்கொடுக்க வந்திருக்கும் தமிழ் சினிமா ஹீரோக்களின் முகச் சாயலில் நின்றிருந்தோம் இருவரும். எங்களை அழைத்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு அப்படியே அன்னை தெரசா முகச்சாயல். ஆனால், எங்களிடம் பேசியது 'தூள்’ சொர்ணாக்கா முகச் சாயலில் உள்ள உடற்கல்வி ஆசிரியர். அப்பப்போ விசில் ஊதியபடியே விசாரித்தார். நாங்கள் தகவலைச் சொன்னதும் உள்ளே தலைமையாசிரியர் அறையில் எங்களைக் காத்திருக்கச் சொன்னார்கள். அரை மணி நேரம் தாண்டிய பிறகும் யாரும் வரவில்லை. சில ஆசிரியர்கள் எங்களை ஜன்னல் வழியாகப் பார்த்தபடி எதையோ கிசுகிசுத்துவிட்டுப் போனார்கள்.

மறக்கவே நினைக்கிறேன் - 1

எதற்கோ பள்ளியில் மணி அடித்தார்கள். மிகச் சரியாக கேட்டைத் திறந்துகொண்டு ஒரு போலீஸ் ஜீப் உள்ளே வந்தது. எங்களிடம் இருந்து புத்தகப் பையைப் பிடுங்கிய காவல் துறை அதிகாரி, எங்கள் இருவரையும் ஜீப்பில் ஏறச் சொன்னார்.

'சார்... நாங்க எதுக்கு சார் ஏறணும்? நான் லா காலேஜ் ஸ்டூடன்ட் சார். ஒரு பை கிடைச்சிச்சு... அட்ரஸ் பார்த்துக் குடுக்க வந்தேன். அதுக்கு எதுக்கு சார் ஜீப்ல ஏத்துறீங்க?'

'ஓ... நீங்க லா காலேஜா? வாங்க சார்... வாங்க... உங்கள ஒரு தற்கொலை கேஸ்ல விசாரிக்கணும்!'

'தற்கொலையா..? என்ன சார் சொல்றீங்க?'

'ஆமா... நீங்க வெச்சிருக்கீங்களே இந்தப் பைக்குச் சொந்தக்காரப் பொண்ணு... நேத்து டிரெயின்ல விழுந்து செத்துப்போயிருக்கு. அப்படின்னா, உங்களை விசாரிக்க வேண்டாமா?'

'தாராளமா! இங்க வெச்சே விசாரிங்க சார்.  அதைவிட்டுட்டு குற்றவாளி மாதிரி ஜீப்ல ஏத்திக் கொண்டுபோனா எப்படி?'

சட்டக் கல்லூரியில் அதுதான் முதல் வருடமாக இருந்தாலும் ஒரு கறுப்பு தைரியம் நரம்பு முழுவதும் பரவியது எனக்கு. இன்னும் இரண்டு வார்த்தைகள் கூடுதலாகப் பேசலாம். ஆனால், பயத்தில் போதும் என்று நிறுத்திக்கொண்டேன்!

நண்பன் அப்படியே நடந்ததைச் சொல்ல, நண்பனின் டிப்போவுக்கு போன் செய்து உண்மையை ஊர்ஜிதப்படுத்திய காவல் துறை, இப்போது எங்களை வேறு மாதிரி சாந்தமாகப் பார்த்தது. 'இந்தப் பிள்ள பைக்குள்ள எல்லாம் கரெக்ட்டா இருக்கா? எதையாவது எடுத்துப் பார்த்தீங்களா?' என்று காவல் துறை அதிகாரி கேட்டு முடிப்பதற்குள்ளாக, நான் நண்பனின் காலை மிதித்து நசுக்கி சிக்னல் கொடுப்பதற்குள்ளாக, 'ஆளுக்கு ரெண்டு சாக்லேட் மட்டும்தான் எடுத்துத் தின்னோம். அப்புறம் கொஞ்சம் தண்ணி குடிச்சோம். வேற எதையும் எங்க அம்மா சத்தியமா நாங்க எடுக்கல சார்' என்று நண்பன் சொல்லி எச்சிலை முழுங்கும்போது அந்தக் காவல் துறை அதிகாரியின் பார்வை படு கேவலமாக மாறியது. இனியும் செல்வலெட்சுமியின் டைரி அறையில் இருப்பதை மறைக்கக் கூடாது என அந்தப் பையைச் சும்மா தேடுவது போலத் தேடி, ''சார்... ஒரு டைரியும் இருந்துச்சு சார். ஆனா, அது ரூம்ல இருக்கு'' என்றவுடன் நண்பனின் பிடரியில் அறைவிட்டார் காவல் துறை அதிகாரி. நான் படித்துக்கொண்டு இருக்கும் சட்டப் படிப்பு, அடியை அவனுக்குத் திருப்பிவிட்டிருந்தது. பாவம் நண்பன்!

இப்போது நிஜமாகவே கைதிகள்போல அந்த ஜீப்பில் ஏறி எங்கள் அறைக்குச் சென்றோம். டைரியை எடுத்துக்கொடுத்ததும் அதை வேகமாக வாங்கிப் பார்த்த அதிகாரி, அந்த சினேகா படத்தைப் பார்த்தார்.

''இது நீங்க வெச்சதா... அந்தப் பொண்ணு வெச்சிருந்ததா?''

நண்பன் அவசரமாக, ''அந்தப் பொண்ணுதான் சார் வெச்சிருந்துச்சு. எங்க ரெண்டு பேருக்குமே சினேகா பிடிக்காது சார். ஜோதிகாதான் சார் பிடிக்கும்' என்றவனிடம், ''ஏன் உங்களுக்கு சினேகாவைப் பிடிக்காது... அவளுக்கு என்ன கொறச்சல்?' என்று அவர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியவில்லை எங்களுக்கு.

இன்னோர் அதிகாரிக்கு போன் செய்தார்.  'மேடம். அந்தப் பொண்ணு பைக்குள்ள ஒரு டைரி இருந்துச்சி. ஆனா, எல்லாமே இங்கிலீஷ்லஎழுதி இருக்கு. நீங்கதான் படிக்கணும். நான் கொண்டு வாரேன்!'' என்று எங்களிடம் எங்கள் முகவரியை வாங்கிக்கொண்டு கிளம்பிப் போனவர்தான். அதன் பிறகு எப்போதும் எங்களைத் தேடி அவர் கள் வரவில்லை.

அதன் பிறகான நாட்களில் யாருக்கும் தெரியாமல் அந்த சினேகாவைவிட அழகான செல்வலெட்சுமி புகைப்படத்தை என்ன செய்வதென்றே தெரியாமல் பர்ஸில் வைத்துக்கொண்டு திரிந்தேன். தினமும் நான்கைந்து முறையாவது ரயிலில் விழுந்து செத்துப்போன செல்வலெட்சுமியின் முகத்தை எடுத்துப் பார்த்துவிடுவேன். 'இவ்வளவு அழகா இருக்கிறவங்க, எப்படி அதுக்குள்ள சாக முடியும்?’ என்று யோசிப்பேன்.

மறக்கவே நினைக்கிறேன் - 1

ஒருநாள் பர்ஸைப் பார்த்து யாரென்று கோபமாகக் கேட்ட ஜோவிடம், என்ன சொல்வ தென்று தெரியாமல் தங்கை என்றேன். அவளும் அதைக் கொஞ்ச நாள் வாங்கி அவள் பர்ஸில் வைத்துக்கொண்டு எல்லாரிடமும் காண்பித்துக் கொண்டு திரிந்தாள்.

ஒரு நாள் எதேச்சையாக நீதிமன்றத்தில் அதே அதிகாரியைப் பார்த்தேன். என்னை அவருக்கு நினைவில் இல்லை. எல்லாவற்றையும் நினைவுபடுத்திவிட்டு அவரிடம் கேட்டேன்.

'அந்தப் பொண்ணு கேஸ் என்னாச்சு சார்?'

'பாவம்... அந்தப் பொண்ணு செத்ததுக்கான எல்லாக் காரணமும் அந்த டைரியிலதான் இருந்துச்சு. அதனால அந்த கேஸ் சீக்கிரமா முடிஞ்சிருச்சி!''

''அப்படி அந்தப் பொண்ணு டைரில என்னதான் சார் எழுதியிருந்தா?'

'அது அந்தப் பொண்ணோட டைரி இல்லை. அது அவ அப்பா டைரி. ஒரு மாசத் துக்கு முன்னாடி எங்கேயோ ஓடிப்போன அவங்க அப்பன், அந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிச் சாக வேண்டிய எல்லாக் காரணத்தையும் அதுல எழுதிவெச்சிருந்தான். அந்தப் பைத்தியக்காரனைத் தேடினோம். பாவம் அவனும் ஆத்துல விழுந்து செத்துப்போயிருக் கான். அதனால அந்த கேஸ் முடிஞ்சிருச்சி.'

'அவங்க அப்பா அப்படி என்ன சார் எழுதியிருந்தாங்க?' என்று நான் மேலும் கேட்டபோது, அந்த காவல் துறை அதிகாரி அப்படி ஒரு முறை முறைத்தார். 'போயிடு பேசாம... ஆளப்பாரு... ஆள!’ என்பதுபோல் இருந்தது அது.

அதன் பிறகு யாருடைய டைரியையும் படிப்பதற்கு நான் அவ்வளவாக ஆர்வம் காட்டியதாக நினைவில்லை.

ஆனால்... எந்த நிபந்தனையும் நியதியும் இல்லாமல் என்னைப் பிரிந்து எங்கேயோ குழந்தையும் குட்டியுமாக வாழ்ந்துகொண்டுஇருக்கும் என் ஜோவின் பதுக்கிய நினைவின் அலமாரிக்குள், சினேகாவைவிட அழகான அந்த செல்வலெட்சுமி என்னுடன் பிறந்த ஒரே தங்கையாக இன்னும் வாழ்ந்துகொண்டு தானே இருப்பாள்!

- இன்னும் மறக்கலாம்...