##~##

தீபா உலர்ந்த வார்த்தைகளில் ஒரு கடிதத்தை டைப் செய்துகொண்டிருந்தபோது, செந்திலிடம் இருந்து போன் வந்தது.

'தீபா... உன் கை அதிர்ஷ்டக் கை. புது போன்ல வந்த முதல் கால் என் வாழ்க்கையை மாத்தப்போவுது!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீபா, சூழ்நிலை மறந்து துள்ளினாள்.

'சொன்னேன்லடா... ஜெயிச்சுட்ட பாரு! எப்ப பூஜை?'

'பதினெட்டாம் தேதி. ஆனா, யார்ட்டயும் சொல்லக் கூடாதுனு சொல்லியிருக்காங்க.'

'சொல்லாத!'

'அம்மாகிட்ட மறைக்கறது மனசுக்குக் கஷ்டமா இருக்கு.'

'வெயிட் பண்ணு. இப்ப சொல்லி அவங்ககிட்ட சாபம் வாங்கறதைவிட, அஃபீஷியலா அறிவிப்பு வந்ததும் சொல்லி, ஆசீர்வாதம் வாங்கலாம்.''

'நாளைக்கு மறக்காம தினத்தந்தி பாரு, தீபா.'

'டேய், பணம் அனுப்பறேன். நல்லதா நாலு டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷூலாம் வாங்கிக்க.'

யட்சன்

பேசி முடித்து போனை வைத்த பிறகும் மகிழ்ச்சி அடங்காமல், தீபா அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தாள். தெருவைக் கடந்து, அங்காடிக்குள் நுழைந்தாள். இனிப்பு ஒரு கிலோ வாங்கிக்கொண்டாள். அலுவலகம் திரும்பி சக பணியாளர்களிடம், முதலாளியிடம் இனிப்புகளைப் பகிர்ந்தாள்.

'என்ன விஷயம் தீபா? கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சா?'

'எதுக்குன்னு பதினெட்டாம் தேதி சொல்றேன்' என்று தீபா புன்னகையுடன் சொன்னாள்.

பாரி, அடுத்த சில நாட்கள் நிழலாக வேலை செய்தான்.

ஆதிமூலமும் அவனுடைய அடியாட்களும் எந்த நேரத்தில் எங்கெங்கே காணப்படுகிறார்கள்? எவ்வளவு பேர் பாதுகாப்பு வளையமாக வலம்வருகிறார்கள்? அதில் யார் யாரிடம் என்னஎன்ன ஆயுதங்கள் இருக்கின்றன? எந்தெந்த வாகனங்கள் யார் யாரிடம் இருக்கின்றன?

அத்தனைத் தகவல்களும் அவனுக்கு அத்துப்படியானதும், பூமணியையும் கிருபாவையும் சில முறை சந்தித்தான். தேவைப்பட்ட கூடுதல் விவரங்களைக் கேட்டுப் பெற்றான்.

'எனக்கு ஒரு புது செல்போன் வேணும். புது நம்பர் வேணும்.'

கிடைத்தது. அதன் பின், தன் திட்டத்தைக் கச்சிதமாகத் தயார்செய்தான். பாரிமுனை வீதியில், மூன்று கத்திகளை வாங்கிக்கொண்டான்.

கடைசியாக ஒரு முறை கிருபாவைச் சந்திக்க முடிவுசெய்தான்.

இந்த முறை சந்திப்பு, கோட்டூர்புரம் ரயில் நிலையத்தின் பயன்படுத்தாத கீழ்த்தளத்தில் நிகழ்ந்தது. பிளாஸ்டிக் குப்பைகளும், எப்போதோ பெய்த மழைத் தண்ணீரும், காலி மது பாட்டில்களும், பயன்படுத்தி வீசிய காண்டம் உறைகளும், சுருண்டுபடுத்திருந்த நான்கு நாய்களும் மட்டுமே காணப்பட்டன.

கிருபா செய்தித்தாளில் சுற்றிய ஒரு பொட்டலத்தை அவனிடம் நீட்டினான்.

'பேசிய முன்பணம்...'

பாரி அவனிடம் கத்திகளைக் காட்டினான்.

கிருபா முகத்தில் அதிருப்தி. 'அவங்க கூட்டமா சூழ்ந்துக்கிட்டா, கத்தி வேலைக்காவாது, பாரி... ஒரு துப்பாக்கி வெச்சுக்க.'

'ஆயுதமும் சத்தம் போடக் கூடாது, அடிபடறவனும் சத்தம் போடக் கூடாதுனு நெனைக்கறவன் நான்!'

'பதினெட்டாம் தேதின்னுதானே சொன்னே? சென்னைக்குப் பழக்கமான புதுப் பையனை வண்டியோட அனுப்பறேன்... அவன்ட்ட எதுக்கும் ஒரு துப்பாக்கி குடுத்துஅனுப்பறேன்.'

யட்சன்

செந்தில் அந்த செய்தித்தாளை ஆயிரமாவது தடவையாக எடுத்துப் பார்த்தான். கால் பக்க விளம்பரம்.

டைரக்டர் ஷங்கரின் நல்லாசியுடன்,

புத்தம் புதிய கூட்டணியில்

'யட்சன்’

படப்பிடிப்பு துவக்கம்... பதினெட்டு.

சதுரமாக ஒரு கட்டம் கட்டப்பட்டு, அதற்குள் பெரிய கேள்விக் குறி. அதன் கீழே நாயகன் என்ற வார்த்தை. பக்கத்தில் இன்னொரு சதுரக் கட்டத்தில் கேள்விக்குறிக் குக் கீழே நாயகி என்ற வார்த்தை. புதுமுகங்களின் புகைப்படங்களை வெளியிடாமல், வித்தியாச மான முறையில் ஒரு விளம்பரம்.

காலிச் சதுரத்தில் தன் புகைப்படத்தை வெட்டிப் பொருத்திப் பார்த்தான். கீழே, 'அறிமுகம்: இளைய செந்தில்’ என்று அழகாக எழுதிப் பார்த்தான். மகிழ்ச்சி மனதை நிறைத்து வழிந்தது.

குணாவிடம் இருந்து 17-ம் தேதி இரவு போன் வந்தது.

'காலைல ரெடியாயிருங்க... வண்டி அனுப்பறேன்.'

செந்தில் ஏன் தூங்கப்போகிறான்?

'அம்மா கீழ விழுந்து கைய முறிச்சிக்கிட்டாங்க செந்தில். விட்டுட்டு வர முடியல...' என்று தீபா அழுதபோது, நள்ளிரவு வரை போனில் பேசி அவளைச் சமாதானம் செய்தான்.

18-ம் தேதி. வெள்ளிக்கிழமை. அதிகாலை.

இரண்டு வெள்ளை நிறக் கார்கள், அந்த மேன்ஷன் இருந்த சந்தில் நுழைய முடியாமல், முனையில் காத்திருந்தன.

புதிய ஜீன்ஸ் அணிந்திருந்த செந்தில் தீபாவுடன் செல்போனில் பேசியபடியே, படிகளில் வேகமாக இறங்கினான். படிக்கட்டுத் திருப்பத்தில், பாரியுடன் மோதிக்கொள்ள இருந்து, கடைசி நொடியில் தவிர்த்தான். அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். வெளியே விரைந்தான்.

பாரி தன் ஆயுதங்களைத் தொட்டுப் பார்த்தபடி, பதில் புன்னகையை வீசினான். வெளியே வந்தான். செந்தில் ஒரு க்வாலிஸில் ஏறுவதைக் கவனித்தான். காத்திருந்து அடுத்த காரில் ஏறினான்.

இரு கார்களும் தவறான பயணிகளை ஏற்றிக்கொண்டது தெரியாமல், எதிரெதிர் திசைகளில் விரைந்தன.

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism