Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன்

Published:Updated:
மறக்கவே நினைக்கிறேன்
##~##

ண்கள் மட்டுமே படிக்கும் நகரத்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொண்டுபோய் திடீரென்று சேர்க்கப்படும் கிராமத்து மாணவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சபிக்கப்பட்டவர்கள் என்பதை தூத்துக்குடியில் 10-ம் வகுப்பில் சேர்ந்த இரண்டு நாட்களிலேயே தெரிந்துகொண்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்கள்... ஆண்கள்... எங்கு பார்த்தாலும் ஆண்கள். முறைப்பது ஆண், சிரிப்பது ஆண், இடித்துவிட்டுப் போவது ஆண், கீழே விழுந்த உங்கள் கர்சீப்பையோ, பென்சிலையோ எடுத்துக்கொடுப்பது ஆண், நாம் விரும்பி விரும்பி செய்துகொண்டுவரும் சிகை அலங்காரத்தைப் பாராட்டுவது ஆண் அல்லது கேலி செய்வது ஆண், உங்கள் சைக்கிளுக்கு வழி கொடுப்பது ஆண், பள்ளிக்குள் நுழையும்போது கை காட்டுவதும் ஆண், வழியனுப்புவதும் ஆண். இப்படி இருந்தால் எப்போதாவது சாலையில் பள்ளிச் சீருடையில் நடந்துபோகும் ஒரு மாணவியை நீங்கள் எப்படிப் பார்ப்பீர்கள்?

அதிசயமாக... ஆச்சர்யமாக... ஏக்கமாக... ஏமாற்றமாக... வெறுப்பாக... கோளாறாக... வக்கிரமாக!

அவ்வளவுதான்! இனி, மதியம் சாப்பாட்டின்போது மாதவி வந்து, 'கோதுமை தோசை இருக்கு, மாரி உனக்கு வேணுமா?’ என்று கேட்க மாட்டாள். கடவுள் வாழ்த்து பாடும்போது மெதுவாகக் கண்ணைத் திறந்து பார்த்தால், ஓர் ஓரமாக உயரமாக நிற்கும் பாக்யலட்சுமி உதட்டைச் சுழித்துச் சிரிக்க மாட்டாள். தினமும் ஒரு குறள் சொல்வதைப் போல தினமும் ஒரு வேத வசனத்தை எபனேசர் ஜெயசெல்வி வந்து, 'சொல்றதைக் கேளு மாரி’ என்று சட்டையைப் பிடித்துக்கொண்டு சொல்ல மாட்டாள். கடைசி பெஞ்ச்சில் அமர்ந்தபடி, 'மாரி... 'தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே... அன்னமே’ பாட்டு 'ஆசை’யில கிடையாதுல்ல!’ என்று சத்தம் போட்டுக் கேட்க அவ்வளவு பெரிய தெய்வானை இருக்க மாட்டாள். மலையும் இல்லை... பெருமாள் கோயிலும் இல்லை. பிறகு எப்படி புஷ்பலீலா மட்டும் கையில் ஒரு செம்பருத்திப் பூவோடு வந்துவிடப்போகிறாள்?

'பெண்களால் கள்ளம் கபடம் இல்லாமல் நேசிக்கப்படும் ஆண்களே, கடவுளால் நிபந்தனை இன்றி ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பெண்கள் நேசிக்கக்கூடிய ஆண்களாக மாறுங்கள்... அதுவே வாழ்வின் உத்தமம்!’ என்பதைச் சொல்வதற்கு இயற்பியல் சீதாபதி சார் தூத்துக்குடிக்குத் தினமும் இனி பஸ் பிடிச்சு வரவா போகிறார்?

நகரத்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகள், நம்ம காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி பவனைப் போன்றது. அவ்வளவு கோஷ்டிகள். அமர்ந்திருக்கும் பெஞ்ச்சின் அடிப்படையில் ஒரு கோஷ்டி, ஒரே ஏரியாவில் இருந்து வருபவர்கள் ஒரு கோஷ்டி, ஒரே டியூஷனில் படிக்கிறவர்கள் ஒரு கோஷ்டி, ஒரே சாதிக்காரர்கள் ஒரு கோஷ்டி, விடுதி மாணவர் கள் ஒரு கோஷ்டி, கிரிக்கெட்  கோஷ்டி, அப்புறம் அஜித்தின் திலோத்தமா குரூப், விஜயின் குஷி பாய்ஸ். இது போதாதென்று பள்ளி ஆசிரியர்கள் வேறு தங்களுக்குப் பிடித்த மாணவர் களை ஒரு குரூப்பாக்கி வைத்திருப் பார்கள். எனக்கு எந்தக் கோஷ்டியில் என்னை இணைத்துக்கொள்வது என்ற குழப்பமோ, கவலையோ இல்லை. ஏனெனில், நான் அரசு விடுதியில் இருந்து படிக்கிற மாணவன். ஆகவே, நான் யாரும் எதுவும் சொல்லாமலே 'ஹாஸ்டல் பாய்ஸ்’. ஆனால், எனக்கு குஷி பாய்ஸில் சேர வேண்டும் என்ற ஆசைதான் கடைசி வரை இருந்தது. நான் அதை ஒருபோதும் வெளிக்காட்டியது இல்லை. ஏனெனில், நான் அவ்வளவு தீவிரமான ஜோதிகாவின் ரசிகனாக இருந்தேன் அப்போது.

மறக்கவே நினைக்கிறேன்

என் வகுப்பில் விடுதியிலிருந்து படிக்கும் மாணவர்கள் என்னோடு சேர்த்து நான்கு பேர். இதில் சுயம்பு, வேப்பலோடையிலிருந்து வந்தவன். காசிக்கு, ஓட்டப்பிடாரம். சுரேஷ், நடுக்கூட்டுடன் காட்டிலிருந்து அவ்வப்போது வருகிறவன். இவர்கள் ஏற்கெனவே ஆறாம் வகுப்பிலிருந்து அதே பள்ளியில் படித்துவருகிறவர்கள். ஆண்கள் பள்ளியிலேயே படித்துவருவதால் அவர்கள் நடவடிக்கை அத்தனையுமே வந்த புதிதில் எனக்கு அவ்வளவு மிரட்சியாக இருக்கும். சாலையில் போகும் பள்ளி மாணவிகளைப் பார்த்தால், அவர்கள் நடவடிக்கையே மாறிவிடும். யாரிடமாவது சண்டை போடுவார்கள், பட்டன்கள் இல்லாத சட்டையை எந்தக் கூச்சமும் இல்லாமல் அணிந்துவருவார்கள், 'தினமும் குளிக்கணுமாடே’ என்று சிரிப்பார்கள். சட்டையை இஸ்திரி போட்டு எடுத்துவந்தால், 'அங்க எவ இருக்கா பார்க்கிறதுக்கு? இருக்கிற ஒரு ஆயாவுக்கு இந்த அழுக்குச் சட்டையே போதும்!’ என்பார்கள். அவர்களோடு அந்த நகரத்தில் புழங்க எனக்கு முதலில் அவ்வளவு சிரமமாயிருந்தது.

அப்புறம் காடு நினைவுக்கு வந்தது, மிருகம் நிஜத்துக்கு வந்தது. நீங்கள் வெறுமனே மூன்று நான்கு மாதங்கள் உங்கள் அம்மாவின் முகத்தைப் பார்க்காமல், உங்கள் அக்காக்களோடு அமர்ந்து சாப்பிடாமல், உங்கள் தோழிகளோடு சண்டை பிடிக்காமல்... வெறுமனே ஆண்களோடு மட்டும் பேசி, பழகி, சாப்பிட்டு, விளையாடி, உறங்கி, நடந்து, ஓடிப்பாருங்கள்... அப்போது தெரியும் அந்த ஆண்கள் உலகம் வெறுமனே முட்டாள்தனமான சாகசங்களை மட்டும் எப்படி இவ்வளவு விரும்புகிறது என்று.

அந்தச் சாகசம் பூட்டிய பெட்டிக் கடைகளின் பூட்டை உடைத்து... நள்ளிரவில் பீடி, சிகரெட் திருடி பெருமைப்படும். பசியின் பிடி யில் இருக்கும்போது, யாரென்றே தெரியாதவர் களின் கல்யாண மண்டபங்களில் தோரணையாகச் சாப்பிட அடம்பிடித்து அழைக்கும்.  பேருந்தில் போகும் பெண்கள் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று, கால் பெருவிரலை மட்டும் பஸ் படிக்கட்டில் வைத்துவிட்டு உடம்பை சாலையில் தொங்கப்போட்டுக்கொண்டு வரும். பக்கத்துத் தெருக்களில் நுழைந்து, வீட்டுக் கொடிகளில் காயும் துணிகளில் தனக்குப் பிடித்தமான துணிகளைத் தேர்ந்தெடுத்துத் திருடும். எல்லாமே சாகசம் என்றான பின் சோற்றைத் திருடித் தின்பதும் அந்த சாகசக் காரர்களுக்கு ஒரு சாகசம்தான்.

மறக்கவே நினைக்கிறேன்

அரசாங்க விடுதிகளில், அதுவும் பள்ளி மாணவர் விடுதியில் எப்படிப்பட்ட உணவு கிடைக்கும் என்பதை நான் உங்களிடம் சொல்லி, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் விடுதியோ அல்லது விடுதி சமையல்காரரோ அதற்கு விதிவிலக்கும் அல்ல. ஒரு முறை எங்கள் விடுதிக் காப்பாளரை, 'எங்களோடு அமர்ந்து நாங்கள் சொல்கிற நாளில் சாப்பிட்டால் மட்டும் போதும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டமே நடத்தினோம். எவ்வளவோ பிடிவாதங்களுக்குப் பின் எங்களோடு சாப்பிட்டார். ஆச்சர்யம், அன்று சாப்பாடு அவ்வளவு பிரமாதமாக இருந்தது. மறுநாள் காலையில் ரயிலடிக்கு காலைக்கடன் கழிக்க வந்த முத்துசாமி அண்ணாச்சி, 'நேத்து என்னடே ஹாஸ்டல்ல விசேஷம்? சாப்பாடு நம்ம கடையில இருந்து வந்துச்சி!’ என்று சொன்னபோதுதான் தெரிந்தது, முன்தினம் நாங்கள் சாப்பிட்டது தெட்சிணாமூர்த்தி ஹோட்டல் சாப்பாடு என்று. இப்படி விடுதியில் எப்போதும் சாப்பாட்டை வெறுக்கும் அந்தச் சாகசம், பள்ளியில் தினமும் விதவிதமாக டிபன்பாக்ஸ்களில் வீட்டில் இருந்து சக மாணவர்கள் கொண்டுவரும் உணவு அநாதையாக ஜன்னல்களிலும் பெஞ்ச்சு களிலும் இருப்பதைப் பார்த்தால், என்ன செய்யும்?

எப்போதும் விடுதியிலிருந்து தாமதமாக வரும் நாங்கள், பள்ளியின் பின் கேட்டின் வழியாக நுழைவோம். பின் பிரார்த்தனை பெல் அடித்ததும் வேகமாக, ஏதோ புத்தகப் பையை வகுப்புக்குள் வைத்துவிட்டு வர வேண்டும் என்பதைப்போல எல்லா ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்னாடி அவர்கள் பார்க்கும்போதே வேகமாக வகுப்பைப் பார்த்து ஓடுவோம். எங்கள் வகுப்பு இரண்டாவது மாடியில் இருந்ததால், நாங்கள் வகுப்புக்குள் நுழையும்போதே பிரார்த்தனை கீழே தொடங்கிவிடும்.

மறக்கவே நினைக்கிறேன்

'நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்...’

கேட்கும்போது நாங்கள் மிகவும் சாவகாசமாக ஒவ்வொரு டிபன் பாக்ஸையும் திறந்து சாப்பிட ஆரம்பிப்போம். வெறுமனே ஐந்து இட்லிகள் உள்ள டிபன் பாக்ஸில் இரண்டு இட்லிகளுக்கு மேல் சாப்பிட்டால், சுரேஷ§க்குப் பொல்லாக் கோபம் வரும். 'டேய், ரொம்ப அலையாத... போதும். பாவம் அந்தப் பையனும் மதியம் சாப்பிடணும்லா. மூண அவனுக்கு வை!’ என்பான். 'மதியம் டிபன் பாக்ஸைத் திறந்து பார்க்கும் மாணவன், கெட்ட வார்த்தை போட்டு நம்மைத் திட்டாத அளவுக்கு நாம சாப்பிடணும்’ என்பான் சுயம்பு. ஆனால், ஏதாவது டிபன் பாக்ஸில் ஆம்லெட்டோ அல்லது சிக்கன் பீஸ்களோ இருந்தால், எந்தத் தொழில் தர்மத்தையும் பார்க்க மாட்டார்கள். பிரார்த்தனை முடிந்துவருகிற எல்லா மாணவர்களும் டிபன் பாக்ஸை வந்தவுடன் திறந்து பார்ப்பது இல்லை. எந்த பெஞ்ச்சில் சிந்திய சோற்றுப் பருக்கையோ, இட்லியில் மிச்சமும் சிதறிக்கிடக்கிறதோ, அந்த பெஞ்ச் மாணவர்கள் மட்டும் தங்கள் டிபன் பாக்ஸைத் திறந்து பார்த்து, கொஞ்சம் திட்டுவார்கள். அவர்களுக்குத் தெரியும் நாங்கள்தான் என்று. ஆனால், யாரும் பெரிதாகக் கோபப்பட்டது இல்லை.  

அன்று எப்போதும்போலவே, எல்லா நாளையும்போலவே எங்கள் வயிறு நிறைந்து பிரார்த்தனை முடிந்து முதல் வகுப்பு தொடங்கியபோது, எங்கள் நான்கு பேரை மட்டும் தலைமை ஆசிரியர் அழைப்பதாக வந்து அட்டெண்டர் சொல்லிச் சென்றார்.  

'ஹாஸ்டல்பத்திக் கேக்குறதுக்காகக் கூப்பிட்டுஇருப்பார்டா’ என்றான் சுயம்பு.

'அப்படின்னா, வார்டன் வந்திருப்பாரோ?’

'வரட்டுமே... வந்தா நமக்கென்ன பயம்?’

'ஏதாவது சொல்லிக்கொடுத்துட்டார்னா, என்ன செய்யிறது?’

'என்ன சொல்லுவாராம்?’

ஆனால், அங்கு போய் நாங்கள் சேரும்போது எங்கள் வகுப்பு நான்காவது பெஞ்ச்சில் உள்ள சாமிக்கண்ணுவும் சந்தன மாரியப்பனும் நின்றிருந்தார்கள். இருவருமே எப்போதும் ஒன்றாகத் திரிகிறவர்கள். சாமிக்கண்ணு, டூவிபுரத்துக்காரன். அவன் அப்பா, லாரி ஓனர். சந்தன மாரியப்பனுக்கு போல்டன்புரம். அவன் அப்பா, மாட்டுவண்டித் தொழிலாளி. இன்னும் சரியாகச் சொன்னால், சந்தன மாரியப்பனுக்கு வீடே கிடையாது என்று தான் பார்த்தவர்கள் சொல்லுவார்கள். சாமிக் கண்ணுவும் சந்தன மாரியப்பனும் நல்ல ஓட்டப் பந்தய வீரர்கள். ஆறாம் வகுப்பில் இருந்தே அவர்கள் இருவருக்கும்தான் பரிசுகள் கிடைக் குமாம். இருவரும் அவ்வளவு நெருக்கமான நண்பர்கள் என்று எல்லோரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

மறக்கவே நினைக்கிறேன்

'சார்... இவங்க நாலு பேரும்தான் சார். பிரேயருக்கு வராம எல்லாருடைய சாப்பாட்டை யும் எடுத்துச் சாப்பிடுறது. தினமும் என் டிபன்பாக்ஸ்ல கொஞ்சம்கூட மிச்சம் வைக்காமத் தின்னுடுறாங்க சார்!’ என்று சந்தன மாரியப்பன் ஹெட்மாஸ்டரிடம் சொன்னபோது, நாங்கள் அவ்வளவு அதிர்ச்சியடைந்துவிட்டோம். காரணம், 'வசமாக மாட்டிக்கிட்டோமே’ என்றல்ல. 'நாம என்னைக்குடா இவனோட புழு பூச்சி நெளியிற சோத்தத் தின்னோம்?’ என்கிற அதிர்ச்சியில் நின்றபோது, ஒரு சாட்டைக் கம்பு என் முதுகை அப்படி அடித்து இழுத்தது.

'நாலு பேரும் போ... போய் கிரவுண்ட்ல முட்டாங்கால் போடு... போ!’ இப்போது நான்கு ஐந்து அடிகள் கை, கால் எல்லாவற்றிலும்.

'போயும் போயும் அவன் சோத்த எடுத்து எதுக்குடாத் தின்னீங்க?’ என்று நான்கு பேருமே நான்கு பேரையும் பார்த்துக் கேட்டுக்கொண்டோம். எங்கள் நான்கு பேருக்குமே தெரியும், மாரியப்பனின் டிபன்பாக்ஸைத் திறக்கக்கூட முடியாத அளவுக்கு அவ்வளவு நாற்றம் வீசும். அப்புறம் எப்படி அவன் சாப்பாடு காணாமல் போகும்? யார் சாப்பிட்டிருப்பார்கள்? அதன் பிறகு நாங்கள் வாங்கியது வெறுமனே அடிகள் கிடையாது. பிரேயருக்குத் தினமும் வராததற்கு, அடுத்தவர்கள் சாப்பாட்டைத் திருடிச் சாப்பிட்டதற்கு,  ஹாஸ்டல் வார்டன் எப்பவோ கொடுத்த புகாருக்கு, சுயம்பு கையில் ரஜினி என்று பச்சை குத்திவைத்திருந்ததற்கும் சேர்த்து சாட்டை எங்கள் முதுகில் விளையாடியது. கை, கால் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு வாய் முளைத்ததுபோல அழுது அழுது வீங்கியது.

'இனிமே, தினமும் பிரேயர்ல 'சோத்துக் களவாணிகள்’னு உங்க நாலு பேர் பேரையும் வாசிப்பேன். கையத் தூக்கிக்கிட்டு முன்னாடி வந்து முகத்தக் காட்டணும். அப்புறம் உங்க ஹாஸ்டல்ல கொடுக்கிற மத்தியான சாப்பாட்டைக் கொண்டுவந்து எங்கிட்ட காட்டிட்டுச் சாப்பிடப் போகணும். என்னா சரியா... ஓடு ஓடு...’ சாட்டைக் கம்புக்கு நாங்கள் எட்டும் வரை மறுபடியும் அடி. வகுப்புக்குள் போகவே அத்தனை கூச்சமாக இருந்தது. 'வாங்கடே சோத்துக் களவாணிகளா?’ என்று தங்கமுருகன் வாத்தியார் சொல்லும்போது அழுகையே வந்து விட்டது. பெஞ்ச்சில் உட்காரும்போதுதான் பார்த்தேன், நாங்கள் வருவதற்கு முன்பே எங்கள் பெஞ்ச்சில் சோத்துக் களவாணிகள் என்று யாரோ எழுதிவைத்திருந்தார்கள். பள்ளி முடிந்த தும் எங்கும் நிற்காமல் ஓடியபோதும் சிலர் சத்தமாகச் சொன்னது தெளிவாகக் கேட்டது... 'சோத்துக் களவாணிகளா...’

மறக்கவே நினைக்கிறேன்

ராஜாஜி பார்க்கில் அமர்ந்திருந்தோம். சுயம்புதான் முதன்முதலில் கத்தினான். 'நான் எங்க அம்மா சத்தியமா அவன் சோத்த எடுத்துத் திங்கல. எல்லாரும் அவங்க அவங்க அம்மா சத்தியமா அவன் சோத்த எடுத்துத் திங்கலனு சத்தியம் பண்ணுங்க பார்ப்போம்’ - அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே எல்லா ரும் அவரவர் அம்மா மீது சத்தியம் செய்தோம். இப்போது எங்களுக்குள் யார் மீதும் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், அப்புறம் எதுக்கு அவன் எங்களைப் போட்டுக்கொடுத்தான் என்கிற கோபம் எங்களுக்கு இருந்தது.

இரவு விடுதிக்குச் செல்லாமல் பார்க்கிலேயே கிடந்தோம். பக்கத்தில் கொஞ்ச தூரம் நடந்துபோனால் மாரியப்பன் வீடு இருக்கிறது என்று காசி சொன்னான். நான்கு பேரும் மாரியப்பன் வீட்டை நோக்கிச் சென்றோம். எல்லாரும் சொன்னதுபோல அது வீடே இல்லை. மாட்டுவண்டித் தொழிலாளர் நலச் சங்கத்தின் பின் பக்க ஓட்டையும் ஒரு பழைய மாட்டுவண்டியையும் இணைத்து ஒரு பெரிய மஞ்சள் நிறத் தார்ப்பாயைக் கட்டிவைத்திருந்தார்கள். பக்கத்தில் இன்னொரு மாட்டுவண்டி. அதன் பக்கத்தில் முழுக்கச் சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்ட பெரிய கொம்புகளை உடைய இரண்டு காளைகள் அசைபோட்டபடி படுத்துக்கிடந்தன. அந்தத் தெரு அவ்வளவு அமைதியாக இருந்தது. எங்கள் முகங்களைக் காட்டிக்கொடுக்கும் வெளிச்சம் அந்தத் தெருவில் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு நின்றோம்.

மிகச் சரியான பழிவாங்கும் திட்டம் கிடைத்துவிட்டதைப் போல சுரேஷ் வேகமாகப் போய் சத்தம் எதுவும் எழுப்பாமல், அந்த இரண்டு காளை களையும் அவிழ்க்கத் தொடங்கினான். அவன் திட்டம் எங்களுக்கு அவன் சொல்லாமலேயே புரிந்துவிட்டது.

நாங்களும் போய் அந்தக் காளை மாடுகளை அவிழ்த்தோம். காசி திடீரென்று ஒரு நல்ல காரியம் செய்கிறவனாக மாடுகளின் கழுத்துச் சங்கிலியை அவிழ்த்தான். பின் நான்கு பேரும் சேர்ந்து காளைகளை ஓட்டிக்கொண்டு மருத்துவக் கல்லூரி பக்கமாக வந்து, அப்படியே நீதிமன்றத்தின் பின் வழியாக வந்து, மூணாவது மைலைப் பார்த்துக் காளைகளை அடித்துத் துரத்தினோம். அந்த நடு இரவில்... அந்தப் பெரிய சாலையில்... அந்தப் பெரிய காளைகள் இரண்டும் அப்படிக் குதித்துக்கொண்டு ஓடியது, எங்களுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அப்படியே அதே சந்தோஷத்தோடு விடுதிக்கு வந்தோம்.

மறுநாள் பள்ளிக்குப் போகும்போது மாரியப்பன் வீடு வழியாகப் போகலாம் என்று கூப்பிட்டதற்கு சுயம்பு, சுரேஷ், காசி மூன்று பேருமே வர மறுத்து விட்டார்கள். ஆனால், எனக்கு அந்த வழியாகப் போக வேண்டும்போல் இருந்தது. தனியாகப் போனேன். அந்த தெருவிலிருந்து சாமிக்கண்ணு வந்துகொண்டிருந்தான். அவனைப் பார்க்காதது போல முகத்தை வைக்க,  அவன் மிகச் சரியாக சைக்கிளை என் முன்னால் வந்து நிறுத்தினான். நான் விலகிப் போக முயற்சித்தபோது, என் கையைப் பிடித்து நிறுத்திய சாமிக்கண்ணு, 'மன்னிச்சிரு மாரிச்செல்வம். நாங்க உங்களப் போட்டுக் கொடுத்தது தப்புதான்!’ என்று அவன் சொன்னபோது எனக்கு அப்படியே சாக்கடை யில் தள்ளி அவன் மண்டையை உடைக்க வேண்டும்போல் இருந்தது. 'அவன் டிபன் பாக்ஸ்ல இருக்கிற அந்த அழுகின சாப்பாட்ட எடுத்துத் தின்னு வயிறு வலிச்சிச் சாகறதுக்கு எங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?’ என்றேன் கோபமாக.

மறக்கவே நினைக்கிறேன்

'ஆமா... எனக்கும் தெரியும். மாரியப்பன் கொண்டுவர்ற சாப்பாட்டை யாருமே திங்க முடியாது. அதக் கொண்டுவராதடா, நானே டெய்லி உனக்குச் சாப்பாடு கொண்டுவர்றேன். ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம்னு சொன்னா, அவன் கேட்க மாட்டான். மூடியத் திறந்தா அப்படி நாறும். அதனால நான்தான் காலையில தினமும் அவன் சாப்பாடு ரொம்ப மோசமா இருந்தா, அதை எடுத்து யாருக்கும் தெரியாமத் தூரக் கொட்டிடுவேன். அப்பதான் அவன் மத்தியானம் என்கூட சேர்ந்து என் சாப்பாட்டைச் சாப்பிடுவான்!’

நான் சாமிக்கண்ணுவிடம் எதுவும் பேசவில்லை. அவன் கண்களைப் பார்க்க எனக்கு அவ்வளவு கூச்சமாக இருந்தது. அவனுக்கு நிஜமாகவே சாமியின் கண்கள் என்று நான் நினைத்ததைக்கூட அவனிடம் சொல்லவில்லை. 'இப்போ வந்து சொல்லு... போடா!’ என்பதுபோல முறுக்கிக்கொண்டு விலகி, மறுபடியும் வேகமாக நடக்கத்தொடங்கினேன்.

'அவங்கிட்ட சொல்லிடாத மாரிச்செல்வம். ரொம்பக் கஷ்டப்படுவான். அப்புறம் எங்கிட்ட பேசாமப் போனாலும் போய்டுவான். அவன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியாது!’ என்று சாமிக்கண்ணு சத்தம் போட்டுச் சொன்னதும் எனக்குத் தெளிவாகக் கேட்கத் தான் செய்தது. நான் வேகமாக சந்தன மாரியப்பன் வீட்டை நோக்கிப் போனேன். காய்ந்த சாணிகளோடு காளைகள் இல்லாத அந்த இடம் வெறிச்சோடிக்கிடந்தது.

சந்தன மாரியப்பனின் அம்மாவும் அப்பாவும் ஏதோ பேசியபடி சோகமாக நின்றிருந்தார்கள். என்னை அவர்கள் எதேச்சையாகக்கூடப் பார்த்துவிடக் கூடாதென்று வேகமாக நடந்து அந்தத் தெருவைத் தாண்டி அவ்வளவு வேகமாக ஓடத் தொடங்கினேன்.

அந்தக் காளைகள் ஓடியதைவிட, இன்னும் வேகமாக!

- இன்னும் மறக்கலாம்...