Published:Updated:

8 - இவருக்கு ராசியோ?!

8 - இவருக்கு ராசியோ?!

8 - இவருக்கு ராசியோ?!

8 - இவருக்கு ராசியோ?!

Published:Updated:
8 - இவருக்கு ராசியோ?!
##~##

ங்கிலாந்தின் அரசியல் வரலாற்றில் புதிய தொரு மாற்றம். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவியான மார்கரெட் ஹில்டா தாட்சர் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராணி எலிசபெத் முதல்முறையாக ஒரு பெண்ணை அழைத்து, அவர் கையில் முத்தமிட்டு, அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்கச் சொன்னது சரித்திரமாகும்.

தாட்சர் இதில்தான் முதல் என்று இல்லை; சிறு வயதில் இருந்தே எல்லாவற்றிலும் முதல் மாணவிதான். தன்னம்பிக்கை அதிகம். ஒரு முறை கவிதை ஒப்புவிக்கும் போட்டியில் தாட்சர் முதல் பரிசு பெற்றபோது, அவருடைய தலைமையாசிரியை, 'நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி’ என்று தட்டிக்கொடுத்தார். தாட்சர் உடனே, 'நான் ஒன்றும் அதிர்ஷ்டசாலி அல்ல; இந்தப் பரிசைப் பெற நான் தகுதியானவள்'' என வெடுக்கென்று பதில் கூறினாராம்.

கடுமையான உழைப்பு, சுத்தமான வாழ்க்கை... இரண்டும் தாட்சர் குடும்பத்துக்கு இரண்டு கண்கள். தாட்சரின் அம்மா தன் வீட்டில் தையல் மெஷின் வைத்துக்கொண்டு மகளுக்குத் தானே துணி தைத்துக்கொடுத்தார். தாட்சர் கல்லூரிக்குப் போக ஆரம்பித்த பிறகுதான் வெளியில் துணி வாங்க ஆரம்பித்தார். ''எங்கள் வீட்டில் ஒரு தும்பு தூசி கூடப் பார்க்க முடியாது. அவ்வளவு சுத்தமாக இருக்கும்'' என்று அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்வார் தாட்சர்.

ஏற்கெனவே தந்தை அரசியலில் குதித்திருந்ததனால், தாட்சரின் ரத்தத்திலும் அரசியல் இருந்தது. அப்பாவைத் தேடி வருபவர்களிடம் அரசியல் பேச ஆரம்பித்தார் தாட்சர். அது ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டியிலும் தொடர்ந் தது. அங்கே, பல நாடாளுமன்ற உறுப்பினர் களோடு பழகும் வாய்ப்பும் கிடைத்தது. இடையில் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் பட்டதாரியாகி வெளியே வந்த இவர், ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கெமிஸ்ட் ஆக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். தொழிற் சாலையில் வேலை பார்த்த ஒரு பெண் பிரதமரானது இதுவே முதல் தடவை.

தாட்சரின் அரசியல் வெற்றிக்கு முக்கியக் காரணம், அவருடைய கணவர் டெனிஸ் தாட்சர். டெனிஸ், தன் பங்குக்கு இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பு உள்ள சொத்துக்களை தாட்சரின் அரசியலுக்கே செலவழித்து, அவரின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். தாட்சருடன் டெனிஸ் எல்லாக் கூட்டங்களுக்கும் துணையாகப் போவார். அவர் கூட்டங்களில் பேசுவது கிடையாது. தன் மனைவி பேச ஆரம்பித்ததும் சில கட்டங்களில் 'ஹியர்... ஹியர்...’ என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டுக் கையைத் தட்டுவார்.

8 - இவருக்கு ராசியோ?!

தாட்சர் கூட்டங்களுக்குப் போவதற்கு முன்பாக, இரவு பகலாக உட்கார்ந்து பெரிய பெரிய உரைகளைத் தயாரிப்பார். ஆனால், கூட்டத்துக்குப் போனவுடனே சமயத்துக்குத் தகுந்தாற்போல மாற்றிக்கொள்வார். தொழிற் கட்சியை நாசூக்காகக் கிண்டல் செய்து பிரசாரம் செய்வதில் வல்லவர். ஓர் இடத்தில் பேசும்போது தாட்சரின் கையில் ஒரு காலி பாலிதீன் பை இருந்தது. இன்னொரு கையில் இருந்த பாலிதீன் பையில் அத்தியாவசியமான பொருட்கள் நிரம்பி இருந்தன. கூட்டத்தினரைப் பார்த்து, ''நீங்கள் தொழிற் கட்சிக்கு ஓட்டுப் போட்டால், இந்தப் பலன்தான் கிடைக்கும்'' என்று காலிப் பை இருக்கும் கையைக் காட்டுவார்... ''நீங்கள் கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் போட்டால் இது கிடைக்கும்...'' என்று பொருட்கள் நிரம்பியுள்ள கையைக் காட்டி, பொது மக்களை இம்ப்ரெஸ் பண்ணுவதில் கில்லாடி.

இந்தப் பொதுத் தேர்தலுக்காக சுமார் 3,000 மைல்கள் சுற்றுப்பயணம் செய்த தாட்சர், கொஞ்சம்கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பேசிஇருக்கிறார். ''இன்னும் நான்கு வாரங்கள் பேசச் சொன்னால்கூட, நான் தயார்தான்...'' என்று தாட்சர் கூறியபோது, உடன் சென்றிருந்த பத்திரிகை நிருபர்கள் ''ஐயையோ... எங்களால் முடியாதம்மா'' என்று பின்வாங்கினார்களாம்.

தாட்சருக்குப் பத்திரிகைக்காரர்களைக் கண்டாலே கொஞ்சம் அலர்ஜி. அவர்களிடம் பேசும்போது சர்வ ஜாக்கிரதையாக இருப்பார். ஒரு தொலைக்காட்சிப் பேட்டிக்காக நிருபர் கேட்ட கடைசிக் கேள்விக்கு, 'தான் சொன்ன பதில் சரியாக இல்லையோ’ என்ற சந்தேகம் தோன்றி, அந்த நிருபரை மறுபடியும் வரவழைத்து, மீண்டும் வேறு பதிலைச் சொல்லிப் பதிவு செய்தாராம் தாட்சர். அந்த அளவுக்கு எச்சரிக்கை உணர்வு.

தாட்சர் எவ்வளவோ பேட்டிகள் கொடுத்திருந்தாலும், தான் தொலைக்காட்சிக்காகக் கொடுத்திருந்த பேட்டிகள் ஒளிபரப்பாகும்போது நேருக்கு நேர் உட்கார்ந்து பார்க்கமாட்டார்.

சாதாரணமாக, காலை 6 மணிக்கே எழுந்து கணவருக்காகக் காலை உணவைத் தயாரிப்பார் தாட்சர். பிறகு, ஷாப்பிங் போய்விட்டு (கடை களில் பேரம் பேசி வாங்குவது மிகவும் பிடிக்கும்!) பார்லிமென்ட்டுக்குச் செல்வது வழக்கம். ஆனால், தேர்தல் சூடு பிடித்த பிறகு வீட்டைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. தன்னுடைய ஹேர் ஸடைலில் அதிகக் கவனம் செலுத்துவார். ஒரு முறை ஒரு தீயணைக்கும் நிலையத்தில் ஹெல்மெட் அணிந்து புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, ''எப்போதுமே நீங்கள் இப்படித்தான். இப்போதுதான் கஷ்டப்பட்டு ஹேர்டிரெஸ் பண்ணிக்கொண்டு வந்தேன். அதற்குள் ஹெல்மெட்டை மாட்டி என் தலையைக் கலைத்துவிட்டீர்களே!'' என்று ஒரு சாதாரணப் பெண்ணுக்கே உரிய லட்சணத்தோடு முணுமுணுத்தார்.

தாட்சர் பிரதமராகப் பதவியேற்று டௌனிங் தெரு 10-ம் நம்பர் இல்லத்துக்குச் சென்றவுடன் போட்ட உத்தரவுகளில் ஒன்று, 'தனக்கு ஹேர் டிரெஸ் செய்துகொள்ள வாராவாரம் ஒரு மணி நேரம் வேண்டும்’ என்பதுதான்.

அவர் வெற்றியைக் கொண்டாட பிரதமரின் இல்லமான டௌனிங் தெரு 10-ம் நம்பர் இல்லத்தின் கதவைப் போலவே ஓர் உயரமான சாக்லேட் கேக் செய்து, அதை தாட்சருக்குப் பரிசாக அளித்தனர். அந்த கேக்கை வெட்டி வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் எல்லோ ருக்கும் கொடுத்த தாட்சர், அங்கிருந்து ராணியைச் சந்தித்து பதவி ஏற்பதற்காக, பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்றார்.

8 - இவருக்கு ராசியோ?!

பதவி ஏற்ற பிறகு டௌனிங் தெரு இல்லத்தின் வாசலில் கூடியிருந்த கூட்டத்தில் அகப்பட்டுத் திக்குமுக்காடியவரை, பல்வேறு கோணங்களில் தன்னிடம் இருந்த மிகச் சிறிய கேமராவினால் தாட்சரின் மகள் கரோலின் ('மார்னிங் ஹெரால்டு’ என்ற பத்திரிகையின் நிருபர்.) படங்களை எடுத்துத் தள்ளினார். தன்னுடைய பத்திரிகைக்காக அம்மாவைப் படம் எடுக்கும் மகளை, வாசலில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தவண்ணம் ரசித்துக்கொண்டிருந்தார் தந்தை டெனிஸ். கரோலினும் அவள் சகோதரன் மார்க்கும் இரட்டையர்கள். மார்க், ஆஸ்திரேலியக் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார்.

இங்கிலாந்தின் 73-வது பிரதமர் இவர். ஏழையும் மூன்றையும் கூட்டினால் மொத்தம் 10, அவர் இனிமேல் குடியிருக்கவிருக்கும் இடமோ 10-ம் நம்பர் இல்லம். என்ன பொருத்தம்!

மற்றோர் அதிசயம்... தாட்சர் பிறந்தது 1925. கூட்டினால் கூட்டுத் தொகை எட்டு. அவர் பிரதமராகப் பதவியேற்றிருப்பது 1979-ம் ஆண்டு. இதன் கூட்டுத் தொகை எட்டு. பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் அவருடைய வயது 53. இப்போதும் கூட்டுத் தொகை எட்டுதான்!

எட்டாம் நம்பர் அவ்வளவு ராசி இல்லை என்று கூறுவார்கள். தாட்சருக்கு மட்டும் எட்டாம் நம்பர் ராசியான நம்பரோ?

- கேயெஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism