Published:Updated:

விகடன் மேடை - சந்துரு பதில்கள்!

வாசகர் கேள்விகள்... படம்: கே.ராஜசேகரன்

விகடன் மேடை - சந்துரு பதில்கள்!

வாசகர் கேள்விகள்... படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

''நீதிபதிகளைக் கிண்டல் செய்து வெளிவரும் ஜோக்குகளைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''டாக்டர்கள், வக்கீல்கள், நீதிபதிகள் பற்றி சமூகத்தின் பார்வை கிண்டலும் கேலியுமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஜோக்குகளைப் படிக்கும்போது நானும் என்னை மறந்து சிரித்துவிடுவேன். 'சிவகாசி’ படத்தில் வக்கீல்களைக் கேலி பேசியதுபற்றி வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்ததற்கும், அதை நீதிமன்றம் சீரியஸாக எடுத்துக்கொண்டு அந்தக் காட்சிகளை வெட்டச் சொன்னதிலும் எனக்கு உடன்பாடு இல்லை!''

எல்.கேசவன், கம்பம்.

''66 ஏ சட்டப் பிரிவுபற்றி விளக்கம் தருக?''

''தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் ஒரு பிரிவுதான் 66ஏ. அந்தப் பிரிவைப் பயன்படுத்தி கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரித்துக் கைவிலங்கு பூட்டும் வேலையைத்தான் மத்திய அரசாங்கம் செய்துவந்திருக்கிறது. தங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்களையும் வரையப்படும் கேலிச் சித்திரங்களையும் பொறுக்க முடியாமல், அரசியல் தலைவர்கள் காவல் துறை மூலம் மிரட்டல் விடுக்கவே 66ஏ சட்டப் பிரிவைப் பயன்படுத்துகிறார்கள். பால் தாக்கரே மறைவின்போது மும்பையில் பொதுமக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப் பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட, அதை 'லைக்’ செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டார்கள். இத்தனைக்கும் அப்போது 66ஏ அமலுக்கு வரவில்லை. அப்படியானால், இப்போது நிலவரம் எத்தனை கலவரமாக இருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். '66ஏ சட்டப்பிரிவு சில தருணங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பது உண்மைதான். ஆனால், மாநில அரசாங்கங்களுக்கு அந்தப் பிரிவைத் தக்க தருணத்தில் மட்டும் முறையான வகையில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியிருக்கிறோம்’ என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. என்னதான் சமாதானங்கள் சொன்னாலும், முகநூலில் கருத்துப் பதிவு செய்தாலேகூட மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்பது சர்வாதிகாரப் போக்குதான்!''

விகடன் மேடை - சந்துரு பதில்கள்!

எம்.மோகன், தென்காசி.

''கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ள தற்காலத்தில் நீதிபதிகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் மே மாதம் முழுவதும் விடுமுறை தேவைதானா?''

''நீதிமன்றங்களுக்கு விடுமுறை என்பது முரண்பட்ட சொல். நீதிக்கு என்றுமே விடுமுறை இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. நீதிமன்றங்களை ஆண்டு முழுவதும் நடத்தினால் மட்டுமே குடிமக்கள் பயமின்றி இருக்க முடியும். வேண்டுமானால் நீதிபதிகளுக்குச் சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கலாம்!''

கி.விமலா, திருக்காட்டுப்பள்ளி.

''தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டோர் பட்டியலில் பலர் இருக்க, அவர்களை விட்டுவிட்டு கசாபையும் அப்சல் குருவையும் அவர்களின் உறவினர்களுக்குக்கூட முறையான தகவல் தெரிவிக்காமல் ரகசியமாகத் தூக்கிலிட்டது சரியான நடைமுறையா?''  

''தலைமை நீதிபதி அல்டமிஸ் கபீர் அவர்களே, முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில், 'அது தவறான சட்ட நடைமுறை’ என்று பகிரங்கமாகக் கூறிவிட்டாரே! அதற்கு மேல் நான் என்ன சொல்ல?''

கே.கலையரசன், திருவாரூர்.

''நீதிபதிகளுக்கு எதற்கு வானளாவிய அதிகாரம்? அளவுக்கு அதிகமான சலுகைகள்? அவர்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர்களா என்ன?''

''தனக்கு 'வானளாவிய அதிகாரம்’ (Sky high power) இருக்கிறது என்று கூறிய முன்னாள் பேரவைத் தலைவர் சரித்திரப் பக்கங்களில் இருந்து காணாமல்போய்விட்டார். மக்களாட்சி யில் யாருக்கும் வானளாவிய அதிகாரம் இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை. அது நீதிமன்றங்களுக்கும் பொருந்தும். நீதிமன்றங்களும் தங்களுடைய தீர்ப்புகளையும் நடவடிக்கைகளையும் சட்ட வரையறைக்குள்தான் பொருத்திக்கொள்ள வேண்டும்!''

த.சூரியதாஸ், சிலட்டூர்.

''இளைஞர்களுக்குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை?''

''என் வீர இளைஞர்களே...

அன்பு, நேர்மை, பொறுமை - இவை மூன்றும் இருந்தால்போதும். வேறு எதுவும் தேவையில்லை. அன்பே வாழ்வின் ஒரே நியதி. எல்லா சுயநலமும் மரணமே. பிறருக்கு நன்மை செய்யாமல் இருப்பது சாவு. என் குழந்தைகளே... உணர்ச்சிகொள்ளுங்கள். உணர்ச்சிகொள்ளுங்கள். ஏழைகளுக்காக, பாமரர்களுக்காக, ஒதுக்கப்பட்டவர்களுக்காக உணர்ச்சி கொள்ளுங்கள். வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். சிந்திக்கவும் பேசவும் சுதந்திரம். இந்தியாவை உயர்த்த வேண்டும். ஏழைகளுக்கு உணவு தர வேண்டும். கல்வியைப் பரப்ப வேண்டும். புரோகிதத்துவத்தின் கொடுமைகளை அகற்ற வேண்டும். இவற்றைச் சாதிக்க உன்னில் ஊக்கத் தீ பற்றட்டும். பிறகு, அதை எல்லா இடங்களிலும் பரப்பு. வழி நடத்திச் செல்லும்போது பணியாளனாகவே இரு. சுயநலமற்றவனாகவே இரு. ஒரு நண்பன் மற்றொருவனைத் தனிமையில் திட்டுவதை ஒருபோதும் கேட்காதே. எல்லையற்ற பொறுமை யுடன் இரு. உனக்கு வெற்றி நிச்சயம்!

-1894-ம் வருடம் நவம்பர் 30-ம் தேதியன்று நியூயார்க் நகரத்திலிருந்து, சென்னையில் இருந்த தனது தொண்டர் அளசிங்கப் பெருமாளுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதத்தில் இருக்கும் இந்த அறிவுரைகளைக் காட்டிலும் இளைஞர்களுக்கு நான் பெரிதாகச் சொல்ல ஏதும் இல்லை!''

கு.மணியரசன், பொள்ளாச்சி.

''காவல் துறையினரும் வழக்கறிஞர்களும் எப்போதும் எதிரும் புதிருமாக இருப்பதன் காரணம் என்ன?''

''கறுப்புக் கோட்டுக்கும் காக்கிச் சட்டைக்கும் உள்ள பிணக்குகளுக்குக் காரணம், இருதரப்பினரும் தங்களுக்கு உள்ள எல்லையை மீறி நாட்டாமை செய்ய முற்படுவதே!''

கா.செந்தில், தேனி.

''பாலியல் கல்விகூட அனைவருக்கும் அவசியம் என்ற சிந்தனை வலுப்பெற்றுவிட்டது. ஆனால், இன்றைய நிலையில் சட்டக் கல்விதானே அனைவருக்கும் அவசியம்? அதைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கும் முன்னெடுப்புகளைத் துவக்கலாமே?''

''சென்ற வாரம் மத்திய பள்ளிக் கல்விக்கான வாரியம் (C.B.S.E.)  இந்தியாவில் 20 பள்ளிகளில் சட்டம்பற்றிய ஒரு பாடத்தை (Legal Studies) அனுமதித்துள்ளது. என்னைக் கேட்டால், விருப்பப் பாடமாக இல்லாமல், அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு கட்டாயப் பாடமாக, ஆனால், தேர்ச்சி மதிப்பெண் வரையறைக்குள் வராத பாடமாகச் சட்டப் படிப்பைச் சேர்ப்பது அவசியம் என்பேன். மாநிலக் கல்வித் துறை இயக்குநர்தான் இதைக் கருத்தில்கொண்டு முயற்சிக்க வேண்டும்!''

என்.பாபு அருள்ஜோஷி, களக்காடு.

''தாங்கள் எளிமையாக இருந்ததனால் அடைந்த நன்மைகள் என்ன... தீமைகள் என்ன?''

''தீமைகள் ஏதும் இல்லை. நன்மை மக்கள் மனதில் கிடைத்த அரியாசனம்தான்!''

விகடன் மேடை - சந்துரு பதில்கள்!

அ.அழகேசன், திட்டச்சேரி.

''மக்கள் பிரச்னைகள் தொடர்பான வழக்குகளும், சாதாரண மக்களின் வழக்குகளும் வருடக் கணக்கில் இழுத்தடிக்கப்படும் நிலையில், ஏதேனும் ஒரு சினிமாவுக்குத் தடை விதித்துவிட்டார்கள் என்றால் மட்டும் நீதிமன்றத்தில் உடனடி விசாரணை மேற்கொள்ளப்படுவது ஏன்? ஒரு வழக்கை விசாரிப்பதற்கான முன்னுரிமை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?''

''கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கி உள்ள நீதிமன்றங்களில் சில சமீபத்திய வழக்குகள் முன்னுரிமை பெற்று முடிவது தவிர்க்க இயலாதது. வெளியீட்டுக்குக் காத்திருக்கும் சினிமாக்களைப் பொறுத்தவரை, வழக்கறிஞர்களின் முயற்சி, நீதிபதிகளின் காருண்யம், சமூகத்தின் எதிர்பார்ப்பு, பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் ஒருங்கிணைந்த உழைப்பு மற்றும் வெளியீடு தாமதமானால் கொட்டிய கோடிகள் அனைத்தும் விரயம் என்ற நிலை ஆகிய பல்வேறு காரணிகளை வைத்து ஒருசில வழக்குகளுக்கு வரிசை விதிகளில் விதிவிலக்கு வழங்கப்படு கிறது!''

கி.முருகன், மாப்பிள்ளைக்குப்பம்.

''மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்களின் 'நீதித் துறை’ சார்ந்த கவிதைகளில் தங்களுக்குப் பிடித்தமான கவிதை?''

'' 'வரும்வா தியரோ டுறவுபற்று
   வரவு முதல்செய் குதல்விரைவில்
   கருவி விவாதம் தீர்க்காது
   காலங் கழித்தல் சோம்பலினால்
   உருவ வழக்கின் நிலையினைநன்
  குணராத் தன்மை பொது நீங்கல்
  பொருவில் இவையா தியபுரைகள்
  இலஞ்ச மதனைப் பொருவுமால்.''

பாடலின் பொருள்: வழக்காளிகளுடன் நட்பு கொள்ளுதல், கொடுக்கல் வாங்கல் செய்தல், நுணுகி ஆராய்ந்து விரைவில் வழக்கைத் தீர்க்காமை, வீண் காலம் கடத்தல், சோம்பலால் வழக்கின் உண்மையினைத் தெளி யாமை, நடுவுநிலைமை தவறுதல் முதலிய குற்றங்கள் பலவும் லஞ்சம் வாங்குதலுக்கு ஒப்பாகும்.

முன்சீப் வேதநாயகம் பிள்ளை எழுதிய வெண்பாக்களின் திரட்டு 'நீதிநூல்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்தச் செய்யுளில் கூறியதைவிடச் சிறப்பாக வேறு யார் இன்றுள்ள நடுவர்களுக்கு அறிவுரை வழங்க முடியும்?''

ம.செந்தில்நாதன், திருச்செந்தூர்.

''ஜனநாயகத் தேர்தல் முறையில் 51 சதவிகித வாக்குகள் பெறுபவரைப் பதவியில் அமர்த்துகிறோம். அப்படியானால், மீதமுள்ள 49 சதவிகிதத்தினரின் கருத்துகள் உதாசீனப்படுத்தப்படுகின்றன என்பதுதானே உண்மை. இதற்கு என்னதான் தீர்வு?''  

''இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு, அரசியல் கட்சிகள் வாங்கும் வாக்குகளுக்கேற்ப விகிதாசார அடிப்படையில் பிரதிநிதிகளைச் சட்டமன்றத்துக்கு அனுப்ப வழிவகை செய்வதுதான். அப்போதுதான் கட்சிகளின் பலத்துக்கேற்ப மட்டுமே பிரதிநிதிகள் அவைக்குச் செல்ல முடியும்!''

வெண்ணிலா, காரைக்கால்.

''இப்போதைய சூழ்நிலையில் நேர்மை யாக இருப்பதுதான் மிகவும் துயரம் மிகுந்ததாகவும் செலவு மிகுந்ததாகவும் இருக்கிறது. பிறகு, நான் ஏன் நேர்மையாக இருக்க வேண்டும்?''  

''தர்மத்தை சூது கவ்வும். தர்மம் மறுபடி யும் வெல்லும் என்ற கீதையின் வாசகத்தை நம்பினால் இது போன்ற கேள்வியைக் கேட்க மாட்டீர்கள்!''

எம்.உசேன், கீழக்கரை.

''முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் பிரஸ் கவுன்சில் சேர்மனுமான மார்கண்டேய கட்ஜு பல விஷயங்களில் அதிரடியாகக் கருத்து சொல்கிறார். அவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன?''  

''ஒரு நீதிபதிக்குச் சமமான பதவியிலிருந்துகொண்டு அரசியல் தலைவர்கள் போல சர்ச்சைக்குரிய பிரச்னைகளில் கருத்து கூறி அறிக்கை வெளியிடுவது நீதிபதிகளுக்கு அழகல்ல. தனது பிரஸ் கவுன்சில் தலைவர் பதவியை நீதிபதி பதவியாகக் கருத முடியாது என்று கட்ஜு காரணம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெங்களூர் பிரகடனப்படி சாட்சிப் பதிவுசெய்து, தீர்ப்புகள் தரும் அதி காரம் பெற்ற எவரும் நீதிபதிகள் என்றே கருதப்பட வேண்டியுள்ளது. தான் கருத்துச் சொன்ன விஷயங்கள் தன்னிடம் விசாரணைக்கு வந்தால் அந்த வழக்கிலிருந்து தான் விலகி விடுவேன் (Recuse)  என்று அவர் கூறுவது ஒரு சட்ட அமைப்பின் தலைவர் என்ற முறையில் அனுமதிக்க முடியாது. வேண்டுமானால், அவர் பதவியைத் துறந்துவிட்டு அரசியலில் என்றும் மார்கண்டேயனாக வலம் வரலாம்!''

விகடன் மேடை - சந்துரு பதில்கள்!