##~##

“சப்பையும் ஒரு ஆம்பளதான்... எல்லா ஆம்பளைகளும் சப்பைதான்!'' - 'ஆரண்ய காண்டம்’.

''நமக்குப் புடிச்ச பொண்ண நாம பார்க்கிறப்போ, அந்தப் பொண்ணும் நம்மளப் பார்க்கிற மாதிரியே தோணும். ஏன்னா... நமக்கு அதுதான் வேணும்!'' - 'காதலில் சொதப்புவது எப்படி?’.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஸ்பேஸ்ல பேனா எழுதலைன்னா, பென்சில் யூஸ் பண்ணி இருக்கலாமே சார்... ரெண்டு ரூபாயோட முடிஞ்சிருக்குமே!'' - 'நண்பன்’.

''என் வாழ்க்கையில ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா!'' - 'பில்லா 2’.

''ஏணிய கூரை மேல போடாதீங்க... வானத்தை நோக்கிப் போடுங்க!'' - 'சாட்டை’.

''ஒவ்வொரு தடவை வீட்டைவிட்டுக் கிளம்பும்போதும், 'தெரியாதவன்கிட்ட பார்த்துப் பழகுங்கடா... பார்த்துப் பழகுங்கடா’னு சொல்லுவாங்க. தெரிஞ்சவய்ங்க நீங்களே இப்படிப் பண்ணினா, யார்கிட்டடா பார்த்துப் பழகுறது?'' - 'சுந்தரபாண்டியன்’.

ஒவ்வொரு சினிமாவிலும் ஒவ்வொரு வசனம் நறுக் சுருக்னு மனசு தைக்கும். அப்படிச் சமீபத்தில் என்னைத் திடுக்னு உலுக்குனது 'நீதானே என் பொன்வசந்தம்’ டயலாக்...

''ரொம்ப நாளைக்கு அப்புறம் டிராஃபிக்ல ஒரு சிவப்பு சிக்னல்ல வெய்ட் பண்ண எனக்குப் பிடிச்சிருக்கு!''

உண்மையிலேயே 90 விநாடி வெறுமையாக அல்லது பொறுமையாகக் காத்திருக்க சிவப்பு சிக்னல்போல ஏதாவது வலுவான அல்லது காதலிபோல அழகான காரணங்கள் தேவைப்படுகின்றன. எல்லோரும் எப்போதும் ஏன் ஃபாஸ்ட் ஃபார்வர்டில் ஓடிக்கொண்டே இருக்கிறோம்?  

''என்னடா இது... இந்த மெட்ராஸ்ல எல்லாருமே ஏதோ நாய் துரத்துற மாதிரி இந்த ஓட்டம் ஓடுறானுக?'' - ஊரிலிருந்து வந்த நண்பன் என்னிடம் கேட்ட கேள்விக்கு, சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. இவன் நம்மையும் சேர்த்துத்தான் சொல்கிறான் என்று எரிச்சலாகச் சிரித்தேன்.

பாஸ்வேர்டு - 2

''அட... லவ் பண்ற பொண்ணை பைக்ல பின்னாடி வெச்சுக்கிட்டு இவ்வளவு வேகமா வெரட்டுறானே... விழுந்துகிழுந்து தொலைச்சா, ரெண்டு பேரும் வீட்டுல என்னடா சொல்வானுங்க?'' - மிகவும் நியாயமாகத்தான் மறுபடியும் கேட்டான் நண்பன். என்னால்தான் பதில் சொல்ல முடியவில்லை. வெறுப்பில் நானும் ஆக்சிலேட்டரைத் திருகினேன்.

ஏதாவது ஆர்ட் ஃபிலிம் பார்க்கும்போது ஒருவர் மிகவும் பொறுமையாக ஒரு மாட்டை ஓட்டி வந்து, அதை ஓர் இடத்தில் கட்டிவிட்டு, மெதுவாக நடந்து போய் வீட்டுக்குள் உட்காருகிற ஓர் அழகான லாங் ஷாட்டை உட்கார்ந்து பார்ப்பதற்கு இப்போதெல்லாம் படபடப்பாக இருக்கிறது. 'சீக்கிரம் மாட்டைக் கட்டித் தொலையேண்டா’ என்று மனசு கதறுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டரில் இருந்து உணவுப் பொட்டலம் வீசுவதைப் பல முறை செய்தி சேனல்களில் பார்த்தது உண்டு. இரண்டு நாள் கொலைப் பட்டினியில் இருக்கும் மக்கள், கூட்டம் கூட்டமாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி வருவார்கள். இப்போது எல்.ஐ.சி. பில்டிங்கில் ஏறி நின்று அண்ணா சாலையைப் பார்க்க நேர்ந்தால், எப்போதும் அந்த 'கொலைப் பசி’ அவசரத்துடன்தான் ஓடிக்கொண்டு இருப்பார்கள் எல்லோரும்.

பயணத்தில், சாப்பாட்டில், வேலையில், கல்யாண வீடுகளில், கருமாதிக் காரியங்களில் என எங்கும் யாருக்கும் நேரமே இல்ல. 'பொணத்தத் தூக்கிட்டாங்கன்னா, கிளம்பிரலாமே!’ என்றுதான் நிறையப் பேர் அமர்ந்திருப்பார்கள்.

'மெதுவா நல்லா மென்னு தின்னுய்யா!’ என்று பாசம் பரிமாறுகிற அப்பத்தாக்கள் மீது 'த... என் அவசரம் புரியாம உளறாத’ என்று எரிந்துவிழுவதுதான் இப்போதைய டிரெண்ட். ஆனால், அப்பத்தாக்களுக்குமே இப்போது நேரம் இல்லையோ? டி.வி. முன்னால் கிடையாய்க் கிடக்கிறார்கள்.

பாஸ்வேர்டு - 2

'அரை மணி நேரத்துக்குள் பீட்ஸாவை டெலிவரி செய்ய வேண்டும்’, 'சாயங்காலம் 6 மணிக்குள் ஐந்து மெஷின் வித்தாகணும்’, 'இன்னும் 15 நாள்ல கிரெடிட் கார்டை 10 பேர் தலையிலாவது கட்டியாகணும்’, 'அமெரிக்க முதலாளி முழிச்சு இருக்கிறப்பவே, அசைன்மென்ட் முடிச்சாகணும்’, 'பயலுகளுக்குப் புரியுதோ இல்லையோ... அடுத்த மாசத்துக்குள்ள சிலபஸை முடிச்சாகணும்’, 'என்ன பண்ணுவீங்களோ... ஏது பண்ணுவீங் களோ 10 மணிக்குள்ள எல்லா ஃபைலும் என் டேபிளுக்கு வந்தா கணும்’ என்று டெட்லைன் பிசாசுகள் நம் தலை மேல் நின்றுகொண்டு 'தையத் தக்கா’ என்று குதிக்கின்றன.

எல்லாரும் இங்கே ஓடித்தான் ஆக வேண்டும். ஆனால், இப்படி ஓடி ஓடிச் செய்கிற எதையும் நாம் உருப்படி யாகச் செய்வது இல்லை என்பதுதான் ஆய்வுகளின் தகவல். காமாசோமா என்று குளிப்பதில் தொடங்கி, கடமைக்கென்று செக்ஸ் வைத்துக்கொள்வது வரை எதையுமே இந்தியர்கள் முழுதாகச் செய்வது இல்லை என்று படித்தபோது 'பக்’கென்று இருந்தது. டூ-வீலரை ஓட்டிக்கொண்டே செல்போனில் மெசேஜ் டைப் செய்யும்  ஆட்களை இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்க முடிகிறது.

80-களில் மேற்கு நாடுகள் இப்படித்தான் இருந்தன. செய்தித்தாள், காபி, சிகரெட்டோடு டாய்லெட்டுக்குள் போகிற ஆட்கள் வெளியேற்ற வேண்டியதை வெளியேற்றாமல் வெளியே வந்த காலம் அது. எல்லாரும் பித்துப் பிடித்த மாதிரி இருந்தார்களாம், இப்போது நாம் திரிகிற மாதிரி!

அந்தக் காலகட்டத்தில்,‘The Slow Movement’ என்றொரு பிரசாரம் தொடங்கியது. மேற்குலகில் அது ஒரு கலாசாரப் புரட்சி. வேகத்தைக் குறைத்து, ஒரு செயலை நிதானமாக (கவனிக்க: மெதுவாக அல்ல... நிதானமாக!) திருப்தியாகச் செய்துமுடிக்க வேண்டும் என்பதுதான் அந்த Slow Movementன் சாரம்.

ஒரு விஷயத்தை அனுபவித்து உணர்ந்து திருப்தியாகச் செய்வதே முக்கியம். அதீத வேகத்தை நிறுத்தி, மகிழ்வோடு உங்கள் பணிகளைச் செய்யுங் கள். இல்லையென்றால், காலம் முழுக்க ஓடினாலும் திருப்தி இல்லாத படபடப்பான அர்த்தமற்ற வாழ்க்கையே வாழ முடியும் என அந்த இயக்கம் பரப்புரை செய்தது.

இப்போதும் அதன் தாக்கங்களைப் பல நாடு களில் பார்க்க முடியும். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் Eva Restaurant  என்றொரு ஹோட்டல் உண்டு. அங்கு சாப்பிட வருபவர்கள் தங்கள் அலைபேசிகளை ஹோட்டல் ரிசப்ஷனிலேயே விட்டுவிட்டு வந்தால், பில் தொகையில் 5 சதவிகி தத் தள்ளுபடி உண்டு. இதுபோன்ற திட்டங்களை நம் ஊர் ஹோட்டல்களிலும் அமல்படுத்துகிற நாட்கள் மிக அருகில்தான் இருக் கின்றன. ஆனால், அதற்கெல்லாம் காத்திருக்காமல் முதலில் நம் வீட்டுச் சாப்பாட்டு மேஜைகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தலாம்!

'வாய்ப்புகள் வா... வா... என்று அழைக்கும் இந்தக் காலத்தில் இப்படித் தான் ஓட வேண்டும்!’ என்பது ஒரு செயற்கையான பிரசாரம். ஒன்றைக் கூடச் சரியாகச் செய்யாமல் எல்லாவற்றையும் தொட்டுத் தொட்டு வைப்பதில் என்ன புண்ணியம்?

இன்னோர் உண்மையை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். நேரத்தை ஒழுங்குபடுத்திக்கொள்வதில் நாம் கொஞ்சம் மக்குதான். ஆனால், 'நான் ரொம்ப பிஸி!’ என்பதில் உள்ளுக்குள் பெருமையாக நினைத்துக்கொள்வோம் நாம். இதோ... பக்கத்தில் இருக்கும் திருச்சிக்கு ஃப்ளைட்டில் சென்று வந்ததற்கு அடையாளமாக 10 நாட்களாக என் சூட்கேஸில் அந்த லக்கேஜ் டேக் அப்படியே இருக்கிறது. 'பறந்து பறந்து வேலை பார்க்கிறேன்’ என்பதை உணர்த்தும் ஸ்டேட்டஸ் ஸ்டைலாம் அது!

உண்மையில் யார் ஒருவருக்கு எல்லாவற்றையும் முழுமையாகச் செய்ய நேரம் இருக்கிறதோ... அவர் தான் பிஸியான மனிதர். அழுக்கு தேய்த்துக் குளிப்பதில் தொடங்கி, ஆற அமரச் சாப்பிடுவது வரை இதில் அடக்கம்.

பாஸ்வேர்டு - 2

'அட... எங்கங்க புள்ளகுட்டிகளைக் கொஞ்சவே நேரம் இல்ல’ என்று பெருமை பேசும் டகால்ட்டி பார்ட்டிகள் உடனடி Slow Movement-ஐ பின்பற்றுவது உத்தமம். இல்லையென்றால், மருத்துவமனைக்குச் செல்லவே நேரம் சரியாக இருக்கும் நிலை வரலாம்.

கல்யாண வீட்டுக்குப் போனால், கலகலவென சிரித்துப் பேசிச் சந்தோஷமாக இருங்கள். சாவு வீட்டுக்குப் போனால், துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லுங்கள். அறைக் கதவைச் சாத்திக்கொண்டு பிள்ளைகளோடு டான்ஸ் ஆடுங்கள். ஆவி பறக்கிற இட்லியைப் பேய் மாதிரி முழுங்காமல், விள்ளல் விள்ளலாக பிய்த்துச் சுவைத்துச் சாப்பிடுங்கள்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது, ப்ளஸ் டூ-வில் 1,190 மார்க் எடுப்பது, அமெரிக்காவில் வீடு வாங்குவது, 80 லட்சம் ரூபாய் கார் வாங்குவதெல்லாம் அப்புறம்.

நான் அடிக்கடி ஒரு விஷயம் சொல்வேன்... வாழ்தலின் நோக்கம்... வாழ்தல்தான். மத்ததெல்லாம் அப்புறம்!

ஆளில்லாத கடையில் யாருக்குத்தான் டீ ஆத்தப்போகிறோம்?

அவரவர் கோப்பையை ருசிப்போம் முதலில்!

- ஸ்டாண்ட் பை...