Published:Updated:

ஆறாம் திணை

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

லையும், காடும், கடலும் இல்லை என்றால் நாம் யாரும் இல்லை. இயற்கையும் மனித

ஆறாம் திணை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குலமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கிறது. ஆனால், 'ஐஸ் உருகுதாமே, ஓசோன்ல ஓட்டையாமே, கடல் பெருகுதாமே, மழைக் காலம் மாறுதாமே’ என ஏதோ 'விஸ்வரூபம்’ ரிலீஸ் மாதிரியே இயற்கைச் சீரழிவுகளையும் பேசிக் கலைகிறோம். இதன் பின்னணி உண்மை களையும் அபாயத்தின் பரிணாமத்தையும் என்றேனும் ஆராய்ந்து அறிந்தது உண்டா நாம்?

'ஒரு மனிதனுக்கு அரை ஹெக்டேர் காட்டு நிலம்’ - இதுதான் ஓர் ஆரோக்கியமான இயற்கை சமநிலையைப் பேணும் நாடுகளில் இருக்க வேண்டிய விகிதம். இது உலகிலேயே மிகக் குறைந்த அளவில், ஒரு மனிதனுக்கு 0.08 ஹெக்டேர் காட்டு நிலம் என்பதாக இருப்பது நம் இந்தியா வில்தான். ஐந்து திணைகளில், மலையும் மலை சார்ந்த நிலமும், காடும் காடு சார்ந்த நிலமும் எனப் பெரும் நிலப் பரப்பை மலையுடனும் காட்டுடனும் வைத்திருந்த நம் காடுகளுக்கு என்ன ஆனது? இந்திய நிலப்பரப்பில் 19.27 சதவிகிதம் மட்டுமே காடுகள் இருப்பதாக 1997-ம் ஆண்டு ஆய்வறிக்கை சொல்லு கிறது. அதன் பிறகான இந்த 15 ஆண்டு களில் சூழல் சீர்கேட்டால் இந்த விழுக் காடு இன்னும் சிதைந்திருக்கும் என்பது நிச்சயம்!

உலகில் 12 விதமான உயிர் பன்முகத்தன்மை உடைய ஆச்சர்யமான நிலப்பரப்பு நம்முடையது. அது என்ன உயிர் பன்முகத்தன்மை? அபுதாபி நாட்டில் பேரீச்சை விளையும்; பெப்பர் கிடைக்காது. ருமேனியாவில் ஆப்பிள் விளையும்; தேங்காய் விளையாது. இங்கிலாந்தில் கோதுமை விளையும்; கொய்யாக்காய் வராது. கனடாவில் உருளை வரும்; உள்ளி வராது. ஆனால், இந்தியாவில் இவை அனைத்தும் விளையும். வேறுபட்ட மண் வகைகள், வித்தியாசமான தட்பவெப்பச் சூழல் என நம் நாட்டின் இயற்கைச் சூழல்தான் இதற்குக் காரணம். பூமத்திய ரேகைக்குக் கொஞ்சம் அருகில் இருப்பதால், இந்த உயிர் பன்முகத்தன்மை நமக்குச் சாத்தியமாகிறது. விவசாயப் பாரம்பரியத்தின் மூத்த குடிகளான நம் முன்னோர்களின் பாரம்பரிய அறிவும் இந்தப் பன்முகத்தன்மையில் முக்கியப் பங்காற்றுகிறது. இப்படி காலம் காலமாகக் காத்துவந்த இயற்கைச் சொத்துதான் இப்போது சீரழிந்துகொண்டிருக்கிறது. 'எங்க தாத்தா வெச்சிருந்த சொம்பு; எங்க பாட்டி போட்டிருந்த பாம்படம்; எங்க பரம்பரையே மூணு போகம் விளைவிச்ச பூமி’ என வீட்டுச் சொத்தைப் பாதுகாப்பதில் இருக்கும் அக்கறை பொதுச் சொத்தில் இல்லை. அதனால்தான் ஒரு பக்கம் மிளகு, கிராம்பு, ஏலம்... இன்னொரு பக்கம், மணிச்சம்பா, மாப்பிள்ளைச்சம்பா, தினை, கம்பு, சோளம், குதிரை வாலி... மற்றொரு பக்கம், வெண்கொடிவேலி, சேராங்கொட்டை, கல்தாமரை, சோதிவிருட்சம் என்ற அரிய மூலிகைகள் இருக்கும் நாட்டின் பன்முக வளத்தை இழந்துகொண்டு இருக்கிறோம்.

ஆறாம் திணை

கங்கை, யமுனை எப்படி உருவாகிறது என்று கேட்டால், இமயத்துப் பனிப் பாறை உருகி ஆற்று நீராகிறது என்று சொல்கிறோம். தாமிரபரணி, காவிரி, துங்கபத்ரா பற்றிக் கேட்டால், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஊற்றுக்களில் உற்பத்தியாகி வருவதாகச் சொல்வோம். ஆனால், அந்த ஊற்றுக்குத் தண்ணீர் எப்படி வந்தது? 1,800 மீட்டர் உயரத்தில் அடர்ந்த சோழ மண்டலக் காடுகளின் பசுந்தாவரங்களில் ஒளிந்திருக்கிறது அந்த ரகசியம். வரையாடு முதல் வகை வகையான ஆர்க்கிடுகளுக்கும், அரிய வகை மூலிகைகளுக்கும் அமைதித் தலமாக இருந்துவந்த அந்தக் காடுகள்தான் மழைநீருக்கான கருவறை. கடந்த நூற்றாண்டில் மிக மோசமாக அழிக்கப்பட்டதும் இந்தக் கருவறைதான். 'காபி குடிக்கலைன்னா கழிவறை செல்ல முடியாது’, 'டீ குடிச்சாதான் சிந்தனை சிலிர்க்கும்’ என தமிழரின் தினசரி இயல்புகள் மாறியிருக்கின்றன... மாற்றப்பட்டிருக்கிறோம். அந்தத் தேயிலையையும் காபி யையும் பயிரிட்டு அறுவடை செய்ய, நீலகிரி, ஆனைமலை, பழநி மலைப் பகுதிகளில் இருந்த பெரும் சோழமண்டலக் காடுகள் அழிக்கப்பட்டு இருக்கின்றன. அவை யுகம்யுகமாக மனித குலத் துக்கு மழை அமுதம் வழங்கிய சுரபிகள். ஒரு கோப்பைத் தேநீருக்காக அவை வெட்டிவீழ்த்தப் பட்ட வரலாற்றை நாம் மறக்க முடியாது.

எஞ்சிய காடுகளின் ஒரு பகுதியை அணைக்கட்டுகள் விழுங்கின. மிச்சமுள்ள காட்டையும், நீர்வளத்தையுமாவது விட்டுவைத்தார்களா? அதுவும் இல்லை. பெரும் நிறுவனங்களுக்கான தண்ணீர் விநியோகம்குறித்த வெளிப்படையான அறிவிப்பு எதையும் அரசு வெளியிடுவது இல்லை. மக்கள் வறட்சியில் சாக, அரசு தனியார் நிறுவனங்களுக்குச் சலுகை விலையில் தண்ணீர் தருகிறது. virtual water எனப்படும் கண்ணுக்குத் தெரியாமல் அவர்கள் அழிக்கும் நீரின் அளவு சொல்லி மாளாது. அதற்கான வெகுமதியாக நீரையும் நிலத்தையும் நஞ்சாக்கிவிட்டு, அடுத்த பசும்பிரதேசம் நோக்கிப் படையெடுக்கின்றன பெரும் நிறுவனங்கள்.

தட்டிக்கேட்டால், 'இது வளர்ச்சி, தவிர்க்க முடியாதது!’ என மானா மூனாவும், பானா சீனாவும் விளக்குவார்கள். என்னதான் விளக்கினாலும் ஒரு விஷயம் மட்டும் எனக்கு விளங்கவில்லை. வெளிநாட்டுக்காரன் சேட்டிலைட் விடுகிறான்; அணுகுண்டு தயாரிக்கிறான்; அறிவியலில் ஆயிரம் சாதனைகள் படைக்கிறான். ஆனால், இந்த பனியன், ஜட்டி தயாரிக்கவும், செருப்பு தயாரிக்கவும், துருப்பிடிக்காத நட்டு போல்டு செய்யவும் மட்டும் ஏன் இந்தியாவுக்கு ஓடி வருகிறான்? அவர்களின் பெருமூளை இது போன்ற சிறு விஷயங்களுக்கான நுட்பங்களைக் கண்டறியாதா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை.

இந்தப் பொருட்களின் உற்பத்தி, இயற்கையைக் காவு கேட்கும். நீர் வளம் கெடும், மண் வளம் நாசமாகும். எதற்கு அதெல்லாம்? அவர்கள் ஊரின் இயற்கையைப் 'பொத்துனாப்ல’ பாதுகாத்துக்கொண்டு, இந்தியாவில் இருப்பதைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகிறார்கள். இதுதான் வளர்ச்சியின் உண்மைக் கதை!  

''பூ பிடிச்சிருச்சும்மா... ஆனா, மேல்மண் காய்ஞ்சு நிக்குது. இன்னும் ரெண்டு நாள்லயாவது தண்ணி வந்துருமா?'' என கால்வாயைப் பார்த்து நிற்கும் காய்கறித் தோட்டக் காரருக்கு மட்டுமல்ல... நம் எல்லோருக்குமே காடும் மலையும் கல்லீரலும் மண்ணீரலும் மாதிரி. மலையும் காடும் இருந்தால் மட்டுமே மழை; மழை இருந்தால் மட்டுமே நதி; நதி இருந்தால் மட்டுமே சமச் சீரான கடல்; அந்தக் கடல் இருந்தால் மட்டுமே நலவாழ்வு!

- பரிமாறுவேன்...