யட்சன்
##~##

தொடரும் முன்...
இந்தக் கதையில் இடம்பெறும் திரைத்துறைப் பிரபலங்களின் பெயர்கள் மட்டுமே உண்மை. அவர்கள் பங்குகொள்ளும் சம்பவங்கள் கற்பனை... கற்பனை... கற்பனையே!      -  சுபா  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார் வாலாஜா சாலையில் இருந்து அண்ணா சாலைக்குள் திரும்பியது. இரு பக்கமும் நெடிதுயர்ந்த கட்டடங்களின் உச்சிகளில் இளம் வெயில். பாரி ஓட்டுநர் பக்கம் திரும்பினான்.

'உங்க பேரு..?'

'முத்து...'

'சென்னை நல்ல பழக்கமா..?'

'பொறந்து வளர்ந்ததே இங்கதான்.'

ஜெமினி மேம்பாலம் அருகில் வரிசையாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் பாரியின் கவனத்தை ஈர்த்தன.

யட்சன்

'டைரக்டர் ஷங்கரின் நல்லாசியுடன்,
சூப்பர் ஸ்டார் முதல் க்ளாப் அடிக்க...
யட்சன்
பூஜையுடன் இன்று AVMல் படப்பிடிப்பு தொடக்கம்.’

டைரக்டர் ஷங்கரின் புகைப்படமும் சூப்பர் ஸ்டாரின் புகைப்படமும் பெரிய அளவில் சுவரொட்டியில் காணப்பட்டன. சகுனமே எவ்வளவு நன்றாக இருக்கிறது. பாரிக்கு ஜிவ்வென்று ஏறியது.

''முத்து, சூப்பர் ஸ்டார் இப்ப சென்னைலதான் இருக்காரா?''

''ஆமா சார்... ஷங்கர் சார் கேட்டதும் பிகு பண்ணாம உடனே ஓ.கே. சொல்லிட்டாரு. நீங்க ரொம்ப லக்கி!'

பாரிக்கு வியப்பாக இருந்தது.

'எனக்கு சூப்பர் ஸ்டாரைப் பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியுமா?'

'அவரை யாருக்குத்தான் பிடிக்காது?'

கார் கோடம்பாக்கம் நெடுஞ்சாலைக்குள் திரும்பியதும், 'படீர்...’ என்று ஒரு சத்தம். கார் இடதும், வலதுமாக அல்லாடியது. அவசரமாக பிரேக் அடிக்க, கார் ஒதுங்கி நின்றது. ஓட்டுநர் இறங்கினார்.

'சார்... தப்பா நினைச்சுக்காதீங்க. லெஃப்ட் வீல் பஞ்ச்சர். நீங்க வேற வண்டி பிடிச்சுப்போறீங்களா?'

'எதுக்கு முத்து? உங்களுக்குத்தானே கரெக்டான இடம் தெரியும்? டயரை மாத்திருவோம். நானும் ஹெல்ப் பண்றேன்.'

பாரியும் இறங்கினான்.

'ரொம்ப டேங்க்ஸ் சார்.'

வி.எம்.

நுழைவாயிலில் இருந்து பிள்ளையார் கோயில் வரை, இருபுறமும் சூப்பர் ஸ்டாரின் பேனர்கள். அலங்காரத் தோரணங்கள். எங்கும் பரபரப்பான மனிதர்கள். கறுப்பு ஜீன்ஸும், கட்டம் போட்ட நீலச் சட்டையுமாக டைரக்டர் ஷங்கர். அவர் அருகில், கைகளைக் கட்டியபடி மரியாதையுடன் புது டைரக்டர் ஜோசஃப் தங்கராஜ், குணா.

'ஹீரோயின் நல்ல செலெக்ஷன். அந்தப் பையன் எங்கே?' என்று ஷங்கர் கேட்க...

'வந்துட்டிருக்கான் சார்.'

குணா அவசரமாக விலகி, போன் செய்தான்.

மாற்றிய சக்கரத்தை இறுதியாக முடுக்கிக்கொண்டிருந்தபோது, டிரைவர் முத்துவின் போன் ஒலித்தது.

'என்னய்யா இன்னும் காணும்?'

'சின்ன ட்ரபிள் சார். வண்டி பஞ்ச்சர் ஆயிடுச்சு. வீல் மாத்திட்டிருக்கேன்.'

'யோவ், நல்ல வண்டியா எடுத்துட்டு வரமாட்டே? மொத மொதல்ல ஷூட்டிங் கிளம்பறான். வண்டி பஞ்ச்சராகி நின்னா, அந்தப் பையன் மனசு எப்படித் தவிக்கும்? வேற வண்டி அனுப்பவா?'

'வீல் மாத்தியாச்சு சார். பத்து நிமிஷத்துல அங்க இருப்போம்.'

போனை அணைத்துவிட்டு, பாரியிடம் திரும்பினார் முத்து.

'லேட்டாயிருச்சினு குணா சார் கத்தறாரு.'

'குணா யாரு? பூமணியோட ஃப்ரெண்டா?'

'உங்ககூட தொடர்புல குணா இல்லியா? பூமணி யாரு?' என்று முத்து கேட்ட அதே நேரம்...

பூமணி சென்னைக்குச் சற்று ஒதுக்குப்புறமாக, போரூரின் உள்சாலை ஒன்றில், ஒரு காரின் பின்னிருக்கையில், வாட்ச்சைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

'எங்க வரணும்னு கரெக்டா சொல்லிருக்கியா?' என்று கேட்டான் முன்னால் அமர்ந்திருந்த நாகு.

'சொல்லியிருக்கேன்.'

'உஷாராகிப் போயிடமாட்டாங்களே?'

'இல்லண்ணே... புது ஆளு வேணும்னு பாரினு ஒருத்தன மதுரைலேர்ந்து வரவழைச்சிருக்காங்க. இந்த ரூட்ல வரச் சொல்லி, டிரைவருக்கு இருபதாயிரம் வெட்டியிருக்கேன்.'

''உன்னைப் போல ரெண்டு பக்கமும் காசு வாங்கறவங்க இருக்கறவரைக்கும் இந்தத் தொழில் ரிஸ்க்குதாண்டா.'

'என்னண்ணே இப்படிச் சொல்லிட்டீங்க? எப்பவுமே நான் உங்களுக்குத்தான் விசுவாசி. அவங்க மேட்டரலாம் தெரிஞ்சுக்கதான அங்க பொய்யா ஒட்டிட்டிருக்கேன்?'

'டிரைவர் போய் உளறிடமாட்டானே?'

'வர்றவனைப் போட்டுத்தள்ளும்போது, அவனையும் சேர்த்து போட்டுட்டாப் போச்சு.'

'என்ன பொருள்டா கொண்டுவரான்?'

'டிரைவர் கைல ஒரு சாதா ரிவால்வர் குடுத்துருக்கேன். உங்க பிஸ்டலுக்கு முன்னால அது தீபாவளித் துப்பாக்கிண்ணே!' என்று பூமணி கைகளைக் கட்டி, பக்தியுடன் சொன்னான்.

'ஆதிமூலத்தை அவ்வளவு சுலபமா நெருங்க முடியாதுன்னு கைலாசம் குரூப் நல்லாப் புரிஞ்சுக்கணும்டா' என்று ஆவேசமாகச் சொன்னான் நாகு.

தே நேரம்...

பிரமாண்டமான சுவரொட்டிகளைப் பார்த்து, செந்திலுக்கு மார்பு விம்மியது.

தீபாவுக்கு போன் செய்தான்.

'கிளாப் அடிக்கப்போறது யார் தெரியுமா? ரஜினி சார்!'

'பின்றா...'

டிரைவர் வண்டியை ஜெமினி மேம்பாலத்தில் திருப்பாமல் நேராகச் செலுத்தியவுடன், 'ஷூட்டிங் வடபழனில இல்ல..?' என்றான்.

இந்தக் கேள்விக்குத் தயாராக இருக்கச்சொல்லியிருந்தான் பூமணி.

'அங்க தோதா இல்லனு, போரூருக்கு மாத்திட்டாங்கண்ணே...'

கார் போரூர் நோக்கிப் பயணப்பட்டது.

அங்கு காத்திருக்கும் ஆபத்துபற்றி எதுவும் தெரியாமல் சாய்ந்து அமர்ந்துகொண்டான் செந்தில்.

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism