Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன்

Published:Updated:
மறக்கவே நினைக்கிறேன்

''தினசரி வழக்கமாகிவிட்டது

 தபால் பெட்டியைத்

திறந்து பார்த்துவிட்டு

வீட்டுக்குள் நுழைவது

இரண்டு நாட்களாகவே

எந்தக் கடிதமும் இல்லாத ஏமாற்றம்

இன்று எப்படியோ

என்று பார்க்கையில்

அசைவற்று இருந்தது

ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்

எந்தப் பறவை எழுதியிருக்கும்

இந்தக் கடிதத்தை?

இன்றும் திறந்து பார்க்கப்போகிறேன்

ஒரு பறவையின் கடிதத்துக்காக!'

இது திவ்யாவுக்கு ரொம்பப் பிடித்த கல்யாண்ஜியின் கவிதைகளில் ஒன்று.

'கல்யாண்ஜி சொல்லியதைப் போல நிஜமாகவே பறவைகள் மனிதனுக்குக் கடிதம் எழுதினால் எப்படி இருக்கும்?’ என்று அவள் கேட்ட ஒரு கேள்வியைத்தான் என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. கல்யாண்ஜி சொன்னதைப் போல, திவ்யா கேட்டதைப் போல... பறவைகள் மனிதனுக்குக் கடிதம் எழுதுமா? இதற்கு முன் யாருக்காவது எழுதியிருக்குமா? ஒருவேளை இனி மேல் எழுதத் தொடங்குமா? அப்படி எழுதினால், நெஞ்சில் உப்புத்தாளை எடுத்து ஊர் சிறுவன் ஒருவன் வேகமாகத் தேய்ப்பதைப் போல மனம் அத்தனை சொரசொரப்பாகி, கொஞ்சம்  கொஞ்ச மாக அரிப்பெடுத்து வலியெடுக்கிறது.

மறக்கவே நினைக்கிறேன்
##~##

இன்னும் எத்தனை நாள் பறவைகள் பறக்கும் போது வானத்தை நிமிர்ந்து பார்க்கா மலும், அவை ஆசையாக இரை பொறுக்கும்போது பூமி யைக் குனிந்து பார்க்காமலும், என்றாவது ஒருநாள் என் உச்சந்தலையின் மீது மிகச் சரியாகச் சொத்தென்று விழப்போகும் பாவத்தின் எச்சத்துக்குப் பயந்துகொண்டிருப்பது? நீங்கள் பிரசன்ன விதனாங்கே (prasanna vithanage) என்ற சிங்கள இயக்குநர் இயக்கிய 'டெத் ஆன் எ ஃபுல்மூன் டே’ (Death on a Fullmoon Day)  படத்தை ஒரு முறை பார்த்திருக்கிறீர்கள் என்றால், ஸ்டீபன் சுந்தரம் வாத்தியாரை உங்களுக்கு அறிமுகம் செய்வது எனக்கு ரொம்பவும் எளிது. அந்தப் படத்தில் போரில் மரணம் அடைந்து சடலமாகக் கொண்டுவரப்படும் சிங்கள ராணுவ வீரனின் அப்பாவாக நடித்திருப்பார் ஒரு பெரியவர். அவருக்கு முகச் சவரமும் முடிக் குறைப்பும் செய்யாமல், அவர் கையில் வைத்திருக்கும் ஒரு கம்புடன் இன்னொரு கம்பையும் கொடுத்து, அவர் உடம்பில் சுற்றியிருக்கும் துண்டுக்குப் பதிலாக வாழைக் கறைகள் பட்டுப் பட்டுக் கறுப்பாகிப்போன ஒரு மஞ்சள் கலர் அரைக் கைச் சட்டையைக் கொடுத்து... வானத்தைப் பார்த்து ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு சிரிப்புச் சிரிக்கச் சொன்னால், அதுதான் ஸ்டீபன் சுந்தரம் வாத்தியார். ஆனால், அந்தப் படத்தைப் பார்க்காதவர்களுக்கு வேறு வழியில்லை. நீங்களாகவே உங்களுக்குப் புரிந்த மாதிரி ஸ்டீபன் சுந்தரம் வாத்தியாரைக் கற்பனை செய்துகொள்ளத்தான் வேண்டும்.

ஸ்டீபன் சுந்தரம் வாத்தியார்தான் ஊருக்குள் முதன்முதலில் அதிகம் படித்து, பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்துக்குப் பாடம் எடுக்கப்போன அரசாங்க வாத்தியார். என்றாலும், என் பால்யத்தின் நினைவுக்குள் வந்து அவரின் முகம் தங்கும்போது அவர் வெறுமனே வானத்தைப் பார்த்தபடி தெருவுக்குள் அலைந்து திரியும் லூஸு வாத்தியாராகத்தான் இருந்தார். எப்போதாவது எங்கள் வீட்டை வாத்தியார் கடக்கும்போது அம்மா சொல்வாள்... ''ஐயோ பாவம். எம்புட்டுப் பவுசா பள்ளிக்கூடம் போன வாத்தியார், இப்படிக் கிடந்து பிராட்டியன் மாதிரி மானத்தப் பார்த்துக் கிட்டுத் திரியுறாரே'' என்று.

''நம்ம டீச்சர் புருசனுக்குக் கிறுக்குப் பிடிச் சிட்டுத் தெரியுமா?''

''ச்சீ... மனுசன் அவன் உண்டு, அவன் வேலை உண்டு... ஊர் வம்பு நமக்கெதுக்குனு இருந்தா... உங்க எல்லாத்துக்கும் கிறுக்குப் பிடிச்சிருக்குன்னா அர்த்தம்?''

''திட்டாந்தரமா அப்படிச் சொல்றதுக்கு எங்களுக்கு ஆச பாரு. அவர்தான் ஆத்துப் பக்கமும் குளத்துப் பக்கமும் நின்னுக்கிட்டு... காக்கா மாதிரி, மயில் மாதிரி, குருவி மாதிரிக் கத்திக்கிட்டுத் திரியிறாம். டீச்சர் போய்க் கூப்பிட்டா வாத்து மாதிரி கத்துறாம்... 'பேக்பேக்’னு''- இப்படி அவரைப் பற்றிப் பேச்சு நடக்கும்.

வாத்தியாரின் மனைவி கன்னியம்மாள்... கேரளாவில் இருந்து மதப் பிரசங்கத்துக்காக ஊருக்குள் வந்து, ராமசாமியாகப் பிறந்த வாத்தியாரை ஸ்டீபன் சுந்தரமாக மாற்றி, காதல் திருமணம் செய்துகொண்டவர். அப்படியே கொஞ்ச நாளில் வாத்தியார் மனைவி வாத்திச்சி ஆகி, அப்புறம் அப்படியே ஆங்கிலத்தில் டீச்சராகிவிட்டார்.

''ஐயோ பாவம்! ஏக்கா... ரொம்பப் படிச்சா, ஆளுகளுக்கு இப்படி எல்லாமா ஆவும்?''

''பின்ன... நம்ம வீட்டு ஆம்பிளையல் மாரி குடிச்சானா? அடுத்தவன் குடியத்தேன் அழிச்சானா? மனுசனுக்குப் படிச்சிப் படிச்சிதான் மூளக் கொழம்பி இருக்கணும்!''

இப்படிப் படிப்பின் மீது பேரச்சத்தையே ஊருக்குள் ஏற்படுத்தினார் வாத்தியார். எப்போதும் தெருவிலும், காடுகளிலும், நதிக் கரையிலும், குளக் கரைகளிலும் அலைந்து திரிந்தார். சில நேரங்கள் தெருவில் தனியாக விளையாடும் குழந்தைகளின் மூக்கில் இருந்து வடியும் மூக்குச் சளியைச் சிந்தச் சொல்லி எடுத்துவிட்டு, முத்தம் கொடுத்துவிட்டுப் போவார். அப்புறம் மேட்டுத் தெருவில் பார்த்தவர் திடீரென்று காலச்சாமி கோயில் கோட்டைக்குள் மண்டியிட்டபடி ஜெபித்துக்கொண்டு இருப்பார். ''யேய்... வாத்தியான் வம்புக்குள்ளா நம்ம கோட்டைக் குள்ள நின்னுக்கிட்டு செவம் பண்றான். கொஞ்ச நாள்ல இந்தக் கிறுக்கன் காலச்சாமிய ஏசு சாமியா மாத்திருவான் போலிருக்கே' என்று யாராவது பேசினாலும் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை.

ஜெபம் முடிந்ததும் வடக்குத் தெரு வழியாக முதல் கிணறு வாய்க்காலுக்குத்தான் போவார். அங்கு யாராவது குளித்துக்கொண்டிருந்தால் அவர்களைத் தொந்தரவு செய்யாமல், அவர்கள் குளித்து முடிக்கும் வரை அங்கேயே அமர்ந்து பச்சைப் பனம்பழத்தை உரித்துத் தின்னுவார். குளிப்பவர் குளித்து முடித்துக் கரை ஏறியதும் மிச்சப் பனம்பழத்தை வாய்க்காலில் விட்டுவிட்டு, இரண்டு கைகளாலும் தண்ணீரை அள்ளி அள்ளிக் குடிப்பார்.

கல்யாணம், காதுகுத்து எந்த விசேஷ வீடுகளுக்குப் போனாலும் அவருக்கு அதே பழைய மரியாதையைத்தான் ஊர் மக்கள் கொடுப்பார்கள். ஆனால், வாத்தியார் ஓர் ஓரமாக இருந்து

மறக்கவே நினைக்கிறேன்

வேகவேகமாகச் சாப்பிடுவார். தான் சாப்பிட்ட இலையிலே இன்னும் கொஞ்சம் சோற்றை வாங்கிச் சுருட்டி மடியில் கட்டிக்கொண்டு கிளம்புவார்.

வாத்தியார் ஒரு பறவை போல, ஆகாயம் பார்த்தபடியே போகையில் எதிரில் அவரது மனைவி கன்னியம்மாள் டீச்சர் வந்தால், அப்படியே தெரு மாறிப் போய்விடுவார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வாத்தியாருக்குத் தெரியாமல் டீச்சர் அவரின் அருகில் போய் நின்று, யதேச்சையாக இருமுவதைப் போல இருமுவார். உடனே, ஸ்டீபன் சுந்தரம் வாத்தியார் டீச்சரைப் பார்த்துத் தனது வலது கையை நீட்டுவார். டீச்சரும் கேள்வி எதுவும் கேட்காமல், ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து அதில் வைப்பார். கன்னியம்மாள் டீச்சரின் இந்த இருமலும் ஸ்டீபன் சுந்தரம் வாத்தியாரின் இந்தக் கை நீட்டலும் அந்தப் பத்து ரூபாய்க்காகவே, அது தேவைப்படும் நேரங்களில் மிகச் சரியாக நடப்பதுபோல் இருக்கும்.

அந்தப் பத்து ரூபாய்த் தாளோடு ஸ்டீபன் வாத்தியார் தங்கப் பாண்டி நாடார் கடைக்குப் போவார். தன்னிடம் நீட்டப்பட்ட ரூபாய்த் தாளை நாடார் வாங்குவார். அவரும் எதுவும் கேட்க மாட்டார். வாத்தியாரும் எதுவும் சொல்ல மாட்டார். அந்தப் பத்து ரூபாய்க்கும் மொத்தமாக நிலக் கடலையோ, பொரிகடலையோ கொடுப்பார். அதை வாங்கி இரண்டு கம்பில் ஒரு கம்பில் பொட்டலம் கட்டுவார். அம்மன் கோயில் முன்னாடி கோலிக்காய் விளையாடும் சிறுவர்களைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பார். அப்புறம் வடக்குத் திசையை நோக்கி நடக்கத் தொடங்கிவிடுவார்.

முதலில் ஒரு வாய்க்கால் வரும். அப்புறம் இருள் சூழ்ந்த வாழைக்காடு. அப்புறம் திருநெல்வேலி, திருச்செந்தூர் மெயின் ரோடு வரும். அதைத் தாண்டினால் நாவல் பழ மரங்களும், தேக்கு மரங்களும், மருத மரங்களும், வேப்ப மரங்களும், மொட்டுக்காய் மரங்களும், மஞ்சணத்தி மரங்களும்... அப்புறம் எனக்குப் பெயர் தெரியாத ஆயிரம் செடிகள்கொண்ட ஒரு சின்னக் காடு இருக்கிறது. அந்தக் காட்டைத் தாண்டித்தான் தாமிரபரணி நதி ஓடுகிறது.

காட்டுக்குள் அவர் சென்றதும், அடுத்த நொடி அந்தக் காடு கரையும், அந்தக் காடு கத்தும். அந்தக் காடு கூவும். அந்தக் காடு அகவும். அந்தக் காடு கீச்சிடும். இப்போது அவரும் கரைவார், கத்துவார், கூவுவார், அகவுவார், கீச்சிடுவார். அவ்வளவுதான்... அத்தனை மரங்களும் இலைகளுக்குப் பதிலாக விதவிதமான பறவைகளை உதிர்க்கும். கொண்டுவந்த கடலையையோ, பிடி சோற்றையோ, பழத்தையோ, தானியத்தையோ... அங்கேயே எப்போதும் கிடக்கும் ஐந்து தேங்காய்ச் சிரட்டைகளில் தன்னைச் சுற்றி வைப்பார். தாமிரபரணியில் இருந்து ஒரு தகர டப்பாவில் எடுத்துவந்த தண்ணீரைக் கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார்.

மறக்கவே நினைக்கிறேன்

பறவைகள் தானியங்களைத் தின்றுவிட்டு, அவர் கையில் ஏறித் தண்ணீர் குடிக்கும். இரண்டு கிளிகள் அவருடைய எண்ணெய் பார்க்காத தலையில் ஏறி நின்று பேன் பார்க்கும். மாமிசப் பட்சி யான காக்கைகளோ அவருடைய கால் புண் களைக் கொத்தும். அவர் உடுத்தியிருந்த அந்த அழுக்கு வேட்டியில் தங்கிக்கிடக்கும் தானியங்களைக் கொத்தித் தின்ன அந்தச் சிட்டுக்குருவிகள் அத்தனை ஆசைப்படும். சொன்னால் நம்பவே மாட்டீர்கள். அவசரமாக முட்டையிட விரும்பும் சில மணிப் புறாக் கள் அவர் மடியில்தான் முட்டையிடும். அப்படியே காலை விரித்துக்கொண்டு சாரத்தைத் தொட்டிலாக்கி அமர்ந்திருப்பார். நேரம் ஆக ஆக... மயில் அகவும், நிழல் நகரும், காடு இருளும். சின்னதாக ஓர் இருமல். அவ்வளவுதான். உதிர்ந்த அந்தப் பறவைகள் மறுபடியும் மரத்தின் கிளை திரும்பும். வாத்தியார் அதே வழியில் ரோட்டைத் தாண்டி, வாழைத் தோட்டம் தாண்டி, வாய்க்கால் தாண்டி, அம்மன் கோயில் தாண்டி, நாடார் கடை தாண்டி வீடு திரும்புவார்.

ஊரில் தங்கபாண்டி நாடார் சில நாள் கடை திறக்க மாட்டார். சத்துணவில் சில நாள் உருண்டை கொடுக்க மாட்டார்கள். செல்வி சில நாள் பால் வாங்க வராமல் இருந்துவிடுவாள். அண்ணன் சில நாள் என்னை அடிக்க மறந்துவிடுவான். புஷ்பலீலா சில நாள் பூ வைக்காமல் பள்ளிக்கு வந்துவிடுவாள். ஆனால், வாத்தியார் காடு போவதும் வீடு திரும்புவதும் தவறியதே இல்லை. ஒருநாள் அது தவறியது. காடு போனவர் வீடு திரும்பவில்லை. எந்தப் பறவையும் வந்து யாரிடமும் ஏனென்றும் சொல்லவில்லை.

மொத்த ஊரும் காட்டுக்குள் இறங்கித் தேடினோம். நதிக் கரைகளில் தேடினோம். நதிக்குள் இறங்கித் தேடினோம். கன்னியம்மாள் டீச்சர் இருமிக்கொண்டே தேடினார். ஏதாவது ஒரு திசையிலிருந்து வாத்தியார் தன் வலது கையை நீட்டிவிட மாட்டாரா..? நாம் அதில் பத்து ரூபாயை வைத்துவிட மாட்டோமா என்று தவித்த படியே புதர்களுக்குள் புகுந்து பார்த்தார். முதலில் ஒரு சாய்ந்த பெரிய மஞ்சணத்தி மரத்தை அசைத்துப் பார்த்தார்கள். அதன் பின்னர், ஒரு மருத மரத்தின் பெரிய பொந்துக்குள் புகுந்து பார்த்தார்கள். அங்கே வாத்தியார் அப்படியே தானியக் கிண்ணங்களைப் பிடித்தவாறு சுருண்டு, பறவைகளுக்காகக் காத்துக்கிடப்பவரைப் போல இருந்தார். உயிர் ஒரு பறவையாகி சக பறவைகளைத் தேடிப்போயிருந்தது.

யாருக்கும் எதுவும் புரியவில்லை. இந்தக் காடு ஏன் இன்று பறவைகள் இல்லாத காடாக இருக்கிறது? வாத்தியார் ஏன் இப்படி அநாதையாகக்கிடக்கிறார்? அத்தனை இறகுகளையும் இங்கே கொட்டிவிட்டு அத்தனை பறவைகளும் எங்கே போய்த் தொலைந்தன. எல்லாருமே கண்களைக் கசக்கிக்கொண்டு நின்றார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது. ஆனால், எனக்குத் தெரியும். பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடித்த வேட்டைக்காரர்களான எங்களுக்கு மட்டுமே தெரியும்.

ஒரு சிட்டுக்குருவியை அடிப்பதற்கு இடுப்பில் வில்வாரை வைத்துக்கொண்டு, தெருத் தெருவாகப் பார்க்கிறவர்களிடம் எல்லாம் 'எப்படி அலையுதுவோ பார் பிராட்டியன் மாதிரி...' என்று ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு, ஏதும் கிடைக்காமல் அம்மன் கோயில் சுவரில் ஓடுகளில் ஓடும் அணில்களை அடித்து, சுட்டுத் தின்று திருப்தி அடைந்தவர்கள் நாங்கள். ஒரே இடத்தில் ஒருநாள் முழுவதும் பறக்காமல் தங்களுக்குச் சிறகு இருப்பதையே மறந்து... புறா, மைனா, காக்கா, மணிப்புறா, முங்குவாத்து, சிட்டுக்குருவிகள் என்று அத்தனை பறவைகளும் நின்று இரை பொறுக்குவதைப்  பார்த்தால், எங்களுக்கு எப்படி இருக்கும்? திட்டம் போட்டோம்.

சதீஷ் மீன் தூண்டிலுக்குப் போடும் நரம்புகளைவைத்து வளையம் வளையமாக ஐந்து கண்ணிகளைச் செய்தான். ஒரு வளையத்துக்கு எப்படியும் பத்துப் பறவைகளாவது கண்டிப்பாகச் சிக்கும். எப்படியாப்பட்ட வலுவான பறவையாலும் தூக்கிக்கொண்டு பறக்க முடியாத அளவுக்கு, அந்த இரும்பு வளையங்களை மண்ணில் அடித்து இறக்கிவைக்க பெரிய ஆணிகளையும் எடுத்துக்கொண்டோம். வாத்தியார் வீடு திரும்பிய நேரத்தில் நாங்கள் காடு புகுந்தோம். வாத்தியாரின் தானிய சிரட்டைகளில் தானியங்களையும், பெரிய தகரப் பாத்திரத்தில் தண்ணீரையும் எப்போதும்போல வைத்துவிட்டு, எங்களின் வளையங்களை மண்ணுக்குள் புதைத்து ஆணிகளை இறக்கி, சுருக்கு நரம்புகளின் அகல வாயை விரித்துவைத்துவிட்டு, எங்களின் கால் தடம் பதியாமல் வீடு திரும்பினோம்.

மறுநாள் அதிகாலையில் வாத்தியார் எழுவதற்கு முன்பே முத்துக்குமார், சதீஷ், முருகன், நான் நால்வரும் காட்டுக்குள் இருந்தோம். நாங்கள் நினைத்ததைவிட அதிகமாகவே வளையத்துக்குள் அகப்பட்ட பறவைகள், றெக்கைகளை அடித்தபடி அலறிக்கொண்டும் கத்திக்கொண்டும் காட்டைக் கிழித்தபடிகிடந்தன. புறா, மணிப்புறா, காக்கா, மைனா, சிட்டுக்குருவிகள், கொக்குகள், கௌதாரிகள், கிளிகள், முங்குவாத்துகள் இப்படி எல்லாப் பறவைகளும் அகப்பட்டுக்கிடந்தன. நாங்கள் ஆச்சர்யப்பட்டுக் கத்தும் அளவுக்கு ஒரு மயில்கூட அகப்பட்டு அகவிக்கொண்டுகிடந்தது. தயாராகக் கொண்டுவந்திருந்த சாக்குப் பைக்குள் ஒவ்வொரு பறவையாக, அவற்றின் றெக்கைகளை ஒடித்து உள்ளே போட்டோம். மைனாவைச் சாப்பிட முடியாது என்று அவற்றை எடுத்து சதீஷ் பறக்கவிட்டான். ஆனால், கிளிகளை வீட்டில் வளர்க்க வைத்துக்கொண்டோம். அந்தப் பெரிய மயிலை என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருக்கும்போதுதான் முருகன் சொன்னான், ''வேண்டாம்லே... மயிலைக் கொன்ன மனுசனுக்குப் புத்தி பேதலிக்கும்னு எங்க அம்ம சொல்லுவா...'' என்று. அவ்வளவுதான் அதைப் பறக்கவிட்டோம். ஆனால், அது ஓர் அப்பாவி டைனோசரைப் போல ஓடித்தான் போனது. ஏனென்றால், அதன் றெக்கை ஏற்கெனவே உடைந்துவிட்டது.

தூக்க முடியாத அளவுக்கு நிரம்பிய சாக்கைத் தூக்கிக்கொண்டு, வாழைத் தோட்டம் வழியாகப் போனால் யாராவது பார்த்துவிடுவார்கள் என்று, பஸ் ஸ்டாப் வழியாகச் சென்று உச்சிபரும்பு ஏறி, கால்வாய் ரயில்வே கேட் தாண்டி வீரளப்பேரி பனங்காட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். வாத்தியார் எப்போதும்போல எழுந்ததும் நாடார் கடையில் கடலை வாங்கிக்கொண்டு காட்டுக்குள் போய்ச் சேர்ந்த அதே நேரத்தில், வீரளப்பேரியின் பனங்காட்டுக்குள் அகப்பட்ட எல்லாப் பறவைகளும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஆவி பறக்க வெந்துகொண்டிருந்தன.

வாத்தியாரின் சடலத்தைப் பார்த்தபோது, அது எல்லாம் நினைவுக்கு வந்து எங்களுக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டது. சதீஷ் நிற்க முடியாமல் வீட்டுக்கு ஓடிவிட்டான். முருகனோ அவன் அம்மாவின் பின்னால் போய் ஒளிந்து நின்றுகொண்டான். நானும் முத்துக்குமாரும்தான் நடக்கும் எல்லாவற்றையும் எதுவும் தெரியாதவர்களைப் போல வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம்.

சத்தியமாக எங்களுக்குத் தெரியாது வாத்தியார் எல்லாப் பறவைகளையும் அடையாளம் வைத்திருப்பார் என்று. எங்களுக்குத் தெரியாது, ஐந்நூறு பறவைகளில் இருபது பறவைகளை வேட்டையாடினாலும் வாத்தியார் கண்டுபிடித்துவிடுவார் என்று. எங்களுக்குத் தெரியாது, வாத்தியார் பறவைகளை இவ்வளவு நேசித்திருப்பார் என்று. எங்களுக்குத் தெரியாது, நாங்கள் கண்ணி போட்டுப் பிடிக்கும்போது அந்தப் பறவைகள் உதிர்த்த அத்தனை இறகுகளும்  வாத்தியாருக்கு... அவை எழுதிய கடைசிக் கடிதம் என்று. எங்களுக்குத் தெரியாது, அவர் அந்தக் கடிதங்களை வாசித்திருப்பார் என்று. வாசித்து வாசித்து வாத்தியார் பித்துப் பிடித்துக் கதறி அழுதிருப்பார் என்று. ஏதோ ஒரு பறவை 'வாத்தியாரே... நீதான் துரோகி. நீதான் எங்களைப் பழக்கி, எங்களை நம்பவைத்து அவர்களிடம் பிடித்துக்கொடுத்துவிட்டாய். இனி, உன் முகத்திலே நாங்கள் விழிக்க மாட்டோம்...'' என எழுதிச் சென்றிருக்குமோ? அதுதான் வாத்தியாரின் நெஞ்சை அடைத்திருக்குமோ? அந்த நொடியிலே, அந்த இடத்திலே அவர் உயிர் பிரிந்திருக்குமோ?

வாத்தியாரைத் தூக்கச் சொன்னார்கள். எல்லாரும் தூக்கினோம். அவரோ பறக்கப் போவதைப் போல கைகள் இரண்டையும் விரித்துக்கொண்டுகிடந்தார். 'அவரை எங்கே தூக்குகிறீர்கள். அவர் இங்குதான் வாழ்ந்தார். அவர் இப்போது எங்கேயும் போகவில்லை. இங்குதான் ஏதோ ஒரு பறவையாகி... ஏதோ ஒரு மரத்தில் இருக்கிறார். எப்படியும் நாம் போன பின் இறங்கிவருவார். இந்த உடலை மட்டும் அங்கே கொண்டுபோய் என்ன செய்வது? இங்கேயே ஏதாவது ஒரு மரத்தின் நிழலில் நல்லபடி அவரை அடக்கம் செய்யுங்கள். அவர் பறவையாகப் பறக்கட்டும், காடாக வாழட்டும்...' என்று கன்னியம்மாள் டீச்சர் சொன்னதனால், வாத்தியாரை அங்கேயே அடக்கம் செய்தார்கள்.

போன பொங்கலுக்கு ஊருக்குப் போயிருந்தபோது பிறந்த நாள் பரிசாக மயிலிறகு வேண்டும் என்று திவ்யா கேட்டபோது, வாத்தியாரின் கல்லறைப் பக்கமாக அத்தனை போலி தைரியத்துடன் போய்ப் பார்த்தேன். எவ்வளவு பறவைகளின் இறகுகள், அங்கே கொட்டிக்கிடந்தன. அவை எல்லாமுமே வாத்தியாருக்கு அந்தப் பறவைகள் எழுதிய கடிதங்களாக இருந்தால், அவை என்ன எழுதி யிருக்கும்? நிச்சயமாக எங்களைப் பற்றித்தானே எழுதியிருக்கும்? அவற்றின் றெக்கைகளை வலிக்க வலிக்க ஒடித்தவன் என்று என்னைத் தானே அடையாளப்படுத்தியிருக்கும்? அவை எப்படிக் கொல்லப்பட்டன என்று எழுதினால்? ஐயோ... வேண்டாம்!

காட்டைவிட்டு வேகமாக வெளியேறி எப்போதும்போல என்றாவது ஒருநாள், யார் மூலமாகவோ பகிரங்கமாக, நிச்சயமாக உடை படப்போகும் பாவத்தின் முட்டைக்குள் வந்து பதுங்கிக்கொண்டேன்.

உடையும்போது அது உடையட்டும்...

நாறும்போது அது நாறட்டும்!

- இன்னும் மறக்கலாம்...