யட்சன்

டிரைவர், செந்தில் பக்கம் திரும்பினான்... ''கொஞ்சம் டீசல் போட் டுட்டுப் போயிடலாம்ணே...' 

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டீசல் நிரம்பும் நேரத்தில், கீழே இறங்கி ரகசியமாக போன் செய்தான்.

''பூமணிண்ணே... வந்துட்டே இருக்கோம்!''

''டேய்... சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்ல..? அவனா கேக்காமத் துப்பாக்கி யைக் கொடுக்காத!''

'சரிண்ணே.'

'சந்தேகம் வந்து கிருபாகிட்ட அவன் பேசிட்டா ஆபத்து. சரியான சமயமாப் பாத்து அவனோட போனை வாங்கித் தூக்கிப் போட்டுரு.'

'சரிண்ணே.'

அதே நேரம்... காரில் இருந்த செந்திலின் போனும் ஒலித்தது. மறுமுனையில் குணா.

''செந்தில், தடங்கல் ஆயிருச்சுனு யோசிக்காதீங்க... இதுகூட நல்ல சகுனம்தான். ராஜா சார் மொத பாட்டுக்கு மியூஸிக் போட்டப்போ, கரன்ட் போயிடுச்சுனு சொல்வாங்க. அவர் சாதிக்காததா?'

படப்பிடிப்பு இடம் மாறியதற்கு எதற்கு இந்தச் சமாதானம் என்று எண்ணியபடி, 'அப்படிலாம் நெனைக்கல... போஸ்டரைப் பார்த்து மெரண்டுபோயிருக்கேன்... ரஜினி சார்லாம் வர்றாரு. இதைவிட வேற என்ன வேணும்?' என்றான் செந்தில் குரல் விம்ம.

'சீக்கிரம் வந்து சேருங்க...' என்று குணா போனை கட் செய்தான்.

யட்சன்

கார் வடபழனி பேருந்து நிலையத்தைத் தாண்டும்போதுதான் பாரி சற்றே குழப்பத்துடன் கேட்டான்.

'முத்து... நாம எங்க போறோம்?'

'ஏன் சார்..? ஏவி.எம்-லதான பூஜை.'

நிகழ்ந்துவிட்ட தவறு பாரிக்குப் புரிந்தது. புதிய படத்தின் பூஜைக்காக யாரையோ அழைத்துப் போக வந்த காரில் தான் ஏறிவிட்டோம். ஆனால், அந்தக் கணத்தில் அதை வெளியில் சொல்ல அவனுக்கு மனம் இல்லை. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு பெரிய சக்தியின் வேலை அல்லவா இது? தன் உயிரைவிட அதிகமாக நேசிக்கும் சூப்பர் ஸ்டார் துவக்கிவைக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளக் கிடைத்த மாபெரும் சந்தர்ப்பம் அல்லவா இது..? பாரிக்குப் புல்லரித்தது.

கத்திப்பாரா சந்திப்பில் திரும்பியபோது, டிரைவர் செந்திலிடம் கை நீட்டினான்.

'அண்ணே... என் போன்ல சுத்தமா சார்ஜ் இல்ல. கொஞ்சம் போனைக் குடுங்க.'

செந்தில் தன் போனைக் கொடுத்தான். அதில் ஏதோ எண்ணை டயல் செய்வதுபோல் விரல்களை ஓட்டி, சுவிட்ச் ஆஃப் செய்தான் டிரைவர். ஆனால், காதில் பொருத்தி ஏதோ பேசிக்கொண்டே வந்தான். கார் போரூர் எல்லைக்குள் நுழைந்தது.

டைரக்டர் ஷங்கர், தன் ஐபோனில் பேசி முடித்து, பக்கத்தில் நின்ற ஜோசப் தங்கராஜிடம் திரும்பினார்.

'ரஜினி சார் புறப்பட்டாச்சு... அவர் லேட்டா வந்ததா சரித்திரம் இல்ல... ஹீரோ பையன் எங்கடா?'

'இதோ சார்...' என்று ஜோசப் ஓடினான்.

தீபா அவனுக்காக ரீ சார்ஜ் பண்ணியதை எல்லாம் இந்த டிரைவரே பேசித் தீர்த்துவிடுவான் போலிருக்கிறதே! செந்திலுக்குத் தாங்கவில்லை.

'என்னை யாராவது அர்ஜென்டா

கான்டாக்ட் பண்ணா, பேச முடியாமப் போய்ரும்... போனைக் குடுங்க டிரைவர்!' என்று கை நீட்டினான். டிரைவர் கோண லாகச் சிரித்தான்.

''இனிமே இது உனக்குத் தேவைப்படாதுரா!'' என்றபடி போனைச் சட்டென்று காருக்கு வெளியே தூக்கிப்போட்டான்.

'ஏய்...' - செந்தில் பதறினான். காரின் பின் டயர் போன் மீது ஏறி கர்ரக் என்று அதை நொறுக்கும் சத்தம் கேட்டது. அவன் இதயமே நொறுங்கினாற்போல் இருந்தது.

முத்துவின் போன் ஒலித்தது.

எடுத்துப் பேசி, 'சார், உங்களுக்கு...' என்று பாரியிடம் நீட்டினான்.

'செந்தில், உங்க போன் சுவிட்ச் ஆஃப்னே வருது? அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் உங்களை ரிசீவ் பண்ணி, காஸ்ட்யூம் தருவாங்க. சட்டுனு ரெடியாகுங்க.'

'சரி...' என்றான் பாரி.

இது செந்திலுக்கு வந்த கார் என்று இப்போது தெளிவாகப் புரிந்தது. அப்படியானால், தனக்கு வந்த காரில் செந்தில் போயிருக்கிறானா? ஐயோ, நாகுவிடம் அவன் மாட்டிக்கொண்டுவிட்டால்? அதைப் பற்றி அவன் யோசிக்கக்கூட நேரம் வைக்காமல் கார், ஏவி.எம். ஏ.சி. ஃப்ளோர் அருகில் நின்றது.

பரபரவென்று உதவி இயக்குநர்கள் இருவர் ஓடிவந்தனர். கதவைத் திறந்து பாரி இறங்கியதும், அவர்கள் முகத்தில் அதிர்ச்சி. காருக்குள் எட்டிப் பார்த்தனர்.

'என்ன முத்து... செந்தில் எங்க?'

'இவர்தான கார்ல ஏறி வந்தாரு? ஏன்... இவர் செந்தில் இல்லியா?'

'சொதப்பிட்டியே முத்து?'

உதவி இயக்குநர் உதறலுடன் குணாவுக்கு போன் செய்தான்.

போரூர்...

ஆள் அரவமற்ற அந்த மண் சாலையில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு கார் நுழைந்தது.  

'ஏய்... கேக்கறேன் இல்ல? ஏன் என் போனை வெளிய தூக்கிப்போட்ட?' என்று செந்தில் டிரைவரின் தோளை உலுக்கிய அதே கணம்...

'டிஷ்யூங்...’ என்று எங்கிருந்தோ சீறி வந்த ஒரு தோட்டா, காரின் முன் கண்ணாடியைச் சிதறடித்தது. செந்தில் மிரண்டு தலைகுனிந்தான்.

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism