Published:Updated:

மறக்க முடியாத மாமன்கள்!

மறக்க முடியாத மாமன்கள்!

மறக்க முடியாத மாமன்கள்!

வி.ஐ.பி. சாய்ஸ் வித்தியாசமான 'ரிலே’ ரேஸ்!  

##~##

''தி.மு.க. என்கிற அடர்ந்த ஆலமரத்தின் மெல்லிய சல்லிவேர் நான்... என்னையே ஒரு மரமாக உருவகப்படுத்திக்கொண்டு என் வேர்களைப் பற்றி விசாரிக்கச் சொல்கிறது விகடன்.

61 ஆண்டுகள் கடந்த என் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கிறேன். விதையாகக்கிடந்த என்னை விருட்சமாக்கிய ஆணிவேர்கள் அண்ணாவும் கலைஞரும்த£ன்.

கண்டேன் அண்ணாவை!

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் நான் பி.ஏ. படித்துக்கொண்டு இருந்தபோது, அறிஞர் அண்ணா காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பேச வரப்போவதாகத் தகவல் கிடைத்தது. 50 மைல் பயணம் செய்து, அழகப்பா கல்லூரிக்குப் போய்ச் சேர்ந்தேன். அண்ணாவைப் பார்த்தபோது பயணக் களைப்பு போய், உற்சாகம் தொற்றிக்கொண்டது. அவர் பேச்சைக் கேட்டபோது உற்சாகம் இரண்டு மடங்காகிவிட்டது.

மறக்க முடியாத மாமன்கள்!

இந்த நாடே வியப்போடு பார்க்கிற ஒரு பேரறிஞர், குழந்தையைப் போல மென்மையாக இருந்தது என் முதல் ஆச்சர்யம். எம்.ஏ. படித்தால்... அண்ணா படித்த பச்சையப்பன் கல்லூரியில்தான் படிப்பது என்று அவரைப் பார்த்த அந்தக் கணத்திலேயே முடிவுசெய்துவிட்டேன்.

கலைஞர்

எமர்ஜென்சி சமயத்தில் தி.மு.க. தொண்டர்கள் அடைந்த வேதனையும் அவமானமும் சொல்லில் அடங்காது. குறிப்பாக, கலைஞர் குடும்பம் பட்டபாடு. இவ்வளவு கொடுமைகளும் இந்திரா காந்திக்குத் தெரியாமல்தான் நடக்கிறது என்று நினைத்த கலைஞர், ஷேக் அப்துல்லா மூலம் நிலைமையை இந்திரா காந்திக்குத் தெரிவிக்க நினைத்தார். என்னை அழைத்து 'இங்க நடக்கிற கொடுமைகளைப் பத்தி ஷேக் அப்துல்லாவுக்கு ஒரு ரகசியக் கடிதம் எழுதியிருக்கிறேன். இதை அப்துல்லாவிடம் சேர்க்க வேண்டும். யாருமே போக மாட்டேன் என்கிறார்கள். உன்னால் போக முடியுமா?’ என்று கேட்டார்.

கலைஞரின் உருக்கம் என் நெஞ்சைக் குத்திக் கிழித்தது. 'போக முடியுமா என்றா கேட்கிறீர்கள்? போ! என்று உரிமையோடு சொல்லுங்கள்!’ என்று பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

கடிதத்தை ஷேக் அப்துல்லாவிடம் கொடுத்தேன். கடிதத்தைப் படிக்கப் படிக்க, அப்துல்லாவின் முகத்தில் சோகம் இழையோடியது.

முடிந்ததும் விரக்தியாகப் புன்னகைத்துவிட்டு, 'கலைஞரிடம் சொல்லுங்கள்... எல்லாக் கொடுமைகளும் இந்திராவுக்குத் தெரிந்துதான் நடக்கிறது. கவலை வேண்டாம். கூடிய விரைவில் நல்ல காலம் வரும்!’ என்று சொல்லி அனுப்பினார்.

'துன்பமான தருணத்தில் உதவியவர்களை எப்போதும் மறக்கக் கூடாது!’ என்ற பால பாடமும் கலைஞரிடம் கற்றுக்கொண்டதுதான்.

ஆசிரியர்கள்

50 வீடுகளே இருந்த கொம்புக்காரனேந்தல் என் பிறந்த ஊர்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களான நாகேஸ்வர அய்யர், சவரிமுத்து, தலைமையாசிரியர் வெங்கட்ராம அய்யர் போன்றவர்கள் எனக்கு எழுத்தறிவித்தவர்கள்.

மேலே படிப்பைத் தொடர மானாமதுரையில் உள்ள வெள்ளையன் செட்டியார் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். அங்கே எனக்குத் தலைமை ஆசிரியராக வாய்த்தவர் மகாகவி பாரதியாரின் சகோதரரான விஸ்வநாத அய்யர்.

மெல்லிய வேர்கள்தாம் பாறைகளையும் பிளக்கின்றன.

மறக்க முடியாத மாமன்கள்!

1950-களில் தி.மு.க. தமிழகத்தின் எல்லாக் குக்கிராமங்களிலும் தன் வேர்களைப் பரப்ப கடின முயற்சியில் ஈடுபட்ட நேரம்.

'தி.மு.க-வா... சாமியும் இல்லை, சாதியும் இல்லைனு சொல்ற நாத்திகக் கட்சி ஆச்சே அது!'' என்று சொல்லி எதிர்த்தவர்களே அதிகம். இதைச் சமாளிக்க, எங்கள் கிராமத்தில் 'கலை வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயரில் மன்றம் தொடங்கி நாடகம் நடத்துவோம். இதில் குருசாமி என்ற நண்பர் பெண் வேடம் போடுவார். அயோத்தி, உடற்பயிற்சி ஆசிரியர் ராமசாமி, தினகரன் இவர்களெல்லாம் காமெடியன்கள்.

இப்படியே மெள்ள மெள்ள... புரட்சிகர நாடகமான தூக்குமேடை, மறுமணம் போன்ற நாடகங்களையும் நடத்தினோம்.

அருப்புக்கோட்டை கவிஞர் ராமசாமி, தத்துவ மேதை டி.கே.சீனிவாசன் போன்றவர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்தினோம்.

மதுரை முத்துவை அழைத்து வந்து கூட்டம் நடத்தி, நாடகம் போட்டபோது ஊரில் சலசலப்பு. சில பெரியவர்கள் 'இந்தப் பய தி.மு.க-வைக் கொண்டுவந்து ஊருக்குள்ள திணிக்கிறான்யா’ என்று குற்றம்சாட்டினார்கள்.

கல்வி வேர்கள்...

உயர்நிலைப் பள்ளி தொடங்கி எம்.ஏ. வரை என்னைப் படிக்கவைத்தவர்கள் என் உடன்பிறந்த சகோதரி ராமம்மாளும் அவர் கணவர் ஒண்டிவீரனும்தான்.

மலேசியக் குடியுரிமை பெற்ற அவர்கள் இருவரும், படிப்பு முடிந்த பின் என்னை மலேசியாவுக்கே அழைத்துச் செல்ல ஆசைப்பட்டார்கள். படிப்பு முடிகிற நேரத்தில் மலேசியக் குடியுரிமை பெறுவதற்கான சட்டங்கள் கடுமையாகிவிட்டதால், என்னால் மலேசியா போக முடியவில்லை.

ஊரைவிட்டே ஒதுக்கிவைத்தார்கள்!

1961-ல்தான் எங்கள் ஊரில் தி.மு.க. கொடியை ஏற்ற முடிந்தது. 'கொடி ஏற்றியது குற்றம்’ என்று சொல்லி எங்கள் குடும்பத்தையும் எங்களுக்கு ஆதரவாக இருந்த என் மாமன் குடும்பம் உட்பட சிலர் குடும்பங்களையும் ஊரைவிட்டே விலக்கிவைத்தார்கள்.

சங்கையா சேர்வை

எம்.பி. ஆன பிறகும்கூட பஞ்சாயத்து யூனியன் தலைவரா இருந்தா, தொகுதியை இன்னும் நல்லா கவனிக்கலாம்னு தோணுச்சு. எனவே, ஊராட்சித் தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தேன். எனக்கு எதிராக மறைந்த பெரியவர் கக்கனை வரவழைத்துப் பிரசாரம் செய்தார்கள். அப்படிஇருந்தும் தேர்தலில் ஜெயித்தேன். யூனியன் தலைவரானேன். துணைத் தலைவர் தேர்தலில் பெரும் கலவரம். அதில் என் சித்தப்பா சங்கையா சேர்வை கொலைசெய்யப்பட்டார். கொலையாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.

'சித்தப்பாவையும் பலி கொடுத்து... இவ்வளவு எதிரிகளையும் சம்பாதித்து... பஞ்சாயத்துத் தேர்தலில் நாம போட்டி போட்டி ருக்கவே கூடாதோ’ என்று கலங்கிப்போனேன்.

சதாசிவம், கோதண்டம்.

பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டத்தில், என் கால்கள் தீண்டாத கிராமமே கிடையாது. எல்லாக் கிராமங்களிலும் கட்சிக் கூட்டம் நடத்தியிருக்கிறோம். இப்படி நிகழ்ச்சிகளுக்காகத் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போது எதிரிகளால் சில சண்டைகள் வரும். அந்த நேரங்களில் முதுகில் அரிவாளோடு என் பாதுகாப்புக்காக உடன் வந்தவர்கள் என் மாமன்மார்களான சதாசிவ மும் கோதண்டமும்தான். இன்று கலைஞரால் மந்திரிப் பதவி கொடுக்கப்பட்டு 'செக்யூரிட்டி’ புடைசூழப் போகிற தருணங்களில் என் மாமன்மார்களை நினைத்து யாரும் அறியாத படி துடைத்துக்கொள்கிறேன் மன விழி களை!''

- சந்திப்பு: ம.செந்தில்குமார்

படம்: பாட்ஷா