மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அவதார் - பாண்டியில் ஃபயர் சுட்டிகள் !

ஏ.சசிகுமார் ஜெ.முருகன்

##~##

பாண்டிச்சேரி தேங்காய்திட்டு பகுதியில் உள்ள ஆச்சார்யா பால சிக்ஷா பள்ளி மாணவர்களில் 30 பேர் காக்கி உடையும் தலைக் கவசமும் அணிந்து போருக்குப் கிளம்புவதுபோல் பரபரப்பாக இருந்தனர். சீருடையில் இருந்த மற்ற மாணவ, மாணவிகள் திகைத்தனர். ''என்ன இந்த டிரெஸ்?'' என்று  கேட்டதும் கோரஸாக, ''நாங்க ஃபயர் ஸ்டேஷனுக்கு போகப் போறோம்...'' என்று உரக்கக் கத்தினார்கள்.

''அங்கே என்ன செய்யப்போறீங்க?'' என்று கேட்டதுக்கு, ''தீ அணைக்கப்போறோம்'' என்று ஒரு சுட்டி குரல்கொடுக்க, ''அய்யோ... திருநெல்வேலிக்கே அல்வா மாதிரி ஃபயர் ஸ்டேஷன்லேயே தீ அணைக்கப்போறியா'' என்று கார்த்தியாயினி  ராகம் இழுக்க, எல்லோரும் ''ஓ...'' எனச் சிரித்தனர்.

''இல்லே... அங்கே போய் வண்டியை எடுத்துக்கிட்டுப் போவோம்னு சொல்லவந்தேன்'' என்று சொன்னதுக்கு, அதற்கும் ஒரு ''ஓ...'' போட்டனர். அவர்களை ஏற்றிக்கொண்ட பள்ளி வாகனம், பாண்டிச்சேரி தலைமைத் தீயணைப்பு நிலையத்தில் நின்றது. இறங்கிய சுட்டித் தீயணைப்பு வீரர்களைத் தீயணைப்புக் கட்டுப்பாட்டு அலுவலரான ரிதோஷ் சந்திரா வரவேற்றார்.

''வாங்க குழந்தைங்களா, என்ன விஷயமா  வந்திருக்கீங்க?'' என்று அன்போடு விசாரிக்க, ''சார், நாங்களும் ஃபயர் மேன்கள்தான். அதனால இங்கே வந்தோம்!'' என்று ஷாக் கொடுத்தனர்.

''அப்படியா... எப்படி இந்த டியூட்டிக்கு வந்தீங்க?'' என்று கேட்க, ''அது வந்து சார், நாங்க படிச்சுப் பெரிய ஆளா வந்ததும் உங்க மாதிரி சர்வீஸ் பண்ண உங்ககிட்ட கத்துக்க வந்திருக்கோம்'' என்றான் ஸ்ரீநிவாஸ். அவன் கையைக் குலுக்கி, தன் சந்தோஷத்தைக் காட்டினார் சந்திரா.

அவதார் - பாண்டியில் ஃபயர் சுட்டிகள் !

''சுட்டிப் பசங்களா, இந்த அலுவலகம் 1962 முதல் செயல்படுது. உயிரைக் காப்பாற்றும் உன்னதமான வேலை எங்களுடையது. இந்த வேலைக்கு முக்கியமானது மனோதைரியம். பாண்டிச்சேரி பகுதியில் எங்கே தீ அசம்பாவிதம் நடந்தாலும் வண்டியோடு கிளம்புவோம்'' என்றார் ஒரு ஃபயர்மேன்.

அவதார் - பாண்டியில் ஃபயர் சுட்டிகள் !

''சார், வண்டியில் எவ்ளோ தண்ணீர் வெச்சிருப்பீங்க?'' என்று கேட்டாள் வைஷ்ணவி. ''வண்டியில் எப்போதும் 5,000 லிட்டர் தண்ணீர் தயாராக இருக்கும். தீயின் அளவைப் பொறுத்து அதை அணைக்கும் முயற்சியை மேற்கொள்வோம்'' என்றார்.

''தீயணைக்கும் வேலை மட்டும்தான் செய்வீங்களா அங்கிள்?'' என்று கார்த்தியாயினி கேட்டாள். ''எங்க வேலை அது மட்டும் இல்லை. கிணறு, ஆறு, ஏரி மற்றும் மலைப் பகுதியில் ஆபத்துகளில் சிக்கிக்கொண்டவர் களையும் மீட்போம். உதாரணமாக தானே புயல் சமயத்தில் ரெண்டு மாசம் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டோம். மின்சார வயர்கள், மரங்கள், இடிந்த கட்டடங்கள் என எல்லாத்தையும் சரிசெய்ய பல மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்தாங்க. ரொம்பக் கஷ்டமான சூழ்நிலையிலும் பாண்டிச்சேரியைச் சீர் செய்தோம்'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட சினேகா ''ஒருநாள் எங்க ஆட்டுக்குட்டி ஒண்ணு கிணத்தில் விழுந்து செத்துப்போச்சு சார்'' என்றாள். ''அச்சச்சோ, எங்களுக்கு சொல்லி இருந்தா வந்திருப்போமே சினேகா'' என்றார் ஃபயர்மேன். ''எனக்கு உங்களைத் தெரியாதே. விலங்குகளைக் காப்பாற்றவும் வருவீங்களா?'' என்று கேட்டாள் சினேகா.

அவதார் - பாண்டியில் ஃபயர் சுட்டிகள் !

''நாங்க மனிதன், விலங்கு என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பது கிடையாது. உயிர்களை காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். இனிமே அது மாதிரி ஏதாவது ஆச்சுனா போனில் தகவல் சொல்லுங்க'' என்றவரிடம், ''உங்க விசிட்டிங் கார்டைக் கொடுங்க'' என்றான் ஒரு சுட்டி. சிரித்த சந்திரா ''102-க்கு போன் செய்தாலே போதும்'' என்றார்.

''அங்கிள், உங்க வேலை ரொம்ப ஆபத்தானதா?'' என்று கார்த்திக் கேட்டான். ''நாம் மனதோடு நேசித்து செய்யும் வேலைகள் எப்போதும் ஆபத்து இல்லை'' என்றார்.

''இந்த வேலைக்கு என்ன படிக்கணும் அங்கிள்?'' என்று கேட்டாள் சாம்பவி. ''அறிவியல் சம்பந்தமான பாடத்தில் டிகிரி முடித்திருக்கணும். தீயில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? ஆபத்தான தருணங்களில் கயிற்றில்  முடிச்சுப்போட்டுத் தப்பிப்பது எப்படி எனப் பலவிதமான பயிற்சிகளைச் சொல்லிக்கொடுத்து பணிக்குத் தேர்ந்தெடுப்பார்கள்' என்றார் சந்திரா.

''பாம்பு வந்தாக்கூட புடிப்பீங்களா?'' என்று அதிர்ச்சிக் கேள்வி ஒன்றை சுவேதாப்ரியா தூக்கிப்போட, ''ஆமாம் இதில் சந்தேகமே வேண்டாம்'' என்றார்.

அவதார் - பாண்டியில் ஃபயர் சுட்டிகள் !

''எப்போதும் அலர்ட்டாக இருப்போம். உபகரணங்கள் எல்லாமே வண்டியில் எப்பவும் தயார் நிலையில் இருக்கும். ஏதேனும் ஒன்று தவறினால்கூட குழப்பம் ஏற்பட்டுவிடும். அதனால், மற்ற வேலையைவிட இதில் ரிஸ்க் அதிகம்’' என்றவரிடம், ''சார், உங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறதுதான் ரஸ்க் சாப்பிடற மாதிரி ஆச்சே'' என்று ஒரு சுட்டி சொன்னான்.

''எங்களை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலையே!'' என்று பதிலுக்கு ஃபயர்மேன் கூற, அடுத்த ஐந்து நிமிடம் அந்த இடம் சிரிப்பில் கலகலப்பானது.

''உங்களைப் பற்றி எங்களுக்கு நிறையச் சொன்னதுக்கு ரொம்பத் தேங்கஸ். இதை எப்பவும் மறக்க மாட்டோம்'' என்று அலமு ஐஸ்வர்யா கூற, அனைத்துச் சுட்டிகளும் ஆமோதித்து கைத்தட்டினர்.

அந்த நேரத்தில் அலுவலகத்துக்கு ஒரு போன் வந்தது. அடுத்த நிமிடம் தீயணைப்பு வண்டிகள் விரைவாகக் கிளம்பின. தீயணைப்பு வீரர்களின் உன்னதமான கடமை உணர்ச்சியைப் பார்த்து அனைத்துச் சுட்டிகளும் சல்யூட் அடித்து நின்றனர்.

அவதார் - பாண்டியில் ஃபயர் சுட்டிகள் !

பாண்டிச்சேரி, தேங்காய்திட்டில் கடந்த 2002-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, ஆச்சார்யா பால சிக்ஷா பள்ளி. பாண்டிச்சேரியில் மிகவும் பிரபலமான இந்தப் பள்ளியில், சுமார் 2000 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஐ.ஐ.டி, இன்ஜினீயர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்றவற்றுக்கு எவ்வாறு படிக்க வேண்டும் என்ற பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. மேலும், நடனம், தற்காப்பு, விளையாட்டு போன்றவற்றிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் சிறந்த பள்ளிகளில் டாப்-டென் பட்டியலில் ஆச்சார்யா பள்ளியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.