##~##

சுற்றிலும் பாருங்கள். இந்த உலகில் எல்லோரும்  முதலாம் இடத்தைப் பிடிப்பதற்காக ஓடிக்கொண்டு இருப்பது தெரியும். முதல் இடம் என்பது என்ன?

ஓர் ஓட்டப் பந்தயத்தில் 10 பேர் கலந்துகொள்கிறார்கள். அதில் மற்ற அனைவரையும் முந்திக்கொண்டு ஒருவர், 10 நிமிடங்களில் இலக்கைத் தொட்டுவிட்டார். அடுத்தவர், 9.45 நிமிடங்களில் தொட்டார். முதல் இடத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் உள்ள வித்தியாசம் 15 விநாடிகளே. அதனால், முதல் இடத்துக்குக் குறிவைக்காதீர்கள். இதுவரை யாரும் ஓடாத வேகத்தை இலக்காகவைத்து அதை நோக்கிப் பாயுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கு என்னென்ன தேவை? அந்தத் தேவைகள் நம்மிடம் இருக்கிறதா என்று யோசித்தால், அப்போது உங்களை நீங்கள் அறிந்தவர் ஆவீர்கள். ஒரு விஷயத்தில் தன்னிகரற்ற தன்மையை அடைய வேண்டுமானால், நமது மொத்தத் திறமையையும் உபயோகிக்க வேண்டும். நம் பலங்களைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். அதே நேரம், நம் பலவீனங்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

ஒரு கதை... ஒருநாள் ஒரு பூனையும் ஒரு நரியும் சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்தன. பேச்சுவாக்கில் நரி கேட்டது, 'இப்போது ஒரு வேடன் நம்மைத் தாக்க வந்தால் என்ன செய்வாய்?'

பூனை சொன்னது, 'நான் ஓடிப்போய் மரத்தில் ஏறிக்கொள்வேன். எனக்கு அதுதான் தெரியும். அது சரி, நீ என்ன செய்வாய்?'

நரி சொன்னது, 'எனக்கு 100 வழிகள் தெரியும்'

அப்போது நிஜமாகவே அங்கே ஒரு வேடன் வந்துவிட்டான். பூனை மரத்தில் ஏறிக்கொண்டது. நரி தனக்குத் தெரிந்த 100 வழிகளில் எந்த வழியைப் பயன்படுத்தித் தப்பிக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது, வேடன் அதைப் பிடித்துவிட்டான்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

அந்த நரிக்குத் திறமைகள் இருந்தும் தீர்மானம் செய்வதில் குழப்பம். அதுதான் அதன் பலவீனம். அதனாலேயே மாட்டிக்கொண்டது. நம் பலவீனம் எது என்று தெரிந்தால்தான், அதைத் திருத்திக்கொள்ள முடியும். உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த சில விஷயங்களை இங்கே நினைவுபடுத்துவோம்.

குறிக்கோள்: உங்கள் லட்சியங்களை மனதில் ஆழமாகப் பதியும் விதமாக எழுதி வைத்திருக்கிறீர்களா? அந்த லட்சியத்தை எப்படி சாதிப்பது என்று முடிவு செய்திருக்கிறீர்களா?

தொலைநோக்கு: எதிர்வரும் ஐந்தாண்டு காலத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள், எந்த இடத்தில் இருக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு தெளிவான ஐடியாவில் இருக்கிறீர்களா?

தன்னம்பிக்கை: ஒரு விஷயத்தை இப்போது சிறப்பாகச் செய்யவும், எதிர்காலத்தில் தேவைப்படும் திறன்களில் கில்லாடி ஆவதற்கும் உங்களால் முடியுமா?

உந்துதலும் சக்தியும்: உங்கள் மனதின் முழுச் சக்தியையும் ஒரே விஷயத்தில் குவித்து, அதைச் செய்து முடிக்கும் திறன் உங்களிடம் இருக்கிறதா?

போட்டியிடும் ஆர்வம்: திறமை மிகுந்தவர்களோடு போட்டியிட்டு, எல்லாப் பரிசுகளையும் அள்ளாவிட்டால் எனக்குத் தூக்கம் வராது என்பவரா நீங்கள்?

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

தன்னைப் பற்றிய அலசல்: உங்கள் குறை நிறைகளைப் பற்றி தொடர்ந்து யோசிப்பதோடு, உங்களை முன்னேற்றிக்கொள்ள மற்றவர்களின் கருத்துகளையும் எதிர்பார்ப்பவரா?

தலைமைப் பண்பு: உங்கள் நண்பர் வட்டாரத்தில் பிறரையும் ஊக்குவித்து, அவர்களை முன்னிறுத்தி அவர்களோடு போட்டியிடுவதைத் தொடர்ச்சியாகச் செய்கிறீர்களா?

மேலே கேட்ட எல்லாவற்றுக்கும் ஆமாம் என்று பதில் சொன்னால், இதுவே உங்கள் லட்சியத்தில் பாதி சாதித்த மாதிரிதான்.

தோல்வி காணாத மனிதரே இல்லை. தோற்றால் வருந்தவும் தேவை இல்லை. தோல்வியினால் நமக்குப் பெரிய பயன் உண்டு, அதில் இருந்து பாடம் கற்கலாம். 'கீழே விழுவது அல்ல தோல்வி; விழுந்தால் எழுந்திருக்காமல் இருப்பதுதான் தோல்வி!’  

ஒரு வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டால் வருத்தப்படுவதில் நேரத்தை வீணடிக்கக் கூடாது. அதே நேரத்தில், எதனால் அந்தத் தோல்வி ஏற்பட்டது என்று தெரிந்துகொண்டால் அடுத்த முறை அந்தக் காரணத்தால் தோல்வி ஏற்படாது. உங்கள் மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இருப்பது அவசியம்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு பையன். டியூஷன் வகுப்பில் இருந்து அழுதுகொண்டு இருந்தான். 'மேம், எனக்கு கணக்கே வேண்டாம் மேம்' என்றான். ஏன் என்றால், அவனுக்கு கணக்கில் இருக்கும் ட்ரிக்ணாமெட்ரி புரியவில்லையாம். 'அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சரியாச் செய்றியே அப்புறம் என்ன?' என்று டீச்சர் கேட்டார்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு ?

அவன் அந்தக் கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தான். அதன்பிறகு, டீச்சர் வைத்த மாதிரித் தேர்வில் தனக்கு நன்கு தெரிந்த கணக்குகளைத் தன்னம்பிக்கையோடு செய்தான். அதே நம்பிக்கையோடு  ட்ரிக்ணாமெட்ரி கேள்விக்கும் சரியான விடை எழுதி சென்டம் தட்டினான்.

எல்லாவற்றிலும் முதன்மையாக இருப்பவர்களில் மிகச் சிலருக்கு, ஒரு குணம் வர வாய்ப்பு இருக்கிறது. 'நாம்தான் சூப்பராகப் படித்து எப்போதும் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கிறோமே, நாம் எதற்குப் பிறர் சொல்வதைக் கேட்க வேண்டும்?’ என்கிற எண்ணம்தான் அது.

இந்த எண்ணம் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் ஆழ்மனதில் அழுத்தமாக உட்கார்ந்துவிடும். இது தப்பு. முதல் ரேங்க் வாங்கும் மாணவனிடம் டீச்சர் அதிகமாகப் பேசுவதைக் கவனித்திருப்பீர்கள். 'அதை அப்படிச் செய்’, 'இதை இப்படிச் செய்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஏன்? ஒருவர் எல்லாவற்றிலும் எப்போதும் கரை கண்டவராக இருக்க முடியாது, இல்லையா? அதனால்தான்.

நகைகள் செய்யத் தோதான உலோகம் தங்கம். அதைத்தான் நெருப்பில் புடம் போடுவார்கள். சுத்தியலால் டொக் டொக் என்று தட்டுவார்கள். அதை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் உங்களைப் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்து வைத்திருந்தாலும், உங்களைவிட உங்களை அதிகம் கவனிப்பவர்கள், உங்கள் மேல் அக்கறை உள்ள பெற்றோரும் ஆசிரியரும்தான். அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்து கவனமாகக் கேளுங்கள். அவர்களது அறிவும் அனுபவமும்கூடிய விமரிசனக் கருத்துகளால் உங்களைப் பட்டை தீட்டிக்கொண்டால், நீங்கள் புத்திசாலி.

முக்கியமான விஷயம், அறிவுரைகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால், அவை உங்கள் தன்னம்பிக்கையைப் பாதிக்க விட்டுவிடாதீர்கள்.

தன்னம்பிக்கையைப் போலவே முக்கியமான இன்னொன்று, நமக்கு உள்ளே இருந்து நம்மை உந்தித்தள்ளும் ஊக்கசக்தி என்பதைப் பார்த்தோம். கீழே ஒரு பட்டியல் இருக்கிறது பாருங்கள். அதில் கொடுக்கப்பட்டு இருப்பவற்றில் எவை எல்லாம் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கின்றன என்று டிக் அடியுங்கள். இடப் பக்கம் உள்ள விவரங்களில் அதிகமான டிக் விழுந்தால், உங்கள் ஊக்கசக்தி சூப்பராக இருக்கிறது என்று பொருள். வலப் பக்கம் அதிக டிக் மார்க் இருந்தால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் ஊக்கசக்தியை வளர்த்துக்கொள்ள இன்னும் முயற்சிகள் எடுக்க வேண்டும், அவ்வளவுதான்.