Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
மறக்கவே நினைக்கிறேன்
##~##

‘ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்!’  

என் மடியில் இப்போது ஒரு பைபிள் இருக்கிறது. பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் அடங்கிய எபிரேயு கிரேக்கு என்னும் மூல பாஷையிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால், இது அக்காவின் பைபிள். முன் அட்டையில் எஸ்.எஸ்தர் என்று தமிழில் மை பேனாவை வைத்து எழுதிவைத்திருக்கிறாள்.

'நீ செய்த பாவங்கள் ஒவ்வொன்றும் என் காதுக்கு வரும்போது உன் போட்டோ ஒன்றை எடுத்து இந்த பைபிளுக்குள் வைத்துக் கண்ணீர் மல்க ஜெபிப்பேன். கர்த்தர் கருணையானவர் என்று எனக்குத் தெரியும். ஆனால், உன் விஷயத்தில் அவர் கொஞ்சம் கூடுதல் கருணை காட்டவேண்டிய அவசியம். ஆகையால் கண்ணீர் மல்க ஜெபிப்பேன். என் ஜெபம் வலிமையானது. அது உன்னை ஒவ்வொரு முறையும் சிலுவையில் அறைந்துவிடாமல் காப்பாற்றியிருக்கிறது. ஒருநாள் நீ பைபிள் வாசிப்பாய். அப்போது ஜெபத்தைக் காட்டிலும் பைபிள் வலிமையானது என்று புரியும்!’ - இது அடிக்கடி அக்கா சொல்வது.

'நான் உன்னைத் தண்டிக்கப்போவதில்லை. உன்னை தண்டிக்கும் உடல் வலிமையும் எனக்கு இருப்பதாக நான் நம்பவில்லை. என்றாவது ஒருநாள் யதேச்சையாக உன் கையில் ஒரு பைபிள் கிடைக்கும். அப்படி அது கிடைக்கும்போது அதை நீ வாசிக்கக்கூட வேண்டாம். சும்மா தொட்டாலே போதும். நீ மிகவும் தண்டிக்கப்பட்டதாக நான் உணர்ந்து திருப்தி அடைவேன்! - இப்படி திருநெல்வேலி ஆவினில் வைத்து வலுக்கட்டாயமாக ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தபடி சொன்ன ஆபிரஹாம் அப்படியே அன்று முதல் காணாமல் போய் விட்டான்.

அப்படிப்பட்ட பைபிள்தான் இப்போது என் மடியில்  இருக்கிறது. கட்டாயம் பைபிள் படிக்க வேண்டிய அல்லது படித்திருக்க வேண்டிய கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லை நான். அப்பா செவ்வாய், வெள்ளிகளில் பேய், பிசாசு ஓட்டும் உச்சினிமாகாளி அம்மன் கொண்டாடி. அம்மாவோ எப்போதும் சிவப்புச் சேலை அணிந்தபடி திரியும் ஆதிபராசக்தி. ஆகவே, அம்மா - அப்பாவுக்கும் ஜெருசலேமுக்கும், அம்மா - அப்பாவுக்கும் ஏசுவுக்கும், அம்மா - அப்பாவுக்கும் பைபிளுக்கும், எந்தச் சம்பந்தமும் எப்போதும் இருந்ததில்லை. புதுக்கோட்டை கிறிஸ்துவப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த அக்கா தான் யாருக்கும் தெரியாமல் ஒருநாள் கர்த்தரை வீட்டுக்குக் கூட்டிவந்தவள். அக்காதான் பைபிளைக் கொண்டுவந்தவள். யாருக்கும் தெரியாமல் கர்த்தர் எங்கள் வீட்டுக்குள் இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியும்போது, முருகம்மாளாகிய அக்கா எஸ்.எஸ்தராக மாறியிருந்தாள்.

மறக்கவே நினைக்கிறேன்

'பரிசுத்த வேதாகமம்’ எனப்படும் இந்த பைபிளின் பக்கங்களுக்கு இடையே நாங்கள் பலப் பல வேண்டுதல்களை எழுதிவைத்திருப்போம். 'என்னை இன்னும் கொஞ்சோண்டு வளத்தியாக்கும் ஆண்டவரே’ என்று பெரியமாரி எழுதிவைத்திருந்தால், முத்துக்குமார் 'சிவகாமி டீச்சருக்குக் காய்ச்சல் வர வேண்டும்’ என்று எழுதியிருப்பான். வள்ளிக்கு எழுதத் தெரியாது. அவள் பைபிளில், 'உம் ரத்தத்தால் என்னைக் கழுவி, கறுப்பான என்னைச் சிவப்பாக்கும் ஆண்டவரே’ என்று என்னைத்தான் எழுதித் தரச் சொல்வாள். மூர்த்தி பைபிள் முழுக்க முடியில்லா மொட்டை பொம்மைகளை வரைந்து வைத்திருப்பான். 'இன்று மட்டும் அடி கிடைக்காமல் காப்பாற்றும் ஆண்டவரே’ என்பதையே தினமும் எழுதிவைத்துவிட்டு, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தவறு செய்கிறவனாகத்தான் நான் இருந்தேன். 'ஆண்டவரே சாத்தானின் கைக்குழந்தையாக இருக்கும் என் கடைசித் தம்பி, இன்று தெரிந்து செய்த பாவங்களையும் தெரியாமல் செய்த பாவங்களையும் மன்னிப்பீராக’ என்று நடு இரவில் அக்கா எனக்காக என் தலைமாட்டில் பைபிளை வைத்து, எனக்குத் தெரியாமல் செய்கிற ஜெபம் எல்லாம் எனக்குப் பிடித்தமானவைதான்.

அக்காவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அவள் யாருக்காக ஜெபித்தாலும் அவர்கள் பெயரையோ அல்லது அவர்களின் புகைப்படத்தையோ அவர்களின் பிரச்னைக்குத் தகுந்தவாறான அதிகாரத்தில் வைத்தபடி ஜெபிப்பாள். என் புகைப்படத்தை 23-வது சங்கீதத்தில் வைத்திருக்கிறாள். அந்தப் புகைப்படம் நான் முதன்முதலில் கருங்குளம் பள்ளியில் ஆறாவது படிக்கும்போது பஸ் பாஸுக்காக எடுத்த புகைப்படம். எண்ணெய் தேய்த்துத் தலை வாரி, நெற்றியில் திருநீறு பூசியிருக்கிறேன். நல்லவேளை இந்தப் புகைப்படத்தில் இருக்கும்போது நான் எந்தப் பாவமும் செய்ததாக இப்போது என் நினைவில் இல்லை. கொஞ்சம் சில்லறைத் திருட்டுகள் இருக்கலாம், அவ்வளவுதான்.

மறக்கவே நினைக்கிறேன்

நாளாகமத்தின் அதிகாரம் ஒன்றில் எதையுமே அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் தம்பி ராமமூர்த்தி பெயர், நீதிமொழிகள் ஐந்தாவது அதிகாரத்தில் அண்ணன் சிவா பெயர், ஏசாயா 49-வது அதிகாரத்தில் அம்மாவின் பெயரையும் அப்பாவின் பெயரையும் எழுதிவைத்திருந்தவள், அதிகம் கோபப்படக் கூடியவனாக இருக்கிற சின்ன அண்ணன் மாரி ராஜாவின் பெயருக்குப் பதிலாக அவனுடைய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கணக்குப் புத்தகத்தை நீதிமொழிகள் 14-ல் வைத்திருக்கிறாள்.

'புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள். புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.’ இது யதேச்சையாக நடந்ததா, அல்லது அக்கா திட்டமிட்டுச் செய்தாளா என்று எனக்குத் தெரியவில்லை. கர்த்தரிடம் அண்ணனின் வங்கிக் கணக்கு வழக்குகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கா காட்டுவது யதேச்சையானதாக எனக்குப்படவில்லை.

இப்படி எங்கள் எல்லாருடைய பெயர்களையும் பைபிளில் அக்கா இன்னும் எழுதிவைத்துக்கொண்டுஇருப்பதில் எனக்கு ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லை. ஏனெனில், வீட்டில் தினமும் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் எங்கள் பெயர்கள் வெவ்வேறு அதிகாரங்களுக்கும், சங்கீதங்களுக்கும், நீதிமொழிகளுக்கும் மாறும். நான் வீட்டில் எப்போதும் இல்லாத ஒரு ஆளாகிவிட்டதால் எனது புகைப்படம் ஒரே அதிகாரத்தில் அதிக நாட்கள் இருக்கின்றன. ஆனால், சிவா அண்ணன் பெயர் வாரத்துக்கு ஒரு முறை வசனம் மாறுவதாக மூர்த்தி சொல்லுவான். அக்காவுடன் திருமணம் ஆகி ஆறு மாதமே ஆனாலும், அத்தான் செந்தில் பெயர் கூட ஒரே நாளில் மூன்று நான்கு அதிகாரங்களுக்கு மாறும் என்பது எனக்குத் தெரிந்ததுதான். ஆனால், நாங்கள் எல்லாரும் எப்போதோ மறந்துபோன, மரத்துப்போன ராஜி என்ற ஒரு பெயர் பத்து வருடங்களாக ஒரே அதிகாரத்தில், ஒரே வசனத்தில் இருப்பதுதான் எனக்குப் பேரதிர்ச்சியாக இருக்கிறது.

யோசுவா அதிகாரம் 1-ல் ஐந்தாவது வசனம்.

'நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை!’

ராஜிக்கு என்ன நடந்தது, அவள் இருக்கிறாளா இல்லையா என்று எந்த உண்மையும் தெரியாமல் அக்கா இன்னும் ராஜியின் பெயரை பைபிளில் மறைத்துவைத்து ஜெபித்துக்கொண்டிருக்கிறாள். ராஜிக்கு என்ன நடந்தது என எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு, தெரியாததுபோல நாங்கள் செய்த பாவத்துக்காக ஜெபிக்கிறாளா அல்லது எதுவும் தெரியாமல் கண்டிப்பாக ராஜி ஒருநாள் வந்துவிடுவாள் என்ற அவளது நம்பிக்கை, அப்படியே தொடர்ந்து ஜெபிக்க அவளைப் பழக்கிவைத்திருக்கிறதா என்று தெரியவில்லை.

மறக்கவே நினைக்கிறேன்

ராஜி என்பவள் எங்களின் கடைசித் தங்கை என்று நினைத்துவிடாதீர்கள். ஒருவேளை ராஜி என்பவள் என் பதின்மூன்று காதலிகளில் ஒருத்தி யாக இருக்கக்கூடும் என்றும் நினைத்துவிடாதீர்கள். ராஜி என்பவள் நாங்கள் வளர்த்த நாய்கூட இல்லை. அது செந்திலாம்பண்ணையில் இருந்து அக்கா கல்லூரிப் படிப்பு முடிந்து வீட்டுக்கு வரும்போது கொண்டுவந்த ஒரு பூனைக்குட்டி!

அந்தப் பூனைக் குட்டி சீனி தாத்தா அவளுக்குக் கொடுத்த பரிசு. அப்படியே சீனி தாத்தாவின் முடிபோல அவ்வளவு வெள்ளையாக இருக்கும். பேருந்தில் இருந்து தவறி விழுந்து இறந்துபோன தன் பள்ளித் தோழி ராஜியின் பெயரை அந்தப் பூனைக்குட்டிக்கு வைத்துவிட்டிருந்தாள் அக்கா. சினிமா பார்க்காத, பாட்டு கேட்காத கர்த்தரின் குழந்தை ஆன பின்பு, அக்காவுக்கு ராஜிதான் எல்லாமும் எப்போதும்.

ராஜி எங்களுக்கும் நல்ல சிநேகிதிதான். மூர்த்தியோடு அவள் போட்டிபோட்டுச் சாப்பிடுவாள், அப்பாவோடு போட்டிபோட்டுக் குறட்டை விடுவாள், அம்மாவோடு போட்டிபோட்டுப் பாத்திரங்களை உருட்டுவாள், அண்ணனோடு போட்டிபோட்டு வீட்டில் கருவாடு தேடுவாள், அக்காவோடு போட்டிபோட்டு ஜெபிக்கக் கூடச் செய்வாள், என்னோடு போட்டிபோட்டு வீட்டில் திருடுவதிலும் அவள் கில்லாடி.

ஒரு பூனையும் ஒரு பெண்ணும் வீட்டில் தனியாக இருந்தால் அப்படி என்னதான் பேசிக் கொள்வார்கள்? அக்காவும் ராஜியும் பேசிக் கொண்டே இருப்பார்கள். அக்கா ராஜியின் முடிகளை வருடிவிட்டபடிதான் பைபிள் படிப்பாள். ராஜி அக்காவின் பாலியஸ்டர் தாவணியில்தான் கிடந்து உருளும். நன்றாகப் பழகிவிட்ட பூனைகள் கைக் குழந்தைகளைப் போல உங்களை எப்போதும் தடவச் சொல்லும், தூக்கச் சொல்லும், விளையாடச் சொல்லும். நாம் அதைக் கவனிக்காமல் இருந்தால் கத்தும். கையை வந்து அப்படிக் கவ்வும். நாம் கண்டுகொள்ளாமல் நடக்கும்போது கால் களுக்கு ஊடாக வந்து நகத்தைப் பிராண்டும். அதுவும் நன்றாகச் செல்லம் கொடுத்த பூனைஎன்றால் கேட்கவா வேண்டும்..? ராஜி தனி ராஜ்யமே நடத்துவாள்.

ஒருநாள் வீட்டுக்குள் வந்துவிட்ட ஓணானை ராஜி விரட்டிப்பிடித்துக் கடித்துக் குதறியபோது அக்கா அவ்வளவு பயந்துவிட்டாள். அவளால் நம்ப முடியவில்லை. பூனைகள்தானே எலி, ஓணான், பல்லி எல்லாவற்றையும் வேட்டையாடும்... ஆனால், ராஜி ஏன் அப்படி நடந்துகொள்கிறது என்பதை அவளால் நம்பவே முடியவில்லை? ஏனெனில், ராஜியை அவள் ஒருநாளும் பூனையாகப் பார்த்ததே இல்லை. அன்று முதல் ராஜிக்குக் கருவாடு சுட்டுக்கொடுப்பதை அக்கா நிறுத்தி விட்டாள். வீட்டில் இருந்து யார் வெளியே கிளம் பினாலும் வாசலில் நின்று மியாவ்... மியாவ். ஆனால், அக்கா டைப்ரைட்டிங் கிளாஸ் கிளம் பினால் மட்டும் தொழுவு வரைக்கும் வந்து மியாவ்... மியாவ்.

மறக்கவே நினைக்கிறேன்

அக்கா ராஜியை நன்றாக பிஸ்கட் தின்னப் பழக்கியிருந்தாள். எப்போது அவள் வெளியே போனாலும் பிஸ்கட்தான் வாங்கிவருவாள். 'ஒரு பிஸ்கட் உனக்கு... ஒரு பிஸ்கட் எனக்கு’ என்று இருவரும் வாசலில் படுத்துக்கிடந்து சாப்பிடும் போது அம்மா, 'ஏ புள்ள ராசி... இங்க பாரு எங்கிட்ட கருவாடு இருக்கு’ என்று சமையலறையில் இருந்து சுட்ட கருவாட்டை உயர்த்திக் காண்பிப் பாள். ராஜி அம்மாவைப் பார்க்கும். முறைக்கிற அக்காவையும் பார்க்கும். மூன்று முறை 'மியாவ்... மியாவ்... மியாவ்..’! இப்போது அம்மா சத்தம்போட்டு, 'ஏக்கி இங்க வாக்கி கருவாடு தாரேன். இப்ப வந்தா கருவாடு. அப்புறம் வந்தா திருவோடுதான் போ’ என்று சொல்லும்போது வீட்டுக்குள் வேகமாகச் சென்று, நடு உத்திரம் வழியாக ஏறி கீழ் வீட்டுக்குள் புகுந்து சமையலறையின் பின்பக்க வலையில் வந்து நின்று மெதுவாக அம்மாவைப் பார்த்துக் கத்தும்... 'மியாவ்... மியாவ்..’!

'ஏ புள்ள முருவம்மா... இங்க வந்து பாரு உன் ராசிய! எப்படி நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு கருவாட்டுக்கு வந்துருக்குனு’ என்று அம்மா சொல்ல, 'ஏ புள்ள ராசி... நாக்க சொட்டாங்கியா போடுற! இந்தா வாரேன். அடுப்புல காய வெச்சிருக்கிற தீமுட்டி குழல எடுத் துட்டு வந்து வாயில ஒரு இழு இழுக் கிறேன்’னு அக்கா மெதுவா எழுந் திருப்பா. அவ்வளவுதான்... சமையற் கட்டு வலையில இருந்து வேப்ப மரத்துக்கு ஒரு தாவு. அப்படியே அடுத்த வீட்டு ஓட்டுக்கு ஒரு தாவு. அங்க நின்னுக்கிட்டு மொத்த வீட்டையும் பார்த்து நாள் முழுக்க மியாவ்... மியாவ்... மியாவ்! அப்புறம் அக்கா மண்டியிட்டு ஜெபிக்கும்போதுதான் வந்து அவள் உள்ளங்காலைத் தன் பூனை முடிகளால் உரசிக்கொண்டிருக்கும். அக்கா எப்போது ஜெபித்துக் கண் திறந்தாலும் எதிரில் இருப்பவர்களுக்கு ஒரு முத்தம் கிடைக்கும். அந்த முத்தம் ராஜிக்கும் கிடைக்குமென்று ராஜிக்குத் தெரியும். அந்த ராஜிதான் இந்த ராஜி. எங்கே போனாள்? என்ன ஆனாள் என்று எதுவும் தெரியாமல் பத்து வருடங்களாகப் பெயர் எழுதி பைபிளுக் குள் வைத்து அக்காவால் ஜெபிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ராஜி. எப்படியும் ஒருநாள் திரும்பி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் அக்கா ஜெபித்துக்கொண்டிருக்கும் ராஜி!

ராஜி காணாமல் போனதாக அக்காவுக்கு நாங்கள் சொன்ன அன்று, நான்கு அடுப்புக் கட்டிகளில் வைத்து பெரிய கொப்பரைகளில் நெல் அவித்து அம்மா இறக்கினாள். அந்த நெல்லை உலர்த்துவதற்காக நானும் அப்பாவும் சிமென்ட் குளத்துக்கு எடுத்துக்கொண்டு போனோம். அப்போது அக்கா டைப்ரைட்டிங் கிளாஸுக்குப் போயிருந்தாள் என்பதால் அவள் வீட்டில் இல்லை. மற்ற எல்லாருமே இருந்தோம். அப்பாவும் நானும் கொப்பரையில் இருக்கும் அவித்த நெல்லை அப்படியே கவிழ்த்துக் கொட்டினோம்.

மனதைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள்... கொட்டிய நெல்லில் ராஜி வெந்து அவிந்து வந்து விழுந்தது! முதலில் பார்த்த அப்பா அப்படியே அலறி நடுங்கிக் கத்திவிட்டார். நானும் மூர்த்தி யும் அப்படியே நின்றோம். அம்மா பக்கத்தில் வந்து பார்க்க... பயந்து தூரத்தில் நின்று அழுதவாறு அப்பாவைத் திட்டத் தொடங்கினாள்.

மறக்கவே நினைக்கிறேன்

'ஐயோ பாவி... வீட்டுக்கு வந்த சீதேவிய இப்படி நெல்லுக்குள்ள வெச்சி அவிச்சி எடுத்துப் போட்டுட்டியே... இனிம என் குடி எப்படித் தழைக்கும்?’ என்று அவள் திட்டியபோது அப்பா பித்துப் பிடித்தவராக இருந்தார்.  ராஜி ஒரு பொம்மையைப் போல வெந்து ஊதியிருந்தது. அந்தப் பூனைக் கண்கள் அப்படியே வெந்து வெளுத்துப்போய் இருந்தன. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. எப்படிக் கொப்பரையில் விழுந்தது, எப்படி அதைப் பார்க்காமல் நெல்லை நாங்கள் கொப்பரையில் கொட்டினோம். எப்படித் தீயை மூட்டினோம் என்று எதுவும் புரியவில்லை!

அடுப்புமூட்டி அம்மா நெல் அவித்துக்கொண்டிருந்த தொழுவுக்கு மேலே உள்ள பரணில் நாங்கள் வைத்திருக்கும் கம்புகளில் எப்போதும் போல நடந்து போகும்போதோ, அல்லது ஓடிப் போகும்போதோ, ராஜி தவறி விழுந்து எழ முடியாமல் கிடந்திருக்கிறது. இதைப் பார்க்காத அப்பா, நெல் மூட்டையைக் கொண்டுவந்து கொட்டியிருக்கிறார். ராஜி நெல்லுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறது. வெந்து நெல்லோடு நெல்லாக அவிந்துபோயிருக்கிறது.

'யப்பா... என் மவ வர்றதுக்குள்ள அதப் புதைச்சிடுங்கப்பா. அவ பாத்தா தாங்க மாட்டாப்பா. தெரிஞ்சிச்சி... அவ்வளவுதான்! என்னைய அவ வெச்சிப் பாக்க மாட்டா. அவகிட்ட மூச்சு விட்றாதீங்க. புள்ள துடிச்சிப் போய்டுவாப்பா!’ என்று அம்மா அழுது கூப்பாடுபோட, மூர்த்தியும் நானும் ராஜியை ஒரு பையில் எடுத்துப் போட்டுக்கொண்டு சாத்தான்கோவிலுக்குப் பின்னாடி உள்ள ஒடங்காட்டுக்குள் சென்று குழி தோண்டி னோம். அப்பாவிடம் அம்மா ஒரு சொம்பு பாலும், ஒரு குவளைப் பச்சரிசியும் கொடுத்துவிட்டிருந்தாள். ராஜியைக் குழிக்குள் வைத்ததும் அப்பா பாலை ஊற்றிப் பச்சரிசியைப் போட்டார். மூர்த்தி குழியை மூடினான். ராஜி கண்களிலிருந்து வேகமாக மறைந்துபோனது. அக்காவிடம் ராஜி இறந்ததை யாரும் சொல்லவில்லை.

மறக்கவே நினைக்கிறேன்

அன்று ராஜியைக் காணாமல் அக்கா தேடத் தொடங்கினாள். அம்மாவிடம் அப்படி சண்டை போட்டாள். 'ஒரு பூனைக் குட்டிய பத்திரமா பாத்துக்கத் தெரியாத நீயெல்லாம் எப்படிப் புள்ள குட்டி பெத்து வளத்த?’ என்று வாய்க்கு வந்தபடி  பேசினாள். பக்கத்து வீடுகளுக்குப் போய்ப் பார்த்தாள். ராஜியின் பூனை சிநேகிதியான வெள்ளையம்மாளிடம் போய்க் கேட்டுப் பார்த்து விட்டு வந்தாள். வெள்ளையம்மாள் மாடத்தி அக்கா வளர்க்கும் பெரிய பூனை. திடீரென்று ஏதோ சந்தேகம் வந்தவளாக என் வாயைப் பக்கத்தில் வந்து நுகர்ந்து பார்த்தாள். பூனைக் கறியின் வாடை அடிக்கிறதா என்று! அவளை அவளால் சமாதானம் செய்துகொள்ள முடியாமல் தவித்தாள். அதற்குப் பிறகான அவளின் இரவுகள் அவ்வளவு நிசப்தம் நிறைந்ததாக இருக்கும். நடு இரவில் எங்கோ, எந்தத் தெருவிலோ கேட்கும் ஒரு பூனையின் மியாவ்... மியாவ்... அவளை எழுப்பி விடும். அவள் எங்களை எழுப்புவாள். 'யம்மோவ்... ராஜி வந்துடுச்சினு நினைக்கிறேன்... வடக்குப் பக்கம் சத்தம் கேட்குது!’ என்று மண்ணெண்ணெய் விளக்கைத் தூக்கிக்கொண்டு பின் வாசல் வழியாகச் சென்று, அடுத்த தெருவைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். அப்புறம் அவளா கவே வந்து விளக்கை ஊதி அணைத்து விட்டுப் படுப்பாள். அசந்து மறந்து எப்போதாவது தூங்கிக்கொண்டிருக் கும் அவளின் காதுக்கு அருகே போய் சில நாள் மூர்த்தி, 'மியாவ்... மியாவ்...’ என்பான். அவ்வளவுதான்... பதறி எழுவாள். மூர்த்தி சிரிப்பான். அவன் மீது பூனை போலப் பாய்ந்து பிராண்டுவாள் அக்கா.

மறக்கவே நினைக்கிறேன்

எப்படியாவது ராஜி ஒருநாள் திரும்பி வந்துவிடும் என்று அவள் பிஸ்கட் வாங்கி வருவதைக்கூட நிறுத்தவில்லை. ஒரு நள்ளிரவு அவளின் திடீர் ஜெபத்தின்போது எங்களையும் கட்டாயப்படுத்தி எழுப்பி வைத்துக்கொண்டு ராஜியின் பெயரை எழுதி, பைபிளுக்குள் சொருகி, அக்கா சத்தமாக ஜெபிக்கத் தொடங்கினாள்.

'பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே... எங்கள் ராஜியை எங்களுக்குத் திருப்பித் தந்துவிடுவீராக. வழி தவறி திசைமாறிப் போன அவளை மிகச் சரியாக வழிகாட்டி எங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பீராக! அவளைப் பிரிந்த நாங்கள் மிகவும் தவிப்பவர்களாகவும் விசனப்படுகிறவர்களாகவும் இருக்கிறோம்... அல்லேலுயா’! நாங்கள் அல்லேலுயா மட்டும்தான் சொன்னோம். எப்போதும் அதை மட்டும்தான் சத்தமாகச் சொல்லுவோம். அதற்காக அவளிடமிருந்து எப்போதும்போல எங்களுக்கு ஒரு முத்தம் கிடைத்தது. அப்போதுகூட நானோ மூர்த்தியோ, அம்மாவோ, அப்பாவோ யாரும் அக்காவிடம் ராஜி இறந்துவிட்டாள் என்பதை இன்னும் சொல்லவில்லை.

இப்போது என் மடியில் இருக்கும் இந்த பைபிளில் எழுதிச் சொருகியிருக்கிறது ராஜியின் பெயர்! அநாதையாக கோவில்பட்டியில் என்னை விட்டுவிட்டு அப்படியே காணாமல் போன ஜோ எனக்குக் கொடுத்த பைபிளிலும் இருக்கிறது. கருங்குளத்தில் வைத்துக் கண் தெரியாத எபனேசர் ஜெயசெல்வி கொடுத்த அந்த ஊதாக் கலர் பைபிளிலும் இருக்கத்தானே செய்யும். திருச்செந்தூர் ரயிலில் வைத்து அல்போன்ஸ் அண்ணாச்சி கண்டிப்பாகப் படிக்கச் சொல்லிக் கொடுத்த பைபிளிலும் இருக்கிறது. கடைசியாக ஆரல்வாய்மொழியில் வைத்துக் காற்றைக் கிழித்துக்கொண்டு றெக்கைகளைச் சுழட்டிக்கொண்டிருந்த அந்தப் பெரிய காற்றாலை கோபுரத்தின் அடியில் வைத்து தோழி ஜோதி  கண்ணீரோடு கொடுத்த பைபிளிலும் ராஜியின் பெயர் நிச்சயமாய் இருக்கக்கூடும்.

ஆகவேதான் இன்னும் ஒரு பைபிளைப் படிக்க முடியாதவனாகக் கிடைத்த எல்லா பைபிள்களையும் வெறுமனே மடியில் வைத்துத் திரிகிறவனாக நான் அலைந்துகொண்டிருக்கிறேன்!

- இன்னும் மறக்கலாம்...