பாஸ்வேர்டு
##~##

டிச்சுக்கிட்டே இருந்த புள்ள... அப்படியே தூங்கிட்டான்போல. அதான் கதவைத் திறக்க மாட்டேங்கறான்னு நினைச்சுட்டு இருந்தோம். ஆனா, இப்படித் தூக்குல தொங்குவான்னு சத்தியமா நினைக்கலை!''- உதடுகள் இழப்பின் வலியைச் சொல்ல முடியாமல் தவித்ததும், கண்ணீர்விட்டுக் களைத்துப்போன அந்த அம்மாவின் கண்களும் இன்னமும் மனசுக்குள் நிழலாடுகின்றன.

திரையில் லைஃப் சைஸுக்குப் பிரமாண்டமாக மின்னிய தன் மகனின் படத்தைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு, இரண்டு கைகளையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு அந்த அம்மா தவித்த தவிப்பை எந்த வார்த்தையும் வர்ணித்துவிட முடியாது.

''ஃப்ரெண்டு மாதிரிதான் சார் பழகுவேன். அவ்வளவு பிரியம் சார். ஸ்கூட்டர்ல என் பின்னால உட்கார்ந்துக்கிட்டு வருவான். எதிர் காத்தைத் தாண்டி அவன் மூச்சுக் காத்து என் முதுகுல படும் சார். இப்பவும்கூட வலது தோள் பக்கமாக அவன் மூச்சுக் காத்து அடிக்கிற மாதிரியேதான் இருக்கு!''- விம்மி வெடித்து அழும் அந்த அப்பாவுக்கு மறுமொழி கூற முடியாமல் விக்கித்துப்போய் அமர்ந்திருந் தேன். 'என் தேசம்... என் மக்கள்’ நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு பெற்றோரின் அழுகுரல்கள் இவை.

'பயமாயிருக்கு... இன்னொரு புள்ளைய எப்படி வளக்குறதுன்னே தெரியல. தினமும் அழுறேன். ஆனாலும் மனசு அடங்கலை. அவன் போட்டோ, அவன் பயன்படுத்துன பொருள்... இப்படி அவன் நினைவா இருக்கும் எல்லாத்தையும் மறைச்சுவெச்சுட்டோம். ஆனா, கனவுல வர்றான். கடைக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்றான். 'டெஸ்ட் எழுதறேன்... திருத்தித் தர்றியா’னு கேக்குறான். நூடுல்ஸ் செஞ்சு தரச் சொல்றான். எங்களால இருக்கவும் முடியலை... சாகவும் முடியலை!’ - தேம்பித் தேம்பி அழுத அந்த இருவரையும் என்ன சொல்லித் தேற்றுவது எனத் தெரியவில்லை.

பாஸ்வேர்டு

10-ம் வகுப்பு படிக்கிற பையனுக்கு அப்படி என்ன பிரச்னை இருக்க முடியும்? எதையும் யோசிக்காமல் சட்டென்று சுருக்குப் போட்டுக் கொண்டு சாக அவனுக்கு எப்படி மனசு வந்தது?

'அவனுக்கு தூக்குப் போட்டுக்கத் தெரியலைபோல! என்னென்னமோ பண்ணி கழுத்துல கயிறு சுருக்கி, இறுக்கி, எசகுபிசகா மாட்டித் தொங்கியிருக்கான். பாவம்... அப்போ புள்ளை என்ன பாடுபட்டானோ தெரியலையே!’ மரணிப்பதற்கு மகன் பட்ட அவஸ்தையை நினைத்துக்கூடக் கதறி உருகுகிறார் அந்தத் தந்தை. இப்படி எல்லாம் அம்மாவும் அப்பாவும் கதறித் துடிப்பார்கள் என்று தெரிந்திருந்தால், அந்தப் பையன் அப்படி ஒரு முடிவு எடுத்திருக்க மாட்டானோ? 'பாருடா... உன்னை இழந்துட்டு எப்படித் துடிக்கிறாங்கன்னு பாருடா!’ என்று அவன் படத்தைக் கையில் வைத்து உலுக்கிக் கத்த வேண்டும்போல் இருந்தது எனக்கு.

சிறுவர்கள், பதின்பருவத்துப் பிள்ளைகள் பொசுக்கென்று ஒரு கணத்தில் முடிவு எடுத்து, தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழக நகரங்களில் சென்னைக்கு இதில் முதல் இடம். மெரினா பீச்சில் பூ கட்டி விற்கிற கறை தட்டிய பல்லுப் பாட்டியிடம் வம்பிழுத்து அரட்டை அடிக்காமல், கே.கே. நகரிலும் ஆர்.ஏ.புரத்திலும் அகண்ட சாலைகளில் கொட்டிக்கிடக்கும் மஞ்சள் பூக்களுக்கு நடுவில் வாக்கிங் போகா மல், சிட்டி சென்டரில் சினிமா பார்க்காமல்... பட்டென்று இறந்துபோக எப்படி மனசு வருகிறது இவர்களுக்கு?

'அவனுக்கு என்ன பிரச்னையோ?’ என்று ஓர் ஆச்சர்யக்குறியையும் கேள்விக்குறியையும் வைத்துவிட்டு, இதை முடித்துக்கொள்ள முடியுமா? 'போயிட்டு வரேம்மா’னு சொல்லிட்டுப்போன பிள்ளையை, ரயிலடியில் பிணமாகத் தூக்கிவரும் கொடுமைக்கு என்னதான் தீர்வு? 'நேத்து ராத்திரிகூட எனக்கு போன் பண்ணினா. ரொம்ப நேரம் பேசினா... மாத்திரை ஒழுங்கா சாப்புடுறியானு பத்துத் தடவை கேட்டா. அப்பாவையும் தம்பியையும் நல்லாப் பார்த்துக்கனு நாலஞ்சு தடவை சொன்னா. ஹாஸ்டல்ல இருந்து தூக்கு மாட்டிக்கிட்டானு நடு ராத்திரியில போன் வருது. புள்ளை என்ன நெனச்சுச்சுன்னே தெரிய லையே!’ - பைத்தியம் பிடித்ததுபோலச் சொன்ன தையே சொல்லிச் சொல்லிப் புலம்பும் பெற்றோர் களுக்கு ஏன் அந்தப் பிள்ளைகள் எதையுமே சொல்வதில்லை?

'காலப்போக்கில் நம் இழப்பை எல்லாரும் மறந்துவிடுவார்கள்!’ என்று அந்தப் பிள்ளைகள் நினைத்துக்கொள்ளக் கூடும். ஆனால், பாசத்துக்குஉரிய மனிதர்களின் அசாதாரணமான மரணங்கள் மனசைவிட்டு நீங்குவதே இல்லை. 'இனி, இந்த உலகத்தில் நான் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை!’ என்று மனசாட்சிக்கு நியாயம் கற்பிக்கக் காரணம் தேடும் மனிதர்கள், வாழ்க்கையை அர்த்தமாக்கிக்கொள்ள ஆயிரமாயிரம் விஷயங்கள் கொட்டிக்கிடப்பதை மறந்துபோகிறார்கள்.

22 மணி நேர ரயில் பயணம் ஒன்றில் மொழி தெரியாத அந்தப் பஞ்சாபி வீட்டுப் பிள்ளை  என்னிடம் ஒளிந்து விளையாடுகிறான். இரண்டு கால்களுக்கும் இடையில் வந்து நின்று உரிமையோடு மீசையை இழுக்கிறான். பயணம் முடித்து இறங்கும்போது, 'அங்கிள்’ என்று சொல்லி அழுகிறான். அவன் யார்? நான் யார்? என் 22 மணி நேரப் பயணத்தை இலகுவாக்கிய அந்த பஞ்சாபிப் பையன் இருக்கும் இந்த உலகத்தை எப்படித் துறக்க முடியும்?

பாஸ்வேர்டு

ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும்போது கடந்துபோகிற பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் ஒருத்தி சின்னதாகப் பூத்துவிட்டுப்போகும் ஒரு புன்னகை அந்த ஒரு முழு நாளையும் அழகாக்கிவிடுமே! அப்படியான அழகான நாட்களை எப்படி இழக்க முடியும்?

கணேசன் அண்ணன் காலையில் இருந்து மாலை வரை லோடு ஏற்றுவார், இறக்குவார். 55 வயது மனிதர் எப்படி இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கிறார் என்று எனக்கு ஆச்சர்யமாக இருக் கும். மதியம் நாங்கள் சாப்பிடும் மெஸ்ஸில்தான் அவரும் சாப்பிடுவார். லாரி சர்வீஸ் கடைகள் வரிசையாக இருக்கும் அந்தச் சாலையில்தான் அவரது வாழ்க்கை. சாலையின் வலதுபுறம் இருக்கும் பிளாட்ஃபாரத்தில் சாக்கால் ஆன ஒரு மேற்கூறை, பம்பு ஸ்டவ், ரேடியோ, முருகன் படம் போட்ட காலண்டர், கொசுவலை, கணக்கப்பிள்ளை டேபிள், இரண்டு போர்வைகள், சுவரில் ஆணி அடித்து மாட்டப் பட்ட கண்ணாடி, அதையட்டி சின்னதாக ஒரு ஷெல்ஃப் என்று மினி வீடு மாதிரியே இருக்கும்.

பேரன்தான் அவருக்கு உலகம். அந்தச் சாலை யோர சாக்கு வீட்டில் ஒரு ராஜகுமாரன்போல அவனைக் கவனித்துக்கொள்வார். சாயந்திரம் சைக்கிளில் சென்று பள்ளிக்கூடத்தில் இருந்து அவனைக் கூட்டிவருவார். புதுசுபுதுசாக நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார். காலையில் தலை நிறைய சோப்பு போட்டுக் குளிப்பாட்டிவிடுவார். கொசுவலையைச் சுற்றி காற்றில் பறக்காமல் இருக்கக் கல் வைத்துவிட்டு அவனைக் கட்டிப்பிடித்தபடியே தூங்குவார். 'கணேசன் அண்ணனின் மகளும், மருமகனும் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்களாம். அன்று முதல் தன் பேரனுக்காகவே கணேசன் அண்ணன் வாழ ஆரம்பித்துவிட்டார்!’ இப்படித்தான் ஏரியாவில் அந்த இருவரைப் பற்றிப் பேசிக் கொள்வார்கள்.

கணேசன் அண்ணன் அந்த ஏரியாவுக்கு வந்து ஏழு வருஷங்கள் இருக்கும். அவர் பேரனுக்கு ஆறு வயது. 'உங்க மக இருந்திருந்தாக்கூட உங்க பேரனை இப்படிப் பார்த்துக்க மாட்டாங்கண்ணே!’ என்று ஒருநாள் கணேசன் அண்ணனிடம் சொன்னேன். 'இல்லப்பா... அவன் என் பேரப் புள்ளை இல்லை!’ என்றார். எனக்குத் திடுக்கென்றது. அந்த வார்த்தைகளின் அர்த்தமே எனக்கு முதலில் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்...

'இவன் ஒருநாள் ரயில்வே ஸ்டேஷன்ல அழுதுக்கிட்டு நின்னான். அப்பா, அம்மா செத்துப்போயிட்டாங்கனு சொன்னான். என்கூட வர்றியாடானு கேட்டேன். சரின்னான். கூட்டியாந்துட்டேன். 'யாரோ பெத்த பிள்ளை’னு அவனை நாலு பேரு பரிதாபமா பார்க்கக் கூடாதுன்னு சொல்லி, 'என் பேரன்’னு சொல்லிவெச்சேன்.  இப்போ அவன் என் பேரனாவே ஆயிட்டான். ரத்த சம்பந்தம் இருந்தாதான் உறவா? எல்லாரும் எல்லாருக்கும் உறவுதான். இப்ப நீ என்னை எந்தக் கணக்குல அண்ணன்னு கூப்புடுற?’ என்று என்னிடம் கேட்டுவிட்டு அவர் நிம்மதியாக பரோட்டா சாப்பிடத் தொடங்கிவிட்டார்.

பாஸ்வேர்டு

ஆம்! கணேசன் அண்ணன், அந்த பஞ்சாப்காரப் பையன், மூலக்கடை டீ மாஸ்டர், பூங்காக்களுக்கு வெளியே பலூன் விற்கிற மனிதர், 'உங்க பைக் எத்தனை கிலோ மீட்டர் தருது?’ என்று சிக்னல் காத்திருப்பில் சிநேகம் விதைக்கிறவர், 'நீங்க மாப்பிள்ளை வீடா... பொண்ணு வீடா?’ என்று கல்யாண வீட்டில் விசாரிப்பவர், 'நான் அடிச்சுத் தர்றேன்... நீ குடத்தை வைக்கா!’ என்று உறவு பாராட்டும் கைலித் தம்பி என நாம் அனை வருமே ஒருவருக்கொருவர் உறவுக்காரர்கள் தானே!

மகன் ஒரு வார்த்தை வெடுக்கென்று சொல்லிவிட்டதற்காக மருவிக்கொண்டு, தாத்தாவின் பழைய வேட்டியை எடுத்துவைத்துக்கொண்டு அழுது அரற்றும் அப்பத்தாக்களிடம் கேளுங்கள், பிரிவின் வலி எவ்வளவு கொடியதென்று! காதலித்த பெண்ணுக்கும், பரீட்சைக்கும், ஈகோவுக்கும், ஆத்திரத்துக்கும், வெறுப்புக்கும், தனிமைக்கும் மரணத்தின் வழியாகப் பதில் சொல்ல முடியாது. நிர்க்கதியாக நின்ற நிலையிலும் பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்துப் போராடி மீண்டெழ நினைக்கிற அப்பாக்களின் மனசு, ஏன் இப்போது பிள்ளைகளுக்கு இல்லை?

தன் பிள்ளையின் முகத்தை மனதில் இருந்து நீக்க முடியாமல் தினந்தோறும் அழுதுகொண்டிருக்கும் அந்த அம்மாவை என்னால் மறக்கவே முடியவில்லை. உயிர் அற்புதமானது, இழப்பின் வலி கொடுமையானது. யாரும் இந்தப் பூமிக்குப் பாரம் இல்லை. சுனாமியில் குடும்பத்தையே இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த அம்மா, அப்பாவுக்குப் பிள்ளையாகி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு இளைஞன் தற்கொலை செய்துகொள்ளும்போதும் இந்தியா சிறிது சிறிதாகச் சாகிறது. தோல்வியும் வாழ்வின் ஒரு பகுதிதான் என்பதைப் போதிக்காத இந்தச் சமூகம் உதிர்ந்து விழும் தன் இளங் குருத்துகளின் புகைப்படங்களுக்குப் பூமாலை போட்டுக்கொண்டே இருக்கிறது!

- ஸ்டாண்ட் பை...