##~##

“கொஞ்ச நாளாத்தான் இப்படிப் பண்றான். எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்துப் பேசுறான். எரிஞ்சு எரிஞ்சு விழுறான். யாரும் அவனை 'ஏன், எதுக்கு’னு கேட்டுரக் கூடாது. கதவைச் சடார்னு இழுத்துச் சாத்திட்டு ரூமுக்குள்ள போயி அடைஞ்சுடுறான். அந்த ரூமுக்குள்ள அப்படி என்னதான் இருக்குன்னே தெரியலை! இழுத்துப் போட்டு நாலு சாத்து சாத்தணும்போல இருக்கு. சேர்க்கை சரியில்லை. புதுசு புதுசா ஏதேதோ பேசறான். 'என்னடா பண்றே?’னு கொஞ்சம் அதட்டிக் கேட்டா, அப்டியே எரிச்சுடுற மாதிரி பார்க்குறான். இவனை இப்படியே விடுறதா... அதட்டி, மிரட்டி அடங்கவைக்கிறதா? என்ன பண்றதுன்னே தெரியலை. இது எங்கே போய் முடியும்னும் தெரியலையே!'' - இப்படி அம்மாக்கள் புலம்ப ஆரம்பித்திருந்தால், பிள்ளை ஒன்பதாவது வயதில் இருக்கிறான் என்று யூகித்துக்கொள்ளலாம். குழந்தை வளர்ப்பு, இளைஞர்களைக் கண்காணித்தல் என்ற இரு பெரும் வேலைகளுக்கு நடுவே நாம் பெரிதாக அக்கறை காட்டாத பருவம் என்று குழந்தைகளின் 9 முதல் 12 வயது வரையிலான 'ப்ரீ டீன்’  (pre teen) பருவத்தைச் சொல்லலாம்.

'நாம சொல்றத இந்தக் காலத்துப் புள்ளைங்க எங்க கேட்குது!’ என்று கொஞ்ச நேரம் புலம்பி விட்டு, 'ரெண்டுங்கெட்டான்’ என்றோர் அடையாளத்தைக் கொடுத்துவிட்டு ப்ரீ டீன் பிள்ளைகளின் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரப் பார்க்கிறோம். உண்மையில் டீன் ஏஜ் பிள்ளைகளைவிட அதிக அளவுக் கவனிப்போடும் அனுசரணையோடும் அணுகப் பட வேண்டியது ப்ரீ டீன் பருவப் பிள்ளைகளைத்தான்.

அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு சுற்றித் திரிந்த அந்தப் பையனோ, பெண்ணோ தன் சுய அடையாளங்களைத் தேட ஆரம்பிக்கும் சுமையான பருவம் அது. நிறையக் கேள்விகள், நிறையக் குழப்பங்கள், எதற்கு என்றே புரியாத எரிச்சல்கள், அர்த்தம் புரியாமல் வதைக்கும் தனிமைகள் என்று 9 முதல் 12 வயது வரையிலான பிள்ளைகளின் உலகம் ரொம்பவே சிரமமானது.

பாஸ்வேர்டு - 5

'என்னடா... மேலயே பார்த்துக்கிட்டு நிக்கிற?’ என்று தலையில் தட்டும் சித்தப்பாவிடம், 'இனிமே தலைல தட்டுனா கடுப்பாயிடுவேன்... ஆமா!’ எனப் பட்டென்று பதிலடி கொடுக்கும் வயசு அது. நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் செல்போனை எட்டாகப் பிரித்துப்போட்டு பிறகு மீண்டும் சேர்ப்பார்கள். 'நல்லா இருக்கிற போனை ஏன் இப்போ கழட்டி, மாட்டி கண்டமாக்குற?’ என்று கேள்வி கேட்டால், 'உன்வேலை யைப் பாரு’ என்று பதில் வரும்.

'பார் வாசல்ல இத்தனை வண்டி நிக்குது. இதெல்லாம் உள்ள உட்கார்ந்து குடிச்சுட்டு இருக்கறவங்களோடதுதானே? அவங்களை இங்கேயே பிடிக்காம, ஏன் சிக்னல்ல பிடிச்சு ஃபைன் போடுறாங்க?’ என்று மிகவும் லாஜிக்கான கேள்விகளைக் கேட்பார்கள்.

'வாயை மூடு... வரவர நீ ரொம்ப ஓவராப் பேசுற?’ என்ற அதட்டலுக்கு, 'நான் என்ன கேட் டுட்டேன். அப்ப நான் நினைச்சதைக் கேட்கக் கூடாதா? இருங்கடா வெச்சுக்குறேன்’ என்று மனதுக்குள் கருவிக்கொள்ளும் பருவம். நிறையக் குழப் பங்களும், உடல்ரீதியான மாற்றங் களையும் இந்தப் பருவத்தில் பிள்ளை கள் அதிகம் எதிர்கொள்வார்கள். தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறைக் கதவை வேகமாகச் சாத்திவிட்டு உள்ளே போய் ஓரமாக உட்கார்ந்துகொள்வதற்கும்கூட அதுதான் காரணம்.

பாஸ்வேர்டு - 5

இந்த வயதுப் பிள்ளைகளைப் பெரும்பாலும் இரண்டுவிதமாக அணுகு வோம். ஒன்று, அவர்களைச் சந்தேகத்தோடும் விசித்திரமாகவும் பார்ப்பது. இன்னொன்று, 'என்ன ஆச்சு உனக்கு?’ என்று கேள்விகளால் துளைத்தெடுப்பது. அதேபோல 9-12 வயது இரண்டு முக்கியமான கேள்விகளைப் பிள்ளைகளிடம் எழுப்புகிறது. ஒன்று, 'நான் அம்மா - அப்பா சொல்வதுபோல சின்னப் பிள்ளையா, இல்லை... எல்லா விவரங்களும் தெரிந்த பெரிய பிள்ளையா?’ இரண்டாவது, உடல் மாற்றம்குறித்த கேள்விகள். முகத்தில் வரும் சின்ன பருவில் தொடங்கி மீசை, உடல் பாக வளர்ச்சி ஆகியவைகுறித்து சிறு குறுகுறுப்பும் பெரும் குழப்பமும் மனசு முழுக்க வியாபிக்கிறது.

நாம் யோசித்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கற்பனைகளும் தன் அகம், புறம் குறித்த கற்பிதங்களும் 9 வயது முதல் 12 வயது வரை குழந்தைகளை ஆட்டிப்படைக்கின்றன. துரதிர்ஷ்டவசமாகத் தன்னுடைய கேள்விகளையும், குழப் பங்களையும் வீட்டு மனிதர்களின் முன் வைக்கக்கூடிய அளவுக்கு, நம்முடைய வீடுகள் எளிமையாக இல்லை. உண்மையில் இங்கு பிரச்னையே அதுதான்!

எதிர் பாலினம் மீதான இனக்கவர்ச்சி, தன் நண்பர்கள் பேசும் விஷயங்களில் இருக்கும் உந்துதல், பார்க்கும் - கேட்கும் தகவல்கள் தனக்குள் உண்டாக்கும் குறுகுறுப்பு, அவைகுறித்துப் பேச சூழல் இல்லாத நிலை. இப்படித்தான் ப்ரீ டீன் பிள்ளைகள் அவர்கள் தெரிந்துகொள்ளும் விஷயங்கள் குறித்துப் பல நேரங்களில் அவர்களாகவே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

20 வயது மகனையோ, மகளையோகூட, 'நீ இன்னமும் என் குழந்தைதான்!’ என்று கொஞ்சுகிற மனசு நல்ல மனசுதான். ஆனால், அந்த நல்ல மனசுதான், '10 வயதுப் பிள்ளை பச்சப் புள்ள இல்லை’ என்பதையும் ஏற்க மறுக்கிறது. எந்த விஷயத்தையும் முதலில் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற மனச் சுதந்திரம் நம் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்பது நம்மிடம் உள்ள குறைதான்.

'நீ இதைச் செய்யலாம்... அல்லது செய்யக் கூடாது’ என்கிற கட்டளை அணுகுமுறை ஒரு காலம் வரை செல்லுபடியாகலாம். ஆனால், தன் எண்ணமே முக்கியம் அல்லது சரி என்று இயல் பாக நினைக்கத் தோன்றும் ப்ரீ டீன் பருவத்தில், பெற்றோர்கள் கட்டளையிடும் மனிதர்கள் என்கிற நிலையில் இருந்து கலந்துரையாடும் நண்பர்கள் என்ற இடத்தை நோக்கி நகர வேண்டியுள்ளது. அழைத்து அருகில் அமரவைத்து, 'அப்பாவை உன் ஃப்ரெண்டா நினைச்சுக்க...’ என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு பேசும் முறையும் எக்ஸ்பயரி ஆகிவிட்டது. 'அப்பா ஏதோ போட்டு வாங்கப் பார்க்கிறார்’ என்று ப்ரீ டீன் பிள்ளை உங்களைச் சந்தேகப் படுவதுதான் மிஞ்சும்.

வீட்டின் இறுக்கத்தைத் தளர்த்துவதும் இயல்பாகப் பேசிச் சிரிப்பதுமான சூழலைக் கொண்டுவருவதன் மூலமே ப்ரீ டீன் பிள்ளைகளைத் தங்கள் மனசைத் திறக்கச் செய்ய முடியும். நம் வீட்டுச் சாப்பாட்டு மேஜைகள் ஒரு கருத்தரங்க மேடை போல மாறியிருப்பதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது.

அர்த்தபுஷ்டியான பேச்சுகள் மட்டுமே வீட்டுக்குள் நிகழ்த்தப்பட வேண்டும் என்கிற மாதிரியான அறிவுச்சூழல் வீட்டுக்குள் நிலவு வது, அடுத்தவரிடம் பெருமை பேசிக்கொள் வதற்கு வேண்டுமானால் பயன்படலாம். உங்கள் மூத்த மகளும், இளைய மகனும் இந்தியப் பொருளாதாரம்பற்றிப் பேசிக்கொண்டிருந்ததை யாரேனும் சொந்தக்காரரிடம் சிலாகிக்கலாம். ஆனால், வீடு எப்போதும் கருத்தரங்கக் கூடம்போல இருப்பது நல்லது அல்ல.

பாஸ்வேர்டு - 5

கடந்த 10, 15 ஆண்டுகளில் வீடுகளை இன்னோர் அலுவலகமாக மாற்றி வைத்திருக்கிறோம். ப்ரீ டீன் பிள்ளைகள் தங்கள் மனசைத் திறக்க... தங்கள் குழப்பத்தைக் கொட்ட அந்த 'அலுவலகம்’ அனுமதிக்காது என்ற முடிவுக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். வீடுகள் அப்படி மாறிப்போவது ஆரோக்கியமானது அல்ல என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அர்த்தம் உள்ள பேச்சுகளைவிட அர்த்தம் இல்லாத, ஒரு காரணமும் இல்லாத பேச்சுகள்தான் வீடுகளை, அதன் சுதந்திரத்தை அர்த்தம் உள்ளதாக ஆக்குகின்றன.

உண்மையில் ப்ரீ டீன் பிள்ளைகளின் பிரச்னைகளை நாம் கவனிக்காமல்தான் இருக்கிறோம். கவனிக்கிறவர்கள் பெரும்பாலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் நடவடிக்கை களில் இறங்குகிறோம். தேவையான அளவுக்கு இயல்பான கலந்துரையாடல்களை வீடுகளில் அதிகரிக்க வழி என்ன என்று தேட வேண்டி யதுதான் இப்போது முக்கியம்.

வீடுகளைப் பொறுத்தவரை... அர்த்தமற்ற பேச்சுகளே வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக ஆக்குகின்றன!

- ஸ்டாண்ட் பை...