Published:Updated:

யட்சன்

யட்சன்

யட்சன்
##~##

செந்தில் நடுங்கும் இதயத்தை அழுத்திக்கொண்டான். அவனுடைய செல்போன் வெளியில் தூக்கி எறியப்படுகிறது ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்கிறார்கள். மொத்தத்தில் தனக்குச் சற்றும் தொடர்பு இல்லாத ஒரு சதியில் சிக்கிக்கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். பிணமான டிரைவரின் கால் ஆக்ஸிலரேட்டரை அழுத்திக்கொண்டிருந்ததால், கார் தறிகெட்டுப் பாய்ந்தது. ஸ்டீயரிங்கைத் திருப்ப இயலாமல் டிரைவரின் பாரம் தடுத்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெளியிலிருந்து துப்பாக்கிகள் ஓயாமல் சுட்டன. தோட்டாக்கள் காரின் பக்கவாட்டிலும் துளைத்தன. நொறுங்கிய கண்ணாடித் துண்டுகள் கிழித்து, அவன் முகத்தில் ரத்தக் கோடுகள் இறங்கின. ஒரு தோட்டா உராய்ந்து இடுப்பருகிலும் ரத்தம். இனி வேடிக்கை பார்ப்பதில் அர்த்தம் இல்லை. செந்தில் துணிந்தான். இறந்துபோன டிரைவரின் துப்பாக்கி யைக் கைப்பற்றினான். ஒரே எத்தில் விரையும் காரில் இருந்து அவனை வெளியில் உந்தித் தள்ளினான். பாய்ந்து டிரைவரின் சீட்டுக்கு மாறினான்.

ஸ்டீயரிங்கைத் திருப்பி, காரை நிலைப்படுத்தி நிமிர்ந்தான். கண்ணெதிரில் சுடுபவர்களைப் பார்த்தான். அவனுக்கு முன்பின் அறிமுகம் இல்லாத இருவர்.

ற்கெனவே குழுமியிருந்த கே.வி.ஆனந்த், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், காந்தி கிருஷ்ணா, வசந்த பாலன் போன்ற பெரிய பெரிய இயக்குநர்களை பாரி தொலைக்காட்சியில்தான் பார்த்திருந்தான்.

ஒருபுறம் சூர்யா, விஜய், விக்ரம், ஜீவா, சந்தானம், த்ரிஷா, ஸ்ரேயா, அமலா பால், எமி ஜாக்சன் என்று ஜொலிக்கும் நட்சத்திரப் பட்டாளம். இன்னொரு புறம், பி.சி.ஸ்ரீராம், எம்.எஸ். பிரபு, ரத்தினவேல், திரு போன்ற ஒளிப்பதிவு சூரர் கள். எல்லோரும் சூப்பர் ஸ்டாரைப் பார்த்ததும் மலர்ந்து பரபரப்பானார் கள்.

'யாரு கேமரா..?' என்று கேட்டார் சூப்பர் ஸ்டார் வேகமாக நடந்துகொண்டே.

'ரிச்சர்டு நாதன்! 'கோ’ படம் பண்ணாரே...'

யட்சன்

'ஓ...கோ! நல்லாப் பண்ணீங்க... நல்லாப் பண்ணீங்க..!' என்று அந்தக் கறுப்பு இளைஞனை ரஜினி தட்டிக்கொடுத்தார். விளக்கேற்றி, கேமரா வுக்குத் திருஷ்டி சுற்றி, தேங்காய் உடைத்ததும், ரஜினி கிளாப் போர்டுடன் தயாரானார்.

பாதையின் குறுக்கில் நின்றபடி, பூமணியும் நாகுவும் ஆளுக்கொரு துப்பாக்கியால் செந்திலை நோக்கிப் படபடவென்று சுட்டார்கள். தோட்டாக்கள் கண்ணாடிகளை உடைத்தன. காருக்குள் சரக் சரக் என்று நுழைந்து, எங்கெங்கோ தைத்தன. செந்தில் முன்பின் துப்பாக்கியைக் கையாண்டதுஇல்லை. ஆனால், உள்ளுணர்வு செலுத்த, தன்னிடம் இருந்த ரிவால்வரின் விசையை இழுத்தான். தோட்டா ராக்கெட் வேகத்தில் வெளியில் பாய்ந்தது. விரிந்த கண்களுடன் அதை மார்பில் எதிர்கொண்ட பூமணி பின்னால் தூக்கியெறியப்பட்டான்.

என்றோ ஒரு நாள், சினிமாவில் இப்படி ஒரு ஸ்டன்ட் காட்சியில் நடிக்க நேரும் என்று செந்தில் நினைத்திருக்கக்கூடும். ஆனால், நிஜத்தில் அது அரங்கேறிக்கொண்டிருந்தது. குறுக்கில் நின்று சுட்டுக்கொண்டிருந்தவனை 90 கி.மீ. வேகத்தில் செந்தில் மோதித் தூக்கினான். நாகு, காற்றில் பறந்து இறங்கி, தரையில் மோதினான். காரின் பின் டயர் அவன் மீது ஏறி இறங்கியது.

காட்சி பாரிக்கு விளக்கப்பட்டிருந்தது. படத்தில் அவன் ரவுடி. அது தெரியாத பணக்கார நாயகி அவன் மீது காதல் வயப்பட்டிருக்க... ஒரு கட்டத்தில், யாரையோ அசுரத்தனமாகத் தாக்கிவிட்டு, பற்களில் கத்தியுடன் அவன் திரும்பினால், எதிரில் காதலி.

சண்டையின் ஆவேசம் நழுவி, கண்களில் தர்மசங்கடத் திடுக்கிடல் காட்ட வேண்டும். பாரி நடித்தான். முதல் டேக்கே ஓ.கே. ஆனது.

ரஜினி பாரியை அணைத்து, 'சூப்பர்... சூப்பராப் பண்ணீங்க' என்று சொல்ல... பாரி மீண்டும் அவர் கால்களில் விழுந்தான்.

'ஒரே கவனத்தோட இருங்க... பெரிய நடிகனா வருவீங்க' என்று அணைத்து எழுப்பினார். பாரிக்கு அது தெய்வ வாக்கு. வாழ்நாளில் முதல்தடவையாக உணர்ச்சிவசப்பட்டதில், கண்களில் நீர் இறங்கியது.

செந்தில் காரிலிருந்து இறங்கினான். அவன் உடம்பில் உதறாத அங்குலமே இல்லை. சுற்றிலும் பார்த்தான். சுமார் 200 மீட்டர் விட்டத்துக்குள் சுடச்சுட மூன்று பிணங்கள். யார் பெயரும் அவனுக்குத் தெரியாது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு யாரும் ஓடிவருகிறார்களா என்று பார்த்தான். இல்லை.

முதலில் குணாவிடம் பேச ஒரு போன் வேண்டும். கீழே ரத்தமும் சதையுமாகச் சிதறிக்கிடந்த நாகுவிடம் குனிந்தான். குமட்டி யது. அவன் பாக்கெட்டில் கை விட்டான். கையெல்லாம் குருதி படிந்தது. நாகுவின் செல்போன் தோட்டாவால் துளைக்கப்பட்டுஇருந்தது. தூர எறிந்தான். தன்னிச்சையாகக் கறை படிந்த கையைக் கீழே கிடந்தவனின் சட்டையிலேயே துடைத்தான். உடனே தவறை உணர்ந்தான்.

முட்டாள்! உன்னுடைய கைரேகை இறந்துகிடப்பவனின் உடல்மீது பதிந்துவிட்டது. இந்த இடத்தைவிட்டு உடனடியாக விலகு.

தடக் தடக் தடக் என்று குதித்தது இதயம்.

செந்தில் காரில் பாய்ந்தான். தடுமாறி ரிவர்ஸ் எடுத்தான். தலையைச் சுற்றியது. மயக்கம் இமைகளை இழுத்தது. ஆனால், கியர் மாற்றி காரை வெகுவேகமாகச் செலுத்தினான்.

- தடதடக்கும்...