Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி
##~##

சென்ற நான்கு வாரங்களாக கோவை, மதுரை, சென்னை எனப் பயணம் செய்து புதுமையாக்கல், டெக், தொழில் முனைவு போன்ற தலைப்புகளில் பல்வேறு தரப்பினருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. தமிழகத்தில் தொழில்முனைவுபற்றிய ஆர்வம் அதிகரித்திருப்பது தெரியவருகிறது. என்னைச் சந்தித்துப் பேசியவர்களில் பலர் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊதுபத்தித் தயாரிப்பை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக்கிய பின்னர், அதற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத இணையம் சார்ந்த வானொலி சேவையைத் தொடங்கி இயக்கும் மதுரையைச் சார்ந்த ஜே.கே.முத்து, இணையத்தில் மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்பதைப் பற்றி இணையம் மூலமாகவே சொல்லிக்கொடுக்கும் சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஆண்ட்ராயிட் கொண்டு இயங்கும் டேப்ளட் கணினிகளில் தமிழில் இயங்கும் மென்பொருள்களைப் பதிவேற்றி விற்பனை செய்யும் கிருஷ்ணகிரியைச் சார்ந்த செல்வமுரளி போன்றவர்கள் உட்பட எனக்குப் பிரமிப்பும் பெருமிதமும் கொடுத்த தொழில்முனைவோர் கள் பலர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு சோலார் பேனல், அதிலிருந்து வரும் மின்சக்தியைச் சேமித்துவைத்துக்கொள்ளும் பேட்டரி, பல்வேறு வகையான மொபைல்களை சார்ஜ் செய்யும் external பேட்டரிகள், இதைஎல்லாம் இணைக்கத் தேவைப்படும் வயர்கள். தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டுபற்றி ஏற்கெனவே தெளிவாகத் தெரிந்திருந்ததால், அதற்குத் தயாராகவே வந்திருந்தேன். கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தின் சுங்க வரித் துறை அதிகாரிகள், மேற்படி எலெக்ட்ரானிக் வஸ்தாதுகள் இருந்த பெட்டியைத் திறக்கச் சொல்லிச் சோதனையிட்டார்கள். ''ஏதோ ராக்கெட் பாகங்கள்போல எக்ஸ்ரேயில் தெரிந்ததால் சோதிக்க வேண்டியதாகிவிட்டது'' என்று சொன்னபடி கையப்பமிட்ட சுங்க வரித் துறை அதிகாரி இந்தத் தொடரின் வாசகர் என்பது வியப்பளித்த கிளைச் செய்தி.

அறிவிழி

கோவையின் புதிய லீ மெரிடியனில் இருக்கும் கான்டினென்டல் காலை உணவில் இருந்து மதுரையில் கார்த்திக்கின் காரில் அமர்ந்துகொண்டு இரவு 2 மணிக்கு மதுரை முதலியார் இட்லிக் கடையில் கறி தோசை வரை வகை வகையாக உணவு வகைகளை ருசிக்கக் கிடைத்த வாய்ப்பும் அற்புதம். (டாக்டர் சிவராமன்... அவ்வப் போது கம்பங்கூழ், பாகற்காய் ஜூஸ்போன்றவற் றையும் தவறவிடவில்லை!) உணவருந்தும் வேகம் உடல் ஆரோக்கியத்துக்கு நேரடியாகச் சம்பந்தமானது  என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மிகவும் வேகமாக உணவை உட்கொள்வது அது செரிக்கும் தன்மையைப் பாதித்து உடல் எடையை அதிகரிக்கவும், சர்க்கரை அளவு அதிகரித்துவிடவும் தூண்டுகோலாகி விடும் என்ற எச்சரிக்கையைப் பல வடிவங்களில் பார்க்க முடிகிறது.

இந்தப் பிரச்னைக்கு டெக் தீர்வு கொண்டுவர ஒரு நிறுவனம் முயற்சி செய்கிறது. HAPIfork என்ற பெயரில் உணவு அருந்தப் பயன்படும் முள்கரண்டியே அந்தத் தீர்வு. Hapilabs என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த டெக் சாதனம் பார்க்க முள்கரண்டிபோலத்தான் இருக்கிறது. இதன் முள் பகுதி யில் இருக்கும் சென்சார் மூலம் உணவு தட்டில் இருந்து எடுக்கப்பட்டு, அது வாய்க்குச் செல்லும் வரையான இயக்கம் கண்காணிக்கப்படுகிறது. இந்தத் தகவல் முள்கரண்டிக்குள் இருக்கும் மெமரியில் சேமித்து வைத்துக்கொள்ளப்படுகிறது. இந்தத் தகவலை ப்ளூடூத் மூலம் உங்களது அலைபேசி வழியாகவோ, அல்லது யூஎஸ்பி கேபிள் மூலம் உங்களது கணினி வழியாகவோ இணையத் தில் இருக்கும் உங்களது கணக்கில் பதிவேற்ற முடியும். திரட்டப்படும் இந்தத் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு நீங்கள் உண்ணும் வேகத்தைக் கணக்கிட்டுப் பல வகையான பரிந்துரைகளைக் கொடுக்கிறது HAPIfork.

பிட்காயின் மதிப்புபற்றி நான் மூன்று வாரங்களுக்கு முன் சொன்ன அதே 140 டாலர்களில்தான் இந்தக் கட்டுரை எழுதப்படும் நாளிலும் இருந்தாலும், இந்த இரண்டு வாரங்களில் அதன் மதிப்பு 50 டாலர்களுக்கு இறங்கியும், 250 டாலர்களாக உயர்ந்தும் ரோலர் கோஸ்டர் ஆட்டம் போட்டிருக்கிறது. கட்டுரையைப் படித்துவிட்டு, பிட்காயின் வாங்குவதுபற்றி என்னிடம் ஃபேஸ்புக்கில் கேள்வி கேட்டவர்களுக்கு நான் சொன்ன பதில், 'முதலீடு பற்றி பரிந்துரை செய்யும் தொழில்முறைத் தகுதி எனக்கு இல்லை. அதே நேரத்தில் பிட்காயின் உலகைக் கவனிக்கும்போது இதன் மதிப்பு ஏறியும் இறங்கியும் வருவதைப் பார்க்கும்போது, இப்போதைக்கு பிட்காயின் பக்கம் செல்லாமல் இருப்பது நல்லது எனத் தோன்றுகிறது!’

கூகுள் கிளாஸ் சாதனத்தின் முதல் பயனீட்டாளர்களிடம்இருந்து பின்னூட்டங்கள் வர ஆரம்பித்துவிட்டன. கண்ணுக்கு மிக அருகில் இருப்பதால் தலைவலி வருகிறது போன்ற புகார்கள் ஒரு புறம்; கூகுள் கிளாஸ் அற்புதமான சாதனம், இதை அணிவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனவும் முற்றிலும் மாறுபட்ட கருத்து களை ஆன்லைனில் படிக்கிறேன். நீங்கள் கிளாஸ் பயனீட்டாளர் என்றால் @antonprakashக்கு ட்வீட் மூலம் கருத்து தெரிவியுங்களேன்.

-  விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism