##~##

முதன்முதலில் வெளிநாட்டுப் பயணம் என்று நான் கிளம்பியபோது வீடே அமளிதுமளிப் பட்டது. ஊரில் இருந்து சொந்தக் காரர்கள் எல்லாரும் வந்துவிட்டார்கள். பாஸ்போர்ட், டிக்கெட், பணம், தொலைபேசி எண்கள் எழுதிய துண்டுச் சீட்டு போன்ற பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய விஷயங்களைத் திணித்து இடுப்போடு கட்டிக்கொள்ளும்படியான ஒரு பெல்ட்டை சித்தப்பா வாங்கிவந்திருந்தார்.

'இந்த பெல்ட்டை மட்டும் இடுப்புல இருந்து கழட்டிராத. பாஸ்போர்ட் தொலைஞ்சுட்டா அவ்வளவுதான். அந்த நாட்டுக்குள்ளயும் விட மாட்டானுக... நம்ம நாட்டுக்கும் திரும்ப முடியாது. மேலத் தெரு சுப்பையா கோனாரு மகன் சிங்கப்பூர்ல பாஸ்போர்ட்டைத் தொலைச்சுட்டு, மூணு மாசம் ஜெயில்ல இருந் தானாம்’ - பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரியே சித்தப்பா சொன்னார்.

அந்த நிமிடத்தில் இருந்து இடுப்பில் கட்டிய பெல்ட்டின் மீது ஒரு கையைப் பாதுகாப்புக்காக வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். ஒரு வாரத்துக்குத் தாங்கும்படியாக தக்காளித் தொக்கு, சப்பாத்தி என சகல ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தன. ஊர்க் கோயிலில் என் பெயரில் அர்ச்சனை செய்து, திருநீறுடன் வந்திருந்தார் இன்னோர் உறவுக்காரர். 'ஃப்ளைட்டுல யார் எது கொடுத்தாலும் சாப்ட்றாத. நீ எவ்வளவு மிட்டாய் கேட்டாலும் கொடுப்பாங்க. அதை நிறைய வாங்கிவெச்சுக்க’- ஆளாளுக்குத் தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லிக்கொண்டே போக... எனக்கு அடிவயிறு கலக்கியது.

செக்-இன் பெட்டியில் என்னவெல்லாம் வைக்கலாம், என்னவெல்லாம் வைக்கக் கூடாது என்று ஒரு பட்டிமன்றமே நடந்தது. பெட்டியைப் பூட்டலாமா... பூட்டக் கூடாதா என்றொரு விவாதம். 'பூட்டியிருந்தா, உடைச்சுப்புடுவானுங்க’ என்கிறார் ஒருவர். 'திறந்திருந்தா, திருடிப்புடுவானுங்க’ என்கிறார் ஒருவர். இந்த நெருக்கடிக்கு நடுவில் வெளிநாடு போகும் திட்டத்தைத் தள்ளிவைக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன் நான்!

பாஸ்வேர்டு - 6

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பயிற்சி வகுப் புக்குப் பிறகு, விமான நிலையம் வந்தபோது படபடப்பில் எனக்கு வியர்த்துக்கொட்டியது. 'இமிக்ரேஷன்ல கோக்குமாக்கா கேள்வி கேப்பாங்க. நீ பாட்டுக்கு ஏடாகூடமா ஏதாச்சும் உளறிவெச்சுராத... அப்புறம் அவ்ளோதான். உன் பரம்பரையே ஒரு 50 வருஷத்துக்கு ஃப்ளைட் ஏற முடியாது’ என்று மிரட்டினார் கன்னியாகுமரி சித்தப்பா ஒருவர். பாஸ்போர்ட் வைத்திருந்த பெல்ட் டில் கையை அழுத்திக்கொண்டே மெதுவாக நடந்தேன்.

வழியனுப்ப வந்த சொந்தக்காரர்கள் அனைவரும் நான் செல்லும் விமானம், வானத்தில் பறப்பதைப் பார்த்துவிட்டுத்தான் கிளம்புவோம் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இமிக்ரேஷன் படிவம் நிரப்பும் இடத்தில் நிறையக் கிராமத்து மனிதர்கள் கண்கள் நிறையக் கனவு களோடு பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் புதிதாக வாங்கிய பை களில் துணிமணிகளோடு பதற்றம் குறையாமல் நின்றிருந்தார்கள். அந்த இடத்தை எப்படிக் கடந்துபோவது என்ற கவலையும் பயமும் எனக்கு.

ஆனால், இமிக்ரேஷனில் என்னிடம் பெரிதாக எதுவும் கேட்கவில்லை. சீல் குத்தி என்னை அனுமதித்தார்கள். நான் ஆச்சர்யத்தில் அசந்து நின்ற சமயம், 'தம்பி... இதைக் கொஞ்சம் எழுதித்தர முடியுமா?’ என்று 40 வயது மதிக்கத்தக்க ஓர் அம்மா கேட்டார். கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, வாயில்புடைவை, இறுக்கிப் பிடித்தபடி ஒரு துணிப்பை. மலேசியாவுக்கு வீட்டு வேலைக்குப் போகிறாராம். கட்டம் கட்டமாக இருந்த சீட்டில் எல்லாவற்றையும் எழுதிக்கொடுத்தேன். கையெழுத்துப் போட வேண்டிய இடத்தில் மலர்விழி என்று சிரமப்பட்டு அந்த அம்மா எழுதினார். 'ஏம்மா... மலேசியாவுல ஏர்போர்ட்டைவிட்டு வெளிய போக டிரெயின்லாம் ஏறணும்னு சொன்னாங்களே... எப்படிச் சமாளிப்பீங்க?’ என்று கேட்டேன். 'அதுக்கென்ன தம்பி... உங்களை மாதிரி யார்கிட்டயாவது கேட்டா சொல்லிடப்போறாங்க!’ என்றார் சாதாரணமாக!

எனக்குப் பொளேர் என்றது. ஒரு வாரமாக எனக்கு நடந்த ஓரியன் டேஷன் வகுப்பை நினைத்துப்பார்த்தேன். வாழ்க்கையைத் தேடிச் செல்பவர்கள் மனிதர்களை நம்பியே தங்கள் பயணத்தைத் தொடங்கு கிறார்கள். படித்தவர்கள்தான் யாரையும் எதையும் நம்பத் தயாராக இல்லை.

பயணத்துக்கு இடையில் துபாய் ஏர்போர்ட். ஏறக்குறைய சென்னையைச் சுற்றி காம்பவுண்ட் கட்டி, உள்ளே விமானங்களை நிறுத் தியிருந்த மாதிரி இருந்தது. செக்கச்செவேல் என வெள்ளைக்காரர்கள் டி.வி. விளம்பரத்தில் வரும் மாடல்களைப் போல குறுக்கும்நெடுக்குமாக நடந்துகொண்டு இருந்தார்கள். அடுத்த விமானத்தைப் பிடிக்க எங்கே செல்ல வேண்டும், யாரைக் கேட்க வேண்டும் என்று எதுவும் புரியாமல் ஒரே குழப்பமாக இருந்தது. திருவிழா வில் காணாமல்போன பிள்ளைபோல திருதிரு வென முழிக்கையில், 'என்னண்ணே... இங்கே நிக்கிறீங்க? எங்கே போகணும்?’ என்று காதில் பாய்ந்த தமிழ் விசாரிப்பு, உண்மையிலேயே இன்பத் தேன் வந்து பாய்ந்த உணர்வை உண்டாக்கியது.

'அமெரிக்கா போகணும்’ என்று அந்தத் தமிழ்ப் பையனிடம் என் டிக்கெட்டைக் காட்ட, அதை வாங்கிப் பார்த்த அவன் ஓர் அறிவிப்புப் பலகையைச் சுட்டிக் காட்டி, 'அந்த போர்டுகிட்டயே வெயிட் பண்ணுங்க... ஸ்பீக்கர் அறிவிப்பையும் டிஜிட்டல் டிஸ்பிளேவையும் கவனிச்சுட்டே இருங்க!’ என்று சொல்லி விட்டுப் போனார். தேர்வு முடிவுக்குக் காத்தி ருக்கும் மாணவன்போல அந்த போர்டையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

முதுகில் பேக்பேக், இடது கையில் ஒரு சின்ன சூட்கேஸ், வலது கையில் ஒரு பை, இன்னொரு கையில் காபிக் கோப்பையோடு சேர்த்து பாஸ்போர்ட், போர்டிங் பாஸ்களைப் பிடித்தபடி சரசரவெனப் பலர் கடந்து சென்றுகொண்டு இருந்தார்கள். என் விமானத்துக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. பசி வயிற்றைக் கிள்ள, காபி ஷாப்பில் எட்டிப்பார்த்தால் ஒரு காபி 10 திராம்ஸ். இந்தியக் காசுக்குக் கணக்குப் பண்ணிப் பார்த்து விட்டு, காபி குடிக்கும் திட்டத்தைக் கைவிட்டேன்.

துபாய் விமான நிலையத்தில் யாராவது ஒருவர் தமிழில் பேசுவது காதில் விழுந்துகொண்டே இருந்தது. கழிவறைகளைச் சுத்தம் செய்பவர்கள், சிகரெட் லாபியில் துப்புரவுப் பணி மேற்கொள் பவர்கள் என அடிமட்டத் தொழிலாளர்கள் பலரும் நம் தமிழ் இளைஞர்கள்.

காசு போட்டால் குளிர்பானம் வருகிற இயந்திரம் ஆங்காங்கே இருந்தது. குளிர்பானம் மூன்று திராம்ஸ்தான். நம் பட்ஜெட்டுக்குள் பசியாறிக்கொள்ளலாம் என்று எண்ணினால், காசைப் போட்டு குளிர்பானத்தைக் கொய்யும் ராஜதந்திரம் எனக்கு விளங்கவே இல்லை. சிகரெட் குடிக்கும் அறையில் சுத்தம் செய்துகொண்டிருந்த இளைஞர், 'காசைக் கொடுங்க!’ என்று கேட்டு வாங்கி, ஒரு பாட்டிலை எடுத்துத் தந்தார்.

அவர் பெயர் குழந்தைசாமி. துபாய்க்கு வந்து ஏழு வருடங்களாகிவிட்டனவாம். ஏதேதோ வேலை பார்த்து, இப்போதுதான் 'சொல்லிக்கொள்ளும்’படியான இந்த வேலைக்கு வந்திருக்கிறார். 'அப்பாவுக்கு மேலுக்குச் சரிப்படலை. வாங்கின கடனைக் கட்ட விவசாயத்தை நம்ப முடியலை. வயசுக்கு வந்த தங்கச்சி வேற. அதான் என்னமாவது பண்ணிக் கரையேறணும்னு இங்க வந்துட்டேன்!’ என்றார்.

பத்து நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்ததில், நானும் குழந்தைசாமியும் நண்பர்கள் ஆகிவிட்டோம். 'எவ்வளவு ரூவா கொடுத்து இங்கே வந்தீங்க?’ என்று கேட்டேன். 'ஒரு லட்சம்னு ஆரம்பிச்சாங்க. மூணு லட்சத்துல வந்து முடிஞ்சது. நிலத்தை வித்து, நகையை வித்து மேக்கொண்டு கடன் வாங்கிச் சீரழிஞ்சு, இங்கேவந்து  சிகரெட் துண்டு பொறுக்கிட்டு இருக்கேன்!’ என்றார்.

பாஸ்வேர்டு - 6

'ஏண்ணே... கடனுக்கு வாங்கின அந்தப் பணத்தைவெச்சு ஊர்லயே ஒரு கடைகண்ணி தொறந்திருக்கலாம்ல. இங்கே வந்து சிரமப்படணுமா?’ என்று நான் கேட்டதும் புருவங்கள் நெரிக்க அவர் என்னை வெறித்துப்பார்த்தார். ஏற்கெனவே நிறையப் பேர் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடும்.

'உங்களை மாதிரி ஆளுங்க இப்படி நல்லா நியாயம் பேசுவீங்க. ஆனா, நடப்புல தொழில்வெச்சுப் பொழைக்கிறேன்னு சொன்னா, யாராவது கடன் கொடுக்கிறீங்களா? வெளிநாட்டுக்குப் போறோம்னாதான் கடன் கொடுக்க ஆள் இருக்கு. அப்புறம் இதுதானே வழி... வேறென்ன பண்ண முடியும்!’ பொட்டில் அடித்தாற்போலப் பதில் சொன்னார். ஒரு பக்கம் கடனும் மறுபக்கம் மருந்துச் செலவுமாகத் தினமும் போராடுகிற மனிதர்களின் வாழ்க்கையை, கருத்துச் சொல்கிறவர்களால் அவ்வளவு எளிதில் உணர்ந்துகொள்ள முடிவதில்லை.

ஏஜென்ட்கள் ஏமாற்றியது, சொன்ன வேலை கொடுக்காமல் பாலைவனத்தில் பரிதவிக்கவிட்டது, எந்த வேலையும் கிடைக்காமல் பட்டினிகிடந்து தவித்தது எனப் பல சோகங்கள் மண்டிக்கிடந்தாலும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கை மட்டும் இவர்களுக்குக் குறையவே இல்லை என்பதுதான் ஆச்சர்யம்.

'ஏஜென்ட் ஏமாத்திப்புட்டான்னா, எல்லாருமே கெட்டவன் ஆகிடுவாங்களா என்ன? அதுக்கு மிந்தி நான் திக்குதிசை தெரியாம நின்னப்ப, நாலு பேருதானே என்னைக் கைதூக்கிவிட்டாங்க!’ என்று நம்பிக்கை பேசினார் குழந்தைசாமி.

எந்த ஆதரவும் இல்லாமல் வாழ்க்கையைத் தேடிப் புறப்படும் மனிதர்களுக்கு, சக மனிதர்கள் மீது இருக்கிற நம்பிக்கைதான் பலம். திருட்டும் பொய்யுமாக, களவும் சூதுமாக, துரோகமும் புரட்டுமாக இந்த உலகம் எவ்வளவு மாறி இருந்தாலும், மனிதர்கள் மீது இவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே, தொடர்ந்து நல்ல நல்ல மனிதர்களை இவர்களுக்கு அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது.

விமானம் பார்த்தது கிடையாது, ஆங்கிலம் தெரியாது, யார் என்ன கேள்வி கேட்கிறார்கள் என்பது புரியாது. ஆனாலும், வாழ்க்கையில் ஓர் இடத்துக்கு வந்துவிடலாம் என்ற வைராக்கியம் மலர்விழிகளிடமும் குழந்தைசாமிகளிடமும் கொட்டிக்கிடக்கின்றன. எத்தனையோ வஞ்சனை களுக்குப் பிறகும் அவர்கள் மனிதர்களை நம்பத் தயாராகவே இருக்கிறார்கள். இன்னமும் இடுப்பில் கட்டிய பெல்ட்டில் இருந்து கையை விலக்க மனசு வராத எனக்கு, அவர்களைப் புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல.

'சாதுர்யமாக இரு... எல்லாரையும் எளிதில் நம்பிவிடாதே’ என்பதைக் குழந்தைகளுக்குப் பாலபாடமாகச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து, பல வருடங்கள் ஆகிவிட்டன. புத்திசாலித்தனமாக இருப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதில் 'யாரையும் நம்பாதே’ என்பதுதான் முதல் பாட மாக இருக்கிறது. கெட்டவர்கள்போலவே, ஏகப் பட்ட நல்லவர்களும் இங்கு இருக்கிறார்கள் என்ற  நம்பிக்கையை அழுத்தமாக விதைக்கத் தவறிவிட்டால், மிரட்டிப் பயமுறுத்தும் பாதுகாப்பு இல்லாத உலகத்தில் நம் சந்ததியினர் போராடிக்கொண்டே இருக்கவேண்டி இருக்கும். அவர்களுக்கு இதைவிடப் பெரிய தண்டனை வேறு எதுவும் இல்லை. எந்த ஒரு மனிதனையும் சமாளிக்கும் சூட்சுமத்தை அளிப்பதுதான் இந்த அணுகுமுறைக்கான தீர்வாக இருக்கும்.

பல கொடூரங்களுக்கும் துரோகங்களுக்கும் நடுவில் மனிதனை நம்புகிற மனசை வளர்ப்பது சிரமம்தான். இருந்தாலும், மனிதர்கள் மீதான நம்பிக்கைதான், 'நான் பாதுகாப்பான சமூகத்தில் வாழ்கிறேன்’ என்ற உணர்வைத் தர முடியும்.

நம் பிள்ளைகளுக்கு அதைவிடச் சிறந்த பரிசை நம்மால் தந்துவிட முடியுமா என்ன?

- ஸ்டாண்ட் பை...