Published:Updated:

செக்டார் அனாலிசிஸ்

ஹாஸ்பிட்டல்ஸ் - மெடிக்கல் கேர்: ஆரோக்கியமான முதலீடா?

செக்டார் அனாலிசிஸ்

ஹாஸ்பிட்டல்ஸ் - மெடிக்கல் கேர்: ஆரோக்கியமான முதலீடா?

Published:Updated:

ரிசர்ச்

##~##
முன்பெல்லாம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு வழக்கம் உண்டு; உடம்புக்கு முடியாதவர்களை மருத்துவம் பார்க்கச் சென்றது பற்றி சொல்லும்போது, ஊரிலேயே பெரிய டாக்டர் பேரைச் சொல்லி அவரிடம் அழைத்துச் சென்றோம் என்பார்கள். 'அப்பாசாமி டாக்டர்கிட்டயே காமிச்சாச்சுப்பா' என்பார்கள் எங்கள் ஊரில்.

அதெல்லாம் இப்போது மாறிவிட்டது. 'மதுரை அப்போலோவுக்கே கூட்டிக் கிட்டு போயிட்டோம்ல' என்கிறார்கள் பெருமையுடன்! டாக்டர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தை பிராண்டட் மருத்துவமனைகள் எடுத்துக்கொண்டுவிட்டன என்பதுதான் இன்றைய நிதர்சனம்.

1980-களில் முதன்முதலாக வந்த கார்ப்பரேட் மருத்துவ மனை, அப்போலோ. பொதுமக்களிடம் மூலதனத்தைத் திரட்டித் தொடங்கப் பட்ட முதல் மருத்துவ மனை இந்தியாவில் இதுதான். இன்று ஃபோர்டிஸ், அகர்வால் கண் மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகள் பங்குச் சந்தை யில் பட்டியலிடப்பட்டு உள்ளன. இத்துறையின் எதிர்காலம் எப்படி, இப்பங்குகளில் முதலீடு செய்யலாமா என அலசுவோம்.  

நம் நாட்டில் அன்றாடம் ஆகும் மருத்துவச் செலவுகளில் 75 சதவிகிதத்துக்கும் மேல் கைகாசைப் போட்டுதான் செலவு செய்கிறார்கள். அரசு உதவி என்பது மிகக் குறைவுதான். மருத்துவமனைகளும் அப்படியே. பொது மருத்துவமனைகளைவிட தனியார் மருத்துவமனைகளே பெருநகரங்களில் அதிகம்.

'பெட் டு பாப்புலேஷன் ரேஷியோ’ என ஒரு கணக்கு; அதாவது, ஒரு நகரத்தில் அல்லது நாட்டில் இருக்கும் ஜனத்தொகைக்கும் அங்கு உள்ள மருத்துவமனைகளில் மொத்தமாக உள்ள 'பெட்’களின் (படுக்கை)  எண்ணிக்கைக்கும் உள்ள சதவிகிதக் கணக்குதான் இது. இந்தியாவின் மொத்த ஜனத்தொகையை, நாடு முழுவதும் இருக்கும் மருத்துவமனைகளில் உள்ள 'பெட்’களின் சராசரி எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் இங்கெல்லாம் போட்டியும் அதிகரித்து வருகிறது.

செக்டார் அனாலிசிஸ்

இந்நகரங்களோடு புனே மற்றும் அஹமதாபாத் ஆகிய எட்டு நகரங்களில் மட்டுமே 2 லட்சத்திற்கும் அதிகமான படுக்கைகள் உள்ளன. நம் நாட்டின் மொத்த 'பெட்’ எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு இந்த இரு பெருநகரங்களில் உள்ளது. ஆனால், நம் நாட்டின் மொத்த ஜனத்தொகையில் சுமார் 6%  மட்டுமே இந்நகரங்களில் வசிக்கிறார்கள்.  

இதை சரியான நேரத்தில் கணித்த அப்போலோ உள்ளிட்ட சில முன்னணி மருத்துவமனைகள், சிறுநகரங்களிலும் மெள்ள மெள்ள கால்பதிக்கத் துவங்கியுள்ளன. ஏற்கெனவே இருக்கும் நகரங் களிலும் ஆங்காங்கே சிறு கிளினிக்குகளைத் துவங்கி யிருக்கிறார்கள்; இவற்றை 'ஸ்டாண்ட் எலோன் கிளினிக்’ என்கிறார்கள். சில அடிப்படை சோதனை வசதிகளோடு கூடிய இந்த கிளினிக்குகள் அந்தந்த ஏரியாவில் இருக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதால், இதன் மூலமாக, பெரிய மருத்துவமனைகளுக்கு வரும் கூட்டத்தை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்பதோடு, இம்மருத்துவமனைகளுக்கு நல்ல விளம்பரமாகவும், பிராண்ட்/இமேஜ் உருவாக்கவும் செய்கின்றன.

இந்த மாதிரி சிறு கிளினிக் தொடங்கத் தேவைப்படும் முதலீடு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஆகலாம்; வருமான வரி, கடன்கள் மீதான வட்டி மற்றும் தேய்மானம் ஆகிய செலவுகளுக்கு முந்தைய வருவாயாக 40% வரை லாபம் கிடைக்கும். எல்லாச் செலவுகளும்போக 17 சதவிகிதம் நிகர வருவாய் / ஆதாயம் கிடைக்கும் என 'கிரிசில்’ ஆய்வு சொல்கிறது.          

செக்டார் அனாலிசிஸ்

வரும் ஆண்டுகளில், இத்துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையின் மொத்த அளவு என்று பார்க்கையில், 2014-15ம் ஆண்டுவாக்கில் ரூ.3,500 பில்லியனைத் தாண்டும் என ஆராய்ச்சி நிறுவனமான 'கிரிசில்’ சொல்கிறது. இதில் மூன்றில் இரண்டு பங்கு, ஐ.பி.டி. எனப்படும் 'இன் பேஷன்ட் டிபார்ட்மென்ட்’ ட்ரீட்மென்டாகவும், மீதம் ஒரு பங்கு, ஓ.பி.டி. எனப்படும் 'அவுட் பேஷன்ட் டிபார்ட்மென்ட் ட்ரீட்மென்ட்’-ஆகவும் இருக்கும். மருத்துவமனைகளின் வருவாய் அதிகமாக வருவது ஐ.பி.டி.யில் இருந்துதான்.

வருமானம் அதிகரிப்பு, வயதானோர் எண்ணிக்கை மெள்ள மெள்ள அதிகரிப்பு, ஆரோக்கியம் மற்றும் காப்பீடு குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருவதும் இத்துறையின் வளர்ச்சிக்கு நல்ல வித்தாக அமையும். வளர்ந்துவரும் மெடிக்கல் டூரிஸமும் அதிவேக வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்பை வழங்குகிறது. விலை இறங்கும்போதெல்லாம், முன்னணி நிறுவனங்களை மட்டுமே வாங்கிவந்தால், ஆரோக்கியமான போர்ட்ஃபோலியோவுக்கு வழிவகுக்கும் துறை இது.        

இத்துறையில் உள்ள சில முக்கிய துறை பங்குகளை மட்டும் பார்ப்போம்.

அப்போலோ ஹாஸ்பிட்டல்:

இத்துறையின் 'தல’ எனச் சொல்லலாம். நல்ல லாபத்தில் இயங்கிவரும் நிறுவனம். தொடர்ந்து நல்ல டிவிடெண்ட் தந்துவரும் நிறுவனம். இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் மக்கள் மத்தியில் சூப்பர் பிராண்ட் இமேஜ்.

அடுத்த ஓர் ஆண்டில் மட்டுமே 12 மருத்துவமனைகளை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். நாடெங்கும் உள்ள அப்போலோ பார்மஸி நெட்வொர்க் மிகப் பெரிய பலமும்கூட. டெலிகாம் துறையில் 'ஆர்பு’ (Avarage Revenue Per User) என்பது ஒரு பயனீட்டாளர் மூலமாக வரும் சராசரி வருவாய். அதுபோல, இத்துறையில் 'ஆர்பாப்’ (ARPOB - Average Revenue Per Occupied Bed) என ஒரு அளவுகோல் ஒன்றுண்டு. இவர்களைப் பொறுத்தவரை, சராசரியாக படுக்கை ஒன்றின் மீது ரூ.21,500 வருவாய் வருகிறது. சென்ற ஆண்டைவிட 6.50% அதிகம்.

கைவசம், ரூ.300 கோடி அளவுக்கு ரொக்கக் கையிருப்பு உள்ளது. கடன் மிகக் குறைவு. வரும் ஆண்டுகளில் 2,000 படுக்கைகள் அதிகரிக்க இருப்பதாகவும் சராசரியாக ஆண்டுக்கு 22 சதவிகித வளர்ச்சிக்கு மேல் இருக்கும் என்பதாலும் பங்கு ஒன்றின் நியாயமான விலை ரூ.982 என 'கிரிசில்’ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ரிசர்ச் ரிப்போர்ட் சொல்கிறது. இப்பங்கின் புத்தக மதிப்போடும், பங்கு ஈட்டும் வருவாயோடும் ஒப்பிட்டாலும், தற்போதைய விலை அதிகம்தான். காத்திருந்து இறக்கத்தில் மட்டுமே வாங்கவேண்டும்.

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர்:

1996-ல் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். முன்னர் ரான்பாக்ஸி குழுமத்தின் நிர்வாகத்தில் இருந்தது. 17 மாநிலங்களில், 66 மருத்துவமனைகளுடன், 4,800 படுக்கைகள் வசதி யுடன் இன்று முதலிடத்தில். அப்போலோவோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பங்கு ஒன்று ஈட்டும் வருவாயாகட்டும், புத்தக மதிப்போடு ஒப்பிட்டாலும், இப்பங்கின் தற்போதைய விலை ஓரளவு குறைவுதான். வாங்குவதற்கேற்ற பங்கு.  

இந்திரபிரஸ்தா ஹாஸ்பிட்டல்:

டெல்லி அரசும் அப்போலோ மருத்துவமனை குழுமமும் இணைந்து நடத்தும் நிறுவனம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து லாபத்தில் இயங்குவதோடு, தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தவறாமல் டிவிடெண்ட் வழங்கி வரும் நிறுவனம். வரியில்லா டிவிடெண்டை எதிர்பார்க்கும் நீண்டகால முதலீட்டாளர்கள்,  விலை இறக்கத்தின்போது வாங்கிப்போடலாம். ஏற்ற இறக்கங்கள் அதிகம் இல்லாத, ஸ்திரமான பங்கு. என்றாவது ஒருநாள் அரசு தனது பங்கை விற்க முடிவெடுத்தால் அன்று இது பொன் முட்டையிடும் வாத்தாக அமையலாம்.

(அலசுவோம்)

ஸ்வாட் அனாலிசிஸ்!

 பலம்:

கோடிக்கணக்கான நம் ஜனத்தொகை, வளரும் வருமானம்.

மருத்துவத்தில்கூட இப்போது அதிகரித்து வரும் பிராண்ட் கான்ஷியஸ்னெஸ்.

வேலை மாறுதல், மொபிலிட்டி காரணமாக, எங்கு சென்றாலும் இருக்கக் கூடிய ஆஸ்பத்திரிகளை நாடுதல்.

பலவீனம்:

அரசின் சேவை வரியால் செலவு அதிகரித்தல்.

அரசு ஒப்புதல் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், அதன்காரணமாக வரும் உபரி செலவுகள், நஷ்டங்கள்.

பிரிவென்டிவ் ஹெல்த்கேர்-க்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறைவு இதுவரையில்.

வாய்ப்பு:

மெடிக்கல் டூரிஸம்.

சமீபகாலமாக மக்கள் மத்தியில் ஆரோக்யமான வாழ்க்கை மற்றும் சுகாதாரத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்.

சிறு நகரங்களில்கூட பெரிய பிராண்டட் ஆஸ்பத்திரிகளின் ஸ்டாண்ட் எலோன் கிளினிக்குகள் பெறும் வரவேற்பு.

75 சதவிகிதத்துக்கு மேலான மருத்துவச் செலவுகள் தனியார்/தனி நபர் சேமிப்பிலிருந்து கொடுக்கப்படுவது மாறி, அரசு மற்றும் காப்பீடு நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியம்.  

அச்சுறுத்தல்:

அத்தியாவசியச் சேவை என்பதால், விலைவாசி ஏற்றத்திற்கேற்ப கட்டணங்களை உடனடியாக அதிகம் உயர்த்த முடியாத சிக்கல்.

சட்டச் சிக்கல்கள்.