யட்சன்
##~##

செந்திலின் இடுப்புக் காயத்திலிருந்து ரத்தம் பொங்கிப் பொங்கி வெளியேறிக்கொண்டுஇருந்தது. களைப்பும், அச்சமும், எதிர்பாராத அதிர்ச்சியும் சேர்ந்து சுழற்றியடித்தன. இமைகள் தாமாக மூட, பக்கவாட்டில் சாய்ந் தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார் கட்டுப்பாடின்றி ஓடியது. மண் சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு மைல் கல்லில் சக்கரம் மோதித் தூக்கி, ஒருக்களித்துக் கவிழ்ந்தது. சற்று தூரம் தேய்த்துக்கொண்டே போய்... புகை சூழ நின்றது. அந்த அதிர்ச்சியில் செந்தில் விழித்தான். கவிழ்ந்துகிடக்கும் காருக்குள் சிறைப்பட்டிருக்கிறோம் என்பது புரிந்ததும், சக்தியை எல்லாம் திரட்டி, நசுங்கிய கதவின் ஜன்னல் வழியே தவழ்ந்து வெளியே வந்தான். ஏதோ ஒரு கார் விரைந்து வரும் ஒலி கேட்டது. அங்கிருந்து விலகிச் சென்றுவிட வேண்டும் என்று தடுமாறி நடந்தான். மைதானத்தில் ஓரமாக இருந்த ஒற்றைத் தென்னை மரத்தை நெருங்கியபோது, மயக்கம் தாக்கியது. உடல் கீழே சரிந்தது.

ஜினியை வழியனுப்பிவிட்டு, டைரக்டர் ஷங்கர் பாரியின் கைகளைக் குலுக்கினார்.

'இன்னும் நாம பண்ணாதது என்னவோ இருக்குன்னு தாகத்தோட இருக்கிறதாலதான் சூப்பர் ஸ்டார், கமல்ஹாசன் இவங்கல்லாம் இன்னும் ஃபீல்டுல ரூல் பண்ணிட்டு இருக்காங்க. தொடர்ந்து நல்லாப் பண்ணு. உன் எதிர்காலம் உன் கையிலதான் இருக்கு.'

'சார், என் வாழ்க்கையே புதுசா மாறியிருக்கு. உங்களுக்குப் பெருமை யைத் தேடித் தருவேன்.'

'அப்புறம், மீடியாவுல சிம்பிளா நாலு வார்த்தை சொல்லிட்டு, விலகிடு. படம் ரிலீஸாகும்போது, பேட்டி எல்லாம் குடுத்துக்கலாம்..'

'சரி சார்...'

சூர்யா, விக்ரம், அரவிந்த்சாமி என்று யார் யாரோ கைகொடுத்து வாழ்த்தினார்கள். ஜோசப் அதே படத்தில் அறிமுகமாகும் நாயகியை பாரிக்கு அறிமுகம் செய்தான்.

கயல்விழி எல்லா அளவுகளிலும் கச்சிதமாக இருந்தாள். ஆனால், முதலில் கவர்ந்து இழுத்தது, அவளுடைய பெரிய, கரிய, வட்ட விழிகள். அவள் கைகுலுக்கியபோது கூச்சமாக இருந்தது.

'பாரி, நாளைக்கு அவுட்டோர் போறோம்... முப்பது நாள் ஷெட்யூல். குணா உங்களுக்கு புரொகிராம் சொல்வார்...' என்றான் ஜோசப்.

திடீரென்று தோளில் கை தட்டியது.

'என்னை ஞாபகம் இருக்கா..?'

'தேவி... நீங்க..?'

'நானும் சினிமாவுல இருக்கிறவதான்... தொழில்னு சொன்னீங்களே... இதானா?'

யட்சன்

மையமாகப் புன்னகைத்தான் பாரி.

'சூப்பர் ஸ்டார்கிட்டயே ஆசீர்வாதம் வாங்கிட்டீங்க. பெரிய ஆளானதும், மறந்துற மாட்டீங்களே?'

'வெய்ட் பண்ணுங்க. சேர்ந்துபோலாம்...' என்று அவளிடம் சொல்லிவிட்டு, காத்திருந்த மைக்குகளை நோக்கி பாரி நடந்தான்.

செந்தில் கண்களை மறுபடியும் விழித்தபோது ஒரு காரின் பின் இருக்கையில் கிடப்பதை உணர்ந்தான். இரண்டு வலுவான கைகள் அவனை அழுத்திப் பிடித்திருந்தன. எழுந்திருக்க முயற்சி செய்தான். 'சுரீர்...’ என்று வலி உச்சந்தலை வரை தாக்கியது.

'அசையாத...' என்று முரட்டுத்தனமான குரல் கேட்டது. கண்கள் தாமாக மறுபடி மூடின.

யக்கமாயிருந்த அம்மாவை ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தள்ளியவர்களுடன் தீபா நடந்தாள்.

'பிளேட் வெச்சுத் தெச்சிருக்கேன்... ரெண்டு நாள் இங்கயே இருக்கணும்...' என்றார் டாக்டர் தன் முகத்திரையை இறக்கி. வார்டில் அம்மாவைக் கட்டிலுக்கு மாற்றும் வரை, தவிப்புடன் இருந் தாள் தீபா.

'இந்நேரம் பூஜை முடிந்திருக்குமா? ரஜினி கிளாப் அடித்து முதல் ஷாட் எடுக்கப்பட்டுஇருக்குமா? செந்திலின் புதிய பயணம் ஆரம்ப மாகியிருக்குமா?’

'தண்ணி கேட்டா கொடுக்காதீங்க. சும்மாப் பஞ்சுல நனைச்சு உதட்டுல தடவுங்க.'

'சிஸ்டர்... இங்க டி.வி. எங்கே இருக்கு?'

மலையாள நர்ஸ் மோகனமாகப் புன்னகைத்தாள்.

'ஓபி வார்டுல இருக்கு... 'யட்சன்’ பூஜை பாக்கணுமா? எல்லாம் அதான் பாத்துட்டிருக்காங்க. போங்க... அம்மா கண்ணைத் தொறக்க மூணு மணி நேரம் ஆகும்.'

தீபா வெளியே விரைந்தாள். ஹாலில் காத்திருந்தவர்கள் எல்லோருடைய கவனமும் தொலைக்காட்சிப் பெட்டியில்தான் இருந்தது. புதிய நாயகனும் நாயகியும் இயக்குநரால் அறிமுகம் செய்யப்படும் கட்டம்.

'கெடைக்க முடியாத அரிய வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு... அதை நான் முழுமையாப் பயன்படுத்திப்பேன்...' என்று சூழ்ந்திருந்த மைக்குகளில் பேசிக்கொண்டிருந்தவனைப் பார்த்ததும் தீபா அதிர்ந்தாள்.

இவன் செந்தில் இல்லை. செந்தில் எங்கே? அவசரமாக போனை எடுத்து டயல் செய்தாள். 'வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்’ என்றே மறுபடி மறுபடி பதில் வந்தது. கடைசி நிமிடத்தில் செந்திலை மாற்றிவிட்டு வேறு யாரையோ போட்டுவிட்டார் களா? சினிமாவில் இது சகஜம் என்று அவனுக்கு ஆறுதலாகச் சொல்லலாம் என்றால், எங்கே போய்விட்டான் அவன்?

ஐயோ, மனம் உடைந்து விபரீதமான முடிவு ஏதாவது எடுத்துவிட்டானா? உடனே சென்னைக்கு ஓடி அவனை மடியில் போட்டுக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. இந்த நேரம் பார்த்து அம்மா கையை முறித்துக்கொள்ள வேண்டுமா என்று அநாவசியமாக அவள் மீது கோபம் புரண்டது.

செய்வதறியாது தீபா தவித்தாள்.

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism