Published:Updated:

நான் பக்தன்!

நான் பக்தன்!

உசிலம்பட்டி தொட்டிப் பாலம்!

நான் பக்தன்!

'தொட்டிப் பாலம்’ என்றால், குமரி மாவட்டம் மாத்தூர் நினைவுக்கு வரும். காரணம், தமிழகத்தின் ஒரே ஒரு தொட்டிப் பாலம். ஆசியாவிலேயே மிக உயரமானதும் அதுதான்!

இதைவிட சுமார் இரு மடங்கு நீளம்கொண்ட தொட்டிப் பாலம் ஒன்று, உசிலம்பட்டி ஒன்றியம் உத்தப்பநாயக்கனூர் அருகே கட்டப்பட்டு வருகிறது. இதன் நீளம் 1.4 கிலோ மீட்டர். இந்தப் பாலத்தில் நடைபாதை வசதி மட்டும் கிடையாது.

தங்களுக்கு வைகைப் பாசனம் வேண்டும் என்பது உசிலம்பட்டியைச் சுற்றி உள்ள 58 கிராம மக்களின் 30 ஆண்டு காலக் கோரிக்கை. ஆனால், கால்வாய் வரும் வழியில் மேடு, பள்ளம், சிறு ஓடைகள் குறுக்கிடுவதால், இந்த தொட்டிப் பாலத் திட்டம். மற்ற பாசனப் பகுதிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், வைகை அணையில் 67 அடி உயரத்தில் இந்த கால்வாய்க்கான ஷட்டரை அமைத்திருக்கிறார்கள். பெரியாறு அணை நிரம்பி, வைகை அணையும் நிரம்பி, உபரித் தண்ணீர் வெளியேறினால் மட்டுமே... பாலத்தில் தண்ணீர் பாயுமாம்.

மாத்தூரைப்போல, இங்கேயும் சாலை வசதி, பூங்கா வசதி அமைத்துக்கொடுத்தால், புதிய சுற்றுலாத் தலம் அமையும்!

- கே.கே.மகேஷ், என்.சுவாமிநாதன்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

திருச்செந்தூர் குதிரை வண்டி சவாரி!

நான் பக்தன்!

தென் மாவட்டங்களின் கோயில் நகரம் திருச்செந்தூரில் இன்றும் குதிரை வண்டி சவாரி உண்டு. குதிரை வண்டிக்காரர் காந்தி, '30 வருஷத்துக்கு முன்னாடி மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவில்பட்டி, திருநெல்வேலி, சங்கரன்கோவில்னு நிறைய ஊர்களில் குதிரை வண்டிச் சவாரி இருந்துச்சு. ஆட்டோ வந்ததுக்கு அப்புறம், குதிரை வண்டிகளை யாரும் திரும்பிப் பார்க்கலை. திருச்செந்தூரில் 100 வண்டிகளுக்கு மேல இருந்துச்சு. இப்போ வெறும் 10 வண்டிதான் இருக்குது. இப்போ உள்ளூர்க்காரங்க யாரும் சவாரிக்கு ஏற மாட்டாங்க. வெளியூர், வெளிநாட்டுக்காரங்களுக்கு குதிரைச் சவாரி புதுசாத் தெரியும். அதனால, இஷ்டப்பட்டு ஏறுவாங்க. குழந்தைகள் இருக்கிற குடும்பம்தான் எங்களோட முக்கியமான கஸ்டமருங்க. குழந்தைகளைச் சந்தோஷப்படுத் துறதுக்காக குதிரையைப் பழக்கிவெச்சிருக்கோம். 'பேபி’ன்னு கூப்பிட்டா, உடம்பைச் சிலுப்பி, தலை ஆட்டும் என் குதிரை. பஸ் ஸ்டாண்டில் இருந்து கோயிலுக்குப் போக ஆட்டோக்காரன் 50 ரூபா கேட்கிறான். நாங்க ஊர் முழுக்கச் சுத்திக் காட்ட 30 ரூபாதான் வாங்குவோம். ஃபாரினர் வந்தாங்கன்னா ஒன்ஸ்மோர் கேட்பாங்க. பிரியப்பட்டு 100 ரூபா வரைக்கும் தருவாங்க. இப்போ, மினி பஸ், ஆட்டோ வந்ததும் எங்க சவாரி சுத்தமா பாதிச்சிருச்சு. இருந்தாலும் பரம்பரைத் தொழிலை விட்டுடக் கூடாதுன்னு ஓட்டிட்டு இருக்கோம்'' என்கிறார். போலாமே குதுர சவாரி!

- இ.கார்த்திகேயன் படம்: ஏ.சிதம்பரம்

நான் பக்தன்!

நான் பக்தன்!

துரை மீனாட்சியம்மன் கோயில் வடக்கு சித்திரை வீதியில், தலையின் நடுவில் ஸ்கேல் வைத்து மழித்ததுபோல்... பாதி தலை முடி, பாதி மீசை, பாதி தாடியுடன் ஒருவர் நடந்து வர... ஏரியாவே பரபரப்பாகிவிட்டது. விறுவிறுவென அவர் நடக்க, கோபித்துக்கொண்டு போகிறவரைச் சமாதானப்படுத்துவதைப்போல கையில் கத்தியுடன் சவரத் தொழிலாளியும் பின்னால் ஓடினார். 600 மீட்டர் ஓடிய பின்னர், ஓரிடத்தில் உட்கார்ந்து மீதி முடியையும் மழித்த அந்த நபரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

''ஏன் சினிமா மாதிரி ஃபர்ஸ்ட் பார்ட், செகண்ட் பார்ட் ஸ்டைல்ல முடி எடுக்கிறீங்க?' என்று கேட்டால், ''எது எதுக்குத்தான் பேட்டி எடுக்குறதுன்னு வெவஸ்தை இல்லையா?'' என்று ஏறிட்டுப் பார்த்தவர்,  முனீஸ்வரனுக்குப் பாதி முடியும், கருப்பசாமிக்குப் பாதி முடியும் எடுக்குறதா வேண்டியிருந்தேன். அதான், மொட்டைக் கோபுரம் முனீஸ்வரருக்குப் பாதி முடி மழிச்சிட்டு, மீதி பாதியை கருப்பு முன்னாடி எடுத்தேன்!'' என்றார்.

எப்படியெல்லாம் வேண்டுறாங்கப்பா!

- கே.கே.மகேஷ், படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நான் பக்தன்!
அடுத்த கட்டுரைக்கு