##~##

'குழந்தைகள் மிகச் சிறந்த மேதைகள்.அவர்களின் கற்பனைகள் அளவிட முடியாதவை. அவற்றைச் சிதைக்காமல் அவர்களுக்குப் பயிற்சிதருவதை பெரியவர்களாகிய நாம் கடமையாகக் கொள்ள வேண்டும்'' என்கிறார் கனவுலக ஓவியர் சல்வார்டார் டாலி.

எதையும் பார்த்துப் பார்த்தே கற்றுக்கொள்ளும் பழக்கம் குழந்தைகளுக்கு இருப்பதால், பெரியவர்கள் அவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் கரும்பலகையில் அழகாக எழுதுவதைப் பார்த்து, அதைப் பின்தொடரும் சுட்டிகள் நிறைய.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைகளின் ஒவ்வொரு நற்செயலையும் பாராட்டுவதோடு மட்டும் அல்லாமல் வழிகாட்டுவதும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை.  

சுட்டிகளாகிய நீங்கள் எழுதி அனுப்பியிருந்த முத்தான கையெழுத்துகளில் சிலவற்றை,  எப்படி மேலும் செம்மைப்படுத்தலாம் என்பதனை இங்கே எழுதிக்காட்டி, அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறோம்.

முத்தான கையெழுத்து !

உங்கள் கையெழுத்திலும் இத்தகையக் குறைபாடுகள் இருந்தால், இந்த ஆலோசனைகளைக் கடைப்பிடித்து, முத்தான கையெழுத்துப் பெற, தொடர்ந்து எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.

பா.மால்நிலா அழகன்,
செயின்ட் ஜோசப் பாய்ஸ் மேல்நிலைப் பள்ளி, குன்னூர்.

முத்தான கையெழுத்து !

மால்நிலா அழகன்... உங்கள் கையெழுத்து பின் நோக்கிச் சரிந்து காணப்படுகிறது. பழக்கத்தின் காரணமாக உங்களால் வேகமாக எழுத முடிந்தாலும் இதை மற்றவர்களால் வேகமாகப் படிக்க முடியாது. பின்நோக்கிச் சரிந்த எழுத்துகளைப் படிக்கும்பொழுது, மனதிலும் ஒருவித ஒவ்வாமை சிலருக்கு ஏற்படும். எனவே, நீங்கள் முதலில் நேராக எழுத முயற்சி செய்யுங்கள். தாளைச் சற்றே இடப் பக்கமாகச் சரித்துவைத்து எழுதினால், விரைவில் நேராக எழுதிட முடியும். மற்றபடி வார்த்தை மற்றும் வாக்கிய இடைவெளிகளை அதிகப்படுத்தினால், மேலும் கையெழுத்து தெளிவாகும்.

வி.தனேஷ், நந்தனம், சென்னை-35.

முத்தான கையெழுத்து !

டியர் தனேஷ்... நீங்கள் எந்த வகுப்பில் படிக்கிறீர்கள் என்பதைக் குறிப்பிடாததால் உங்கள் வயதை யூகிக்க முடியவில்லை. இருந்தாலும் அழகாக, சிரத்தையுடன் முத்தான கையெழுத்துப் பெற முயற்சி செய்கிறீர்கள். பாராட்டுகள். உங்கள் கையெழுத்தில் எழுத்துகளின் இடைவெளி, மற்றும் வாக்கிய இடைவெளி போதிய அளவு இல்லை. சில வார்த்தைகளில் எழுத்துகள் ஒன்றையன்று இடித்துக்கொண்டு நிற்கின்றன. பிரித்து நிதானமாகப் போதிய இடைவெளி விட்டு எழுதுங்கள். விரைவில் நீங்கள் நேர்த்தியான கையெழுத்துக்குச் சொந்தக்காரர் ஆவீர்கள்.

ஆர்.நவீன், வித்யா விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோயம்புத்தூர்.

ஹலோ நவீன்... முதலில் எழுதிய கையெழுத்து, முன்னேற்றம் அடைந்த கையெழுத்து என இரண்டையும் அனுப்பியுள்ளீர்கள். உங்களின் இந்த முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.

முத்தான கையெழுத்து !

முதலில் எழுதிய அதே விஷயத்தையே மீண்டும் கீழே எழுதியிருந்தால் ஒப்பிட ஏதுவாக இருந்திருக்கும். இருப்பினும் உங்கள் கையெழுத்தில் முன்னேற்றம் உள்ளது. சில எழுத்துகள் முன் நோக்கிச் சரிய முயற்சிப்பதால், முன்னால் சாய்த்து எழுத முயற்சிக்கலாம். வேகமாக எழுதவும் படிக்கவும் ஏற்ற முறை அது. 'த’ மற்றும் 'ந’ போன்ற எழுத்துகளின் முடிவுப் பகுதியில் உள்ள வாலின் அளவைச் சற்று அதிகப்படுத்துங்கள். சில சமயங்களில் இந்த உயரக் குறைபாடு, 'த’-வை 'க’ போலவும் தோற்றமளிக்கவைக்கும். உயிர் எழுத்துகளை இன்னும் சற்று வடிவம் மாறாமல் எழுதுங்கள். ஒவ்வோர் எழுத்தையும் ஒவியம் போல் எண்ணி எழுதுங்கள். விரைவில் நீங்களும் ஒரு வெற்றியாளரே.

 செ.பூந்தளிர், அம்பாள் பொதுபள்ளி, சிறுமுகை.

முத்தான கையெழுத்து !

அன்பூ பூந்தளிர்... உங்கள் கையெழுத்து, சிறு வயது என்பதால் சற்றுத் தடுமாற்றம் நிலவினாலும் எழுத்துகளின் வடிவம் தெளிவாகவே உள்ளது. எழுத்துகள் நேராக அமையாத குறை இருப்பதால், நீங்கள் கோடு போட்ட தாளில் பயிற்சி செய்வது நல்லது. சரியான இடைவெளி விட்டுப் பொறுமையுடன், நிதானமாகப் பயின்றுவாருங்கள். பேனாவை அழுத்தமாகப் பிடிக்காமல் மென்மையாகப் பிடித்து எழுதுங்கள். உங்களாலும் அழகாக எழுத முடியும். வாழ்த்துகள்!

(எழுதுவோம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism