Published:Updated:

என் ஊர்!

ச.தமிழ்ச்செல்வன்

கோவில்பட்டி நகரைப்பற்றியும் தன் இளமைப் பருவம்பற்றியும் மனம்திறக்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.

##~##

''கோவில்பட்டினு சொன்னதும் எனக்கு முதல்ல ஞாபகத்துக்கு வருவது அங்கு இருக்கும் மில்கள்தான். மதுரையைக் கோயில் நகரம்னு சொன்னா, கோவில் பட்டியை மில்களின் நகரம்னு சொல்லாம். அந்த மில்களில் ஏராளமான தொழிலாளர் கள் வேலை பார்த்தார்கள். அதனால், கோவில்பட்டியைப் பொறுத்தவரை மே தினத்தை தீபாவளி, பொங்கல் மாதிரி மேள தாளம், ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடுவாங்க. அப்போது ஒவ்வொரு மில்லிலும் விளையாட்டுக் குழு இருக்கும். மில்களுக்கு இடையே அடிக்கடி விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். அப்போ கிரிக்கெட்டைவிட ஹாக்கிதான் பிரபலமா இருந்தது. அதனால ஊரே ஹாக்கி ஜுரத்தில் இருந்தது. கருவேல மரத்தின் வளைந்த கம்பை வெட்டி, ஹாக்கி ஸ்டிக் மாதிரி வெச்சு விளையாடுவோம். வெடித்துக் கிடக்கும் குளங்களும், கண்மாய்களும்தான் எங்களுக்கு மைதானம்.

என் ஊர்!
என் ஊர்!

மில்களுக்கு அடுத்தபடியாக கோவில்பட்டியின் அடையாளம் செண்பகவள்ளியம்மன் கோயில். இந்த கோயில் திருவிழா சித்திரை மாதம் 1-ம் தேதி நடக்கும். அதுதான் கோவில்பட்டியின் மிகப் பெரிய திருவிழா. தேரோட்டம், கலை நிகழ்ச்சிகள்னு ஊரே களைகட்டும்.

கோவில்பட்டிக்கு அழகு சேர்க்கும் முக்கியமான இடம் கதிரேசன் கோயில் மலை. சின்ன வயதில் இருந்தே எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம் இதுதான். பசங்க எல்லாம் சேர்ந்து கார்த்திகைக்கு மலை மேல டயர் கொளுத்துவோம். அந்த வெளிச்சம் ஊருக்குள்ள இருந்து பார்க்கிறவங்களுக்கு நட்சத்திரம் போல் தெரியும். மலையில புலிக் குகைன்னு ஓர் இடம் இருக்குது. 'இங்கேதான் கட்டபொம்மன் ஒளிஞ்சிருந்தாரு, ஊமைத்துரை ஒளிஞ்சிருந்தாரு’ன்னு ஆயிரம் கதைகள் சொல்வாங்க. இரவில் டயர் பந்தத்தின் வெளிச்சத்தில் அந்தக் குகைக்குள் கொஞ்ச தூரம் போய்விட்டுத் திரும்பிவிடுவோம். ஆனாலும், 'நான் ரொம்ப தூரம் போனேன், அங்க அதைப் பார்த்தேன், இதைப் பார்த்தேன்’னு கதை விடுவோம்.

சின்னப் பசங்களா இருக்கும்போது, லீவு நாட்கள்ல தீக்குச்சி அடுக்கி, ஒரு நாளைக்கு ஒரு ரூபா சம்பாதிப்போம். அதுதான் சினிமாவுக்கும், தின்பண்டச் செலவுக்கும். அப்பெல்லாம் தரை டிக்கெட் நாலணா. பெஞ்ச் என்றால் 40 பைசா. 60 பைசா இருந்தால், சேரில் சாய்ந்துகிடந்து படம் பார்க்கலாம்.

அது வறட்சியான ஊர்ங்கிறதால ஐஸ் கம்பெனிகள் நிறைய இருந்துச்சு. நாங்க எல்லாம் நேரடியா கம்பெனிக்கே போய் ஐஸ்

என் ஊர்!

வாங்குவோம். ஜில் விலாஸ் என்ற புகழ்பெற்ற குளிர்பான கம்பெனி இருந்துச்சு. அங்கு பாட்டில்களில் கியாஸ் நிரப்பும் காட்சி எங்களுக்கு ரொம்பக் கவர்ச்சியான விஷயம். அதைப் பார்க்க ஃபேக்டரியின் பெரிய ஜன்னல் கம்பிகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருப்போம் கல்லூரி படிக்கும்போது எந்தப் படத்தையும் விட மாட்டேன். அதுவும் சிவாஜிகணேசன் படங்கள் என்றால் உயிர். காரணம், பக்கத்து வீட்டு அருணாச்சலம் அண்ணன். அவர் வீட்டுக்குத் தெரியாம திருநெல்வேலிக்குப் போய் எம்.ஜி.ஆர். படம் பார்ப்பார். வீடு திரும்பியதும் அவங்க அப்பா தெருவுல போட்டு பெல்ட்டால அடிப்பாரு. எம்.ஜி.ஆருக்காக அவர் அடி வாங்கும்போது, நாம ஏன் சிவாஜிக்காக அடி வாங்கக் கூடாதுன்னு என்னை நானே உசுப்பேத்திக்குவேன்.

  அப்பாவுக்கு நான் சினிமா சினிமான்னு திரியுறது பிடிக்காது. ஆனா, திட்ட மாட்டாரு. ராத்திரி படம் முடிஞ்சி வீட்டுக்கு வர்ற வரைக்கும், லைட் போட்டு எனக்காகக் காத்திருப்பாரு. எனக்கே மனசாட்சி உறுத்த ஆரம்பிச்சிடுச்சி. குற்ற உணர்வில் தவிச்சி, 'இனிமேல் சினிமாவுக்குப் போக மாட்டேன்பா. ஒழுங்கா படிப்பேன்’னு ஒரு கடிதம் எழுதிவைத்தேன். அப்பதான் அப்பா முகத்தில் நிம்மதி வந்தது.

கோவில்பட்டியின் மற்றொரு முக்கியமான அடையாளம்... எழுத்தாளர்கள். தேவதச்சன், பிரதீபன், வித்யா சங்கர், கௌரி சங்கர், உதய சங்கர், அப்பாஸ், சமயவேல் போன்ற கவிஞர்கள் எல்லாம் கோவில்பட்டிக்காரர்கள். கு.அழகிரிசாமி, கி.ராஜநாயகம், சோ.தர்மன், பூமணி, அப்பா கே.சு.சண்முகம், தம்பி கோணங்கி போன்ற எழுத்தாளர்களைத் தந்த ஊர் கோவில்பட்டி. 'கொஞ்சும் சலங்கை’ படத்தில் பணியாற்றி, பின்னர் தமிழகமே புகழ்ந்த நாகஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலம் கோவில்பட்டியில் வாழ்ந்தவர். திரைத் துறையில் இருக்கும் சார்லி, நாடகத் துறையில் இருக்கும் முருகபூபதி என்று ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். சிலரது பெயரை நான் சொல்ல மறந்திருக்கலாம்.

மொத்தத்தில் கோவில்பட்டி கலைஞர்களின் பூமி!''

- கே.கே.மகேஷ்,
படங்கள்: ஜெ.தான்யராஜு, ஏ.சிதம்பரம்

அடுத்த கட்டுரைக்கு