Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன்

மறக்கவே நினைக்கிறேன்

Published:Updated:
மறக்கவே நினைக்கிறேன்

‘நீங்கள் என்னிடமிருந்து
நான் என்ற எனக்கான
என் சுதந்திரத்தைப்
பறித்துக்கொண்டீர்கள்...
நான் உங்களிடமிருந்து
          நீங்கள் என்ற
எனக்கான ஆறுதலையும்
அழித்துவிட்டேன்...
பின் இனி எப்படிப் புழங்கும்
நமக்கிடையே நாமென்ற
அந்தப் பரிசுத்தமான சொல்?’

- கொஞ்ச நாட்களுக்கு முன்  கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் என் இயக்குநரைப் பார்ப்பதற்காக எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் ஒரு தொடக்கப் பள்ளிக்குச் சென்று 100 குழந்தைகளிடம் க்ரேயான் பென்சில்களைக் கொடுத்து அவரவர் விருப்பப்படி தீவிரவாதிகளை வரையச் சொன்னாராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது அந்தக் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் இவை என்று சொல்லி ஒரு ஆல்பத்தை எங்களிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் அதிர்ச்சி. 100 குழந்தைகளும் 100

##~##
தீவிரவாதிகளை வரைந்திருந்தாலும், அந்த 100 தீவிரவாதிகளிடமும் சொல்லிவைத்து வரைந்ததுபோலக் காணப்பட்ட ஒற்றுமைகள்தான்  அதிர்ச்சிக்குக் காரணம். ஆம்... அத்தனை தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்திருந்தார்கள்; தாடி வளர்த்திருந்தார்கள். சில தீவிரவாதிகள் முழங்கால் வரை வேட்டி கட்டியவர்களாகக்கூட இருந்தார்கள். அதோடு, அந்தப் பாதிரியார் கிளம்பிப் போயிருக்கலாம். போகிறபோக்கில் ஒரு கேள்வி கேட்டார்.

'உங்கள் எல்லாருக்கும் எத்தனை இஸ்லாமிய நண்பர்கள் இருப்பார்கள்?’ என்பதே அந்தக் கேள்வி.  

என் நட்பு அலமாரியின் டிராயர்களைத் திறக்கத் தொடங்கினேன். கல்லூரிக் காலங்களில் இரண்டு, மூன்று நெருக்கமான இஸ்லாமியப் பெண் தோழிகள் இருந்தார்கள். ஆசையாகப் பிரியாணி செய்துவந்து கொடுத்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் இருப்பது குவைத்திலா, துபாயிலா... தெரியாது. அதுபோக மீதம் இருந்த இஸ்லாமிய நண்பர்கள் பார்த்தால் சிரிப்பது... முறைப்பது... அதோடு சரி. நெருக்கமான பழக்கம் இல்லை. அப்படியென்றால், எனக்கு நெருக்க மான இஸ்லாமிய நண்பனே இல்லையா? இருந் தான். என் பள்ளிக் காலங்களில் ஒருத்தன் இருந்தான். எனக்கு ரொம்பவே நெருக்கமாக, என்னை எப்போது பார்த்தாலும் கட்டித் தழுவுகிற, என் உடைகளை மாற்றிப் போட்டுக்கொள்கிற உரிமையோடு, எனக்கு மிகவும் பிடித்த தர்பூச ணிப் பழத்தை அப்படியே என் வாயில் திணிக்க முயல்கிற நட்போடு ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் ரசூல்!

மறக்கவே நினைக்கிறேன்

தூத்துக்குடியில் எனக்குக் கிடைத்த பள்ளி நண்பன். எனக்கும் ரசூலுக்குமான அறிமுகம் ரொம்பவே சுவாரஸ்யமானது. எங்கள் விடுதியில் இருக்கும் சின்னப் பையன் ஒருவனை அழுதபடி கூட்டிக்கொண்டுதான் ரசூல் முதன்முறையாக எங்கள் விடுதிக்கு வந்தான். விசாரணையில் அவன் எங்களிடம் சொன்னது, 'பையன் காசு இல்லாம வடை எடுத்துத் தின்னுருக்கான். கடைக்காரர் பிடிச்சு சட்டயக் கழட்டி அங்கேயே நிப்பாட்டிட்டார். நாங்க அங்க பக்கத்துலதான் கறிக்கடை வெச்சிருக்கோம். அதான் வாப்பா, பையன் சாப்பிட்டதுக்குக் காசு குடுத்துட்டு, கொண்டுபோய் ஹாஸ்டல்ல விட்டுட்டுவாடானு அனுப்பிவெச்சாரு’ என்று அழுதுகொண்டிருந்த சிறுவனின் கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கிளம்பினான். எனக்கு அப்போதே... அந்த இடத்திலேயே ரசூலைப் பிடித்துப்போனது.  

எங்கள் பள்ளியிலேயே ரசூல் பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். நாங்கள் இருவரும் ஒரே சாலை வழியாகத்தான் இவ்வளவு நாள் அந்தப் பள்ளிக்குச் சென்றுவந்திருக்கிறோம் என்று எங்கள் இருவருக்குமே தெரிந்த ஒரு நல்ல நாளில் தொடங்கியது எங்கள் நட்பு. அந்த ரசூல்தான் முதல்முறையாக எனக்குப் பிரியாணி சாப்பிடக் கொடுத்தது, அந்த ரசூல்தான் எனக்கு ஆட்டுத் தோலை உரிக்கக் கற்றுக்கொடுத்தது, அந்த ரசூல்தான் எனக்கு தூத்துக்குடி புது பஸ் ஸ்டாண்டைக் காண்பித்தது, அந்த ரசூல்தான் பனிமயமாதா கோயில் திருவிழாவுக்குக் கூட்டிப் போனது, அந்த ரசூல்தான் சார்லஸ் தியேட்டருக் கும் அழைத்துப்போனது, அந்த ரசூல்தான் மூணாம் மைல் சுடுகாட்டுப் பயத்தைப் போக் கியது, அந்த ரசூல்தான் பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்தது, அந்த ரசூல்தான் தெரு கிரிக்கெட் டீமில் என்னைச் சேர்த்தது. ரசூலுக்கு என்னை ரொம்பப் பிடித்திருந்தது. எனக்கு ரசூலை ரொம்ப ரொம்பப் பிடித்திருந்தது.

எப்போது பார்த்தாலும் ஓடிவந்து கட்டித் தழுவுகிற ரசூலை யாருக்குத்தான் பிடிக்காது? எங்கள் பள்ளியில் எல்லாருக்கும் ரசூலை அவ்வளவு பிடித்திருந்தது. இப்படியான ரசூலை என்னால் ஏன் அவ்வளவு எளிதாக நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்று கேட்கிறீர் களா? அவன் என் நினைவில்தான் எப்போதும் இருக்கிறான். ஆனால், அதை நான் வெளியே சொல்ல முடியாதபடி இருக்கிறேன். இனி, அதைச் சொல்லித்தான் ஆக வேண்டும், அதை நினைத்துத் தான் ஆக வேண்டும். நினைத்தால்தான் மறக்க முடியும். மறக்கத்தான் நினைக்கிறேன். ஆனால், அது கண்டிப்பாக என்னைக் கட்டித் தழுவிய என் ரசூலை அல்ல!

மறக்கவே நினைக்கிறேன்

கட்டித் தழுவுகிற ரசூலும் எட்டி விலகுகிற நாங்களும் நண்பர்களாக இருந்த இந்தியாவின் பனிபடர்ந்த வெள்ளை எல்லையில், கார்கில் யுத்தம் அப்போது உச்சத்தில் இருந்தது. தினமும் பள்ளிக் கூட்டத்தில் நாங்கள் இந்திய ராணுவ வீரர்களுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம்.

'எங்கள் நாட்டை, எங்கள் வீரர்கள் நம்புகிறார்கள். நாங்கள், எங்கள் வீரர்களை நம்புகிறோம். ஜெய்ஹிந்த்!’

எங்கள் பிரார்த்தனையைக் கேட்காமல் கடவுள் காது குடைந்துகொண்டிருந்த ஒரு நேரத்தில்தான் அது நடந்திருக்க வேண்டும். தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலம் என்கிற ஒரு ராணுவ வீரர் அன்று எல்லை யில் சண்டையின்போது கொல்லப்பட்ட செய்தி தூத்துக்குடி வந்து சேர்ந்தது. ஒட்டு மொத்த நகரமும் ஒரு பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. எல்லாரும் சுவரொட்டிகள் மூலமாகவும் பேனர்கள் மூலமாகவும் ராணுவ வீரர் அருணாச்சலத்துக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவித்தவண்ணம் இருந்தனர். நகரத்தில் உள்ள எல்லா பள்ளி மாணவ - மாணவிகளும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடிவுசெய்தோம். எங்கள் பள்ளியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள்.

கட்டித் தழுவுகிற ரசூலின் தலைமையிலான எங்கள் குழு முழுக்க முழுக்கப் பூக்களால் அலங்கரிக் கப்பட்ட ஒரு பிரமாண்ட மலர்வளையம் வைக்க வேண்டும் என்று முடிவுசெய்து, ஆளுக்கு 10 ரூபாய் வசூல் செய்தோம். வசூல் செய்த பணத்தோடு மலர்வளையம் வாங்க சைக்கிளில் போனது நானும் என்னைக் கட்டித் தழுவுகிற ரசூலும்தான். நாங்கள் கொண்டுபோன பணத்தைக்காட்டிலும் இன்னும் அதிகமான பணம், நாங்கள் விரும்புகிற மாதிரியான மலர்வளையம் வாங்கத் தேவைப்பட்டது. நான் என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், எங்களைக் கட்டித் தழுவுகிற ரசூல் எதையும் யோசிக்கவில்லை. சைக்கிளை அவர்களின் கறிக்கடையை நோக்கி மிதித்தான். அங்கே கடையில் அவன் அப்பா இல்லை. வேலை ஆள்தான் இருந்தார். அந்த வேலை ஆள் பார்க்காத நேரத்தில் கடையின் கல்லாப் பெட்டியில் இருந்து ஒரு புது 100 ரூபாய்த் தாளை எடுத்து பாக்கெட்டில் சொருகிக்கொண்டு வெளியே வந்தான். இப்போது எங்கள் சைக்கிள் மறுபடியும் அந்த மலர் வளையம் வாங்கும் கடை நோக்கிச் சிட்டாகப் பறந்தது!

ராணுவ வீரர் அருணாச்சலத்தின் வீட்டில் மொத்த தூத்துக்குடியும் கூடியிருந்தது. ஆட்சித்தலைவர், சட்ட மன்ற உறுப்பினர்கள், காவல் துறை அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், வணிகர்கள், கட்சிக்காரர்கள், பொதுமக்கள், மாணவ - மாணவிகள் என எல்லாரும். சின்னக் குழந்தைகள் பூக்களை அள்ளி அள்ளி தேசியக் கொடி போர்த்தப்பட்ட வீரரின் உடல் மீது தூவினர். நாங்களும்ரசூலின் தலைமையில் கம்பீரமாகச் சென்று எங்கள் மலர்வளை யத்தை வைத்தோம். அப்போது வீரரின் உடல் அருகில் இருந்தவர்கள் எங்கள் சட்டை களில் இந்திய தேசியக் கொடியைக் குத்தி வணக்கம் செய்து அனுப்பினார்கள். அந்தத் தருணம் எங்களைச் சிலிர்ப்படையச் செய்தது. நாங்கள் அனைவரையும் பார்த்து மிடுக்குடன் சல்யூட் வைத்தோம். அரசு மரியாதையுடன் வீரரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. தேசியக் கொடி போர்த்தப் பட்ட வீரரின் பூத உடல் ஏற்றிய வாகனம் முன் செல்ல... அதன் பின்னால் ஒவ்வொரு குழுவாக, வரிசையாக வீர வணக்கம் செலுத்தும் கோஷங் களை எழுப்பியவாறு சென்றோம். எங்கள் பள்ளி மாணவன் கோஷமிட... நான், ரசூல் உட்பட எல்லாரும் கோஷமிட்டோம்.

மாணவன்: ''பாகிஸ்தான் டவுண் டவுண்!''
நாங்கள்: ''பாகிஸ்தான் டவுண் டவுண்!''
மாணவன்: ''நவாஸ் ஷெரீப் டவுண் டவுண்!''
நாங்கள்: ''நவாஸ் ஷெரீப் டவுண் டவுண்!''
மாணவன்: ''துலுக்கன் டவுண் டவுண்!''
நான், ரசூல் உட்பட நாங்கள்: ''துலுக்கன் டவுண் டவுண்!''

மறக்கவே நினைக்கிறேன்

இன்னொரு முறையும் மாணவனும் நாங்களும் 'துலுக்கன் டவுண் டவுண்’ சொல்லும்போதுதான் எங்களுக்கு உறைத்தது. அருகில் நடந்துவந்த பெரியவர்கள் சிலர் திட்டினர். கூட்டம் சலசலத் தது. கோஷம் போட்ட மாணவனின் சட்டை யைப் பிடித்து, 'எதற்கு, ஏன் அப்படிச் சொன்னாய்’ என்று கேட்டோம். கோபத்தில் அப்படிச் சொன்னதாகச் சொன்னான். 'பாகிஸ்தான் ஒழிக என்றால், நவாஸ் ஷெரீப் ஒழிக என்றுதானே அர்த்தம். நவாஸ் ஷெரீப் ஒழிக என்றால், முஸ்லிம்கள் ஒழிக என்றுதானே அர்த்தம்’ என்று அவன் விளக்கம் கொடுத்தபோது, மிகச் சரியாக அவன் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. அடித்தவர் குல்லா அணிந்த ஒரு மனிதர். அடித்ததோடு மட்டும் இல்லாமல், 'இப்போ இந்த நொடியில் என் மகன் இப்ராஹிம் உன் இந்தியாவுக்காகவும் என் இந்தியாவுக்காகவும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கான். கண்டிப்பா நாளைக்கோ நாளை மறுநாளுக்கோ அவன் தேசியக் கொடி மூடின பொணமாத்தான் வருவான். அவன் சாவு ஊர்வலத் திலயும் நீ கோஷம் போட்டுக்கிட்டு வருவேன்னு எனக்குத் தெரியும். அப்போ 'யார் ஒழிக’னு கத்துவ நீ? சொல்லு... யார் ஒழிகனு கத்துவ நீ?’ என்று அவன் உடலைக் குலுக்கினார். எங்களது இதயம் கூனிக் குறுகி சுருங்கிப்போய் எங்கோ உடம்பின் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டதுபோல இருந்தது. அப்போதுதான் திடீரென்று உறைத்து எங்களை எப்போதும் கட்டித் தழுவுகிற ரசூலை நாங்கள் தேடினோம். அங்கு ரசூல் இல்லை. ரசூல் அங்கு இல்லவே இல்லை. அந்த இடத்தில் இருந்து ரசூல் மறைந்துவிட்டான். அவனுடைய கறிக்கடையில் அவனுடைய அப்பாவோடு இருக்கும்போது பார்த்து எப்படி இந்த விஷயத்தைப் பற்றி அவனிடம் பேசுவது என்று தெரியாமல் நாங்கள் அவன் பள்ளி வரும் நாளுக்காகக் காத்திருந்தோம். ஒரு வாரத்துக்குப் பிறகுதான் எங்களுக்கு ஒரு செய்தி தெரிந்தது. எங்களை எப்போதும் கட்டித் தழுவுகிற எங்கள் ரசூல், ஓர் இஸ்லாமியப் பள்ளியில் சேர்ந்துவிட்டான்!

அதற்காக எப்படிச் சும்மா இருக்க முடியும்? அவனுடைய புதுப் பள்ளியில் போய் அவனுக்காகக் காத்திருந்தோம். ரசூல் வந்தான். எங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ரசூலாக... தலையில் குல்லா அணிந்து, தோளில் ஒரு வெள்ளை கர்சீப்பைப் போட்டபடி வந்தான். எங்களைப் பார்த்தான். சிரித்தான். எங்களைப் பார்த்ததும் எப்போதும் கட்டிப்பிடிக்கும் ரசூல் அதிசயமாக அப்போது முதன்முறையாக எங்கள் கைகளைப் பிடித்துக் குலுக்கியது என்னவோபோல் இருந்தது.

கோஷம் போட்ட மாணவன் அவனிடம் மன்னிப்புக் கேட்க... அவன் சிரித்துக்கொண்டே, 'இனி ஒருபோதும் என்னால் உங்களைக் கட்டிப்பிடிக்க முடியாது. உங்களைக் கட்டிப் பிடிக்காம உங்களோடு எனக்குப் பழகவும் வராது!’ என்று சொல்லிவிட்டு, எங்களை விட்டு விலகி, அந்தப் பெரிய இஸ்லாமியப் பள்ளியின் காம்பவுண்டுக்குள் சென்று மறைந்தான். அவ்வளவுதான். அதன் பிறகு இன்று வரை நான் ரசூலைப் பார்க்கவில்லை. ரசூலும் என்னைப் பார்க்கவில்லை. அது மட்டும் இல்லா மல், நானும் அவனும் இப்போது நண்பர்களும் இல்லை... எதிரிகள். எப்படி என்று கேட்கிறீர் களா..?

எங்கோ அவன் இறையை மட்டும் மதிக்கும் இஸ்லாமியத்தில் இறுக்கமாக இருக்கிறான். நானோ அடிக்கடி அல்லாஹ்வின் கையிலே ஆயுதத்தைத் திணிக்கும் சினிமாவில் நெருக்கமாக இருக்கிறேனே!

- இன்னும் மறக்கலாம்...