Published:Updated:

விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்

வாசகர் கேள்விகள்... படம்: எல்.ராஜேந்திரன்

விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்

வாசகர் கேள்விகள்... படம்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
##~##

கபிலன், ஃபேஸ்புக்.

''மீனவ மற்றும் பீடித் தொழிலாளர்கள் அளிக்கும் நன்கொடை மூலம் நீங்கள் பெற்றதாகக் கூறும் பணம்: ரூபாய் 25,17,991. உங்கள் போராட்டங்களுக்கான மொத்தச் செலவு: ரூபாய் 17,64,233. ஆனால், நீங்கள் அளித்த புள்ளிவிவரங்களின்படி, இடிந்தகரையில் தோராயமாக 1,332 குடும்பங்கள் இருக்கலாம். ஆக, நீங்கள் வசூலித்த நன்கொடை - 1332 x 200 = 2,66,400 என்பதாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் வசூல் கணக்கு காட்டியிருப்பது ரூபாய் 25,17,991. வித்தியாசமான 22,51,591 எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்கள் போராட்டம் சுமார் 10,000 பேர் வசிக்கும் இடிந்தகரை கிராம மக்கள் மட்டும் நடத்தும் போராட்டம் அல்ல; தமிழகம், கேரளம் முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பு மக்கள் வருகிறார்கள். அவர்கள் நன்கொடை தருகிறார் கள். பள்ளிக் குழந்தைகள்கூட நிதி திரட்டிக் கொண்டுவருகிறார்கள். எங்கள் பகுதி மீனவர்கள் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது தங்கள் வருமா னத்தில் ஒரு பகுதியைப் போராட்டத்துக்குத் தருகிறார்கள். எங்கள் போராட்டக் கணக்கை ஒரு குழு மேலாண்மை செய்துவருகிறது. அவர்கள் 40 பேர் கொண்ட ஊர் கமிட்டிக்கும், பல்வேறு ஊர்களில் இருந்து வரும் சமுதாயத் தலைவர்களுக்கும் கணக்குக் காட்டுகிறார்கள்.

நீங்கள் எங்களிடம் கணக்குக் கேட்பதை நான் வரவேற்கிறேன் கபிலன். பதில் சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். அதுபோல கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில் 4,000 கோடி ரூபாய் அதிகம் செலவு ஆகிவிட்டது என்று திடீரெனச் சொல்கிறார்களே. இயங்காத திட்டத்தில் எப்படி இவ்வளவு கூடுதல் செலவு குதித்துவந்தது? மக்கள் பணத்தில் சுமார் 18,000 கோடி ரூபாயைப் பாழும் ரஷ்யக் கிணற்றுக்குள் போட்டும், ஒரு பல்ப் எரிக்கும் அளவுக்குக்கூட மின்சாரம் இன்னும் வரவில்லையே? அவர்களிடம் கணக்குக் கேட்டீர்களா? கேட்பீர்களா?''

மகேஷ், கோயம்புத்தூர்.

''ரஷ்யாவின் VVER 1,000 ரியாக்டர்என்பது அமெரிக்காவின் Advanced Boiling WaterReactor-க்கு இணையானது. இரு டெக்னாலஜிகளுக்கு இடையில்தான் உலக அளவில் போட்டி நிலவுகிறது. இந்தியா நிறைய அணு உலைகளை நிறுவும் நாடு. ஆகையால், ஒரு VVER 1,000 வெற்றிபெற்றால், அமெரிக்காவுக்கு உலக அளவில் அணு உலைச் சந்தையில் வியாபாரம் போய்விடும் என்பதற்காக, உதயகுமாரன் மூலம் அணு உலைத் தரகு வேலை பார்க்கப்படுகிறது என்கிறேன் நான். இந்தச் சந்தேகத்துக்கு உங்கள் விளக்கம் என்ன?''

''ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், தென் கொரியா போன்ற அணு உலை வியாபாரம் செய்யும் நாடுகள் மத்தியில் போட்டி இருக் கலாம். ஆனால், நாங்கள் அனைத்து நாட்டு அணு உலைகளையும்எதிர்க் கிறோம். இந்தியாவுக்கு மேற்கண்ட கிழக்கிந்தியக் கம்பெனிகளும் வேண்டாம். இவர்கள் விற்கும் ஆபத்தான அணு உலை களும் வேண்டாம்; படைப்பாற்றலுடன் தலை மைத்துவத்துடன் சிந்தித்து மக்களை அழிக் காத மாற்று வழிகளில் எரிசக்தி சுதந்திரம் பெறுவோம் என்கிறோம். சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவுக்கு மேலே ஒரு New Clear Sky வராதா என்று ஏங்குகிறோம் நாங்கள். ஆனால், 'நியூக்ளியர் பவர் ஸ்டார்’போல சிந்திக்கிறீர்கள் நீங்கள்!''

விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்

ஆர்.பாலகுமாரன், பொன்மலை.

''சார்... தமிழீழப் பிரச்னையாகட்டும்... நக்சலைட்கள் போராட்டமாகட்டும்... அஹிம்சை வழியில் ஆரம்பித்து ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆயுதப் போராட்டமாக மாறியது. அந்த நிலை கூடங்குளம் போராட்டத்துக்கும் ஏற்படுமா?''

''அந்த நிலை வரக் கூடாது என்பதுதான் எனது ஆத்மார்த்த விருப்பம், ஆழமான கொள்கை. ஆனால் மத்திய, மாநில அரசுகள் அறவழிப் போராட்டங்களை உதாசீனப்படுத்தி, மென்முறைப் போராளிகளை ஏறெடுத்தும் பார்க்காது, அகம்பாவத்தோடு, எதேச்சதிகா ரமாக, அடக்குமுறை செய்தால்... இளைஞர்கள் தவறான பாடங்களைப் பெறுவார்கள். பின் விளைவுகள் விரும்பத்தகாதவையாகத்தான் இருக்கும்.

தந்தை செல்வா, பெரியவர் பொன்னம்பலம் போன்றோர் நடத்திய அஹிம்சைப் போராட்டங்களும், சிங்களப் பேரினவாதம் கைக்கொண்ட அணுகுமுறையும் நினைவுக்கு வருகின்றன. இங்கேயும் இதே போக்குதான் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, எந்தப் பேருந்தையும் உடைக்காத, கொளுத்தாத நெல்லை மாவட்டக் கடலோரக் கிராமங்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக அரசுப் பேருந்து வருவதில்லை. அழுகிற குழந்தைக்குப் பால் கொடுத்தால், அடிப்பதைப் பற்றி அது சிந்திக்காது!''

கே.குணா, புதுச்சேரி.

''தமிழகத்தில் புது வெள்ளமாக ஆர்ப்பரித்திருக்கும் மாணவர் சக்தியை உங்கள் போராட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வீர்களா?''  

''பல்வேறு ஊர்களில் மாணவர்களே ஈழப் பிரச்னைக்கு அடுத்ததாக கூடங்குளம் பிரச்னை பற்றி தன்னார்வ முன்னெடுப்புடன் பேசினார் கள். தமிழீழம் போன்று, தமிழகத்தின் இயற்கை வாழ்வாதாரங்களைப் போற்றிப் பாதுகாப்பதும் முக்கியமானது எனும் விழிப்பு உணர்வு அனைத்து மாணவ, மாணவியருக்கும் நிறையவே இருக்கிறது. எங்களை அவர்களுடன் இணைத்துக் கொள்ளவும், அவர்களுடன் நாங்கள் இணைந்துகொள்ளவும் வாசல்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன!''

என்.மதுமிதா, சென்ன-75.

''எளிதில் கட்டுப்படுத்த முடியாதவர்கள், சட்டென்று உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றெல்லாம் சொல்லப்படும் மீனவ மக்களை எப்படி இப்படிக் கட்டுக்கோப்பாகப் போராடவைக்கிறீர்கள்?''

''எந்த ஒரு மனிதக் குழுமத்தையும் இப்படிக் குறிப்பிட்ட குணாதிசயங்களோடு அடையாளப் படுத்துவது சரியல்ல. பெரும்பாலான மனிதர்களைப் போலவே, மீனவப் பெருமக்களும் அன்புக்கு அடிமையானவர்கள். ஆனால், அகந் தைக்கு அடங்காதவர்கள். தங்கள் சாதியை, மதத்தை, ஊரைச் சாராத என்னையும், எனது நண்பர்களையும் இவர்கள் தங்களில் ஒருவராக ஏற்றெடுத்து அன்பு காட்டுவதும், கண்போலக் காப்பதும் இந்தியாவில் வேறு எங்கும் நடவாத அதிசயம். சாதித் தீயில் எரியும் இன்றைய தமிழகத்தின் விடிவுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்கள் நம் மீனவர்கள்!''

ஆனந்த் பாலா, ஃபேஸ்புக்.

''நான் ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜீனியர். அணு சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதுதான் இருப்பதிலேயே மிக மோசமான வழிமுறை என்பது இங்கு பலருக்குத் தெரியவில்லை. அணு உலை சக்தியினால் ஏற்படும் விபரீதங்கள், அபாயங்கள் குறித்து நீங்கள் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்? ஏனெனில், அரசாங்கத் தரப்பில் இருந்து இதை நாம் எதிர்பார்க்க முடியாது!''  

''கதிர்வீச்சு: அணு உலையிலிருந்து காற்றின் மூலமாகவும், நீரின் மூலமாகவும் வெளிப்படும் ஆபத்தான கதிர்வீச்சு... தைராய்டு பாதிப்பு, புற்றுநோய், மலட்டுத்தன்மை, மூளை வளர்ச்சிக் குறைவு எனப் பல்வேறு நோய்களுக்கு வழி கோலும்.

அணுக்கழிவு: அணு உலையில் எரிக்கப்பட்ட யுரேனியத்திலிருந்து புளுட்டோனியம் எனும் கழிவு வெளிவரும். இது தனது கதிரியக்கம் முழுவதையும் இழக்க 48,000 (ஆமாம், நாற்பத்தெட்டாயிரம்தான்!) ஆண்டுகள் ஆகும். அதுவரை இதைக் கவனமாகக் கையாள வேண்டும், பாதுகாக்க வேண்டும். 1984-ம் ஆண்டு போபால் விஷவாயு விபத்தில் வெளிப்பட்டு, வெட்டவெளியில் கிடக்கும் விஷக் கழிவை என்ன செய்வது என்று இதுவரை முடிவுசெய்ய இயலாத கையாலாகாதவர்கள் ஆளும் நாடு நமது நாடு.

விபத்து: மற்ற தொழிற்சாலைகளைப் போல் அல்லாமல்; அணு உலையில் சிறு விபத்துகூட மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அணு உலைப் பகுதியில் வசிக்கும் மக்கள் விபத்துக் குப் பிறகு 77 கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும், 115 கி.மீ. வரை 5 ஆண்டுகளுக்கும், 140 கி.மீ. வரை ஓர் ஆண்டு காலத்துக்கும் திரும்பிப் போக முடியாது. அணு உலை விபத்தில் அன்று கொல் வதைவிட நின்று கொல்வதுதான் அதிகமாக, அளவிட முடியாததாக இருக்கும்.

சுற்றுச்சூழல் சீரழிவு: அணு உலையைக் குளிர்விப்பதற்காகக் கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப் பட்டு, பின்னர் குறைந்த கதிர்வீச்சு கலந்த வெந்நீராகக் கடலில் மீண்டும் கொட்டப்படும். இதனால் மீன் வளம் அழியும், மீனவர்களின் வாழ்வாதாரம் நாசமாகும், அனைத்து மக்களின் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அணு உலையில் இருந்து காற்றின் மூலம், நீரின் மூலம் பரவும் கதிர்வீச்சு நிலத்தடி நீரைக் கெடுக்கும், பயிர்களை நச்சுத் தன்மைக்கு உள்ளாக்கும், கால்நடைகளைத் தாக்கும். பால், இறைச்சி, தானியங்கள் வழி மனித உணவுச் சங்கிலிக்குள் புகுந்து நோய் களை உண்டாக்கும்.

பாதுகாப்பு: அணு உலை என்பது திறந்து கிடக்கும் ஓர் அணுகுண்டு. தீவிரவாதிகளால், எதிரிப் படையால் எந்த நேரத்திலும் தாக்கப்படலாம். பாதுகாப்பு காரணங்களால் அணுஉலைப் பகுதி ராணுவமயமாக்கப்படும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போகும்.

அறிவீனம்: நடு வீட்டுக்குள் நல்ல பாம்பை விட்டுவிட்டு, நிம்மதியாகத் தூங்குங்கள் என்று சொல்கிறது அரசாங்கம். லஞ்சமும், ஊழலும், திருட்டும், பொய்யும், புளுகும் தாண்டவமாடும் நாட்டில் எப்படி நமது குழந்தைகளை நிம்மதியுடன் விட்டுச்செல்வது? 40 ஆண்டு காலம் நாம் மின்சாரம் பெற, நமது வழித்தோன்றல்கள் எல்லாம் நாசமாகப் போக வேண்டுமா?''

ஆனந்த் பாலா, ஃபேஸ்புக்.

''நீங்களும் ஃபேஸ்புக்கில் பரபரப்பாக கூடங்குளம் அணு உலை தொடர்பாக ஸ்டேட்டஸ் பதிவிட்டுக்கொண்டே இருக்கிறீர் கள். அங்கு நடக்கும் மற்ற சந்தடிகளைக் கவனிப்பீர்களா? ஃபேஸ்புக்கின் பிரபல போராளிகளைப் பற்றி அறிவீர்களா?''  

''நேரம் கிடைப்பதற்கேற்ப சந்தடிகளைக் கவனிக்கிறேன். போராளிகளை அறிந்து கொள்கிறேன். நடுத்தர மக்களைச் சென்றடைய ஃபேஸ்புக் ஒரு நல்ல வழியாக இருந்தாலும், ஃபேஸ்புக் புரட்சியோடு திருப்தியடைந்துவிடக் கூடாது. அடிமட்ட மக்களோடு ஃபேஸ் டு ஃபேஸ் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு! ''

சிவ நாராயணன், ஃபேஸ்புக்.

''இன்றைய இளைஞர்களுக்கு அனுதின வாழ்க்கையே போராட்டமாகத்தான் இருக்கிறது.... அவர்கள் மனதில் பதித்துக்கொள்ள ஒரு வாசகம் சொல்லுங்களேன்?''  

‘‘ Think that you can and you will,
    It’s all in a state of mind.

'உன்னால்  முடியும் என்று நினை, நீ முடிப்பாய்!
எல்லாமே மன நிலையில்தான் இருக்கிறது!''’