##~##

ரு பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகள் கழித்து நண்பர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சி. 45 முதல் 50 வயது வரையிலான நிறைய மனிதர்களைப் பார்க்க முடிந்தது. ஐந்தாறு பேர் குடும்பத்தோடு அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார்கள். இந்தச் சந்திப்புக்காக வீட்டு விசேஷத்தைத் தள்ளிவைத்தவர்கள், ஊருக்குச் செல்வதை ஸ்கிப் செய்தவர்கள் என்று ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருந்தது.

'டேய்... என்னடா இத்தத்தண்டி ஆகிட்ட?’ என்று கிருஷ்ணசாமி கேட்க... இருக்கும் கொஞ்சம் முடியையும் தலையோடு தடவிவிட்டுச் சிரிக் கிறார் மனோகர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அங்கே பாருடா சந்துரு! அப்படியே இருக்கான்டா. அதே கலரு, அதே உடம்பு!’ காஸ்ட்லி ஃபிரேமில் கண்ணாடி போட்ட அந்த சந்துரு, இந்த இரண்டு பேரையும் புரியாமல் பார்த்து லேசாகப் புன்னகைக்கிறார். கிருஷ்ணசாமி அவரிடம் ஏதோ சொல்ல வர, 'இரு... இரு... கண்டுபிடிக்கட்டும்’ என்று மனோகர் கண்ணடிக் கிறார். சந்துருவுக்குத் தர்மசங்கடம். 'தெரிந்தவரா... தெரியாதவரா’ என்று தெரியாமல் திருதிருவென முழிப்பதைப் போல தர்மசங்கடம் வேறு இல்லை.

இன்னொரு பக்கம், 'இதில் சஸ்பென்ஸ் என்ன வேண்டிக்கிடக்கு... அவங்களா சொல்லக் கூடாதா?’ என ஆத்திரமும் வரும். மிகவும் திணறினால், இடையிடையே க்ளூ கொடுப்பார் கள். ஒருவேளை மிகவும் வேண்டப்பட்டவர்களாக இருக்கும் என்று நினைத்து 'க்ளூ’ கேட்டால், கடைசியில் முந்தா நாள் சந்தித்து 'நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்ட நபராக இருக்கும்.

ஆனால், 25 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும்போது கட்டாயம் க்ளூ தேவைதான். காஸ்ட்லி ஃபிரேம் சந்துருவும் க்ளூவுக்காகத்தான் காத்திருந்தார்.

கிருஷ்ணசாமி, 'என்னடா... தெரியலையா?’ என்று கேட்டுவிட்டு, 'முந்திரிக் காடு... டிராயிங் கிளாஸ்!’ என்று ஆரம்பிக்க, சட்டென்று பிரகாசமான சந்துரு அடுத்த நிமிடம் சுதாரித்து கிருஷ்ண சாமியின் வாயை அடைக்க, 'மாப்ள... நான் சொல்லவா?’ என மனோகர் கேட்க, அவரை அடிக்கத் துரத்தினார் சந்துரு. மனோகர் தொந்தியைத் தூக்கிக்கொண்டு ஓட, கிருஷ்ணசாமி, மனோகரின் குடும்பத்தினர் சிரித்து ரசித்தார்கள். சந்துருவின் மனைவி மட்டும் 'அந்த முந்திரிக் காடு’ மேட்டர் தெரிந்தாக வேண்டும் என்பதுபோல முகத்தை வைத்திருந்தார்.

பாஸ்வேர்டு - 7

''இங்கே இருக்கிற ஒவ்வொரு மரமும், கதவும், ஜன்னலும், ஏன்... இந்தக் காத்துகூட எங்க கதையை இன்னமும் பேசிட்டு இருக்கும் சார்!''- கிருஷ்ணசாமி உணர்ச்சி பொங்கப் பேசினார். பழைய நண்பர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த இரண்டு வருடங்களாகப் பெருமுயற்சி செய்தவர். இன்றைக்குப் பெரிய தொழிலதிபர். அவரை நம்பிக் குடும்பங்கள் வாழ்கின்றன.

''அங்க பாருங்க... அந்தா... அங்கே நிக்கிறாங்க பாருங்க அஞ்சு பேர். அங்கே ஒரு வேப்ப மரம் இருந்துச்சு. அதை இப்ப வெட்டிப்புட்டானுக. நானும் இவனுகளும் தினமும் அங்கேதான் உக்காருவோம். அதே இடத்துல உட்கார்ந்து அந்த வேப்ப மரம் பத்திதான் இப்போ பேசிட்டு இருக்கானுங்க. எங்களோட எல்லா நல்லது கெட்டதும், எல்லா ரகசியங்களும் தெரிஞ்ச ஒரே உயிர்... அந்த மரம்தான்!'' - கிருஷ்ணசாமி சிலாகித்தார்.

பாஸ்வேர்டு - 7

வேதியியல் அறை வாசலில், பேஸ்கட்பால் மைதான முகப்பில், வராந்தாவின் தூண்களுக்கு அருகில், கேன்டீன் மேஜைகளில், பழைய வகுப்பறைகளில் ஆங்காங்கே சின்னச் சின்னக் குழுக் களாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லாரிடத்திலும் பேசுவதற்கு நிறைய இருந்தன. பெரும் பாலான முன்னாள் மாணவர்கள் தங்கள் மனைவியரை ஒரு குழுவாகச் சேர்த்து அவர்களுக்குள் ஒரு நட்பை உருவாக்கிக்கொண்டுஇருந்தார்கள். சில முன்னாள் மாணவிகள் தங்கள் கணவர்களைத் தங்கள் தோழிகளுக்கும், நண்பர்களுக்கும் அறிமுகம்செய்துவைத்தார்கள். கணவ ரின் பழைய கல்லூரிக்கு வந்திருந்த மனைவி களைப் போல, மாணவிகளின் கணவன்மார்கள் அவ்வளவு இயல்பாக இருக்க முடியவில்லை.

''இந்த ஒரு நாளுக்காக நாங்க எல்லாரும் ரொம்ப ஆசையாக் காத்திருந்தோம் சார். அழாத குறையாப் பிரிஞ்ச நாங்க, சுத்தமா தொடர்புகள்அற்றுப் போவோம்னு நினைக்கவே இல்லை. இவங்க எல்லாரையும் தேட ஆரம்பிச்சப்பதான், எங்க செட்ல மூணு பேர் இறந்துபோயிட்டாங்கன்னே தெரிஞ்சது. இங்கே வந்திருக்கிற நிறையப் பேருக்கு இன்னும் அந்தத் தகவலே தெரியாது!'' - மனோகருக்குக் கண்கள் பனித்தன.

கால்பந்து மைதானத்தில் தன் மகளிடமும் மகனிடமும் தன் வீரதீர பராக்கிரமங்களைப் பெருமைபடச் சொல்லிக்கொண்டிருந்தார் ஒருவர். அன்றோடு கல்லூரியை இடித்துவிடுவார்கள் என்பதுபோல தன் மனைவியையும் பிள்ளைகளையும் வேகவேகமாக இழுத்துக்கொண்டு ஒவ்வோர் இடமாகக் காட்டிக்கொண்டிருந்தார் இன்னொருவர்.

இவர்களுக்கு மட்டுமல்ல... நம் எல்லாருக்கும், சாலை வழித்தடங்களும், ஆற்றங்கரை மணல்வெளிகளும், தெருவோரக் குட்டிச்சுவர்களும், பள்ளிக்கூடத்துப் பின்பக்கத் தோப்புகளும், கடற் கரைப் படகு மறைவுகளும், அடிக்கடி டாப் அடித்த டீக்கடைகளும், எங்கோ ஒரு தியேட்டரில் அடித்த விசில் சத்தங்களும், பேருந்து நிறுத்தக் கைப்பிடிச் சுவர்களும், ஒளித்துவைத்திருக்கிற எம்ப்ராய்டரி கைக்குட்டைகளும், வீட்டில் பழசு பட்டையை ஒழிக்கும்போது வந்துவிழும் ஆட்டோகிராஃப் புத்தகங்களும், கொடைக்கானல் மலைச் சரிவுகளும், மொட்டை மாடி சிவப்புத் தரைகளும்... நம் நட்பை, உறவுகளை, காதலை, ஆத்மார்த்தங்களை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. தூக்கத்தில் திடுக்கிட்டு விழித்து, மலங்க மலங்கச் சுற்றிப் பார்த்துவிட்டு பிறகு படுத்துக்கொள்வதைப் போல் இந்த ஞாபகங்களில் எழுந்து மீண்டும் படுத்துக்கொள்கிறோம்.

பாஸ்வேர்டு - 7

ட்வின்ஸ் டீ ஸ்டால் வாசலில் டீ கொடுக்கும் பையனை வம்பிழுத்துக்கொண்டே இரவு முழுக்க சினிமாக் கதைகளும், அரசியல் தத்துவங்களும் பேசிப் பேசி ஓய்ந்துபோன நிலா வெளிச்ச இரவு கள், யார் காசு கொடுக்கப்போகிறார்கள் என்பது தெரியாமல் பச்சை வாழைப் பழத்தை ஆளாளுக்கு ஐந்து, ஆறு என்று தொண்டை அடைக்கும் வரை தின்ற நாட்களில், பாண்டியன் மெஸ்ஸில் சிக்கன் 65 வறுவலில் ஆளுக்கு ஒரு பீஸ் அளந்து எடுத்துத் தின்ற தினங்களைக் காலம் மறக்கடித்து ஒவ்வொருவரையும் ஆளுக்கு ஒரு திசையில் அழைத்துக்கொண்டு போகும் என்று நினைத்தது இல்லை. ஆரம்ப நாட்களில் அடிக்கடி போன், அப்புறம் எப்போதேனும் மெயில், அதன் பிறகு எங்கேனும் பார்த்தால் 'என்னடா பண்ற?’ என்றொரு விசாரிப்பு, பிறகு யார் யார் என்ன செய்கிறார்கள் என்று யார் வழியாகவோ கேட்டுத் தெரிந்துகொள்வது. இப்படி இடை வெளிகள் அதிகரிப்பது தெரியாமல் மனங் களிடையே தூரம் நீட்டிக்கப்பட்டுவிடுகிறது. அவனவனுக்கும் ஆயிரம் வேலை இருக்கும் என்ற முடிவில் அவனவனும் குழந்தைகள், அனுதினப் பிழைப்புகள் என்று 9 டு 5 வாழ்க்கை ஷிஃப்ட் நடத்தி கட்டுசெட்டாக மாறிப்போன பிறகு, மனிதர்களையும் அவர்களின் நேசங்களையும் இதோ இப்படியான இடங்கள்தான் ஞாபகப்படுத்திவைக்கின்றன.

கறுப்பு நிற கார் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து இறங்கும் யாரோவை வரவேற்க அனைவரும் அந்தக் காரை நோக்கிச் செல்கிறார்கள். இறங்கி நிற்பவருக்கு ஆறடி உயர தேகம், மோட்டார் சைக்கிள் விளம்பரத்தில் வருவது மாதிரியான ஆகிருதி. ஆனால், இறங்கி நின்ற சில விநாடிகளுக்குப் பிறகு, நிலை தடுமாறுகிறார். அவரது உதவியாளர்கள் இரண்டு கைத்தடிகளை அவரிடம் கொடுக்க, அதைப் பிடித்துக்கொண்டு உறுதியாக நிற்கிறார்.

25 வருடங்களுக்கு முன் அந்தப் பல்கலைக்கழகத்தின் நாயகன் அவர். பிரமாதமான ஸ்போர்ட்ஸ்மேன். பங்கெடுக்கும் போட்டிகளில் எல்லாம் மெடல்களைக் குவித்த அவர்தான் அப்போதைய கல்லூரிப் பெண்களின் ஹீரோ. ஆனால், கால் நூற்றாண்டுக்குப் பிறகு, ஏக்கத்தோடும் இயலாமையோடும் அவர் அனைவர் முன்பும் நின்றார். கலகலப்பாக இருந்த இடம் சட்டென்று கனமாக மாறிப்போனது. பெங்களூர் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் கால்கள் இரண்டையும் பறிகொடுத்தார் அந்த சாம்பியன். தொடர்பில் இருந்த மிகச் சிலரைத் தவிர, வேறு யாருக்கும் அவருக்கு நிகழ்ந்த விபத்தைப் பற்றித் தெரியவில்லை. புதிதாக அவரைப் பார்த்தவர்கள் அனைவரும் எதிர்பாராத அதிர்ச்சியில் தாக்குண்டு, அவரை அணைத்துக்கொண்டு கதறினார்கள். பெண் தோழிகள் அவரைத் தோள் தொட்டு அழைத்துவந்தனர். ஆனால், கால்களை இழந்த மனிதர் அழவே இல்லை. இத்தனை வருடங்களில் அவர் அழுது அழுது ஓய்ந்திருக்கக்கூடும். நண்பர்களின் பிரியங்களைப் பார்த்ததும் அவருடைய மனைவியின் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது.

அனைவரிடமும் நல விசாரிப்புகளும் ஆறுதலும் பெற்றுக்கொண்ட பிறகு தனியாக, மெதுவாக நடந்துசென்று மைதான ஓடுதளப் பாதை அருகே அமர்ந்துகொண்டார் அவர். தன் பார்வையில் படாத வகையில் முதுகுக்குப் பின்னால் இரண்டு கைத்தடிகளையும் வைத்துக்கொண்டார். எல்லாரும் நிகழ்ச்சி அரங்குக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, இவர் அங்கே என்ன செய்கிறார் என்ற ஆச்சர்யத்துடன் அவர் அருகில் சென்று அமர்ந்தேன். என் வருகையைச் சின்ன புன்னகையால் ஆமோதித்தவர், நான் எதுவும் கேட்காமலேயே பேசத் துவங்கினார்.

''இந்த டிராக்லதான் சார்... என் இளமை, வியர்வை, வேகம் எல்லாம் கழிஞ்சது. காலைல அஞ்சு மணிக்கு ரெடியாகி வந்துருவேன். ஸ்பைக் ஷூவை எடுத்து கால்ல மாட்டிக்கிட்டேன்னா, என்னைச் சுத்தி புழுதி பறக்கும். அதுவும் டோர்னமென்ட்லாம் நடந்தா கேட்கவே வேண்டாம்... ஒரு வாரத்துல நாலஞ்சு கிலோ வெயிட் குறைஞ்ச பிறகுதான் வீட்டுக்குப் போவேன். நான் ஓடுறப்போ இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் என் ஃப்ரெண்ட்ஸ்லாம் நின்னு ஒவ்வொரு அடிக்கும் கைத்தட்டிட்டே நிப்பாங்க. நான் ஓடி முடிக்கிற இடத்துல என் தோழிகள்லாம் பிஸ்கட், தண்ணி பாட்டில், டவல்னு கைல வெச்சுக்கிட்டுக் காத்திருப்பாங்க. அந்த நாள்லாம் நினைச்சுப் பார்த்தா, இன்னும் எதுக்கு உயிரோட இருக்கேன்னு தோணுது சார்...'' என்று தோள் குலுங்க விம்மினார். நானும் அழுதுவிடக் கூடாது என்பதற்காக கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்துஇருந்தேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு என் இருப்பைக்கூட மறந்து அந்த மைதானத்தின் புழுதியோடு, மணற் துகள்களோடு, வெள்ளைக் கோடுகளோடு தன் ஆன்மாவை இணைத்துக்கொண்டதுபோல அமைதியாகிவிட்டார். அவரைக் கலைக்காமல் நான் விலகிவந்தேன்.

உயிரற்றவைதான், உயிருள்ள மனிதர்களின் உணர்வுகளைச் சுமக்கின்றன. உயிருள்ள மனிதர்கள்தான் தொடர்புகளை இழந்து தொலைந்து போகிறோம்!  

- ஸ்டாண்ட் பை...