Published:Updated:

குழந்தையின் உலகத்தை திருப்பிக் கொடுங்கள்...

குழந்தையின் உலகத்தை திருப்பிக் கொடுங்கள்...

 ##~##
ந்த மூலையில் நின்றாலும் நம்மைப் பார்த்துக் கண்ணடிக்கிறது அந்த ஆளுயர மிக்கி மவுஸ் புகைப்படம். குட்டியூண்டு சைக்கிளில் உற்சாகமாகப் பெடல் போடுகின்றன வாண்டுகள். பிங்க் நிறத் தலையணையைக் கட்டிக்கொண்டு, தனது புஜ்ஜியைக் கொஞ்சுகிறாள் டோரா. இஞ்ச் பை இஞ்ச் இப்படிச் சந்தோஷம் இருந்தாலும்கூட, மெல்லிய புகைபோல அங்கே கொஞ்சம் சோகமும் இழையோடுகிறது. அது ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் குட்டி தெய்வங்களுக்கான வார்டு!
குழந்தையின் உலகத்தை திருப்பிக் கொடுங்கள்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் ரத்தப் புற்றுநோய் இலவச சிகிச்சை மையம். மொத்தம் 16 படுக்கைகள். ஒவ்வொரு படுக்கையிலும் முளைத்துவிட முட்டித் துடிக்கின்றன மொட்டுக்கள். 'கட்டாயம் பூப்பூக்கும்... கவலை வேண்டாம்’ என்று நம்பிக்கை தெறிக்கப் பேசுகிறார் டாக்டர் குகன். இந்த மையத்தின் அஸ்திவாரமே இவர்தான். புற்றுநோயியல் துறையின் சிறப்பு நிபுணர். இங்கு குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் பெற்றோர் தங்கும் இடம், உணவு இலவசம். கூடவே, நிறைய அன்பும் அரவணைப்பும். தும்மலுக்கும் தூக்கத்துக்கும்கூட காரணங்களை அடுக்கி கரன்ஸியைக் கறக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நடுவில் ஒரு கோயில் இது.

குழந்தையின் உலகத்தை திருப்பிக் கொடுங்கள்...

கோடைக் காலம், குளிர்காலம் எல்லாமுமே 'மருந்துக் காலம்’ என்பதால் குழந்தைகள் சிலருக்குத் தலை முடி வெகுவாகக் கொட்டி இருக்கிறது. உதடுகளில் ஒட்டிக்கொண்டு இருக்கும் செரிலாக் கைத் துடைத்தபடியே புன்னகைக்கிறான் குட்டிப் பையன். வலது கையில் க்ளூக்கோஸ் ஏறிக்கொண்டு இருக்கும் குட்டிப் பெண்ணின் இடது கன்னத்தில் வட்டமாகத் திருஷ்டிப் பொட்டு வைக்கிறார் அம்மா.

யாரும் அறியாமல் விழிகளைத் துடைத்தபடி, நமது தோளில் தட்டுகிறார் குகன். ''கேன்சர் சிகிச்சைன்னாலே சென்னை அடையாறுக்குப் போங்கன்னு சொல்லிட்டு இருந்த காலகட்டம் அது. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் ஒருத்தரின் குழந்தைக்கு நாங்க அடிப்படை சிகிச்சைகளைக் கொடுத்துட்டு, மேல் சிகிச்சைக்காக அடையாறைக் கைகாட்டினோம். அப்பதான் அவர், 'டாக்டர், அடிக்கொரு தடவை சென்னைக்குப் போயிட்டு வர பணக்காரங்களால் முடியும். என்னை மாதிரி ஏழைங்களுக்கு இங்க வர்றதே பெரிய விஷயம். எல்லா சிகிச்சையும் இங்கேயே கிடைக்க வழி பண்ணக் கூடாதா?’ன்னு பரிதாபமாகக் கேட்டார். அந்த வார்த்தைகள்தான் நீங்க பார்க்கிற இந்த இலவச சிகிச்சை மையத்துக்கான பிள்ளையார் சுழி.

ஒவ்வொரு படியா எடுத்து வெச்சோம். ஆச்சர்யப்படுற மாதிரி உதவிக் கரங்கள் நீண்டுச்சு. முத்துசாமி நாயுடுங்கிறவர் தரப்புல இருந்து நன்கொடையா ஐம்பது லட்சத்தைக் கொடுத்தாங்க. அவரோட நினைவா அந்த வார்டுக்கு அவரோட பெயரையே வெச்சோம். சிகிச்சை பெறும்குழந்தைகளுக்கும், அவங்களோட பெற்றோர்களுக்கும் அருமையான உணவைத் தர முன்னணி ஹோட்டல் நிர்வாகம் முன்வந்துச்சு. இப்படிப் பலர் எந்தவித எதிர் பார்ப்பும் இல்லாம உதவி செய்றாங்க'' என்றபோது, அருகில் இருந்து ஒரு குழந்தை நம் சட்டையைப் பிடித்து இழுக்க... திரும்பிப் பார்த்தோம். ஆப்பிளைக் கடித்தபடி அழகு காட்டிச் சிரிக்கிறாள் அவள்.

குழந்தையின் உலகத்தை திருப்பிக் கொடுங்கள்...

கால் எட்டாத நிலையிலும் அந்த சைக்கிளை ஓட்டியே ஆக வேண்டும் என்று அறையை அதகளப்படுத்திக் கொண்டு இருந்தாள் ரேணுகா. தீபனோ டாக்டர் குகனை, 'ஏய்... ஊசி போட்டுருவேன் ஜாக்குரத...’ என ஒற்றை விரல் காட்டி மிரட்டுகிறான்.    

''எங்களோட மையம் மூலமா கிட்டத்தட்ட இந்த ஆறு வருஷத்துல பல நூறு குழந்தைங்களைக் காப்பாத்தி வர்றோம். இன்னும் நிறையக் குழந்தைகள் சிகிச்சைக்காகக் காத்து இருக்காங்க. அப்படிக் காத்திருக்கிற ஒவ்வொரு நாளும் அவர்களுடையே ஆயுள் நாட்கள் குறைஞ்சுட்டே வருது. இந்தச் சூழலை உடைச்சு, நிறைய ஏழைக் குழந்தைங்களுக்கு இலவச சிகிச்சை கொடுக்கிறதுதான் எங்களோட நோக்கம். அப்போதான் இந்தக் குழந்தைங்களுக்கு அவங்களோட உலகத்தைத் திருப்பிக் கொடுக்க முடியும்'' என்கிறார் நெகிழ்வாக.

நிதர்சனமான வார்த்தைகள்தானே!

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

குழந்தையின் உலகத்தை திருப்பிக் கொடுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு