Published:Updated:

என் ஊர்!

''குப்புற விழுந்தாலும் குசும்பா பேசுவோம்ங்ணா!''பாமரன்

 ##~##
''கு
ப்புற விழுந்தாலும் குசும்பாப் பேசுற நக்கல் பேர்வழிங்க கோயம்புத்தூர்காரங்கதாங்க. லடாக் மலை உச்சியில குரங்கு குல்லா போட்ட தீவிரவாதிங்க மிரட்டுறப்பகூட, சீரியஸா டீல் பண்ணத் தெரியாத ஜாலியோ ஜிம்கானா பார்ட்டிங்க நாங்க. இதுதான் எங்களைப் பத்தி ஒரு சின்ன அறிமுகம்.

விதைச்சவனுக்கு அள்ளிக் கொடுக்கிற மண்ணும், உழைச்சவனுக்கு கொட்டிக் கொடுக்கிற மில்லும், படிச்சவனுக்கு தட்டிக்கொடுக்கிற தொழிலும்தானுங்க கோயமுத்தூரோட வரலாறு. பொழப்பு தேடி சென்னைக்குப் போனவன்கூட, வயித்துக்கு வழியில்லாம இளப்பு வந்து செத்து இருக்கான். ஆனா, கோயமுத்தூருக்கு குடும்பத்தோட குடி வந்தவங்க, இன்னிக்கு சொந்த வீடு கட்டி பகுமானமா செட்டில்

என் ஊர்!

ஆகிட்டாங்க. அவினாசி ரோடு, ராமநாதபுரம் ஏரியான்னு திரும்புற திக்கெல்லாம் ஸ்பின்னிங் மில்லை வெச்சு, வறுமைக்கு சங்கு ஊதுன வள்ளல்கள் வாழ்ந்த பூமி இது. ஆனா, நாளாவட்டத்துல ஆயிரம் காரணத்த சொல்லி, படிப்படியா ஒவ்வொரு மில்லுக்கும் திண்டுக்கல்லு பூட்டைப் போட்டு, சனங்களைத் திண்டாட்டத்துல விட்டுட்டாங்க.

பாப்பநாயக்கம்பாளையம் கவர்மென்ட்டு ஸ்கூல்ல படிச்ச எங்க வெள்ளியங்கிரியும், பஞ்சவர்ணமும் இன்னிக்கு பொழப்பு தேடி ஆந்திரா வுக்கும் கேரளாவுக்கும் அடிமாடு கணக்காப் போயிட்டு இருக்காங்க. ஆனா மும்பை, குஜராத்னு பஜ்ஜிக்கு சப்ஜி வெச்சு சாப்பிடுற டீம் இங்கே இருக்கிற ஐ.டி. கம்பெனியில அள்ளோ அள்ளுனு அள்ளிட்டு இருக்கு. நூறு ரூபாய்க்கு பீட்ஸா சாப்பிட்டு, ஐந்நூறு ரூபாய் நோட்டுல கை துடைக்கிற இந்த பயப்புள்ளைகளால, வீட்டு வாடகையில இருந்து மருதமலை ஸ்பெஷல் தரிசனம் வரைக்கும் எல்லாமே செம காஸ்ட்லியாகிப் போச்சுங்க.

சரி, அதை விடுங்க. தொண்டாமுத்தூர் தாண்டி வண்டிய விட்டீங்கன்னா, விசுவிசுன்னு அடிக்கிற வயல் காத்து மனசுக்கும் உடம்புக்கும் இதமா இருக்கும். ஆனை, சிறுத்தையைப் பார்க்க அவனவன் வண்டி பிடிச்சுக்கிட்டு வண்டலூருக்கு ஓடுவான். ஆனா, நாங்க பன்னிமடை பக்கமாப் போனாப் போதும். ஒத்தக் கொம்பன் ஆனை உறுமிக்கிட்டு நடக்குறதும், சிறுத்தைங்க சீறிக்கிட்டுப் பாயுறதும் கண்கொள்ளாக் காட்சியா இருக்குமுங்க. ஆனா, யானைங்க வழித்தடம் மறிக்கப்படுதுங்கிறதால, அதுங்க ஊருக்குள்ளே ஊர்வலம் வருதுங்கிற உண்மையைச் சொல்றப்ப நெஞ்சு கனக்குது.

அந்த காலத்துல நாங்க ஃபிகருங்களைத் தேடி மந்திரிச்சுவிட்ட மாடு மாதிரி ரோடு ரோடாத் திரிவோம். ஆனா, இப்போ காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுல ஆளைப் பார்த்துட்டு, பஸ் சிக்னல் திரும்புறதுக்குள்ளே, பாக்கெட்ல இருக்கிற செல்போனுக்கு புள்ளையோட பயோடேட்டாவே வந்துடுது. ஆனா, இந்த டீலிங் நல்லாவே இல்லைங்க. முன்னாடி எல்லாம், இந்த ஊர்ல மூணே காலேஜ்தான் இருந்துச்சு. இன்னிக்கு புண்ணாக்கு விக்குறவனும், கோழிப் பண்ணை நடத்துறவனும் கல்வித் தந்தையாகி, வீதிக்கு நாலு காலேஜைத் தொறந்து, கல்வியை வியாபாரமாக்கிட்டாங்க. பசங்களுக்கும் பெருசா பொறுப்பில்லைங்ணா. எலெக்ஷனைப் பத்தியும் கவலையில்லை... கல்வித் தந்தைங்க நடத்துற கலெக்ஷனைப் பத்தியும் கவலையில்லை. அப்பனும் ஆத்தாளும் ஆடு மாடு மேய்ச்சுப் படிக்க வெச்சாலும், இவங்க ஐ-பாடைச் சொருகிட்டு திக்குத் தெரியாமத் திரியுறாங்க.

என் ஊர்!

இப்படி மாறிப்போன கோவையில பெருமையான விஷயங்களும் இருக்குது நண்பா. முப்பது வருஷமா ஈழத் தமிழருக்காக கோவையில இருந்து கொதி குரல் கேட்டுக்கிட்டே இருக்குது. கோவையோட இன்னொரு சிறப்பு சினிமா ஷூட்டிங் ஸ்பாட்கள். 'ஏனுங்க மாமோய்’னு கூவிக்கிட்டு, தாவணி பறக்க கதாநாயகிகள் ஓடி வர்ற காட்சிகள்ல முக்கால்வாசி வேட்டைக்காரன்புதூர்லயும் ஆனைமலை யிலயும் எடுத்ததுதான். அதுவும் இல்லாம, தமிழ் சினிமாவுக்கான தொடக்கப் புள்ளி அழுத்தமாப் போடப்பட்டது கோவையிலதான். இந்த மண்ணுல பிறந்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். தமிழ் சினிமாவுக்கே தாத்தா. நாம சினிமாவை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, புரொஜெக்டரைத் தூக்கிட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் எல்லாம் போய் பிலிம் காட்டி இருக்கார் அவர். இங்க இருக்குற வின்சென்ட் ரோடு அவர் ஞாபகமா வெச்சதுதான்.

பிப்ரவரி 14-ம் தேதி வந்தா, உலகமே காதலர் தினத்தைக் கொண்டாடும். ஆனா, கோவையில மட்டும் 'குண்டுவெடிப்பு நினைவு தினம்’னு சொல்லி, கமுக்கமா நகர்வாங்க நம்மாளுங்க. அந்தச் சம்பவம் ஏதோ நடந்துடுச்சு. ஆனா, இப்போல்லாம் எங்கூரு ரொம்பவே மாறிடுச்சுங்ணா. கலப்புத் திருமணம் அதிகமா நடக்குறது கோவையிலேதான்னு ஒரு புள்ளிவிபரம் சொல்லுது. யுத்த சப்தமில்லாம எங்க ஊர் முழுக்க முத்த சப்தம் கேட்க ஆரம்பிச்சுடுச்சு பாஸ்!''

சந்திப்பு: எஸ்.ஷக்தி, படம்: வி.செந்தில்குமார்

என் ஊர்!
அடுத்த கட்டுரைக்கு