மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன் - 08

மறக்கவே நினைக்கிறேன்
பிரீமியம் ஸ்டோரி
News
மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன் - 08

ந்த ஆண்டின் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வந்த அந்த வியாழக்கிழமை, நான் சொர்ணாவுடன்தான் இருந்தேன். சொர்ணா இயல்பாக இல்லை. நோட்டுகளையும் புத்தகங்களையும் வினாத்தாள்களையும் புரட்டிப் புரட்டி மனக்கணக்குப் போட்டாள். திடீரென்று ஓடிவந்து இரண்டு விரல்களை நீட்டி, ஒரு விரலைத் தொடச் சொன்னாள். அந்த இரண்டு விரல்களில் பெரிய விரலை நான் தொட்டுவிட, 'நான் எப்பவும் சின்ன விரல்லதான் நல்லது நினைப்பேன்னு உங்களுக்குத் தெரியாதா மாமா?’ எனக் கோபித்துக்கொண்டு,  'கண்ணை மூடிக்கிட்டு இப்பயாச்சும் கரெக்டாச் சின்ன விரலத் தொடுங்க...’ என்றாள். காலையிலேயே எழுந்து குளித்து, கணினி முன் அமர்ந்தவள், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் 10 மணி வரையில் பச்சத் தண்ணிகூட வேண்டாம் என்றிருந்தவள், தேர்வில் 1,089 மார்க் எடுத்த பிறகும்கூட இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, 'ஹிஸ்ட்ரி சப்ஜெக்ட்ல இன்னும் ஒரு மார்க் போட்டிருந்தா, நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்கியிருப்பேனே...’ என்று அவள் அழுத அழுகையைத்தான் என்னால் தாங்க முடியவில்லை. அதைவிடக் கொடுமை, அழுது அழுது வீங்கிய கண்களோடு என்னைப் பார்த்து 'நீங்க ப்ளஸ் டூ-வுல எவ்வளவு மார்க் மாமா..?’ என்று அவள் கேட்டது!

அதை எப்படிச் சொல்வது அவளிடம்?

ஆதிச்சநல்லூர் பறம்பு. அதுதான் தொல் தமிழ்க்குடியின் மூத்த முதல் இடுகாடு. அங்குதான் நள்ளிரவில் மெழுகாக உருகிக்கொண்டிருக்கும் முழு நிலவின் கீழ் நான், முருகன், சதீஷ், முத்து அப்புறம் ரவி ஐந்து பேரும் அமர்ந்திருந்தோம். விடிந்தால் ப்ளஸ் டூ ரிசல்ட். அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை விவாதிக்கத்தான் அந்த ஐவர் பொதுக் குழுக் கூட்டம்.

முருகன், சதீஷ், முத்து மூன்று பேரும் சொல்லிவிட்டார்கள்... ''எப்பா... எங்களுக்கு மட்டும்இல்லை... எங்க வீட்டுக்கும் தெரியும்... நாங்க ஃபெயிலுதாம்னு. ஒருவேளை திடீர்னு பாஸானாத்தான் எங்களைப் பாத்துச் சிரிப்பாங்க. அதனால எங்களுக்கு ஒண்ணும் பயமில்ல. பாவம்! நீங்க ரெண்டு பேரும்தான் என்ன செய்யப்போறீங்களோ?'' என்று. நான் ரவியைப் பார்த்தேன். ரவி தலையைக் குனிந்தபடி இருந்தான்.

''ஃபெயிலானா, மாரி அண்ணன் மாரியைக் கொன்னுடுவாம்லா?''

'அவனே பயந்துபோயிருக்கான். சும்மா எதுனா சொல்லி அவனை இப்பவே அழவெச்சிடாதீங்க.''

இழுக்கிற பீடிக்கு எதையாவது பேச வேண்டுமே. இருந்தாலும் அவர்கள் பேசியது அனைத்தும் அப்படியே நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லாமல் இல்லை. பத்தாம் வகுப்பு ஃபெயிலாகி, கோழி மடத்துக்குள் ஒளிந்துகிடந்தவனைக் கண்டுபிடித்து, 'ஃபெயிலான முட்டாப் பயலுக்கு எதுக்கு ரெண்டு கிட்னி?’ என்று இரண்டில் ஒரு கிட்னியை நிஜமா கவே உருவிவிடும் முனைப்புடன் வெளுத்தெடுத்தது என் நினைவுக்கு வந்துபோனது. கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தேன். என் படிப் பின் மீதான என் சிறு நம்பிக்கை, வெற்றியின் மதில் மேல் வந்து ஒற்றைக் காலில் ஊனப்பட்ட பூனையாக நின்றது. ஒரு பக்கம், 'அவன் எங்கடே... பாஸாவப் போறான்?’ என்பவர்கள் நிற்கிறார்கள். இன்னொரு பக்கம், 'அவன் ஒருத்தன்தான் மேத்ஸ் குரூப்லயே ஃபெயிலாவாம்னு நினைக்கிறேன்...’ என்று சொல்பவர்கள் நிற்கிறார்கள். இதில் எந்தப் பக்கம் குதித்தாலும் அவமானம்தான், தோல்விதான். ஆனால், வேறு வழியே இல்லை. ஒற்றைக் காலில் எவ்வளவு நேரம் நிற்பது? ஏதாவது ஒரு பக்கம் குதித்துதான் ஆக வேண்டும்.  

மறக்கவே நினைக்கிறேன் - 08

''எப்படியும் ஃபெயிலானதுக்கு அப்புறம் சரவணா ஸ்டோருக்கோ, திருப்பூர் பனியன் கம்பெனிக்கோதான் நம்மளை வேலைக்கு அனுப்பப் போறாவ. அதுக்கு நாமளே நாளைக்கு ரிசல்ட் பாத்துட்டு அப்படியே கிளம்பிட்டா என்ன?''

''ஆமா... ஆமா. பயலுவ ஃபெயிலானாலும் ரோஷத்தோட வேலைக்குக் கிளம்பிட்டானுங்கள்ல. அந்தப் புத்தி போதும் அவனுங்க பொழைக்கிறதுக்குனு பேசுவாங்கள்ல.''

''ஆனா, அதுக்குப் பணம்?''

''இப்ப போய் ஆளாளுக்கு அவனவன் வீட்ல எவ்வளவு கிடைக்குதோ எடுத்துவெச்சிக்கோங்க. காலையில் வண்டியைத் தட்டிரலாம். என்ன... ஐடியா சரிதான?''

''எங்களுக்குச் சரி. மாரிக்குச் சம்மதமா?''

ஒரு ரூபாயை எடுத்துச் சுண்டிப் போட்டேன். நிலவின் பால் ஒளியில் அது பூவாகத்தான் தெரிந்தது. ''மொசப் பிடிக்கிற நாய் மூஞ்சியப் பாத்தா தெரியாதாடே...'' எல்லாரும் சிரித்தார்கள்.

ஐந்து பேரும் விடியற் காலையிலேயே கிளம்பி, ஸ்ரீவைகுண்டம் போய்விட்டோம். நான் வீட்டிலிருந்து வரும்போதே இரண்டு சட்டை, இரண்டு பேன்ட், அப்புறம் ஒரு சாரம், அது போக 300 ரூபாயும் எடுத்து வந்திருந்தேன். இப்படி எல்லாருமே கொஞ்சம் துணிகளோடும் கிடைத்த பணத்தோடும் வந்திருந்தார்கள். அப்போதெல்லாம் ரிசல்ட்டை வெளியிட்ட உடனே தெரிந்துகொள்ள முடியாது. மதியம் 12 மணிக்குத்தான் நாளிதழ்களின் சிறப்புப் பதிப்பு கள், ஒரு வெள்ளை டாக்ஸியில் வேகமாக வரும். அந்த ஒரு வெள்ளை டாக்ஸிக்காக ஸ்ரீவைகுண்டம் பஸ் ஸ்டாண்ட் முழுக்க மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் காத்துக்கிடப் பார்கள். வெள்ளை டாக்ஸி வர நேரம் ஆகிக் கொண்டே போனதால், கையில் இருக்கும் பணம் கொஞ்சம் கொஞ்சமாக பூரியாக, இட்லி யாக, பீடியாகக் காலியாகிக்கொண்டிருந்தது. இப்போது தேர்வு முடிவுகளின் மீது இருந்த பயம் போய், ஒரு விதமான சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது. வருகிற வெள்ளை டாக்ஸியை எல்லாம் ஓடி ஓடிப்போய்ப் பார்ப்பது. டாக்ஸிக் காரர்கள் எங்களைத் திட்டுவது. மாணவர்கள் எல்லாரும் கத்துவது எனப் பேருந்து நிலையமே அல்லோலகல்லோலம்.

'ஏய்... அந்தா வந்துட்டு வெள்ள ப்ளஸ்ஸர். இந்தா வந்துட்டு வெள்ள ப்ளஸ்ஸர்...’ என அங்கும் இங்குமாக அலறித் திரிய, சத்தமே இல்லாமல் ஒரு மகேந்திரா வேனில் வந்து பத்திரிகைக் கட்டுகளை, அப்படியே அள்ளித் தூக்கி வீசிவிட்டுப் போனார்கள்.

'ஏலேய்! பேப்பர் வந்துட்டுல, ஓடியாங்களே...’ என்று ஒரு சத்தம்தான். மூன்றாம் உலகப் போருக்கு நிகரான களேபரமாகிவிட்டது நிலவரம். அவ்வளவு தள்ளுமுள்ளுக்கு இடையில், எப்படியோ போய் முருகன் ஒரு பேப்பரை வாங்கி வந்துவிட்டான். அங்கு வைத்துப் பார்த்தால் ஒரு பெரும் கூட்டமே எங்கள் பேப்பரில் ரிசல்ட் பார்க்கக் கூடிவிடும் என்பதால், பேப்பரை எடுத்துக்கொண்டு செல்வம் சலூனை நோக்கி ஓடினோம். மறுபடியும் தேர்வு முடிவுகுறித்த பயம் மனதில் அப்பியது.

மறக்கவே நினைக்கிறேன் - 08

செல்வம் சலூனுக்கு இடது பக்கம் உள்ள அந்தச் சின்ன முடுக்கில் நின்றுகொண்டு, 'ஏல லூஸு... அங்க என்னல தேடுத? முதல்ல தூத்துக்குடிக் கல்வி மாவட்டம் எடுல...’ என்று வாய் அவசரப்படுத்தினாலும், மனசு 'எதுக்கு அவ்வளவு அவசரம்? கொஞ்சம் மெதுவாத்தான் தேடேன்...’ என்று கெஞ்சியது. முதலில் சதீஷ்தான் பார்த்துச் சொன்னான், 'ஏலேய்! நாங்க மூணு பேருமே சொன்ன மாதிரியே ஃபெயிலு’ என்று. சதீஷ், முருகன், முத்து மூன்று பேருமே இன்ஜினீ யரிங் குரூப். 'சரி... மாரி உன் நம்பரச் சொல்லு... பார்ப்போம்’ என்று கேட்கவும், நான் எனக்கு முன்னாடி உள்ள சுந்தரமூர்த்தி என்கிற நல்லாப் படிக்கும் மாணவனின் நம்பரைச் சொன்னேன். 'ஏலேய்... அடிச்சிட்டுல உனக்கு லக்கு. நீ பாஸுல... நீ மட்டுமல்ல... உனக்கு முன்னாடி இருந்தவன் பின்னாடி இருந்தவன் எல்லாவனுமே பாஸுடே... கலக்கிட்டியே!’ என்று அவர்கள் சொல்ல, அடித்து உடைத்து உள்ளே ஒளித்துவைத்திருந்த கொம்புகளின் குருத்துகள் படக்கென்று மண்டையின் மேல் முளைத்துவிட்டதைப் போல் இருந்தது எனக்கு.

'மாரி செல்வத்த மட்டும் இந்த வருஷம் எக்ஸாம் எழுதவிடாமப் பண்ணா, நம்ம ஸ்கூல்ல அட்லீஸ்ட் மேத்ஸ் குரூப்பாவது சென்ட்டம் வாங்க வாய்ப்பிருக்கு...’ என ஹெட்மாஸ்டரிடம் போய் சொன்ன ஆசிரியர்களின் ஒவ்வொருவர் முகமும் அச்சுப் பிசகாமல் வந்துபோனது. அண்ணனிடம் இருந்து என் கிட்னியைக் காப்பாற்றியதைவிட, ஆசிரியர்களிடம்  இருந்து என் மானத்தைக் காப்பாற்றியதுதான் எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

''மச்சான்! அப்படியே தென்காசிக் கல்வி மாவட்டத்தையும் பாரு. ரவி, உன் நம்பரச் சொல்லு..?''

இப்போது ரவி நம்பரைத் தேடினோம்.

''என்னடா ரவி, உங்க வரிசையே காணல?''

''வரிசை மட்டுமில்லடா... எங்க ஸ்கூல் ரிசல்ட்டே இதுல வரலடா. வேற பேப்பர் இருந்தா வாங்குங் கடா...'' என்று ரவி சொல்ல, எல்லா பேப்பர் களையும் வாங்கிப் பார்த்துவிட்டோம். எதிலும் அவன் ஸ்கூல் ரிசல்ட் மட்டும் வரவில்லை. எல்லாருக்குமே அதிர்ச்சி. கொஞ்ச நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்த ரவி, கடைசியாக அவன் பள்ளிக்கே போன் செய்தான்.

''சார்... வணக்கம். என் பேர் ரவி. நான் நம்ம ஸ்கூல்லதான் மேத்ஸ் குரூப் படிக்கிறேன். நம்ம ஸ்கூல் ரிசல்ட் மட்டும் எந்தப் பத்திரிகையிலேயும் வரலையே சார்...''

''மொதல்ல போனைக் கீழ வை. அது எந்தப் பத்திரிகையிலேயும் வராது.''

''ஏன் சார்?''

''முண்டம். அத்தன முண்டங்களுமே ஃபெயிலானா... எப்படிடா பேப்பர்ல வரும்? நாளைக்குப் பாரு... தனியாக் கொட்டெழுத்துல போடுவான் 'எல்லா நாயும் ஃபெயிலான ஒரே பள்ளி’னு... வைடா போனை.''

போனைக் கீழே வைத்ததும், ரவி அப்படியே நடந்ததைச் சொல்ல, ரிசல்ட் மீதிருந்த முழு பயமும் போய் எல்லாருடைய முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு. திருப்பூர் போகும் பிளானை மறந்துவிட்டு, எல்லாரும் இருக்கிற காசுக்கு நன்றாகச் சாப்பிட்டோம். எனக்குச் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டபடி பள்ளிக்குப் போக வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

''மாரி, பள்ளிக்கூடத்துல கொஞ்ச வெடியப் போட்டுட்டு, மீதிய உங்க வீட்டுக்குப் போய், உங்க அண்ணன் முன்னாடி போடுவோம். சரியா, சும்மா அவன் கிட்னி அப்படிக் கதறணும்...'' என்று முருகன் ஐடியா கொடுக்க, உற்சாகமாகப் பள்ளிக்குக் கிளம்பிப்போனோம்.

''முருகா மொதல்ல நீ போய் மார்க் லிஸ்ட் வந்துட்டானு பாத்துட்டு வா...'' என்று முருகனை முதலில் அனுப்பிவைத்தோம்.

''இப்போதான் வந்துச்சாம். அட்டெண்டர் வெச்சிருந்தார். அவர்கிட்ட மேத்ஸ் குரூப் அக்யூஸ்ட் மாரி மார்க் மட்டுமாவது சொல்லுங்களேன்னு கேட்டேன். அதுக்கு அவர் 605-ன்னார். பின்னிட்டடா, மேத்ஸ் குரூப்ல 605 மார்க்குன்னா, எவ்வளவு பெரிய விஷயம்?''

''நிஜமாவா? 605 மார்க்குன்னா பெரிய விஷயமா? அப்படின்னா போடுடா வெடியை...'' கையில் இருந்த பட்டாசுகளைக் கொளுத்தத் தொடங்கினோம். பள்ளிக்குள் இருந்தபடி பாஸான, ஃபெயிலான மாணவர்கள்... அவர் களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் உட்பட எல்லாரும் எங்க ளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மறக்கவே நினைக்கிறேன் - 08

திடீரென இரண்டு ஆட்டோக்கள் பள்ளிக்கூட வாசலில் வந்து நின்றன. எல்லா ஆசிரியர் களும் வெளியில் வந்து எங்களைப் பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு, அதில் ஏறிச் சென்றார் கள். தலைமை ஆசிரியர்கூட ஒரு ஆட்டோவில் ஏறி எங்கோ சென்றார். முருகன் ஓடிப்போய் அட்டெண்டரைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தான், ''எல்லாரும் வேகமா எங்கண்ணே போறாங்க..?''

''சுந்தரமூர்த்தின்னு ஒரு பய மேத்ஸ் குரூப் படிச்சாம்லா. அவன் 999 மார்க்தான் எடுத்திருக்கோம், 1,000 மார்க் தாண்ட முடியலையேனு விஷத்தக் குடிச்சிட்டானாம்... அவன் வீட்டுக்குத் தான் எல்லாரும் போறாங்க.''

''என்னது... 999 மார்க் எடுத்ததுக்கு சுந்தரமூர்த்தி மருந்தக் குடிச்சிட்டானா? அப்படின்னா 605 மார்க் எடுத்தவன்?''

''ம்ம்ம்... நியாயமாப் பார்த்தா, ஓடுற ரயில்ல விழுந்து சாவணும்!'' - சொல்லிவிட்டு, என்னைத் திரும்பிப் பார்க்காமல் அட்டெண்டர் வேகமாக நடந்துபோனார். எல்லோரும் என்னைப் பார்த்துச் சத்தம் போட்டுச் சிரித்தார்கள். ஆனால், எனக்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது. காரணம், 'தெரியாத கணக்கா இருந்தா பயப்படாத மாரி. அதோட வகையை மட்டும் கரெக்ட்டா எழுதி, ஏதாவது ஒரு ஆன்ஸரைக் கொண்டுவந்துடு. எப்படியும் பாதி மார்க் போடுவாங்க...’ என்று சொல்லி, என் பக்கத்துல உட்காந்து, சிரித்த முகத்துடன் பரீட்சை எழுதிய என் நண்பன் சுந்தரமூர்த்திதான் இறந்துபோயிருக்கிறான்!

- இன்னும் மறக்கலாம்...