Published:Updated:

ஆறாம் திணை - 38

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 38

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

சிம்பன்சியாக, மனிதக் குரங்காகச் சுற்றிக் கொண்டிருந்தவனை இன்றைய நவநாகரிக மனிதனாக நடமாட வைத்ததன் முழுப் பெருமையும் மனித மூளைக்கே! (அதே சமயம் குரங்காகச் சுற்றிக்கொண்டுஇருந்த வரை சமர்த்தாக இருந்தவன், மனிதனாக மாறியதும் பிறர் பொருளைத் தேட்டை போடுவதில் தொடங்கி, ஓசோனில் ஓட்டை போடுவது வரை திமிறியது பக்க விளைவாகும்!) அத்தனை நுட்பமான மூளையின் செயல்பாடுகளைக் கண்டறிய வெற்றிலையில் மை தடவிப் பார்த்தது முதல் இன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் உற்றுப் பார்த்தாலும் மொத்த உடல் எடையில் இரண்டு சதவிகிதம் மட்டுமே உள்ள இந்த மூளை எப்படி மலைக்கவைக்கும் அளவு இப்படி வேலை செய்கிறது என்பது மட்டும் புரியாமலே இருந்தது.

உலகின் மிக உன்னத இயந்திரமான அந்த மூளையின் தங்குதடையில்லா செயல்பாட்டுக்கு ஆழ்ந்த உறக்கம் அதிஅவசியத் தேவை. உற்சாகமாகச் சிந்திக்க, நினைவாற்றல் மிளிர,நோய் இல்லாது வாழ, உடல் இயக்கத்துக்கு அவசியமான சுரப்புகளையெல்லாம் தேவையான அளவில் சுரக்கத் தூண்ட... மேலும் பல செயல்பாடு களுக்குத் தினசரி இரவில், கும்மிருட் டில் 6 முதல் 7 மணி நேரத் தூக்கம் அவசியம், அத்தியாவசியம், கட்டா யம். 'அதென்ன கும்மிருட்டில் உறக் கம்?’ எனக் கேட்கிறீர்களா? நள்ளிரவு வரை படுக்கையறை டி.வி-யில் ஐ.பி.எல்லோ, 'மூவிஸ் நவ்’வில் ஜேம்ஸ் பாண்ட் படமோ பார்த்துக் கொண்டே அசந்து தூங்கிவிடுவதற் குப் பெயர் தூக்கம் அல்ல. விடி வெள்ளி வெளிச்சம்கூட இல்லாத கும்மிருட்டுத் தூக்கத்தில்தான் உடல் இயக்கங்களுக்கு நல்லது செய்யும் மெலடோனின் சத்து சுரக்குமாம். சின்ன வெளிச்சத்திலும் அந்தச் சுரப்பு குறைந்துவிடும் என்கிறது நவீன விஞ்ஞானம். அந்தச் சுரப்புதான் இரவில் நம் உடல் இயந்திரத்தை சர்வீஸ் செய்து, மறுநாள் ஓட்டத்துக்குத் தயார் நிலையில் வைக்கிறது. கேன்சர் போன்ற பல வியாதிகளை வராமல் தடுக்கிறது. அந்த மெலடோனின் பகல் வெளிச்சத்தில் 10 மணி நேரம் தூங்கினாலும்கூடச் சுரக்காது. 'பகலுறக்கஞ் செய்யோம்’ எனப் பாடிய சித்தர் தேரையார் நியூரோ பிசியாலஜி படித்தவர் அல்ல. ஆனாலும், அனுபவப் புரிதல் மூலம் அன்றே அக்கறைக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறாம் திணை - 38

''சார்... நாங்க அமெரிக்கக் கம்பெனிக்கு இங்கே இருந்து வேலை பார்க்கிறோம். இரவில் தான் வேலை. பகலில்தான் தூங்க முடியும்!'' என்பார் ஒருவர்.

''நான் இந்தியக் கம்பெனியில்தான் வேலை பார்க்கிறேன். ஆனா, நடுநிசி தாண்டி திருடன் மாதிரிதான் வீட்டுக்கு வருவேன்!'' என்பார் இன்னொருவர்.

''எனக்கு அந்தப் பிரச்னை இல்லை. ஆனா, ராத்திரி புரண்டு புரண்டு படுக்கிறேன். தூக்கம் வருவேனாங்குது!'' என்போர் பலர்.

இந்த மூன்று ரகத்தினருக்குமே மெலடோனின் சுரப்பில் பிரச்னை இருக்கும் வாய்ப்புகள் ஏகம். தூக்கம் இல்லாமை முதலில் வாய்வுத் தொல்லை தரும். ரத்தக் கொதிப்பை உண்டாக்கும். தொடர்ந்து நரம்புத் தளர்ச்சி தாக்கும். இறுதியாக, மன உளைச்சலைத் தொடர்ந்து மன வியாதியில் கொண்டுபோய் நிறுத்தும். சட்டையைக் கிழித் துக்கொண்டு கல் எறிபவர்தான் மன வியாதி யினர் எனப் பலரும் தவறாக நினைக்கின்றனர். ஆனால், நம்மில் ஐந்தில் ஒருவர் மன நோயாளி யாகத்தான் இருக்கிறோம். தூக்கம் இல்லாமல், அக மகிழ்ச்சி இல்லாமல், எது மகிழ்ச்சி என அறியாமல், எதற்கும் புன்னகைக்காமல், எதிலும் நிறைவுகொள்ளாமல் நம்மில் பலர் மன நோய ராகத்தான் இருக்கிறோம். அதற்குத் தூக்கம் இன்மையே மிகமிக முக்கியக் காரணம்.

தூக்கம் இல்லாத மூளையின் ரத்த நாளங்கள் வலுவிழக்கும். வரும்போது இயற்கை உபாதை யைத் தணித்துக்கொள்ளலாம் என்பதுபோல, தூக்கம் வரும்போது தூங்கிக்கொள்ளலாம் என்பதும் உடம்புக்கு நல்லதல்ல. உறக்கத்துக்கென மெனக்கெட வேண்டும். இரவு உணவைப் புரோட்டாவில் ஆரம்பித்து பலூடாவில் முடிக்கும் பழக்கம் தூக்கத்துக்கு நிச்சயம் எதிரி. நன்றாக வீசிப் புரட்ட, ஜவ்வாக இழுத்த இழுப்புக்கெல்லாம் வர, அதிகபட்ச 'குளூட்டன்’ (ஒரு வகைப் புரதம்) சேர்த்த ஸ்பெஷல் மாவுதான் ரோட்டுக் கடையில் இருந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரை எங்கும் புரோட்டா செய்யப் பயன்படுத் தப்படுகிறது. இந்த குளூட்டன் சிலருக்கு அஜீரணத்தையும் ஒரு சிலருக்குக் குடல் புற்றை யும் பரிசளிக்கும். குளூட்டன் ஜீரணத்தைத் தாமதப்படுத்துவதால், தூக்கம் கண்டிப்பாகக் கெடும். வெயில் கால இரவுகளில் கொஞ்சம் பழத் துண்டுகள், கம்பங்குருணை அரிசியில் வெங்காயம், மோர் சேர்த்துப் பிசைந்த சோறு சாப்பிட்டுப் பாருங்கள். கடைசி உருண்டை சாப்பிடுகையில் கொட்டாவியும் கூடவே சேர்ந்து வரும்.

ஆறாம் திணை - 38

அலுவலகத்தில் இருந்து திரும்பி வரத் தாமதமாகும் என்போர், இரவு உணவை அலுவலகத்தில் 7 அல்லது 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள். உறங்குவதற்கு முன் பழம் மட்டும் சாப்பிட்டுப் படுங்கள். உறக்கத்துக்கும் உடல்நலத்துக்கும் இது சாலச் சிறந்தது. ஆழ்ந்த தூக்கத்துக்குத் தினசரி நடைப் பயிற்சி மிகவும் அவசியம். 'மொட்டை மாடியில் நடக்கிறேன்... வீட்டு வேலையே அப்படியாக்கும்’ என்றெல்லாம் உட்டாலக்கடி அடிக்காமல், தினசரி 45 நிமிடங் கள் மிதவேக நடை நடப்பது, தூக்கத்தைச் சீர்ப் படுத்தும், மனதை ஒருமுகப்படுத்தித் தூங்க வைக்கும். கசகசா பால், சாதிக்காய்த் தூள் போட்ட பால், அமுக்கராக் கிழங்குப் பொடி,  மாதுளம்பழம் என இவையெல்லாம் தூக்கம் வரவழைக்கும் தூக்க மருந்தில்லாத உணவுகள்.

இவை போக, 'அட... இந்தப் புடைவையை நீ கட்டினதும் அழகாயிடுச்சே’, 'குட் கேர்ள்... அப்பா சொன்ன மாதிரி ஹோம் வொர்க்லாம் முடிச்சுவெச்சுட்டியே... சபாஷ்’ போன்ற பாராட்டுகளும் எதிர்பார்க்கையில் அரவணைப்பு, எதிர்பார்க்காத முத்தங்கள் உண்டாக்கும் நிறைவுமே நம்மை அமைதியாகத் தூங்கவைக்கும். ஒவ்வோர் இரவையும் 'குட் நைட்’ ஆக்கும் பழக்கங்கள் இவை அனைத்தும்!

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism