பாஸ்வேர்டு
##~##

ரு ரூபாய்க்கு வாங்கிய டோபாஸ் பிளேடில் ஒரு பக்கம் சவரம் செய்துவிட்டு, சுத்தமாகக் கழுவிக் காயவைத்த அந்த பிளேடைப் பத்திரமாக ஒரு பாலிதீன் உறைக்குள் வைப்பார் ராமநாதன். போதாக்குறைக்கு அதன் மீது ஹெச்.பி. பென்சிலால் ஒரு டிக் அடிப்பார். 'ஒரு முறை பயன்படுத்தப்பட்டது’ என்று பொருள். 'ஒரு ரூபாய் பிளேடை பவுன் காசு கணக்காக இவ்வளவு பத்திரப்படுத்துறீங்களே’ என்ற கிண்டலைக் காதில் போட்டுக்கொள்ள மாட்டார். 'காசு என்ன மரத்துல காய்க்குதா? முடிஞ்ச வரை மிச்சம் பண்ணணும்டா தம்பி!’ என்பார். இரவு அவர் தூங்கிய பிறகு, அவர் பத்திரப்படுத்திய பிளேடை எடுத்து பென்சில் சீவி அதை மொண்ணையாக்குவேன். சந்தடி காட்டாமல் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு காலையில் அவருக்கு முன்பே எழுந்துகொள்வேன். வேலை இருக்கிறதோ இல்லையோ ராமநாதனுக்குத் தினமும் ஷேவிங் செய்தாக வேண்டும். அவருக்கு அது பழக்கம்.

'ஒரு முறை பயன்படுத்தப்பட்டது’ உறையில் இருந்து பிளேடை எடுப்பார். நான் கண்டும் காணாததுபோல இருப்பேன். முகம் முழுக்கச் சோப்பு தடவி ஷேவிங் ரேசரை முகத்துக்கு அருகில் வைத்துக்கொண்டு என்னைப் பார்ப்பார். 'என்னடா தம்பி... என்னையே பார்த்துட்டு இருக்க?’ என்பார். 'ஒண்ணுமில்லையே!’ என்று சொல்லிவிட்டுக் கமுக்கமாக இருப்பேன். முகத்தில் ரேசரை வைத்து ஒரு இழு இழுப்பார்... 'ஐயோ’ என்ற அலறலில் ஒட்டுமொத்த மேன்ஷனும் விழித்துக்கொள்ளும். பென்சில் சீவியதால் மொண்ணையாகிப்போன அந்த 'ஒரு முறை உபயோகப்படுத்தப்பட்ட’ பிளேடு அவர் முகத்தில் ரத்தக் காவு வாங்கியிருக்கும். வாய்க்கு வந்தபடி வண்டி வண்டியாகத் திட்டுவார். ஆனால், 'இவன்தான் இப்படிப் பண்றானே’ என்று பிளேடை ஒளித்துவைக்கத் தெரியாது அவருக்கு.

பாஸ்வேர்டு

'காலைல 6 மணிக்கு எழுப்பிவிட்ரு... படிக்கணும். அலாரம்வெச்சிருக்கேன்’ என்பார். அவர் தூங்கிய அரை மணி நேரத்தில் சுவரில் தொங்குகிற அஜந்தா கிளாக்கில் இருந்து கைக் கடிகாரம் வரை எல்லாவற்றிலும் 5 மணி என்று மாற்றிவிடுவோம். அவர் படுத்த ஒன்றரை மணி நேரத்தில் அலாரம் அடிக்கும். கர்மசிரத்தையாக எழுந்து முகம் கழுவி, தலைசீவி, பவுடர் அடித் துக்கொண்டு படிக்க உட்கார்ந்துவிடுவார். அதிகாலையில் எழ வேண்டியவர், நடுச்சாமத்தில் உட்கார்ந்து அரைத் தூக்கத்தில் படிப்பார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, லேசாக என்னை எழுப்புவார். 'தம்பி, மணி 7 ஆகிருச்சு. ஆனா, இன்னும் வானம் வெளுக்காம கருகருனு கெடக்கே!’ என்பார். அந்தச் சந்தேகத்துடனேயே மேலும் ஒரு மணி நேரம் படிப்பார். ஒரு கட்டத் தில் உண்மை தெரியவரும். வரும் கோபத்துக்கு... ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு படுத்து விடுவார். நாம் ஏதேனும் ஏட்டிக்குப்போட்டியாக நாலு வார்த்தை பேசினால், 'உன்னோடல்லாம் மனுஷன் பேசுவானா?’ என்று விரக்தியாகச் சொல்லிவிட்டு, போர்வையை இழுத்துப் போர்த் திக்கொண்டு படுத்துவிடும் அளவு வெள்ளந்தியான மனிதர்.

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 16-ம் தேதி அவரிடம், 'கொள்ளிடம் ஆத்துல பெட்ரோல் இல்லாம ஃப்ளைட்டை இறக்கிட்டாங்க’ என்பேன். கொலைப் பட்டினியோடு சைக்கிளை மிதித்துக்கொண்டு பறப்பார். 'போன வருஷம்கூட இப்படித்தானே புளுகினான்’ என்று ஞாபகம் வராது. 10 நாள் ஜிம்முக்குச் செல்வார். 'என்ன ராமநாதா... கன்னம் ஒட்டிப்போச்சே’ என்று யாராவது கருத்து சொன்னால், உடனே ஜிம் செல்வதை விட்டுவிடுவார். எல்லார் பேச்சையும் கேட்டுக்கொள்கிற வெள்ளந்தி மனசு அவருக்கு. ஆனால், இன்றைக்கு எல்லாரும் அவர் பேச்சைக் கேட்கிறார்கள். ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராக வளர்ந்து நிற்கிறார் மிஸ்டர் ராமநாதன். ஜூனியர்களுக்கு விளக்கம் சொல்கிறார். இனிமேலும் 'கொள்ளிடத்துல பிளேன் நிக்குது’ என்று அவரை ஏமாத்த முடியாது. வெள்ளந்தி ராமநாதனை நல்லது, கெட்டதை அளந்து சொல்லி வாதாடும் வழக்கறிஞராக யார் மாற்றியது?

'ஊருக்கு அடங்காத புள்ளை’ என்று எல்லாரும் கரித்துக்கொட்டிய என் நண்பன் ஒருவனை, 'எங்க கவுன்சிலர் போல வராதுய்யா!’ என்று இப்போது எல்லோரும் புகழ்கிறார்கள். 'யார் வாய்லயும் விழாதேனு எங்க அம்மா சொல்லிட்டே இருக்கும். ஆனா, இன்னைக்கு எல்லார் வாய் லயும் என் பேர் நல்லவிதமா விழுது. அதைக் கேக்கத்தான் எங்க அம்மா இல்லை!’ என்று கண் கலங்கும் அந்தக் கவுன்சிலர் நண்பனைத் தலைகீழாக மாற்றியது யார்?

ஊசி விழுந்தால்கூடச் சத்தம் கேட்கும் இரவு நேர ஸ்டடி ரூமில் சாமிநாதன் கர்மசிரத்தையாக எதையோ எழுதிக்கொண்டே இருப்பான். முக்கால் மணி நேரம் கழித்து வார்டன் வெளியேறிய பிறகு, 'ஷ்...ஷ்...’ என்று எல்லாரையும் கூப்பிடுவான். 'அ’ என்கிற எழுத்தை நோட்டின் ஒரு பக்கம் முழுக்கப் பட்டையாக எழுதி வைத்திருப்பான். முக்கால் மணி நேரமாக அவன் செய்த வேலை அதுதான்.

பாஸ்வேர்டு

ஃபங்க் ஸ்டைலில் முடி வளர்த்ததற்காக 10-ம் வகுப்பு பரீட்சையின்போது ஹாஸ்டலில் இருந்து அனுப்பப்பட்டவன் அவன். இன்றைக்கு ஹாங்காங்கில் 10 பேர்கொண்ட டீமுக்கு அவன்தான் 'தல’! பரீட்சையைவிடப் பாடுபட்டு வளர்த்த முடிதான் முக்கியம் என்று ஹாஸ்டலைவிட்டு விலகிய அவன், இன்று அழகான குடும்பத்தின் பொறுப்பான அப்பாவாக, அனைவரின் நம்பிக்கையைப் பெற்ற அதிகாரியாக எப்படி மாறினான்?

'ஏண்டா... வேலை வேலைனு வேலையைக் கட்டிக்கிட்டு அழறீங்க?’ என்று திட்டிய ஜிட்டு, இப்போது 'வேலையே கதி’யென்று கிடக்கிறான். 'வேலை செஞ்சு என்னத்தக் கிழிக்கப்போறோம்... மனசுக்குப் பிடிச்ச மாதிரி வாழ்வோம்’ என்று வெறுத்துப் பேசிய சர்வா, இப்போது சாஃப்ட்வேர் புள்ளியாக அமெரிக்காவில் பி.எம்.டபிள்யூவில் சீறுகிறான். 'இவன்லாம் மாடு மேய்க்கக்கூட லாயக்கு இல்லை’ என்று கரித்துக்கொட்டப்பட்ட பலரும், இன்று கரன்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். அந்த ரசவாத மாற்றத்தை அவர்களுக்குள் சாத்தியமாக்கியது எது?

தெரு ஓரம் கிரிக்கெட் விளையாடி சீனியர் சிட்டிசன்களின் மண்டையை உடைத்த, அப்பாவின் பைக்கைக் கீழே தள்ளிவிட்டு வீட்டிலிருந்து ஓடிப்போன, தெருமுக்கில் வாத்தியாரை வம்பிழுத்து அடிவாங்கிய... இப்படியாகச் சிறுவர் பருவத்தில் கிரைம் ரேட் ஏற்றிக்கொண்ட பலரும் எதிர்காலத்தில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மாறியிருக்கிறார்கள்.

ஞானிகளோ, குறிசொல்லும் கோடாங்கிகளோ, பரப்புரைகளோ, இவர்களை மாற்றிவிடவில்லை. காலம் தன்னுடைய அனுபவங்களின் மூலம் வாழ்க்கைப் பாடத்தை அவர்களுக்குப் போதித்திருக்கிறது. வெயிலுக்காக ஒதுங்குகிற ஏதோ ஒரு மரம், அவனவன் வாழ்க்கைகுறித்த கேள்வியை அவனுக்குள் எழுப்பிவிடுகிறது. அவனுக்கு அதுதான் போதிமரம். ஏனோதானோ என்று ஓடிக்கொண்டு இருக்கிற வாழ்க்கையில் காலம் ஏதோ ஒரு தருணத்தில் கல்லெடுத்து எறிகிறது. வாழ்க்கை முழுக்க இப்படியே இருந்துவிட முடியாது என்று எச்சரிக்கிறது.

தேர்ந்த படிப்பு, சிறந்த வேலை, கண்ணியமான குடும்பம், அமைதியான வாழ்க்கை என்று எல்லாமும் அமைந்திருந்தாலும், எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சத்தோடும் கவலையோடும்தான் பலரின் பயணம் தொடர்கிறது. எதையோ ஒன்றைத் தொலைத்துவிட்ட மாதிரியும், எதுவோ ஒன்று தொலைந்துவிடப்போவது மாதிரியுமான மனநிலைதான், 21-ம் நூற்றாண்டின் இமாலயச் சிக்கல். அதனால்தான் கட்டடம் கட்டுவதுபோல, ஒரு ப்ளூ சார்ட் போட்டு வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்கிறோம். ஆனால், எத்தனை முயன்றாலும் வாழ்க்கை அதன் போக்கில்தான் செல்கிறது. செல்லும் வழியில் நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுத்தபடியே இருக்கிறது. வெள்ளந்தியை விவரமானவன் ஆக்குகிறது. விளையாட்டுப் பிள்ளையைப் பொறுப்புள்ளவன் ஆக்குகிறது. தான்தோன்றி என்று பெயரெடுத்தவனை கவுன் சிலர் ஆக்குகிறது. வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு 'பிரேக்கிங் பாயின்ட்’ வைத்திருக்கிறது. 'விளையாட்டு போதும்... வேலையைப் பார்’ என்று உலுக்குகிறது. 'இனியும் இப்படியே இருக்க முடியாது’ என்று எச்சரிக்கிறது. மனசுக் குள் அலாரம் அடிப்பதுபோல உதறும் அது தான், மனதின் குரல். காலமும் வாழ்க்கையும் ஒருசேர உருவாக்கிய உண்மையின் பதிவு அது.

பாஸ்வேர்டு

'யார் பேச்சையும் கேட்க மாட்டேங்கிறான். இவன் எங்க உருப்படப்போறான்’ என்று விமர்சிக்கப்பட்ட பலர், பின்னாளில் மதிக்கத்தக்க பிரபலமாக உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் மனதின் குரலுக்குக் காது கொடுத்தவர்கள்தான். எல்லா நெருக்கடியான நேரங்களிலும், தவறு செய்யும் தருணங்களிலும், அவசரப்படும் பொழுதுகளிலும், துரோகம் செய்யும் சூழ்நிலைகளிலும், மகிழ்வான தருணங்களிலும் மனசு சொல்லும் உண்மைக்குக் காது கொடுக்கத் தயாராக இருப்பவனை, காலம் எங்கோ அழைத்துச் சென்றுவிடுகிறது!

காலத்துக்கு நல்லவன், கெட்டவன், ஏழை, பணக்காரன், வெகுளி, அறிவாளி என்ற பேதமெல்லாம் இல்லை. மனதின் குரலைக் கேட்கும் குணம் உள்ளவருக்கு, அதுவே பல கதவுகளைத்  திறந்துவைத்திருக்கிறது. 'நீ அந்த வேலையை எப்படிச் செஞ்சிருக்கணும்... தெரியுமா?’, 'அடுத்து என்ன பண்ணப்போற... அதெல்லாம் சரிவராது. இப்படித்தான் என் மாமா பையன் பண்ணி சொதப்பிட்டான்!’  என்று நாலாபுறமும் வந்து விழும் இரைச்சல்கள், பல நேரங்களில் மனம் சொல்வதைக் கேட்க விடாமல் தடுத்துவிடுகிறது.

நமது வாழ்க்கையை, அதன் எல்லை வரை சரியாகக் கட்டமைத்துத் தருவதற்கான இன்ஜினீயர்கள் இங்கு இல்லை. பைக்கில் வேகமாகச் செல்லும்போது, சட்டென்று குறுக்கே வரும் குழந்தை மீது மோதாமல் இருக்க, அனிச்சையாக பிரேக்கில் கால், கை வைக்கிற மாதிரிதான், மனசும் நம்மிடம் பேசும். வாழ்வின் எல்லை வரை காலத்தின் போக்கிலேயே சென்று சரியாகக் கட்டமைத்துத் தரும் சக்தி மனதின் குரலுக்குத்தான் உண்டு. வாழ்க்கையைப் பற்றி வாழ்க்கையைவிட யாராலும் அழகாகச் சொல்லித்தர முடியாது!  

- ஸ்டாண்ட் பை...