##~##

விடுமுறை தினங்களில், மாநகராட்சி விளையாட்டுத் திடல்களைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒரு பக்கம் 10 சிறுவர்கள் பயங்கர சீரியஸாக டீம் பிரித்து கிரிக்கெட் விளையாடுவார்கள். பக்கத்துப் பக்கத்துத் தடங்களை பிட்ச் ஆக்கிக்கொண்டு ஐந்தாறு அணிகள் அருகருகே விளையாடிக்கொண்டுஇருக்கும். மறுபாதியில் ஒரு கூட்டம் கால் பந்தை உதைத்துக்கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் பேஸ்கட் பால், ஓட்டம், தண்டால் என்று சகல உடல் இயக்கங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கும்!

பைக்கை ஓரங்கட்டிவிட்டு அப்படியான மைதானங்களை வேடிக்கை பார்க்க எனக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னைப் போலவே சிலர் பகுதி நேரப் பார்வையாளர்களாக அந்த மைதான நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும்போதும் எப்படி இவ்வளவு உற்சாகமாக விளையாடுகிறார்கள் என்று எனக்குத் தோன்றும். நாமும் சின்னப் பிள்ளையாக இருந்தபோது இப்படித்தானே இருந்தோம். எவ்வளவு சந்தோஷமான வாழ்க்கை என்று மனசு ஏங்கும். இதே போன்ற எண்ணஓட்டம்தான் என்னைப் போல வேடிக்கை பார்க்கும் பலருக்கும் இருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சின்னப் பசங்க... எந்த வேலையும் கிடையாது. ஜாலியா விளையாடுறாங்க... நமக்குத்தான் எதுக்குமே நேரம் இல்லையே’ என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, அந்தப் பசங்களோடு சேர்ந்து விளையாடும் சில பெரியவர்களும் கண்ணுக்குத் தட்டுப்படுவார்கள். சில நாட்கள் கையில் ரிஸ்ட்பேண்ட் சகிதம் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்குகொள்ளும் போட்டிகள் அந்த மைதானத்தில் நடப்பதையும் பார்த்திருக்கிறேன்.

இவர்களுக்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது. அநேகமாக காலை 9 மணிக்குச் சென்று மாலை 5 மணிக்கு வீடு திரும்புகிற ஆட்களாக இருப்பார்கள் என்று சமாதானம் செய்துகொள்வேன். ஆனால், உண்மையில் இன்று யாருடைய வேலையும் அப்படி இல்லை. எல்லாருக்குமே அலுவல் நேரம் என்பது அதிக மாகிவிட்டது. ஒரு சில பணிகளைத் தவிர, மற்ற வேலைகளில் அலுவலகத்துக்குள் நுழையும் நேரம் ஒன்பது அல்லது பத்தாக இருக்கும். ஆனால், வீடு திரும்பும் நேரம் அந்த கடவுளுக்குத் தான் தெரியும். ஆக, இவர்களுக்கு மட்டும் நேரம் இருக்கிறது என்ற பொய் சமாதானத்தைத் தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தால், அவர்கள் தங்கள் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்குகிறார்கள் என்கிற உண்மை புரியும்.

பாஸ்வேர்டு் -10

காலை 8 மணிக்கு டி-ஷர்ட் தொப்பலாக நனைந்து தோளில் ஷட்டில்காக் மட்டைகளைத் தொங்கவிட்டுக்கொண்டு பைக்கில் செல்லும் 35 வயதுக்காரரைப் பார்த்தால், ஒரு புன்னகை மலர்கிறது. அசோக் நகர் விளையாட்டுத் திடல் அருகில் இருளத் தொடங்கியிருக்கும் மாலைப் பொழுதில் விளையாடி முடித்த களைப்புத்தீர, டீ குடித்துக்கொண்டே பேசிச் சிரிக்கும் 40 வயது நண்பர்கள் கூட்டத்தை வேடிக்கை பார்க்கவே அந்தக் கடையில் ஒரு டீ குடிக்கலாம் என்று தோன்றுகிறது.

வயதும் பொறுப்பும் அதிகரிக்க அதிகரிக்க... நமக்குப் பிடித்தமான, நம்மை உற்சாகப்படுத்துகிற, நமக்கே நமக்கு என்று நாம் கொண்டாடிய விஷயங்களை ஒவ்வொன்றாகத் தொலைத்துக்கொண்டே வருகிறோம். அது தவிர்க்க முடியா தது என்றாலும், முடிந்த வரை ஏதேனும் ஒன்றிரண்டையேனும் தொடர வேண்டும் என்ற முனைப்பே நம்மிடம் தொலைந்துவிட்டது. நம்முடைய 'அவசரமாக, இன்றே செய்து முடிக்க வேண்டிய வேலைகள்’ பட்டியலில் அதற்கெல்லாம் இடமில்லாமல் போய்விட்டது.

தேடித் தேடி ஸ்டாம்ப் சேர்ப்பது, பிடித்தமான கவிதை வெட்டி நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி வைப்பது, ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மொட்டை மாடியில் உட்கார்ந்து ஓவியம் வரைவது, பிடித்த எழுத்தாளரின் புத்தகம் வாசிப்பது, நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவது, சும்மானாச்சும் பீச்சுக்குப் போய் சுண்டல் வாங்கித் தின்பது, நாய்க் குட்டிகளோடு விளையாடுவது, வீட்டில் மின்விசிறிகளைக் கழற்றித் துடைத்து ஒழுங்கு பண்ணி, அதைப் பார்த்து ரசிப்பது, சினிமா பார்த்துவிட்டு அதைவைத்து இன்னொரு சினிமா ஓட்டுவது, எந்த நோக்கமும், காரணமும் இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பது என படிப்படியாக ஒவ்வொன்றும் தொலைந்துபோகிறது.

அப்படி ஒவ்வொன்றையும் தொலைக்கும்போது நம் அறிவு ஒவ்வொரு சமாதானம் சொல்கிறது. 'நான் என்ன சின்னப் புள்ளையா?’, 'இதைச் செய்யிற நேரத்துக்கு ஏதாவது உருப்படியா செய்யலாம்’, 'இதுக்கு நேரம் ஒதுக்குற அளவுக்கு நான் சும்மா இல்லை... நான் ரொம்ப பிஸி’ என ஏதேதோ காரணங்கள். ஆனால், சிலர் மட்டும் அத்தனை நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் மத்தியில் தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை விட்டுக்கொடுப்பதே இல்லை. ஊர் கோயில் திருவிழாவுக்காக மூன்று நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு, உறவுகளோடும் நண்பர்களோடும் கொண்டாடி மகிழ்கிற நிறையப் பேர் ஐ.டி. துறையிலும் எம்.என்.சி-க்களிலும் வேலை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும், குடும்பத்தோடு திருவிழாவுக்குப் போக வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பது உண்டு!

பாஸ்வேர்டு் -10

அசோக் நகர் மைதானத்தில் பேட்மிட்டன் விளையாடுபவர்கள் அகில இந்தியப் போட்டிகளுக்குத் தேர்வுசெய்யப்படாமல் போகலாம். அப்படி விளையாடுகிற காரணத்தால் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதியெல்லாம் வராது என்று அவர்களுக்கு யாரும் பிராமிஸரி நோட்டில் கையெழுத்துப் போட்டுத் தரவில்லை. அவர்களுக்கும் அதெல்லாம் தேவை இல்லை. அவர்களுக்குப் பிடித்த ஒன்றை விருப்பத்தோடு செய்கிறார்கள். அந்தத் திருப்தியும் மன நிறைவுமே அவர்களுக்குப் போதும்.

நம் மனதை இலகுவாக்குகிற, ஒரு நாளை உற்சாகப்படுத்துகிற சின்னச் சின்ன, நம் மனதுக்குப் பிடித்தமான விஷயங்களைக் கவனிக்காமல் இருந்துவிடுவதும் அதற்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதும்கூட அப்போதைய மன அழுத்தங்களுக்குக் காரண மாக இருக்கலாம். கல்லூரி நாட்களில் வரிந்து வரிந்து அழகான கவிதைகள் எழுதிக் கொண்டு இருந்த ஒரு நண்பன், இப்போது கவிதை எழுதியே 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்கிறான். புராஜெக்ட்களுக்கும், டார்கெட் துரத்தல்களுக்கும் மத்தியில் கவிதை காணாமலே போய்விட்டது எனப் பலரைப் போல அவனும் சமாதானம் சொல்கிறான். ஆனால், இன்னொருவனோ தனக்குப் பிடித்த ஓவியத்தை எவ்வளவோ பணி, குடும்பச் சுமைகளுக்கு மத்தியிலும் தொடர்கிறான். ஒருவனால் முடிவது இன்னொருவனால் ஏன் முடியாமல் போகிறது?

அன்றைக்கு நான் சந்தித்த ஒரு பெரியவர், இதையே வேறு வார்த்தைகளில் பொளேரென்று கேட்டார்... 'உங்களுக்கே உங்களுக்குனு ஒரு மணி நேரம்கூட ஒதுக்க முடியாத அளவுக்கு, அப்படி என்னதான் பண்ணிக் கிழிக்கிறீங்கனு தெரியலையே’! அவர் கேட்டதும் சரிதான். உண்மையில் யாருக்கும் இங்கே நேரமெல்லாம் இல்லாமல் இல்லை. ஒரு மணி நேரம் விளையாடி என்ன வரப்போகிறது என்ற விட்டேத்தியான மனோபாவமும் சோம்பலும்தான் உண்மையான காரணம். ஆனால், தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி, தங்களுக்குப் பிடித்தமானவற்றைச் செய்கிறவர்கள் மற்றவர்களைவிட உற்சாகத்துடன் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை!

'இது ஓடுற வயசு... ஒரு 10 வருஷம் மூச்சுப் பிடிச்சு ஓடிருவோம். அப்புறம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு, எல்லோரோடயும் ஆட்டத்துல சேர்ந்துக்கலாம்’ என்ற கணக்கெல்லாம் தற்காலத்தில் சரிப்பட்டு வராது. ஒரு கட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் வேலை நெருக்கி, கண்கள் இருட்டி வெறுத்துப்போய் 10 நாள் ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ தப்பிச் செல்லலாம் என்று முடிவெடுத்துச் செல்வோம். ஆனால், அங்கே சென்றும் என்ன செய்வது என்று தெரியாமல், மூன்றாவது நாளில் திரும்பி வந்து திருதிருவென முழிப்பதைவிட, ஒரு நாளின் சில மணித் துளிகளைப் பிடித்த விஷயத்தைச் செய்வதில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நன்மை விளை விக்கும்.

பிடித்ததை எல்லாம் தேக்கிவைத்து நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாகச் செய்யலாம் என்று திட்டம்போடுவது, மூளை நம்மை ஏமாற்றும் போங்கு ஆட்டம்.

'வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அக்கடா என்று இருக்கலாம். தினமும் காலையில் ஒரு மணி நேரம் ஜாலியாக விளையாடலாம். காலை உணவுக்குப் பிறகு காலார நடந்து சென்று நண்பர்களோடு அளவளாவலாம். மனைவியை அழைத்துக்கொண்டு கோயில் குளமெல்லாம் செல்லலாம்’ என ரொம்பவும் தொலைநோக்கோடு திட்டம் போடுபவர்களும் உண்டு.

பாஸ்வேர்டு் -10

ஆனால், யதார்த்தம் அப்படி இருப்பதில்லை. ரிட்டையர் ஆன பிறகு, காலையில் விளையாட மனம் வருவதில்லை. காரணம், அதுவரை நாம் விளையாடிப் பழகியது இல்லை. நண்பர்கள் யாரும் உங்களுக்காகக் காத்திருக்கப்போவது இல்லை. ஏனெனில், வேலை வேலை என்று அலைந்தபோது, எந்த நண்பருக்காகவும் நீங்கள் காத்திருந்தது இல்லை. நல்ல நாள், திருநாளுக் குக்கூட கோயிலுக்குச் சென்று பழகியிருக்காத நமக்குத் திடீரென ஒரே நாளில் கூட்டத்தில் காத்திருந்து, கடவுளைத் தரிசிக்கும் பொறுமை இருப்பதில்லை.  

பின்னாளில் நேரம் இருக்கும்போது எதை எதையெல்லாம் ஆற அமரச் செய்து அனுபவிக்கலாம் என்று நினைத்துக்கொண்டு இருக் கிறோமோ, அதில் ஒன்றிரண்டையேனும் நேரம் இல்லாத இந்தக் காலத்திலேயே நாம் செய்ய வேண்டும். அந்தப் பழக்கம்தான், அந்த நேரம் தரும் உற்சாகம்தான் நம்மைக் காலம் முழுவதும் ஊக்கத்துடன்வைத்திருக்கும்.

ஒரு காரை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓடி முடித்த பிறகு, ஒட்டுமொத்தமாக சர்வீஸ் செய்துகொள்கிறேன் என்று அதை இயக்கிக்கொண்டே இருக்க முடியுமா? 10,000 கி.மீ-க்கு ஒரு தடவை அதை முறையாகப் பராமரித்தால்தானே, அந்த ஒரு லட்சம் கி.மீ. பயணமும் இனிமையாக இருக் கும். மனித உடலும் மனமும் ஓர் இயந்திரம் தான்.

வேலைக்குத்தான் ஓய்வு இருக்கிறது. வாழ்க்கைக்கு இல்லை. பிடித்ததைச் செய்வதில் பிடிவாதமாக இருப்போம்!  

- ஸ்டாண்ட் பை...