Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன் - 10

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன் - 10

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
##~##

ங்கள் ஊரில் பள்ளிக்கூடம் பக்கமே போகாத டாக்டர் ஒருவர் இருந்தார். அவர்தான் மூக்கையா தாத்தா. கிராமத்து வைத்தியர் என்று நினைத்துவிடாதீர்கள். நாங்கள் அவரை அழுத்தந்திருத்தமாக டாக்டர் என்றுதான் சொல்லுவோம். 60 வயதைத் தாண்டிய அவர் தெருவில் வருகிறார் என்றால், 80 வயதைத் தொட்டுவிட்ட கிழடுகள் எல்லாம் ஊர்ந்து வீட்டுக்குள் போய்விடும்.

'கிடக்க கெடயப் பாத்தா, கட்ட இன்னும் ஒரு வருசத்துக்கு சிவனேனு இப்படித்தான் கெடக்கும்போலிருக்கே! பாவம் பாக்காத, நல்லா ஓடி ஆடி வாழ்ந்த உடம்பு. இப்படிக் கெடையில போட்டுச் சீரழிச்சி அனுப்பப்போறியா? பேசாம நம்ம டாக்டரக் கூட்டிட்டு வந்து காட்டிடு. அதான் நல்லது!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படிச் சொல்லித்தான் கடைசியில் மூக்கையா டாக்டரை அழைத்து வருவார்கள். காணாமல்போன ஆட்டுக்குட்டியைத் தேடி தெருத் தெருவாக அலையும் ஒரு சாதாரண மேய்ப்பனின் முகச் சாயலில், வெற்றிலையை வாயில் குதப்பிக்கொண்டு மூக்கையா தாத்தா வந்ததும், எல்லாரும் அந்த வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். ஒரு டம்ளர் பாலோடு அந்த வீட்டுக்குள் போகிறவர் வெளியே வருகிற வரை, வீட்டுக்குள் போக யாருக்கும் அனுமதி இல்லை. சுமார் அரை மணி நேரம் கழித்து மூக்கையா தாத்தா பால் இல்லாத டம்ளரோடு வெளியே வருவார். அவர் வெளியே வந்ததும் அவரிடம் யாரும் உடனே போய்ப் பேசிவிட மாட்டார்கள். வெளியே ஒதுக்குப்புறமாக ஒரு சட்டியில்வைத்திருக்கும் தண்ணீரில் போய் அவர் கை கழுவும் வரை, அத்தனை பேரும் அப்படியே பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

தாத்தா அந்தப் பால் இல்லாத டம்ளரை அப்படியே கவிழ்த்துவிட்டு, அந்தத் தண்ணீரில் கைகளைக் கழுவி உதறிவிட்டால் போதும்... வெளியே நின்ற கூட்டம் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதபடி உள்ளே ஓடும். அப்புறம் அது ஒரு துஷ்டி வீடாக மாறிவிடும். அந்த வீட்டுக்குள் அவர் என்ன செய்தார், எப்படிச் செய்தார் என்பதை எல்லாம் யாரும் இதுவரை கேட்டதும் இல்லை. அவரும் யாரிடமும் அதைச் சொன்னதும் இல்லை.

மறக்கவே நினைக்கிறேன் - 10

சிறு வயதில் இந்த மூக்கையா தாத்தாவைப் பார்த்துப் பயந்து ஓடியிருக்கிறேன். கடைக்குப் போய் வெத்தலை வாங்கி வரச்சொல்லிக் கூப்பிட்டால், 'போடா... கொலைகாரக் கிழவா’ என்று கல்லை எடுத்து எறிந்துவிட்டு வீட் டுக்கு ஓடி வந்திருக்கிறேன். அம்மாக்கள்கூட வீட்டில் சேட்டை செய்கிற பிள்ளைகளிடம் எல்லாம் 'மூக்கையா தாத்தாவிடம் பிடித்துக் கொடுத்துடுவேன்’ என்று சொல் லித்தான் மிரட்டுவார்கள். ஆனால், வளர வளர... பழகப் பழக... எனக்கு மூக்கையா தாத்தாவை அவ்வளவு பிடித்திருந்தது. ஒரே ஒரு மாட்டையும் கன்னுக்குட்டி யையும் மேய்ப்பதற்காக எங்க ளோடு மேய்ச்சலுக்கு ஓட்டி வருவார். பால் கறக்கும் கறவை மாட்டையும் அதன் கன்னுக்குட்டியையும் ஒன்றா கவே மேய்ச்சலுக்கு ஓட்டிவரும் அவரைப் பார்க்க எனக்கு அதிசயமாக இருக்கும்.  

'என்னப்பா இது... கறவை மாட்டையும் கன்னுக்குட்டியையும் ஒண்ணா மேச்சிக்கிட்டுத் திரியிற?’ என்று யாராவது கேட்டால் போதும், 'ஏலேய்... உங்க அம்ம பால உனக்குத் தராம, கறந்து காசுக்கு வித்தா நீ சகிச்சுக்குவியா?’ என்பார் சுள்ளென.

'பால் கறக்க மாட்டேன்னு சொன்னா, அப்போ எதுக்குத்தான் மாடு வளர்க்கிறீயாம்?’ என்று மறுபடியும் யாராவது கேட்டால், 'புள்ள குட்டி இல்லாதவன், ஆட்ட வளத்து அன்பு வைப்பான். நல்ல புள்ள பெக்காதவன், மாட்ட வளத்து மன்னிப்புக் கேட்பான்!’ என்பார் உள்ளக்கிடக்கையோடு. நாங்கள் மேய்ச்சல் நில நண்பர்களானோம்.

''தாத்தா... நீங்க எப்போ தாத்தா இந்த வேலையைச் செய்ய ஆரம்பிச்சீங்க?'' - ஒரு மதிய உணவுக்குப் பிறகான மந்தமான பொழுதில் நான் அவரிடம் கேட்டேன்.

''வேலையா? போடா பைத்தியக்காரா... கடவுள் எனக்குக் கொடுத்த வரம்டா இது!''

''அது சரி... எப்போ, ஏன் செய்ய ஆரம்பிச்சீங்க?''

''ஒருநாள் என்னோட சேக்காளி... அதாம்டே நம்ம பழனியம்மா இருக்காள்ல, அவளோட அப்பன் ராமசாமியும் நானும் சேர்ந்து கருங்குளம்   மேலூருக்கு ஓலை ஏத்த வண்டியப் பூட்டிக்கிட்டுப் போனோம். அவனுக்கு அப்போதான் மொதக் கொழந்தயா இந்த பழனியம்மா பொறந்திருந்தா. ரெண்டு பேரும் கிட்ணகுளம் வழியா ஓலைய ஏத்திக்கிட்டு வந்துட்டு இருக்கோம். நான் வண்டியில இருக்கிற ஓலை மேல ஒய்யாரமா இருக்கேன். ராமசாமி வண்டிய அடிச்சிக்கிட்டு வாரான்.  சொக்கர் கோயிலத் தாண்டி தவனமடைகிட்ட வண்டி வரும்போது, திடீர்னு அச்சு ஒடிஞ்சு குப்புறத் தள்ளிட்டு. நான் மேலயிருந்து குளத்துக்குள்ள குப்புற விழுந்துட்டேன். தண்ணிக்குள்ள கிடந்து மேல ஏறி வந்து பாத்தா, மொத்த வண்டியும் பாரமும் ராமசாமி மேல கெடக்கு. கத்திக் கூப்பாடு போட்டு சனத்தக் கூட்டி வண்டியத் தூக்குறதுக்குள்ள அவன் உடலு கூழா கொழ கொழனு நொறுங்கிப்போச்சு. ஆனாப் பாரு... சனியன் உசிரு மட்டும் மசிராட்டம் அப்பிடியே தங்கி நின்னுடுச்சி. போகாத ஆஸ்பத்திரி இல்ல... காட்டாத வைத்தியன் இல்ல. ரெண்டு வருஷம் எல்லார்கிட்டயும் காட்டிட்டு வந்து வீட்ல போட்டுட்டாங்க. பாவம்... ஒரு பொம்ப ளப் பிள்ளைய வெச்சிக்கிட்டு அவன் பொண் டாட்டி படாதபாடு இல்ல. அவன் அப்படியே நடு வீட்டுக்குள்ள நீட்டி நிமுந்து கிடப்பான். வாய் மட்டும்தான் பேசும். வேற எதுவும் எந்த வேலையும் செய்யாது. நான் அப்பப்போ போய் அவன்கிட்ட பேசி இருந்துட்டு வருவேன்.

அப்படித்தான் ஒருநாள் சொம்புல பால எடுத்துக்கிட்டு அவனப் பாக்கப் போயிருந்தேன். பாலை டம்ளர்ல வாங்குனவன் அப்படியே என் கையப் பிடிச்சிக்கிட்டு, 'ஏலே... மூக்கையா ஒரு குத்து நெல்ல அள்ளி என் தொண்டைக்குள்ள போடுல... உனக்குப் புண்ணியமாப் போவும்’னு அழ ஆரம்பிச்சிட்டான். இது என்னடா வம்பாப்போச்சினு நான் அவனத் திட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்!’ அன்னைக்கு ராத்திரியே அவன் பொண்டாட்டி வந்து என் வீட்டுக் கதவத் தட்டுறா... 'வாங்கண்ணே... வந்து அவர எப்படியாவது அவர் ஆசப்படி அனுப்பிச்சிவெச்சிருங்க’னு ஒரே அழுவ அழுவுறா. இந்தக் கழுத ஏன் இப்படிப் பேசுதுனு போய்ப் பார்த்தா, அங்க அவன் உசுரு 'போட்டா... வரட்டா?’னு இழுத்துக்கிட்டுக்கெடக்குது. நாடிநரம்பு எல்லாம் மேலயும் கீழயும் வேகமா தல அறுபட்ட சேவல் மாதிரி அடிச்சிக்கிட்டுக்கெடக்குது. 'இப்படித்தான் எல்லா ராத்திரியும் இந்த ஒடம்பும் அதுல சிக்கிட்டுக் கிடக்கிற கொஞ்சூண்டு உசுரும் இந்தப் பாடுபடுது’னு மடியில இருக்கிற பச்சப் புள்ள கண்ண சிக்குனு பொத்திக்கிட்டே கதறி அழுவுறா பொண்டாட்டிக்காரி. ஒரு நேரம் பாக்குற எனக்கே நெஞ்சு அப்படி வலிச்சிச் சின்னா, முழு நேரம் பாக்குற அவன் பொண்டாட் டிக்கு அது எப்டி இருக்கும்? அந்த நேரம் நான் எதையும் யோசிக்காம, அப்படியே அவன் நெஞ்சுல அவன் கையையே எடுத்து வெச்சி, என்னோட கண்ண சிக்குனு மூடிக் கிட்டு, அவன் உடம்ப அப்படி ஒரு அழுத்து அழுத்திப் புடிச்சேன். அவனோட உடம்புல எந்தத் துவாரம் வழியாப் போச்சுன்னு தெரியல அவன் உசுரு. 'நான் போறேன்’னு போயிடுச்சு!'' என்று  சொல்லி முடித்தபோது, மூக்கையா தாத்தாவின் குரலும் உடம்பும் அப்படி நடுங்கிவிட்டது. அவர் கையை நான் கொஞ்சம் அழுத்திப் பிடித்துக்கொண் டேன். கொஞ்ச நேரம் கழித்து என் கையை எடுத்துவிட்டு அவரே மறுபடியும் பேசத் தொடங்கினார்.

மறக்கவே நினைக்கிறேன் - 10

''அப்புறம் எல்லாருக்கும் விசயம் தெரிஞ்சி 'நல்ல நேரத்துல... நல்ல காரியம் செஞ்ச மூக்கையா’னு சொல்லி, தூக்கிட்டுப் போய் அவனப் புதைச்சிட்டு வந்தாங்க. அதுக்கப்புறம் அவன் வந்து அழுதான், இவன் வந்து அழுதான்னு அனுப்பிவெச்சது பதினேழு சீவனாகிப்போச்சு'' என்று பேச்சை முடித்துக்கொண்டார்.

''எல்லாரையும் ஒரே மாதிரி இப்படித்தான் பால ஊத்தி நெஞ்சுலவெச்சி அழுத்துவீங்களா?''

''இல்லல்ல... ராமசாமிக்கு மட்டுந்தேன் அப்பிடிப் பண்ணேன். பாவம்! அந்த உசுரு உடனே போட்டும்னு பால ஊத்தி நெஞ்சுல கையைவெச்சு அழுத்தினேன். அதுக்குப் பிறகு, இன்னைக்கு வரைக்கும் ஒரு உசுரக்கூட நானா எதுவும் செய்யல!''

''அப்படின்னா, அந்தப் பதினேழு உசுரும் பறந்தாபோச்சு?''

''நான் வீட்டுக்குள்ள போய் நின்னதும் என்னைப் பாத்ததுமே, எப்படியாவது பறந்துடணும்னு நினைக்கிற அந்த உசுரு படக்குனு என் கை ரெண்டையும் பிடிச்சிக் கிட்டுக் கண்ணீர் வடிச்சிக்கிட்டு 'அனுப்பிச்சிரு மூக்கையா’னு கெஞ்சும். அதோட கண்ணு ரெண்டையும் பாத்தாலே நமக் குத் தெரிஞ்சிடும். அந்த உடம்ப அந்த உசுருக்குப் பிடிக்கலனு. நான் பக்கத்துல உக்காந்து அதோட கையப் பிடிச்சி எடுத்து என் நெஞ்சுல வெச்சுக்கிட்டு அழுத்திப் பிடிச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் அழுவேன். உடனே அதுவும் அழுவும். அவ்வளவு நாள் அழுவாத அழுவையைப் பச்சப்புள்ள மாரி அப்பிடி அழுவும். எப்படியும் அரை மணி நேரத்துல அழுது அழுது கண்டிப்பா கண்ணீர்லயே கரைஞ்சுபோயிடும். அப்புறம் கொண்டுபோன பாலை அந்த வெத்து உடலோட வாயில ஊத்திட்டு வந்திருவேன். இதுதான்... இது மட்டும்தான் அந்தப் பதினேழு உசிருக்கும் நடந்திருக்கு. உடம்ப வெறுக்கிற உசுரு அது அதுவாவே பறந்துபோயிடும். நாம கொஞ்சம் அந்த முடிச்சைத் தளர்த்தி, அதுக்குச் சின்னதா ஒரு கொக்கி மாதிரி உதவினா போதும்.  

ஒருநாள் நான் ஒரு வீட்டுக்குள்ள போனா, அங்க ஒரு கிழம் எப்படியும் வயசு எம்பது, தொண் ணூறு இருக்கும். மலமும் சளியுமா அப்படியே நாறிக்கிட்டு கிடந்துச்சு. உள்ள போன என்னப் பாத்ததும் ஏதோ சொல்லிச்சு. 'என்னடா சொல்லு து?’னு போய், அது வாய் பக்கத்துல காத வெச்சிக் கேட்டா, 'இவ்வளவு நாள் வந்து என்னக் கூட்டிட்டுப் போவாம இப்படி நாறப்போட்டுட்டல்ல... நீ நல்லாவே இருக்க மாட்ட’னு சொன்னதும் எனக் குத் தலையில கொம்பு முளைச்ச மாதிரி ஆயிடுச்சி!’ என்று மூக்கையா தாத்தா சொல்லும்போது, என் உடல் உறைந்துவிட்டது.  

'' 'என்னையக் கொன்னுராதீங்க’னு ஒரு உசுருகூட உங்ககிட்ட அழலையா?''

''அதெப்படி அழாம? எப்படியாவது பொழச்சிக்கிடக்கணும்னு நினைக்கிற உசுரு என்னைப் பாத்த தும் தன்னோட ரெண்டு கையையும் எடுத்து படுத் துக்கிடக்கிற கட்டில சிக்குனு பிடிச்சிக்கும். அதை யும் மீறிப் பக்கத்துல போய் நான் பார்த்த எத்தனையோ உசுரு புளிச்னு என் மூஞ்சியில காரித் துப்பியிருக்கு. அதுலயே புரிஞ்சிடும் எனக்கு. அப்படியே அதோட ரெண்டு கண்ணையும் கொஞ்ச நேரம் பாத்துக்கிட்டே இருப்பேன். அப்புறம் சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு, கொண்டுபோன பாலை நான் மடக்கு மடக்குனு குடிச்சிட்டு வந்துருவேன். வெளிய வந்து, 'எப்பா... இது சீக்கிரத்துல போவாது. வாழ வேண்டிய உசுரு. என்னால முடியாது... ஆள விட்டுறங்க’னு வந்துடுவேன்!'' என்று சொல்லிவிட்டு, அவர் வெத்தலையைக் குதப்பிக்கொண்டிருந்தார்.

மறக்கவே நினைக்கிறேன் - 10

நான் அவரையே உற்றுப் பார்த்தேன். உடம்பில் ஒரு முடிகூடக் கறுப்பாக இல்ல. கையும் காலும் இப்பவே நடுங்கத் தொடங்கிவிட்டன. அத்தனை சதையும் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் தொங்கத் தொடங்கிவிடும். நடக்கும்போது ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தால் போதும், எழுந்து உட்கார எப்படியும் இரண்டு நாளாகும். வயது அறுபதைத் தாண்டி ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்கும். அதற்கு மேலும் என்னால் யோசித்துக்கொண்டே இருக்க முடியவில்லை. கேட்கக் கூடாதுதான்... ஆனால், படக் கென்று கேட்டுவிட்டேன்!

''ஏன் தாத்தா... உனக்கும் கொஞ்ச நாள்ல இந்த நிலைமை வரத்தானே செய்யும். அப்போ நீ என்ன பண்ணுவ?''  

''ஏலேய்... வசமாக் கேட்டுப்புட்டியே!'' என்றவர் என் தலையைத் தடவிக் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டுத் தன் வெத்தலைப் பெட்டியை முழுமையாகத் திறந்து காட்டினார். உள்ளே அந்தப் பச்சை வெத்தலைக்குள் பதுக்கிவைத்தபடி வெள்ளை டப்பாவில் செடிகளுக்கு அடிக் கும் பூச்சிக்கொல்லி விஷப் பாட்டில் ஒன்று இருந்தது.

''எனக்குத் தெரியும்! நான் எப்படிச் சாவேன்னுதான் ஊரே காத்துக்கிட்டு இருக்கு. எனக்கு வேற ரெண்டு கொம்பு முளைச்சிருக்கு. கொம்பு முளைச்சவன் யார்கிட்டயும் சாவுப் பிச்சை கேட்றக் கூடாது. நான் கேட்க மாட்டேன். அவனவன் கொம்புதான் அவனவனக் குத்தும். என் கொம்புதான் என்னைக் குத்தும். இதுக்குப் பேரு தற்கொலை கெடயாது. 'சரிடா... நீங்க வாழுங்கடா... நான் போறேன். எனக்குக் கொம்பு அரிக்குது’னு அர்த்தம்!''  

அதன் பிறகு ஐந்தாறு வருடங்கள் அதே டாக்டராக அதே கொம்போடு தன் மரணத் தைத் தன் வெத்தலைப் பெட்டிக்குள் ஒளித்துவைத்துக்கொண்டு திரிந்த மூக்கையா தாத்தா, ஒருநாள் திடீரென்று காணாமல்போனார்.

'செஞ்ச பாவத்தத் தொலைக்க ஒருவேளை காசி கீசிக்குச் சந்நியாசம் போய்இருப்பான்’ என்றனர் சிலர். 'அதெல்லாம் இருக்காதுப்பா... எங்கேயாவது தூரத்து ஊர்ல போய் ஆத்துல, குளத்துல விழுந்துபோய்ச் சேர்ந்திருப்பான்’ என்றனர் சிலர். ''ஆமா... ஆமா... நம்ம கண்ணுக்குத் தெரியாமச் சாவணும்னு எங்கேயாவது ஓடியிருப்பான் கிழவன்!’ என்றனர் பலர்.

ஆனால், என் கனவிலோ ஓர் அடர்ந்த காட்டின் நடுவே கொட்டும் அருவியில் அரை நிர்வாணத் தோடு, தலையில் கொம்புகள் முளைத்த அந்த மூக்கையா தாத்தா வெத்தலை இடித்தபடி இன்னும் வந்தபடியேதான் இருக்கிறார்!

- இன்னும் மறக்கலாம்...