யட்சன்

பாரியின் அறை முழுவதும் நிறைந்திருந்த ரஜினிகாந்தின் புகைப் படங்களைப் பார்த்து, இன்ஸ்பெக்டர் துரை அரசன் வியந்துபோனார்.

''ரஜினிக்கு இவ்வளவு பெரிய விசிறியா..?' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''விசிறி இல்ல... வெறியன்! அதனாலதான் நடிக்க வந்தேன். அவர் கலந்துக்கிற பட பூஜைக்குப் போகணும்னு கார் வரச் சொல்லியிருந்தேன். போன இடத்துல ஜாக்பாட் மாதிரி நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. கார் மாறி ஏறிப் போனது எனக்குத் தெரியாது. செந்தில் நடிக்கிறதுக்காக செலெக்ட் ஆகியிருந்ததும் எனக்குத் தெரியாது. செந்திலோட எனக்குப் பழக்கமில்ல... அவர் ஏன் போரூர் போனாருன்னும் தெரியாது.'

##~##

துரை அரசனின் கேள்விகளுக்கு அயராமல் அவர் கண்களைப் பார்த்து பாரி பதில் அளித்தான்.

'விசாரணைக்குத் தேவைப்பட்டா, மறுபடியும் கூப்பிடுவேன்...' என்றபோது, ஒரு காகிதத்தில் எண்ணை எழுதி நீட்டினான்.

'சார், முப்பது நாளைக்கு அவுட்டோர் ஷூட்டிங்ல இருப்பேன். அவசியம்னா, இந்த நம்பருக்குக் கால் பண்ணுங்க. இந்த ரூமைக் காலி பண்ணிட்டு, மேற்கு மாம்பலத்துல ஒரு வீட்டுக்குக் குடிபோறேன். அந்த அட்ரஸும் தரேன்.'

எந்தத் தயக்கமும் இல்லாமல், கேட்காத விவரங்களைக்கூடக் கொடுத்த பாரியின் மீது இன்ஸ்பெக்டருக்கு அந்தக் கணமே சந்தேகம் அற்றுப்போனது. கிருபா வெட்டுப்பட்டதுபற்றி கோட்டூர்புரத்திலிருந்து வந்த போன் அவரை அங்கிருந்து புறப்படவைத்தது.

திமூலம் கோபமாகக் கத்தினார். 'என்ன வேலைடா பண்ணிட்டு வந்தீங்க? இப்ப எதுக்கு கிருபாவைப் போட்டுத்தள்ளின?'

எதிரில் கைகளைக் கட்டி, தலைகுனிந்து நின்றான் லோகு.

'மனசு ஆறலண்ணா. உங்க தளபதிய கைலாசம் சாய்ச்சா... அவன் தளபதிய நான் வெட்ட வேணாமா?'

'டேய், நமக்கு ஆதரவாக் காயை நகர்த்தறதுக்கு போலீஸ்கிட்ட பேசிட்டு இருக்கேன். இப்ப அவசரப்பட்டா, எல்லாம் கெட்டுடும். கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் என்கிட்ட விட்டுரு. புரியுதா?'

'சரிண்ணா!' என்றான் லோகு மனசில்லாமல்.

யட்சன்

னக்கு எதிரில் இருந்த சிற்றுண்டியை வெறித்துப் பார்த்தான் செந்தில்.

'தமிழ் சினிமால பேர் வாங்கணும்னு நினைச்சேன். முடியலையா, ஊருக்கே போய் சைக்கிள் கடையில கணக்காவது எழுதறேன்... எனக்கு இந்த வெட்டுக் குத்தெல்லாம் பிடிக்கல.. வெளிய விடுங்க... நான் போகணும்.'

'எங்கடா போவ..?' என்றார் கைலாசம் சற்றே கோபமாக. 'நேத்து ராத்திரி ஆதிமூலம் ஆளுங்க ஆத்திரத்துல கிருபாவைப் போட்டுத்தள்ளிட்டாங்க. இப்ப வெளிய காலைவெச்சா, உன் கழுத்தைச் சீவிட்டுதான் மறு வேலை பார்ப்பாங்க. இன்னொரு பக்கம், போலீஸ் உன்னைக் கொத்திட்டுப் போகக் கழுகு மாதிரி காத்துட்டு இருக்காங்க. சேனல் சேனலா உன் பேர் நாறிட்டு இருக்கு.'

'போலீஸ்கிட்ட நடந்ததைச் சொல்றேன்...'

'நீ நாகு மேல காரை ஏத்திட்டு வந்ததைச் சொல்லுவியா? ஆதிமூலம் பேச்சைக் கேட்டுக்கிட்டு, உன்னைத் தூக்கி உள்ள போட்டு, என்கவுன்டர்னு சொல்லிக் காலி பண்ணிடுவாங்க.'

'போனாவது குடுங்க... என் தீபாகிட்ட பேசணும்.'

'முட்டாளாடா நீ..? ஏற்கெனவே உன்னோட சம்பந்தப்பட்டவங்க அத்தனை பேரையும் போலீஸ் விசாரிச்சுட்டு இருக்காங்க. அவங்க போனைல்லாம் இந்நேரம் ஒட்டுக் கேட்டுட்டு இருப்பாங்க. நீ தீபாவுக்கு போன் பண்ணாலோ, உங்க அம்மா, அப்பாகிட்ட பேசினாலோ, அவங்களைப் போட்டுக் குடாய்ஞ்சுடுவாங்க... அவங்க நிம்மதி போயிடும்.'

'ஐயோ! நான் என்ன பண்ணுவேன்?'  

'நீ இந்த வேலைக்குப் புதுசு. இருபத்தஞ்சு வருஷமா வெட்டு, குத்து, போலீஸ், தலைமறைவுனு அலைஞ்சிட்டு இருக்கறவன் நான். என் பேச்சைக் கேளு... கொஞ்ச நாள் அடங்கியிரு. காயம்லாம் ஆறட்டும். அப்புறம் எல்லாம் சொல்லித்தரேன்... கிருபா இடம் உனக்குத்தான்!'

'ஐயோ, யார் எடமும் வேண்டாம்!'

'ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும். போவப்போவ எல்லாம் பழகிரும். டேய், கவனிச்சுக்குங்கடா!' என்று சொல்லிவிட்டு, கைலாசம் அந்த அறையிலிருந்து வெளியே வந்தார்.

செந்தில் ஆத்திரத்துடன் டிபன் தட்டை தூரத் தள்ளினான்.

யற்கை கொஞ்சும் பொள்ளாச்சி.

பாரி, வெகுஇயல்பாகப் படப்பிடிப்புக் குழு வினரோடு ஒன்றிப்போனான். டைரக்டர் ஜோசப் அவனை நண்பனாகவே நடத்தினான். மூன்றாவது நாள் அவனை அழைத்துத் தோளில் கை போட்டான்.

'நீ சினிமாவுக்கு வந்தது ஒரு விபத்தா இருக்கலாம். ஆனா, உன் ரத்தத்துல கலை இருக்கு. அநாவசியமா டேக் வாங்கறதில்ல. நீ பெரிய இடத்தைப் பிடிக்கப்போறே!'

பாரி பணிவுடன் புன்னகைத்தான்.

'அடுத்தது, சவுக்குத் தோப்புல ஒரு ஃபைட் இருக்கு. நாளைக்கு உனக்கு ஒத்திகை தர ஸ்டன்ட் ஆளுங்க வருவாங்க.. பயிற்சி எடுத்துக்கோ!'

'சரி ஜோ..!'

மறுநாள் காலையில், மைதானத்தில் அவனுக்குப் பயிற்சி கொடுப்பதற்காகக் காத்திருந்தவனைப் பார்த்ததும், பாரி அதிர்ந்தான்.

அது, நாகுவின் தம்பி, லோகு!

- தடதடக்கும்...