Published:Updated:

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

“மணிவண்ணன் வாயைத் திறந்தாலே பொய்தான்!”வாசகர் கேள்விகள்

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

“மணிவண்ணன் வாயைத் திறந்தாலே பொய்தான்!”வாசகர் கேள்விகள்

Published:Updated:
##~##

பி.தண்டபாணி, தேனி.

'' உங்களின் 'அல்லி கலா நாடகமன்றம்’ நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''1958-ல் 'அல்லி கலா நாடக மன்றம்’ ஆரம்பிச்சு, தேனி, அல்லிநகரம் பகுதிகளில் நாடகம் போட்டுட்டு இருந்தோம். 80 ரூபாய் கையில சேர்ந்தா மேடை, ஸ்க்ரீன், மேக்கப்னு அமர்க்களமா நாடகம் போட்டுரலாம். ஆனா, அந்த 80 ரூபாயை ஒவ்வொரு ரூபாயா சேர்க்கிறதுக்குள்ள... உசுரு தொண்டைக்குழிக்கு மேல வந்துரும். அப்போ ஒரு பெரியவர் எப்பவும் எங்களுக்கு 50 ரூபா நன்கொடையாத் தருவார். ஹி இஸ் அவர் மெய்ன் ஸ்பான்சர். அவர் கொடுத்த அந்த ரூபாயை வெச்சுத்தான் அல்லி கலா நாடக மன்றமே இயங்குச்சு. அப்போ எனக்குக் கிடைச்ச புரவலர் ராமானுஜம், இப்போ 'அன்னக்கொடி’ படத்தில் ஹீரோவாக நடிக்கும் லட்சுமணனின் தாய்வழித் தாத்தா. சினிமா, நாடகத்தின் மேல் தீராத் தாகம்கொண்ட கலைஞர் அவர். நிலக்கோட்டையில் சொந்தமா சினிமா தியேட்டர் வெச்சிருந்தார். பெரியவர் ராமானுஜம் கொடுத்த உற்சாகம் காரணமாகத்தான் 'பாசறை பலிகடாக்கள்’, 'பரிகாரம்’, 'ஒ... நெஞ்சே’னு ஏகப்பட்ட நாடகங்கள் போட்டேன். அப்போ என் எல்லா நாடகங்களுக்கும் இசைஅமைச்சவர்... 'பண்ணைபுரம்’ ராசாங்கிற உங்க இளையராஜா!''

கே.கலையரசன், கிடாரங்கொண்டான்.

''உங்களுக்கு இளையராஜாவை விட நெருங்கிய நண்பர் யார்?''

''பண்ணைபுரத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டரா வேலை பார்த்த டைம்ல இருந்து மை பெஸ்ட் ஃப்ரெண்ட்... இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர்தான். அவன் மூலமாத்தான் ராஜாவே எனக்குப் பழக்கமாகி, என் நாடகங்களுக்கு மியூஸிக் பண்ணான். அப்புறம் நான் சென்னைக்கு வந்து தங்கி, சினிமா வாய்ப்புத் தேடிட்டு இருந்த சமயம், அப்படி இப்படினு காசை மிச்சம் பிடிச்சு நாடகம் நடத்த 270 ரூபாய் சேர்த்துவெச்சேன். திடீர்னு ஒருநாள் விடிகாலையில பாஸ்கர், ராஜா, அமரன் மூணு பேரும் என்னோட அறைக்கு வந்து கதவைத் தட்டினாங்க. 'உன்னை நம்பி வந்துட்டோம்பா... இதுதான் கையிருப்பு’னு ஒரே ஒரு 10 ரூபாய் தாளைக் கண்ல காமிச்சாங்க. அப்புறம் என்ன... நாடகத்துக்காகச் சேர்த்த பணமெல்லாம் நட்புக்காகச் செலவாச்சு. பிகாஸ்... பாஸ்கர் என் நண்பன்!''

 திருநாவுக்கரசு, தேனி.

''உங்கள் இயக்கத்தில் நடிக்க விரும்பி எம்.ஜி.ஆர்., கதை கேட்டாராமே?''

''இட்ஸ் ஷாக்கிங்ல... யெஸ் ட்ரூ! எம்.ஜி.ஆர். முதல்வரா இருந்தப்போ ஒருமுறை ராமாவரம் தோட்டத்துக்கு என்னை அழைச்சார். ரொம்ப நேரம் சினிமாவைப் பத்தியே பேசிட்டு இருந்தவர், திடீர்னு என்னை அதிர்ச்சி அடைய வைக்கும் அந்தச் செய்தியைச் சொன்னார்...  'பாரதி... நாம கல்கியின் 'பொன்னியின் செல்வன்’ நாவலை சினிமாவா எடுக்கணும். அதில் நான் பொன்னியின் செல்வனா நடிக்கணும்கிறது என் நீண்ட நாள் கனவு. ஆனா, இப்போ எனக்கு இருக்கிற வேலையில தூங்கக்கூட நேரம் ஒதுக்க முடியலை. 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்’ படம் தயாரிச்சு ரொம்ப வருஷமாச்சு. என் பேனருக்காக 'பொன்னியின் செல்வன்’ படத்தை நீ டைரக்ஷன் பண்றியா? என்னால் நடிக்க முடியாது. கமல்ஹாசன் பொன்னியின் செல்வனாவும், ஸ்ரீதேவி குந்தவை நாச்சியாராவும் நடிச்சா நல்லா இருக்கும். என்ன... டைரக்ஷன் பண்றியா?’னு சிரிச்சுக்கிட்டே கேட்டார். அப்படி ஒரு வாய்ப்பை மறுக்க முடியுமா? நானும் சரி சொல்லிட்டேன். ஆனா, அதன் பிறகு அந்த புராஜெக்ட் பத்தி ஒரு வார்த்தைகூட ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லை. எப்படியோ... எங்கேயோ மிஸ் ஆகிருச்சு!''

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.

''சினிமாவில் இருந்து டி.வி. சீரியலை இயக்க வந்தபோது என்ன நினைத்தீர்கள்?''

''முன்னாடி குடும்பம் குடும்பமா படம் பார்க்க வெள்ளித்திரையைத் தேடி வருவாங்க.  இப்போ நாங்க அந்தக் குடும்பங்களை ரீச் பண்ண சின்னத்திரை நோக்கிப் போறோம். ரெண்டு மீடியாவுமே மனித உறவுகளை, உணர்வுகளைப் பதிவுசெய்யுது. ஸ்க்ரீன் சைஸ் ஒன்லி டிஃபெர்ஸ். நடிகர்கள், கலைஞர்கள் மேல் ஒரு பொதுப் பார்வை வேணும். சினிமாக் கலைஞனை வெள்ளைக் கண்ணாடி மாட்டிக்கிட்டும், டி.வி. நடிகனைக் கறுப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டும் பார்க்கக் கூடாது!''  

எஸ்.குரு, சிதம்பரம்.      

''இயக்குநர், நடிகர் மணிவண்ணன் உங்களை எப்பவும் கடுமையாக விமர்சிக்கிறாரே... ஏன்?''

''இங்கே ஒரு ஃப்ளாஷ்பேக் கட் பண்றேன்... என் முதலாளி கே.ஆர்.ஜி-யும் நானும் வேலை விஷயமாக அடிக்கடி ஒரு ஆபீஸுக்குப் போவோம். அங்கே அக்கவுன்ட் செக்ஷன்ல வேலை பார்க்கிற ஒரு ஆள் என்னைப் பார்க் கிறப்பலாம் எந்திரிச்சு வணக்கம் வைப்பான். நான் அதை ஆச்சர்யமா பார்க்கிறப்ப, 'பாரதி... உன் மேல அவன் ரொம்பப் பிரியமா இருக்காம்பா... அதான் வணக்கம் வைக்கிறான்’னு சொல்வார் கே.ஆர்.ஜி.  

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

கொஞ்ச நாளுக்கு அப்புறம் பார்த்தா, அந்த ஆள் யோகாம்பாள் தெருவில் நான் குடியிருந்த வாடகை வீட்டு வாசலுக்கு வந்து தினமும் நிக்க ஆரம்பிச்சுட்டான். வீட்டு வாசல்ல என்னைப் பார்க்கிறப்பலாம் வணக்கம் வைப்பான். இப்படியே ஒரு 15 நாள் போச்சு. ஒரு நாள் அவனை அழைச்சுட்டு வரச் சொன்னேன். வந்து உக்காந்தவனுக்கு உயிர் கண்ணுல இருந்தது. எதுவும் கேக்காம அவனுக் குக் குடிக்கத் தண்ணியும் கொஞ்சம் டீயும் கொடுக்கச் சொன்னேன். குடிச்சான். அவனுக் குள்ள ஏதோ ஒரு திறமை இருக்குன்னு எனக்குள்ள தோணுச்சு. 'கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அவனை வேலை பார்க்கச் சொன்னேன். அப்போ என்கிட்ட இருந்த பலர், 'அவன் மூஞ்சியே சரியில்லையே’னு சொல்வாங்க. 'போங்கடா... அவன் திறமைசாலிடா’னு 'நிழல்கள்’ படத்துல வசனம் எழுதும் பொறுப்பை அவனுக்குக் கொடுத்து, நடிக்கவும்வெச்சேன். அவன்தான் மணிவண்ணன்.

அவனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண் காணிப்பில் இருந்துச்சு. அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம்.

ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம். அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், 'அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே’னு சட்டுனு கேட்டுட்டான். அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். 'ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா... அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டிவெச்சுடலாம்’னு அவங்க சொன்னாங்க.

ஒரு வருஷம் போனது. 'மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்க’னு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான். 'சரி’னு முடிவெடுத்து, அந்தப் பொண் ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுன் நகை போட்டு, அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன். அப்புறம் 'காதல் ஓவியம்’ படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம, என்னைத் தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன். 'நான் தனியாப் படம் டைரக்ஷன் பண்ணப்போறேன்’னு சொன்னான். உடனே, மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன்.

மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி. என்ன ஒண்ணு... வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும்.

ஒரு ராஜா கதை இருக்குமே... வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. 'இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க’னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க... பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!''

கே.அன்னசிங், சோமனூர்.

'' 'என் இனிய தமிழ் மக்களே’னு பாசமாப் பேசுறீங்க. ஆனா, தமிழர்களின் கலாசார அடையாளமான வேட்டி, சட்டையைத் தவிர்த்துட்டு எப்பவும் ஜீன்ஸ், டி-ஷர்ட்லயே இருக்கிறீங்களே... ஏன் சார்?''

''அன்னசிங்...

நம்ம சொஸைட்டில பார்த்தீங்கன்னா எப்பவுமே பிரபலங்கள் பத்தி ஒரு இமேஜ் இருக்கும். தமிழ்நாட்டுல எந்தப் பிரபலத் தின் பேர் சொன்னாலும் டக்குனு நம்ம மனசுல வந்துபோறது அவங்க தோற்றம் தான்.  

பெரியார்னா, வெள்ளைத் தாடி, கறுப்புச் சட்டை. எம்.ஜி.ஆர்னா, பஞ்சு போன்ற தொப்பி, கறுப்புக் கண்ணாடி. கலைஞர்னா, தோள் துண்டு, கறுப்புக் கண்ணாடி. மேடம்னா, கோட்டு போல சேலை அணிந்த தோற்றம். அப்படித்தான் பாரதிராஜான்னு சொன்னா... ஜீன்ஸ், டி-ஷர்ட் ஞாபகம் வர்ற அளவுக்கு இமேஜ் உண்டாகிருச்சு. அதே சமயம், ஐ லைக் திஸ் காஸ்ட்யூம்! அதனால இமேஜைத் தொந்தரவு பண்ணாம விட்டுட்டேன்!''

அடுத்த வாரம்...

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

'' 'முதல் மரியாதை’யில் நடிகர் திலகம் சிவாஜியை இயக்கிய அனுபவத்தைச் சொல்லுங்களேன்?''  

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

''காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு, ஈழப் பிரச்னை என எல்லாவற்றிலும் பாதியிலேயே ஓடிவிடுகிறீர்களே... ஏன்? அரசியல் நிர்பந்தம் காரணமா?''

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

''பாக்யராஜ்... இந்த வார்த்தை உங்கள் மனதில் என்ன நினைவலைகளை எழுப்புகிறது?''

- கட்...

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.