ஸ்பெஷல்
Published:Updated:

அவதார் - சந்தோஷ மருந்து கொடுத்த சின்னச் செவிலியர்கள் !

ஒருங்கிணைப்பு: மு.சிவசங்கரி ஏ.சிதம்பரம் எஸ்.சரவணப்பெருமாள்

##~##

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி 'ஐலேண்ட் ஐ கிட்ஸ்’ பள்ளி மாணவியர், நர்ஸ் உடையில் வெள்ளையும் சொள்ளையுமாக கிளம்பிக்கொண்டிருந்தனர். இந்த விஷயம் கேள்விப்பட்ட பக்கத்துப் பள்ளி மாணவிக்கும் கொள்ளை ஆசை. 'நானும் வரேன்’ எனத் தயாராக,  அவர்களை அதிசயமாகப் பார்த்த சிலர் ''ஏலே, இது என்ன கூத்து'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டனர். வெட்கத்தால் பதில் சொல்ல முடியாமல் சின்னக் கைகள்வீசி அவர்கள் நடந்தது அழகாக இருந்தது.

வெள்ளைப் புறாக்களாகப் பள்ளி வளாகத்துக்கு வந்த சின்னஞ்சிறு நர்ஸ்களை வெங்கடேஷ்வரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

அவர்களை மருத்துவமனையின் நர்ஸ்கள் இன்முகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர். அங்கிருந்த நோயாளிகளும் பார்வையாளர்களும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். எல்லாரையும் ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

''வாங்க சிஸ்டர்ஸ்'' என்று வரவேற்ற நர்ஸ் உமா, ''நீங்கள்லாம் எதுக்கு வந்திருக்கீங்க?'' எனக் கேட்டார்.

''ஊசி போட'' என்று சுட்டி ஹரீஸ் சொல்ல, மருத்துவமனை களைகட்ட ஆரம்பித்தது.

வரவேற்பறைக்குச் சென்ற கார்த்திகை அலெக்ஸ் சிரத்தி, தாமரை மற்றும் ஜெயமீனா என்ற சுட்டி நர்ஸ்கள் அங்கிருந்த போனில் பேசுவது, கம்ப்யூட்டரில் நோயாளிகளின் லிஸ்ட்டைப் பார்ப்பது என ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அவதார் - சந்தோஷ மருந்து கொடுத்த சின்னச் செவிலியர்கள் !

மதுமிதா, கலைச்செல்வி ஆகியோர் மெடிக்கல் பகுதிக்குச் சென்று, அங்கே வந்தவரிடம் ''என்ன மருந்து வேணும்?'' என்று கேட்டனர்.

''நாங்க என்ன உன்னை மாதிரி படிச்சா இருக்கோம்?'' என்ற ஒருவர், ''நாங்க கேட்கிற மருந்தை உன்னால எடுத்துத் தர முடியுமா?'' என்று சவால்விட்டார். ''ஓ... நீங்க எதைக் கேட்டாலும் எடுத்துத் தருவேன்'' என்று கையில் கிடைத்த ஒரு பெட்டியை எடுத்துக் கொடுத்தாள்.

அபிரூபா என்ற  சுட்டி நர்ஸ் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்துகொண்டு 'கேம்’ விளையாடும் நோக்கில் அங்கிருந்து அசைய மறுத்தாள். ஹர்ஷிதா, சாதனா இருவரும் உள் நோயாளிகள் அறைக்குச் சென்று

ஒரு பாட்டியம்மாளுக்குப் பணி செய்த  விதத்தைப் பார்த்து, அங்கிருந்த செவிலியர்கள் ஆச்சர்யப்பட்டனர். ''ம்... தூள் கிளப்புறாங்களே...'' என முணுமுணுத்தனர்.

அவதார் - சந்தோஷ மருந்து கொடுத்த சின்னச் செவிலியர்கள் !

பிரிஸ்ஸில்லா, பெசிஜா, ஜெயமீனா, தனுஸ்ரீ ஆகியோர் அவசரப் பிரிவு பகுதிக்குள் சென்று, அங்கிருந்தவர்களிடம் ''உடம்புக்கு என்ன பிரச்னை? வலிக்குதா?'' என்று பரிவுடன் கேட்டதும் அவர்கள் தங்களின் வலியையும் மறந்து சிரித்தனர்.

மருத்துவமனை முழுவதையும் சுற்றிச் சுற்றி வந்த சின்னஞ்சிறு நர்ஸ்களைப் பார்த்து எல்லா நோயாளிகளும் சந்தோஷம் அடைந்தனர். இப்படி வெகுநேரம் ஆனதால், களைத்திருந்த மாணவிகளை மருத்துவமனையின் நர்ஸ் ஓர் அறையில் அமரவைத்து குளிர்பானம் கொடுத்தார்.

''உங்களில் எத்தனை பேருக்கு எங்களைப் போல் நர்ஸாக ஆசை?'' என்று கேட்க, ''நாங்க இப்பவே நர்ஸ்தானே'' என்றாள் தனுஸ்ரீ.

பெரிய பெரிய கேள்விக்கெல்லாம் பதில் சொல்லத் தெரியுமோ தெரியாதோ என்ற சந்தேகத்துடன், ''நர்ஸ் வேலை எப்படிப்பட்டது தெரியுமா?'' என்று முடிப்பதற்குள், ''உயிரைக் காக்க உதவுவோம்'' எனப் படார் பதில், ஒரே குரலாக ஓங்கி ஒலித்தது.

அவதார் - சந்தோஷ மருந்து கொடுத்த சின்னச் செவிலியர்கள் !

''இங்கே, நீங்க என்ன எல்லாம் பண்ணுவீங்க?'' என ஒரு சுட்டி கேள்வி கேட்க, ''எலும்பு முறிவு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இளம்பிள்ளைவாத சிகிச்சை'' என அடுக்கிக்கொண்டே போனார் ஒரு நர்ஸ்.

அதையெல்லாம் கேட்ட சுட்டிகள், ''அப்படியா?'' என எல்லாம் புரிந்ததுபோல் மேதைமையாகச் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்கள். ஒரு சுட்டியின் தந்தை, ''நேரம் ஆயிருச்சு, எனக்கு வேலை இருக்கு என் மகளை அனுப்புங்க, நான் கூட்டிட்டுப் போறேன்'' என்றார். ஆனால், அந்தச் சுட்டி ''நீங்க வேணும்னா போங்கப்பா, நான் பேஷன்ட்டைப் பார்த்துட்டு வர்றேன்'' என்றாள்.

நிறைவாக, ஆங்காங்கே நின்ற சுட்டிகளை ஒன்றுசேர்த்து அழைத்துப்போவதே பெரிய வேலையானது. அந்த அளவுக்கு சுட்டிகளின் ஈடுபாடு இருந்தது. நர்ஸ் உடையைப் போட்டதும் அப்படியே நர்ஸ் போலவே பாவனையும் பாங்கும் மாறிய விதம் கண்டு பலரும் பாராட்டினர்.

அவதார் - சந்தோஷ மருந்து கொடுத்த சின்னச் செவிலியர்கள் !

கோவில்பட்டியில் உள்ள, 'ஐ லேண்ட் ஐ ஹிட்ஸ்’ பள்ளி, மிகச் சிறப்பாகக் கல்விப் பணியாற்றிவருகிறது. பிரி.கே.ஜி., முதல் யூ.கே.ஜி வரை இருக்கிற இந்தப் பள்ளியில், 'ஆப்பிள் ஐ பேட்’ வைத்துப் பாடம் நடத்தப்படுகிறது. ''அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் இந்தக் கல்வி முறை, இந்தியாவில் குஜராத் தவிர வேறு எங்கும் இல்லை''என்கிறார் பள்ளியின் முதல்வர் திருமதி சூர்யா. வகுப்புகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்திருப்பதுடன், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளது. புத்தகச் சுமை இல்லாமல் ஜாலியாக விளையாடிக்கொண்டே படிக்கிறார்கள் குழந்தைகள்.