Published:Updated:

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

வாசகர் கேள்விகள்“பாக்யராஜ் ஒரு ஸ்வீட் ராஸ்கல்!”

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

வாசகர் கேள்விகள்“பாக்யராஜ் ஒரு ஸ்வீட் ராஸ்கல்!”

Published:Updated:
விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!
##~##

தா.சூரியா, வேதாரண்யம்.

'' 'முதல் மரியாதை’யில் நடிகர் திலகம் சிவாஜியை இயக்கிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஐ’ம் நாட் ஹீரோஸ் டைரக்டர். பொதுவா, எந்த ஹீரோவையும் மனசுலவெச்சு நான் கதை, திரைக்கதை எழுத மாட்டேன். ஆனா, நானும் செல்வராஜும் 'முதல் மரியாதை’ கதை எழுதி முடிச்சப்போ, என் மனசுல கம்பீரமா வந்தது சிவாஜிதான்.

'முதல் மரியாதை’ படம் சம்பந்தமாப் பேச சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். 'அண்ணே... உங்களுக்கு இந்தப் படத்துல விக் கிடையாது, மேக்கப் கிடையாது. நீங்க எதுவுமே பண்ண வேணாம். நடிக்கக்கூட வேணாம்... நான் சொல்றபடி இங்கிட்டும் அங்கிட்டும் நடங்க, உட்கா ருங்க, எந்திரிங்க, நான் சொல்ற டயலாக் மட்டும் பேசுங்க... அது போதும்’னு சொன்ன என்னைக் குறுகுறுனு பார்த்தார். ஆனா, எதுவும் சொல்லலை.

படப்பிடிப்புக்கு வந்தார். நான் பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு வெவ்வேறு ஆங்கிளில் அவரை நிக்கவெச்சு, நடக்கவெச்சு... ஷூட் பண்ணிட்டு இருந்தேன். ஒரு கட்டத்துக்கு அப்புறம், 'ஏண்டா பாரதி... என்னடா படம் பிடிக்கிறே? உன்கிட்ட கேட்க வும் வெட்கமா இருக்குடா’னு கேட்டார். 'அண்ணே... கடைசி யாக் காமிக்கிறேண்ணே’னு மட்டும் சொல்லிட்டேன். ஒருநாள், 'டேய்... நீ ஒரு தடவை நடிச்சுக் காட்டு’னு என்னைக் கேட்டார். நான் நடிச்சதைப் பார்த்துட்டு ராதாகிட்ட, 'இவன் நடிக்கிறதுல பத்து பெர்சன்ட் நடிச்சாக்கூடப் போதும்...ஜெயிச் சுரலாம்டி பொண்ணே’னு அவர் சொன்னப்போ, நான் சிலிர்த்துட்டேன். 'அண்ணே, நான் மதுரைல இருந்து சென்னைக்குக் கிளம்பும்போதே, சினிமாவுல நடிச்சு சிவாஜியைக் கவிழ்க்க ணும்னுதான் வந்தேன்’னு நைஸா சொன்னேன். அதைக் கேட்டு 'ஹேய்...ஹேய்’னு வாய்விட்டுச் சிரிச்சவர், 'ஏண்டா... உங்க ஊர்ல முகம் பாக்குற கண்ணாடியே இல்லையாடா?’னு கேட்டு என்னைக் கலாட்டா பண்ணிட்டார்.  

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

ப்ரிவியூ-ஷோல படம் முடிஞ்சு எல்லாரும் வெளியே வந்த பிறகும் சிவாஜி மட்டும் அப்படியே சீட்ல உக்காந்தே இருந்தார். நான் மெள்ள அவர் பக்கத்துல போய் நின்னேன். என் பக்கம் திரும்பிப் பார்த்தார். அவர் முகம் அப்படியே நெக்குருகி இருந்தது. ஹி வாஸ் வெரி எமோஷனல்... 'ஏண்டா காட்டுப் பயலே... எப்படிடா இப்படிப் படம் எடுத்த?

இப்பத்தாண்டா தெரியுது... ஷூட்டிங்ல நீ என்னை அங்கே, இங்கே அடிக்கடி திரும்பச் சொன்ன சூட்சுமம் புரியுது. இது சாதாரணப் படம் இல்லடா... இன்டர்நேஷனல் கிளாஸிக்டா’னு அப்படியே என்னை இறுக்கிக் கட்டிப்பிடிச்சுக்கிட்டார்.

சிவாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தப்போ, நான்தான் திரையுலகைக் கூட்டி, அண்ணா சாலை டிராஃபிக்கையே திருப்பிவிடுற அளவுக்குப் பிரமாண்டமா விழா நடத்தினேன். விழாவுக்கு அந்த சமயம் முதல்வரா இருந்த எம்.ஜி.ஆரை அழைச்சுட்டு வந்தேன். அவர் கையால் சிவாஜிக்குத் தங்கக் காப்பு அணியவெச்சோம். அந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை எதுவுமே இல்லை!''

நாசரேத் விஜய், கோயம்புத்தூர்.

''காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு, ஈழப் பிரச்னை என எல்லாவற் றிலும் பாதியிலேயே ஓடிவிடுகிறீர்களே... ஏன்? அரசியல் நிர்பந்தம் காரணமா?''

''பயமா... எனக்கா? நெவர் பிரதர்!

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவன் நான் இல்லை. அரசியல் நிர்பந்தம் எனக்கு எப்பவும் இருந்தது இல்லை. எம்.ஜி.ஆர். ஆகட்டும், கலைஞர் ஆகட்டும், மேடம் ஆகட்டும்... இவங்களால எப்பவும் எனக்கு சின்னப் பிரச்னைகூட இருந்தது இல்லை. அந்த வகையில் நான் பாக்கியவான். யெஸ், ஐ’ ம் கிஃப்ட்டட்!

அதே சமயம் பொதுப் பிரச்னைனு வரும்போது, ஒரு பச்சைத் தமிழனா, எந்தச் சுயநல லாப நோக்கமும் இல்லாம முன்னாடி நிப்பேன். காவிரிப் பிரச்னைக்காக, நெய்வேலிக்குப் போராட்டம் நடத்தப் போனேன். அங்கே உள்நோக்கத்தோடு ஒரு கட்சிக் கொடி முளைச்சது. ஈழத் தமிழனுக்குக் குரல் கொடுக்க ராமேஸ்வரம் போனா, அங்கேயும் ஒரு கட்சிக் கொடி முளைச் சது. பொது நலத்தோடு நாம போராடப் போனா, அந்த ஆதரவைச் சுயநலத் தோடு அறுவடை செய்ய சிலர் வந்து நின்னுக்கிறாங்க. தமிழர்களைப் பலி கொடுத்து தங்கள் பதவி ஆசைகளை வளர்த்துக்கிறாங்க. அதனாலதான் மனசு வெறுத்து, இப்போ எதுவும் வேண்டாம்னு ஒதுங்கியிருக்கேன். தமிழன் எப்பவும் கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கணும்கிறதுதான் அவங்களோட எண்ணம். ஏன்னா, அப்பத்தானே அவங்க கிளர்ச்சி, வளர்ச்சினு சீன் போட்டுத் திரிய முடியும். ஒட்டுமொத் தத்துல தமிழன் பாவம்!''

ப.இசக்கி பாண்டியன், திருநெல்வேலி.

''கே.பாக்யராஜ்... இந்த வார்த்தை உங்கள் மனதில் என்ன நினைவலைகளை எழுப்புகிறது?''

''நானும் என் அசோஸியேட் பாலகுருவும் '16 வயதினிலே’ டிஸ்கஷன்ல இருக்கும்போது, 'சார்... கோயம்புத்தூர் பையன் ராஜன்னு ஒருத்தன் உங்ககூட வேலை செய்யணும்னு துடியாத் துடிக்கிறான்’னு சொல்லிட்டே இருப்பார். 'வரச் சொல்லுப்பா... பார்க்கலாம்’னு சொல்லிட்டு நானும் மறந்துபோயிட்டேன். ஒருநாள் நான் ஆபீஸ்ல எழுதிட்டு இருந்தேன். அப்போ வெடவெடனு வந்த ஒரு பையன், 'சார்... பாலகுரு இருக்காரா?’னு என் கிட்ட கேட்டான். 'அவரை எதுக்குக் கேக்குற?’னு கேட்டேன். 'அவர்தான் என்னை பாரதிராஜாகிட்ட சேர்த்துவிடுறதா ரொம்ப நாளா சொல்லிட்டே இருக்கார்’னு ஒரு மாதிரி ஸ்ட்ரிக்ட்டான குரல்ல சொன்னான்.

அவனையே வெறிச்சுப் பார்த்துட்டு இருந்தேன். ஃபர்ஸ்ட் லுக்லயே என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிட்டான். 'நான்தான் பாரதிராஜா... நாளைல இருந்து வேலைக்கு வந்துடு’னு அவன்கிட்ட சொன்னதும், அவன் முகத்தில் சின்ன ஷாக். அப்புறம் பெரிய சந்தோஷம். என்னை யார்னே தெரியாம என்கிட்ட வேலைக் குச் சேர்ந்தவன் பாக்யராஜ். அவனை நான் 'ராஜன்... ராஜன்...’னுதான் கூப்பிடுவேன்.

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

அவனோட இன்டெலிஜென்ஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சது. எந்தப் பிரச்னையையும் லாஜிக்கா பார்ப்பான்.

'16 வயதினிலே’ படத்தின் கதை, வசனத்தை கலைமணி எழுதிட்டு இருந்தாலும், ராஜனை டெஸ்ட் பண்றதுக்காக ஒருசில காட்சிகளை அவனை எழுதச் சொன்னேன். நான் எதிர்பார்த்ததைவிடப் பிரமாதமா எழுதி அசத்தினான். 'கிழக்கே போகும் ரயில்’ பட வேலை நடந்துட்டு இருந்தப்போ ராஜன், விஜயன் ரெண்டு பேர்கிட்ட யும், 'டேய்... உங்களை சினிமால நடிக்கவெச்சு ஹீரோவாக்கப்போறேன்’னு சொன்னேன். 'போங்க  சார்... சும்மா கிண்டல் பண்ணாதீங்க’னு அப்போ வெட்கப்பட்ட ராஜன், 'புதிய வார்ப்புகள்’ படத்தில் ஹீரோவா நடிச்ச பிறகு, கடகடனு ஸ்க்ரிப்ட் புடிச்சு ஹீரோவா எஸ்டாப்ளிஷ் ஆகிட்டான்.

இப்பவும் அவனைப் பலமுறை, பல மேடைகளில் கோபமாத் திட்டியிருக்கேன். ஆனா, ஒரு தடவைகூட, ஒரு இடத்தில்கூட என்னை அவன் விட்டுக்கொடுத்துப் பேசினதே இல்லை. யார் கிட்ட எப்போ என்னைப் பத்திப் பேசினாலும் 'எங்க டைரக்டர்’னு உண்மையான பாசத்தோட பேசுவான். ஸ்வீட் ராஸ்கல்!''

வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.

''தங்களது முதல் படைப்பான '16 வயதினிலே’ படத்துக்கு ஆனந்த விகடன் விமர்சனக் குழு 62.5 மதிப்பெண்கள் வழங்கியது.  அந்த மதிப்பெண்ணை அதன் பிறகு எந்த இயக்குநரும் தொடவோ, தாண்டவோ இல்லை. ஏன், நீங்களே கூடத் தாண்டவில்லை. அதை நினைத்துப் பெருமிதம் அடைகிறீர்களா அல்லது வருத்தப்படுகிறீர்களா?''

''தமிழ் சினிமாவில் என்னைவிட ஆழமான, அம்சமான, கருத்தான சினிமாக்களைத் தந்த பல இயக்குநர்கள் இருக்காங்க. ஆனா, பாமர னுக்கு எட்டாத கனவுபோல, உலகத்தின் பரம ரகசியம்போல ஸ்டுடியோவுக்குள் முடங்கிக் கிடந்த சினிமாவை, முதன்முதல்ல என் கிராமத்துக்கு அழைச்சுட்டுப் போனேன். அந்த தைரியத்துக்காகவும் படைப்பாற்றலுக்காகவும் தான் அவ்வளவு மதிப்பெண் கொடுத்துக் கௌரவிச்சது விகடன்.  

இப்போ சில பசங்க பம்பரமா சுத்திப் படம் எடுக்கிறாங்க. 62.5 ரெக்கார்டை அவங்க பிரேக் பண்ணுவாங்கனு எதிர்பாக்கிறேன். ஆனா, அப்படி யாராச்சும் தாண்டிட்டா,  நிச்சயம் நான் அதைத் தாண்டிக்காட்டுவேன். யெஸ்... ஐ வில் ரிப்பீட்... நிச்சயம் நான் அதைத் தாண்டுவேன்!''

சித்திரவேலு, நெய்விளக்கு.

''உங்களைக் குருநாதர்னு கொண்டாட சினிமாவில் ஒரு பட்டாளமே இருக்கு. ஆனா, உங்க குருநாதர் பத்திப் பெருசா தகவல் எதுவும் கேள்விப்பட்டதில்லையே..?''

''குருநாதர்னு யாரைச் சொல்வீங்க?  எனக்குப் பேசக் கத்துக்கொடுத்தது என் ஆத்தா. நடக்கக் கத்துக்கொடுத்தது என் அப்பன். 'அ’னா... 'ஆ’வன்னா  கத்துக்கொடுத்த நாடார் சரஸ்வதி பள்ளிக்கூட டீச்சர் பேர்கூட எனக்கு மறந்துபோச்சு. பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக்கொடுத்த வெங்கட சுப்புராவ், தமிழையும் நாடகத்தையும் கத்துக்கொடுத்த ராமலிங்கம் வாத்தியார்... இப்படிப் பலபேர்கிட்ட பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

தொழில் நிமித்தமா மிகப் பெரும் இயக்குநர்களான புட்டண்ணா கனகல், மலையாளத்தில் கிருஷ்ணன் நாயர், அவினாசி மணி, சங்கர அய்யர்... இவங்க ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷயத்தைக் கற்றவன் நான். மதுரை மண்ணின் மக்களிடமிருந்து கதையைக் கத்துட்டு இருக்கேன். இதுல யார்னு ஒருத்தரை மட்டும் என் குருநாதரா குறிப்பிட்டுச் சொல்ல முடியும்? எனக்குத் தனியா 'குரு’னு யாரும் கிடையாது. அடமா யாரையாவது சொல்லுங்கனு கேட்டா, இந்த இயக்குநர்பாரதி ராஜாவின் குருவா, அந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் சின்னச்சாமியைச் சொல்லலாம்!''

அடுத்த வாரம்...

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

'' 'விஜயகாந்த்’ - எங்கே... மனசுல என்ன தோணுதோ பளிச்னு சொல்லுங்க?''

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

''நீங்கள் பார்த்துப் பெருமைப்படும், பொறாமைப்படும் இயக்குநர் யார்?''

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

''கண்ணதாசன் - வைரமுத்து... ஒப்பிடுக?''

 - கட்...

விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.