Published:Updated:

பாஸ்வேர்டு் - 11

கோபிநாத்

##~##

1960 வாக்கில் இங்கிலாந்தில் ஒரு சர்வே... நடுத்தரக் குடும்பங்கள் எவ்வளவு வீட்டு உபயோகப் பொருட்களைத் தேவை இல்லாமல் வாங்கிவைத்திருக்கிறார்கள் என்பதே அந்தக் கணக்கெடுப்பு. 60 சதவிகிதத்துக்கும் மேலான வீடுகளில் குறைந்தது மூன்று மைக்ரோவேவ் ஓவன்கள் இருப்பதாக அந்தக் கணக்கெடுப்பு சொன்னது. அந்த மூன்றில், இரண்டு இடத்தை அடைத்துக்கொண்டு 'தேமே’ என்று கிடந்தது. அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் மட்டுமல்ல; ஐரோப்பா முழுவதுமே மைக்ரோவேவ் ஓவன்கள் மீது ஒரு தீராத ஆர்வம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் தங்கள் புதிய மாடல் மைக்ரோவேவ் ஓவன்களின் புகழ் பாடிப் பெருமை பேசுவதில் ஐரோப்பியர் களுக்கு அப்படி ஓர் ஆனந்தம்.

இன்றைக்கு இங்கே நம் வீடுகளில் அப்படி ஒரு சர்வே எடுத்தால், அந்த வேலையைச் செய்கிற நிறுவனம் வெறுப்பாகி, 'சர்வேயும் வேணாம்... ஒண்ணும் வேணாம். போய் புள்ளை குட்டிகளைப் படிக்கவைங்கடா’ என்று தலைதெறிக்க ஓடிவிடும். ஓரளவு வசதி படைத்தவர்கள் எல்லாருமே வீட்டை, குப்பைச் சாமான்களை வைக்கும் குடோன்களாக மாற்றிவைத்திருக்கிறார்கள்.

'இப்போதெல்லாம் எல்லாப்பொருட் களுமே அத்தியாவசியமாகிவிட்டது’ என்ற ஒரு பொதுக் கருத்தை முன் வைத்துவிட்டு, போட்டி போட்டுக் கொண்டு பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம். 30 கோடிப் பேருக்கும் மேல் எகிறும் 'வாங்கும் சக்தி’ கொண்ட இந்திய வாடிக்கையாளர் சந்தையைச் சும்மா விட்டுவிட யாருக்குத்தான் மனசு வரும்? தினந்தோறும் இந்தியச் சந்தை புதிய புதிய பொருட்களால் நிரம்பிக்கொண்டே இருக்கிறது. நாமும் வாங்கிக் குவித்துக்கொண்டே இருக்கிறோம்.

பாஸ்வேர்டு் - 11

சவுக்காரம் போட்டு சட்டையைத் துவைத்துப்போட்ட காலம் போய், வாஷிங் பவுடரில் ஊறவைத்து, வெண்மையாக இருக்க இன்னொரு பொருளைப் பயன்படுத்தி, நிறம் மங்காமல் இருக்க ஒரு கண்டிஷனர் ஊற்றி, சோப்பு வாடை தெரியாமல் இருக்க ஒரு சொல்யூஷனில் முக்கி... அடப் போங்கடா! துவைச்சுப் போடுற துக்குப் பதிலா இன்னொரு சட்டையே வாங்கிடலாம்போல என்ற விரக்தி மனப்பான்மையில் கொண்டுபோய் நிறுத்துகிறார்கள். பத்தில் ஐந்து பேர் வீட்டில் ட்ரெட்மில் இயந்திரம், துண்டு காயப் போடத்தான் பயன்படுகிறது. வாக்குவம் க்ளீனரை முதல் ஒரு வாரம் கர்மசிரத்தையாகப் பயன்படுத்தியதோடு சரி... அதற்குப் பிறகு, அதை எங்கே வைப்பது என்று தீர்மானிப்பதில் வீட்டுக்குள் பிரளயமே மூளும். வித விதமான நவீன பொருட்களை வீட்டுக் குள் அடுக்கிவைத்துக்கொள்வதன் மூலம், ஒரு சமூக அந்தஸ்து கிடைக்கும் என்ற சித்தாந்தத்தைக் கடந்த 15 ஆண்டுகளில் வணிக நிறுவனங்கள் நம்மவர்களிடையே அழுத்தமாகப் பரப்புரை செய்துவிட்டது. போதாக்குறைக்கு ஆயிரத்தையோ இரண்டா யிரத்தையோ காசாக எண்ணிக் கொடுக்கிறபோது தோன்றுகிற 'தேவை இல்லா செலவு’ குற்றவுணர்ச்சி,  கார்டுகளை 'சர்ரென்று’ தேய்க்கும் போது உண்டாவது இல்லை.

பாஸ்வேர்டு் - 11

நம்முடைய பணம், பலவீனம் இந்த இரண் டையும் மிகச் சரியாகக் கணக்கெடுத்துக் கடை விரிக்கின்றன நுகர்பொருள் நிறுவனங்கள். பலகட்ட ஆராய்ச்சி அலசல்களுக்குப் பிறகு, ஆசை ஆசையாக வாங்கிய செல்போன், ஒரே மாதத்தில் 'அவ்வளவு சரியில்லையோ’ என்று தோன்றும் அளவுக்குச் சின்னச் சின்ன மாற்றங்களுடன் அடுத்த மாடலை உடனடியாக வெளியிடுகின்றன அலைபேசி நிறுவனங்கள். 'இன்னும் இந்த போனையா வெச்சிருக்க?’ என்ற உங்கள் ஈகோவை உரசும் கேள்விகளை விளம்பரங்கள் வாயிலாகத் தூவுகிறார்கள்.

நாலு பேர் வசிக்கும் 800 சதுர அடி வீடு, ஒரு காலத்தில் பெரிய வீடுபோல இருந்தது. இப்போது 8,000 சதுர அடி வீட்டில்கூட இடம்  போதவில்லை. அந்த அளவுக்குப் பிரமாண்ட பொருட்களால் வீடுகள் நிரம்பிக்கிடக்கின்றன. நிறையப் பொருட்கள் வாங்கிக்கொண்டே இருப்பது, பண விரயம் மட்டுமல்ல; அது ஒரு கட்டத்தில் மனஇறுக்கத்தையும் கொண்டு வந்துவிடுகிறது. 'இந்தப் பொருட்களைக் கையாள்வதற்கும், நிர்வாகம் செய்வதற்கும், ஒழுங்கு பண்ணுவதற்கும் மிக அதிக நேரம் செலவிட வேண்டும். அந்தப் பொருள் கெட்டுப்போனால், அதைச் சரிசெய்வதற்குள் வீட்டுக்குள் பூகம்பம் வெடிக்கிறது. 'இந்தச் சாமானை வாங்காதேனு அப்பவே சொன்னேனே... கேட்டியா?’ என்று கணவர் கத்த, 'இந்த ஆளைக் கல்யாணம் பண்ணாதேனு எங்க அப்பா அப்பவே சொன்னார்... நான் கேக்கலையே!’ என்று மனைவி கொந்தளிக்கிறார்.

சும்மானாச்சுக்கும் வெளியே போகும்போதுகூட ஏதாவது ஒரு பொருளை வாங்கிக்கொண்டு வருகிறோம். அப்படிப் பொருட்களை வாங்குவதற்கு நமக்கு நாமே பல சமாதானங்களைச் சொல்லிக்கொள்கிறோம். '42 இன்ச் டி.வி. போன வாரம் 42 ஆயிரம் ரூபாய் வித்துச்சு. இப்போ அதிரடித் தள்ளுபடில அதோட விலை 32 ஆயிரம்தான். 10 ஆயிரம் மிச்சம்’ என்று கணக்குப் போடுகிறோம். ஆனால், உண்மையான கணக்குப்படி, அதிரடித் தள்ளுபடியில் 10 ஆயிரத்தை நாம் மிச்சப்படுத்தவில்லை. தேவையே இல்லாத சமயத்தில் ஒரு டி.வி. வாங்கியதால், 32 ஆயிரம் ரூபாய் இழப்பு என்பதே சரி. மற்றோர் அம்சத்தில் பார்த்தால், 42 இன்ச் டி.வி. வாங்கியதால், வீட்டில் வரவேற்பறை சின்னதாகத் தெரியும். 'பெரிய வீட்டுக்குப் போகணும். இந்தக் குருவிக் கூட்டுல என்னால குடித்தனம் நடத்த முடியலை’ என்று மனசுக்குள் ஒலிக்கத் தொடங்கும் குரல், பெரிய வீட்டுக்கு இடம் பெயர்ந்தால்தான் மியூட் ஆகும். 10 ஆயிரம் தள்ளுபடிக்கு ஆசைப்பட்டது, மாசம் 10 ஆயிரம் ரூபாய் அதிக வாடகையில் கொண்டுபோய் நிறுத்தும்.

'நீயா... நானா?’ நிகழ்ச்சியில் ஐ.டி. வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்யும் கௌதம், 'என் வாழ்க்கையை ஒரு சின்னப் பெட்டிக்குள் அடைச்சுக்க முடியணும். அப்படிச் செய்ய முடிஞ்சுட்டா, டென்ஷனே இல்லை!’ என்று ஒரு வார்த்தை சொன்னார். ஆனால், நம்மால் ஏன் அப்படி இருக்க முடியவில்லை.

பாஸ்வேர்டு் - 11

குழந்தைகளுக்கென நாம் வாங்கிக் குவிக்கும் பொருட் கள் தொடங்கி, படுக்கையறை, குளியலறை வரை அனைத்திலும் பொருட்களாக இறைந்துகிடக்கின்றன. நாலு பேர் இருக்கும் வீட்டில் ஆறு செல்போன்களும் ஒரு லேண்ட்லைன் தொலைபேசியும் இருக்கிறது. எல்லாரும் வீட்டில் இருக்கும்போது, அது ஒரு பி.பி.ஓ. சென்டர்போல அனைவரும் போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். வரவேற்பறை டி.வி-யில் சீரியலும் படுக்கையறை டி.வி-யில் கிரிக்கெட்டும் அலறுகிறது. ஏ.சி. ரிமோட்டைக்கொண்டு சேனல் மாற்ற முயற்சிக்கிறோம்; செல்போனை எடுத்து டி.வி-யை நிறுத்தப்பார்க்கிறோம். ஒரு பொம்மையை இழுத்தால், 10 பொம்மைகள் சேர்ந்தே விழுகின்றன.

'இவ்வளவு பொருட்கள் வைத்திருக்கிறோமே...  எல்லாவற்றையும் உருப்படியாகப் பயன்படுத்துகிறோமா?’ என்று கேட்டால், நம் மனசாட்சி நம்மை ரூம் போட்டு அடிக் கும். தினுசு தினுசாக ஏழு வாட்ச் வைத்திருந்தாலும், செல்போனில்தான் மணி பார்ப்போம். 'மூன்றெழுத்து மில்க் நடிகை 20 ஜோடி செருப்புவைத்திருக் கிறார்’ போன்ற கிசுகிசுக்களைஇப்போது யாரும் சீந்துவதுகூட இல்லை.  ஏனென் றால், எல்லார் வீட்டிலும் பத்துப் பதினைந்து ஜோடி செருப்புகள்இறைந்து கிடக்கின்றன.

பொருட்களாக வாங்கிச் சேர்க்கும் மனோபாவம், ஒருவித அடிமைத்தனத்தை நமக்குள் புகுத்திவிடுகிறது. வாங்க நினைத்த ஒரு பொருளை வாங்க முடியாமல்போனால், அந்தப் பொருள் இருந்திருந்தால் இந்தக் காரியத்தைச் சுலபமாகச் செய்திருக்கலாம் என்றெழும் எண்ணம், பல தருணங்களில் எரிச்சலை உண்டாக்குகிறது.  

'கஷ்டப்பட்டுக் காசு சம்பாதிக்கிறோம். ஆசைப்பட்டதை வாங்கிக்கக் கூடாதா? அப்புறம் என்ன வாழ்க்கை?’ என்பது தனி மனிதனின் கேள்வி. 'காசு இருக்கும்போது, பொருள் வாங்கிச் சேருங்கள். அப்போதுதான் பணப் புழக்கம் அதிகமாகும்’ என்பது பொருளாதார யோசனை. ஆனால், 'என் தேவைக்கான பொருட்கள் மட்டுமே எனக்குப் போதும்’ என்பதுதான் வாழ்க்கை.

விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கிவைத்துக்கொள்வதன் மூலம், மேல்தட்டு அடுக்கில் வந்துவிடலாம் என நாம் நம்பவைக்கப்பட்டு இருக்கிறோம். அந்த எண்ணத் தில் நாம் வாங்கும் பொருட்கள் பலவும் மறுபடி விற்கிறபோது, அடிமாட்டு விலைக்கே எடுத்துக்கொள்ளப்படும். இல்லையென்றால், அதை எடைக்குப் போடலாம். கப்பல் மாதிரி கார் வாங்கி வாசலில் நிறுத்தும்போது, எதிர் வீட்டுக்காரனை ஜெயித்துவிடலாம். ஆனால், அதை அவசரத்துக்கு விற்க வேண்டி வந்தால், பொம்மை கார் விலைக்குக் கேட்பார்கள். காரை, கணினியை, லட்சங்கள் மதிப்புள்ள வாட்ச்சை சமூக அந்தஸ்தாகப் பார்க்கிற நாம், கிராமப்புறத்தில் பணம் ஈட்டி, அதைக் கையி லும் கழுத்திலும் தங்கமாக இழைத்துக்கொண்டு திரிபவர்களைக் கிண்டலாகப் பார்க்கிறோம். நியாயமாகப் பார்த்தால், அவர்களின் செலவு கொஞ்சம் புத்திசாலித்தனமான முதலீடாகத் தெரிகிறது.  

இந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை ஒழுங்குபண்ணிப் பாருங்கள். அல்லது வார நாளில் விடுப்பு எடுத்துக்கொண்டு அந்த உற்சாகத்துடன் வீட்டின் அடைசலை ஒழித்துக்கட்டுங்கள். அப்போது தேவையே இல்லாமல் நாம் வாங்கிய சாமான்கள் நம்மைப் பார்த்துப் பல் இளிக்கும். 'என்னை வாங்கிச் சும்மா அலமாரியில அடுக்கிட்டு, அதுக்குப் பணம் கட்ட இந்த ஓட்டம் ஓடுறியே’ எனக் கேலி பேசும்.

உலக மகா பணக்காரர் மற்றும் முதலீட்டு ஆலோசகர் வாரன் பஃபெட் இப்படிச் சொல்  கிறார்... 'நீங்கள் தேவை இல்லாத பொருட்களை வாங்கிச் சேர்த்தால், விரைவில் தேவையான பொருட்களை விற்க வேண்டி வரும்!’

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இது பொருந்தும்!

- ஸ்டாண்ட் பை...