Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி

"ஆன்லைன் உலகில் அமெரிக்கா ரகசியமாக மேற்கொள்ளும் உளவு வேலைகள்தான், இந்த வார அகில உலக டிரெண்டிங் செய்தி!

சமீப மாதங்களில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பேச்சுகளை ஆழ்ந்து கவனித்தால், Cyber Terrorism என்ற பதத்தை அவர் அடிக்கடி பயன்படுத்துவது தெரியும். இணையத்தில் அமெரிக்காவுக்குள் வரும் டிராஃபிக்கை அலசி ஆராய்ந்து பார்த்ததில் இருந்து இது தெரிகிறது என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், அவர்கள் செய்திருப்பது அதையெல்லாம்விடப் பல மடங்கு பிரமாண்டமானது; தனி மனிதச் சுதந்திரத்துக்கு எதிரானது என்பது தான் இப்போதைய நெட் ஹாட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

அமெரிக்க அரசில் NSA எனச் சுருக்கமாக அழைக்கப்படும் National Security Administration அமைப்பு, அலைபேசி நிறுவனங்களின் தகவல் சேவகப் பேழைகளில் இருந்து தேவையான தகவல்களை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது என்ற தகவல், அந்த அமைப்பில் பணிபுரிந்த எட்வர்ட் ஸ்னோடன் வெளியிட்டிருக்கும் சில ஆவணங்களில் இருந்து தெரிகிறது. மேற்படி அமைப்பு PRISM என்ற பெயரில் உளவுத் தகவல் சேகரிக்கும் பிரமாண்ட திட்டத்தை நடத்திக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. கூகுள், ஃபேஸ்புக், யாஹூ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்றதாகச் சில ஆவணங்கள் காட்டுகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்துமே மிகவும் வலுவாக தாங்கள் பங்கேற்கவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவில்லாமல் தமது பயனீட்டாளர் தகவலை யாருக்கும் கொடுப்பதில்லை என்றும் ஆணித்தரமாக மறுத்திருக்கின்றன. என்ன நிகழ்வு நடந்தாலும் அதைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கும் NSA நிறுவனம், இதற்கு மட்டும் 'PRISM பற்றிய தகவல்கள் வெளியே வந்தது துரதிருஷ்டம்’ என்ற ரீதியில் அறிக்கை வெளியிட்டு உள்ளது. விவரங்களை வெளியிட்ட ஸ்னோடன், இப்போது ஹாங்காங்கில் ஒளிந்து வாழ்கிறார். தேசத் துரோகி பட்டம் சுமத்தி, இவர் மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்து, கைதுசெய்து அமெரிக்கா கொண்டுவரும் என்பது எனது அனுமானம்.

 நீர், நிலம், ஆகாயத்தில் எதேச்சதிகாரம் செய்தது போதாமல், இப்போது ஆன்லைன் உலகத்திலும் 'அப்பாடக்கர்’ ஆக அமெரிக்கா முயற்சிப்பது ஏன்? அதற்கு அமெரிக்க வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியம்.

கிட்டத்தட்ட 'ஆளவந்தான்’ கமல்போல் 'கடவுள் பாதி, மிருகம் பாதி இரண்டும் கலந்துசெய்த கலவை’தான் அமெரிக்கா. மிருக முகத்தை முதலில் பார்க்கலாம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளைக் கூர்மையாக அலசிப் பார்த்தால், அதில் கொடூர சுயநலம் அடங்கியிருப்பது தெரியும். கொரியா, வியட்நாம் போர்கள் முதல், சோவியத்துடனான குளிர் யுத்தத்தின் பகுதியாக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் பல இடங்களில் மற்றவர்களைத் தூண்டிவிட்டு நடத்திய நிழல் யுத்தம் தொடர்ந்து, 90-களில் இருந்து நடத்திவரும் ஈராக்கின் இரண்டு போர்கள் வரை, எதை எடுத்துக்கொண்டாலும், அமெரிக்காவின் கொடூரமான சுயநலம் வெளிப்படும். இந்த கோர முகத்தின் விளைவாக ஈரான், வட கொரியா, பல இஸ்லாமிய நாடுகள் என நீண்ட காலமாகப் பகையை வளர்த்துவைத்திருக்கிறது அமெரிக்கா.

அறிவிழி

ஒரு கோணத்தில் பார்த்தால், அமெரிக்கா ஊர் உலகெல்லாம் வம்பிழுப்பது தேவையில்லாத வேலை எனத் தோன்றும். இந்த நாட்டின் இரண்டு புறமும் அட்லான்டிக், பசிபிக் என நீண்ட கடல் பரப்பு. வடக்கில் கனடாவும், தெற்கில் மெக்சிகோவும் அமெரிக்காவை மூத்த அண்ணனாகவும், பாதுகாவலனாகவும் கருதும் அதீத நட்பு நாடுகள். ஆக, இந்தியா போல திரும்பிய திசையெல்லாம்  எதிரிகள் இருக்கும் ஆபத்தான நிலை இல்லை. ஆனாலும், உலகத்துக்கெல்லாம் பெருங் காவலனாகக் காட்டிக்கொண்டு அரா ஜகம் செய்ய வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு இருப்பதற்குக் காரணம், இந்த நாட்டின் எண்ணெய் மீதான சார்பு நிலை.

உலகின் மக்கள்தொகையில் ஐந்து சதவிகிதம்கொண்ட அமெரிக்கா, மொத்த எண்ணெய் உற்பத்தியில் 25 சதவிகிதத்துக்கும் அதிகமாக ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகிறது. தங்களது எண்ணெய் சார்பு நிலைக்குப் பாதகம் வரக் கூடாது என்பதை முன்னிறுத்தியே, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை கள் அமைக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் வெளிமுகம் இத்தனை கொடூரமாக இருப்பதைப் பார்த்துவிட்டு, அதன் உள்முகத்தைப் பார்த்தால், கடும் அதிர்ச்சி! அது கடவுள் முகம். காரணம், அத்தனை கனிவும், நேர்மையும், நட்புறவும் கொண்டது அந்த உள்முகம். Affirmative Action என்ற பெயரில் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்யப்படுவது ஒரு புறமிருக்க, தனியார் நிறுவனங்களிலும் Diversity Program என்ற பெயரில் வெள்ளையர் அல்லாத மைனாரிட்டி இனத்தினர், பெண்கள், மாற்றுப் பாலியல் வாழ்க்கை முறை கொண்டவர்களுக்குச் சிறப்பு ஒதுக்கீடு அங்கு வழங்கப்படும். பதவிகளில் இருப்பவர்கள் தங்களது பதவியைத் தவறுதலாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, மிகவும் கவனமாகப் பல அடுக்குகளாகச் சமநிலைப் பரிசோதனைகளை (Checks and Balances) நடைமுறைகொண்டது அரசாங்க மற்றும் தனியார் அமைப்புகள். உதாரணத்துக்கு, அமெரிக்க அதிபருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாகத் தோன்றினாலும், தமிழகத்தின் 'அம்மா மெஸ்’ போன்ற திட்டத்தைக் கொண்டுவரக்கூட அவருக்கு நேரடி அதிகாரம் கிடையாது. நாடாளுமன்ற அமைப்புகளான செனட் மற்றும் காங்கிரஸின் ஒப்புதலுக்குப் பின்னரே தான் நினைக்கும் திட்டம் எதையும் கொண்டுவர முடியும். அமெரிக்காவில் ஊழல்கள், முறை கேடுகள் நடப்பதே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அவை நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு; அவை கண்டுபிடிக்கப்படும்பட்சத்தில் கிடைக்கும் தண்டனைகளின் வீரியம் அதிகம் என்பதால், 'தேன் குடத்தை எடுத்த நாங்கள் புறங்கையைத்தானே நக்கினோம்’ என்றெல்லாம் சாமர்த்தியமாகச் சமாளித்துவிட முடியாது.

ஆக, அமெரிக்கச் சமூகம் உள்ளார்ந்த விதமாக இப்படிக் கட்டமைக்கப்பட்டிருப்பதால், பொதுமக்களின் குடிமைத்துவ மனநிலை விழிப்புடன் இருப்பதையும், பள்ளிக் கல்வி முடித்து வெளிவரும் மாணவர்களின் அறநெறிமுறைகளும், சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும் சராசரிக்கும் அதிக அளவில் இருப்பதைப் பார்க்க முடியும்.  

இதன் காரணமாகத்தான் அமெரிக்க அரசு மற்றும் அதிகார மட்டங்களில் நடக்கும் வரம்பு மீறும் சம்பவங்களை ஊதுகுழல் ஊதி வெளிப்படுத்தும் Whistle Blower ஆசாமிகள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கிறார்கள். எதிர்க் கட்சி மாநாட்டைத் திட்டமிடும் இடத்தில் ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்ததை வெளிப்படுத்திய ஊதுகுழல் நபரால், அதிபர் நிக்சன் பதவி விலக நேர்ந்தது. ஈராக் போரின்போது, போர்க் கைதிகளைப் பாலியல் பலாத்காரம் உட்பட பல சித்ரவதைகளுக்கு உட்படுத்திய ராணுவ வீரர்களைப் புகைப்படத்துடன் அம்பலப்படுத்தினார் மனசாட்சியின் குரலை மதித்த மற்றொரு ராணுவ வீரர். விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே வுக்குத் தொடக்கத்தில் ஆவணங்களையும், ஈராக்கியர் களை அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லும் வீடியோக்களையும் கொடுத்தது மற்றொரு ஊதுகுழல் நபரே.

அறிவிழி

அப்படி கடந்த வாரம் பரபரப்பாகப் பேசப்படும் Whistle Blower தான் எட்வர்ட் ஸ்னோடன். இ-காமர்ஸ் வணிகம் தொடங்கி, பங்குச் சந்தையில் இருந்து மின்சார விநியோகம் வரை அமெரிக்காவில் அனைத்தும் இணையம் சார்ந்தே இயங்கும். அதனாலேயே தீவிரவாதத் தாக்குதல் என்பது குண்டுகளாலோ, வானுயர்ந்து நிற்கும் கட்டடங்களின் மீது விமானத்தை மோதுவதாலோ நடக்க வேண்டும் என்பதில்லை. வெளியே இருந்துகொண்டே இணையம் மூலமாக சேவை மறுப்பு (Denial Of Service) குளறுபடிகளை நடத்தி, அமெரிக்காவை மண்டியிடவைக்க முடியும். மொத்தத்தில், அமெரிக்காவுக்கு இணையம் என்பது வரமாகவும் சாபமாகவும் ஒரே நேரத்தில் மாறிவிட்டுஇருக்கிறது.

அதனாலேயே 'PRISM’ திட்டம் மூலம் அமெரிக்கா தன் நலனைக் காத்துக்கொள்வதாகச் சொல்ல, அது அமெரிக்கக் குடிமக்களிடையே பலத்த அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, இந்த 'PRISM’ திட்டம், எட்வர் ஸ்னோடன் எல்லாமே NSA  அமைப்பு நடத்தும் மெகா நாடகம் என்ற விவாதம் மற்றொரு கோணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி, PRISM திட்டத்தைவிடவும் ஆழமான, மிக ஆபத்தான திட்டங்களை நடத்திவருகிறது NSA அமைப்பு. இந்தத் திட்டங்களில் பணிபுரியும் எவராவது Whistle Blower ஆக மாறிவிடக் கூடாது என்பதற்காக ஸ்னோடனை இப்படி நடிக்கவைத்திருக்கிறார்கள். ஒன்றுமே இல்லாத PRISM திட்டத்தைப் பற்றிச் சொன்னதற்கே இவ்வளவு என்றால், பெரிய திட்டங்களில் பணிபுரிபவர்கள் அச்சத்தில் வாயே திறக்க மாட்டார்கள் என்றெல்லாம் போகிறது மேற்படி விவாதம்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதைப் போல, இந்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அது என்னவெனில், சுமார்

அறிவிழி

1,000 கோடி செலவில் தேசிய இணைய ஒருங்கிணைப்பு மையம் (National Cyber Coordination Center )  என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி, அந்த அமைப்பு இந்தியாவின் இன்டர்நெட் போக்குவரத்தை ஸ்கேனிங் செய்து தகவல் திரட்டப்போவதாக அறிவித்திருக்கிறது. இது எவ்வளவு தூரம் பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியவில்லை.

என் சந்தேகத்துக்கான காரணத்தை அடுத்த வாரம் விவரிக்கிறேன்.

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism