Published:Updated:

ஆறாம் திணை - 41

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 41

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

“ஒரு வாரிசு வந்தா போதும் தாயி... வீட்டை வித்துக் காசு எடுத்துட்டேன். அந்த டெஸ்ட் டியூப்ல கருத்தரிச்சிரலாம்ல... பார்த்துச் சொல்லும்மா!'' என உடைந்த குரலுடன் கருத்தரிப்பு உதவி மையங்களில் கண்ணீருடன் காத்திருக்கும் ஏழைத் தம்பதியரும், ''இன்னும் நாலஞ்சு நாள்ல ஓவுலேஷன் டேட் வரலாம்னு நினைக்கிறேன். நாம ஒண்ணா இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார்'' என மனைவி அலைபேசியில் அழைக்க, ''ம்ம்ம்... ஸாரி டியர்... க்ளையன்ட் சைட் டெஸ்ட்டிங் போயிட்டு இருக்கு. என்னால இப்போ உறுதியா சொல்ல முடியலையே... கடைசி நேரத்துல அடிச்சுப்பிடிச்சாவது வந்துடு றேம்மா!'' என வருத்தத்துடன் தகவல் சொல்லும் கணவனுமாக நகர்ப்புறத் தம்பதியரும்... இப்போது இந்தியாவில் அதிகம்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஆண்களிடம் சராசரியாக ஒரு மில்லிக்கு 60 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம்போய், இப்போது கிட்டத்தட்ட 20 மில்லியன்தான் இருப்பதாகப் பயமுறுத்துகிறது டெல்லியில் இயங்கும் அகில இந்திய மருத்துவக் கழகக் குறிப்பு. எண்ணிக்கை மட்டுமல்ல, விந்து அணுக்களின் இயக்கம், அதன் உருவம் எல்லாம்கூடக் குறைந்தும் சிதைந்தும்வருவதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. என்ன காரணம்? ஒருபக்கம் நகரமயமாக்கம் தரும் வாழ்வியல் நெருக்கடி, மகிழ்ச்சியை மறந்துபோய் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும் மனம், விஷத் துணுக்குகளை அலங்கரித்துச் சந்தை விற்பனைக்குக் கொண்டுவரும் அபாய உணவுகள், காற்றில், தண்ணீரில் எனச் சூழலில் கசிந்து நிற்கும் பல்வேறு ரசாயனங்கள்... இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து, நிறையப் பேருக்குக் கருத்தரிப்பு என்பது காதலில் நிகழாமல், கண்ணாடிக் குடுவையில் நிகழ்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறாம் திணை - 41

தாலேட்டுகள்... பிளாஸ்டிக்குகளை வளைத்து, நெளித்துச் செய்யப் பயன்படுத்தும் ஒரு ரசாயனம். பிளாஸ்டிக்கில் மட்டுமல்ல... அன்றாடம் சாப்பிடும் வழுவழு கோட்டிங் போட்ட பெருவாரி மாத்திரை மருந்துகள், குக்கர் கேஸ்கட், குளிர் உணவு களைச் சூடாக்க உதவும் மைக்ரோவேவ் ஓவனின் பிளாஸ்டிக் பாத்திரம், காரின் உள்புற பிளாஸ்டிக்குகள்... இப்படி எத்திக்கிலும் எகிறிக்கிடக்கிறது பிளாஸ்டிக்கின் பயன்பாடு. இந்த தாலேட்டுகள் பிளாஸ்டிக்கோடு கலந்துசெய்யப்பட்டாலும் சூட்டில், நெளிசல், உடைசலில் முதலில் இது காற்றில் கசியத் துவங்கிவிடும். புது காருக்குள் வரும் வாடை, புது பெயின்ட் அடித்துப் பூட்டியிருந்த வீட்டினுள் வரும் வாடை... பெரும்பாலும் இந்த தாலேட் கசிவினால்தான். இந்த தாலேட் விந்து அணுக் குறைவை உண்டாக்கும்; விந்து உற்பத்தி செய்யும் ஆண் சினைப் பையின் செயல்திறனைக் குறைக்கக்கூடும் என நவீன ஆய்வு கள் உறுதிபடக் கூறுகின்றன. பெண்களுக்கோ, கூடுதலாக அவர்கள் பயன்படுத்தும் அழகூட்டிகளில், குறிப்பாக நகப்பூச்சு, லிப்ஸ்டிக், முகப்பொலிவு க்ரீம் கள் என எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் தாலேட்டுகள், குறைப்பிரசவம், சினைப்பை நீர்க்கட்டிகள் என ஏகமான சிக்கல்களை உருவாக்குகின்றன். விளைவு? முன்னர் மணியடித்ததுபோல மாதாமாதம் வந்துகொண்டு இருந்த மாதவிடாயை, இப்போது  வருடத்துக்கு ஏறத்தாழ 706 மில்லியன் டாலர் செலவழித்து வரவைக்க வேண்டியிருக்கிறது. ஆம் நண்பர் களே... முன்னரெல்லாம் எப்போதோ எங்கோ கேள்விப்பட்ட பாலிசிஸ்டிக் ஓவரி சிக்கல், இப்போது மிகப் பெரும்பாலான இளம் மகளிரிடம் உள்ளது.

ஆறாம் திணை - 41

கொஞ்சம் கீரை, கொஞ்சம் பழங்கள், கொஞ்சம் மூச்சு/உடற்பயிற்சி ஆண்களிடம் விந்தணுக்களை உயர்த்தவும், பெண்ணில் இந்த சினைப்பை நீர்க்கட்டியைத் தடுக்கவும் பெரிதும் உதவும். தேவை கொஞ்சம் அக்கறை மட்டுமே. ஹை கிளைசிமிக் தன்மைகொண்ட பாலீஷ் போட்ட பச்சரிசி, குளூட்டன் சேர்த்த கோதுமை மாவு இல்லாத சமையல் வேண்டும். மாப்பிள்ளை சம்பாவில் சோறாக்கி, முருங்கைக்காய் சாம்பா ரும், பசலைக்கீரை பாசிப்பயறுக் கூட்டும், மாதுளை பழச்சாறும் செய்து சாப்பிடுவது விந்தணுக்கள் எண்ணிக்கையை உயர்த்தும். விந்து அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்த 'வெல்வட் பீன்’ எனும் பூனைக்காலி விதை, பாதிக்கப்பட்ட செர்டோலி செல்களைக்கூடச் சீர்படுத்தும் சாதாரண நெருஞ்சில் முள், வயல் வரப்பில் களையாய் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி விதை என எளிய சித்த மருந்துகள் ஏராளமாய் நம் மரபில் உண்டு. அவற்றில் பல நம் பாட்டிக் கும் தாத்தாவுக்குமே தெரியும். அதையெல்லாம் தொலைத்துவிட்டு, 'ஆண்மைக் குறைவா..? ஆண் கரடியின் வலது கால் பெருவிரல், காண்டாமிருகக் கொம்பு, சிட்டுக் குருவி லேகியம் என யோசிப்பது முழு உட்டாலக்கடி.

சினைப்பை நீர்க்கட்டிகளால், திடீரென உடல் பெருத்து, மாதவிடாய் வராமல், லேசாக மீசை தாடி வந்து சங்கடப்படும் பெண்ணுக்கு, சோற்றுக் கற்றாழையும், வெந்தயமும், பூண்டும், பனை வெல்லமும் சேர்த்துக் கிண்டிய களி உணவு மிக விரைவில் தீர்வு தரும். தினை, கம்பு, சோளம், வரகரிசி முதலான லோ கிளைசிமிக் தன்மையுடைய சிறுதானிய உணவுகளும், ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் உள்ள நம்ம மலபார் குடம் புளியும் உடல் எடையை ஓரளவுக்குக் குறைக்க உதவும். இந்த மாதிரியான உணவுகளைக் கருத்தரிப்பு பரிசோதனைக்காக மருத்துவமனையில் காத்திருக்கும் நேரத்தின்போது தேடாமல்,  வளரிளம் பருவத்திலேயே பழக்கப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். 'களியா... அய்ய கை எல்லாம் ஒட்டுமே. பப்பாளி மட்டும் வேணாம்ப்பா!’ எனச் சொல்லும் பெண் குழந்தைகளுக்கு, உளுந் தங்களி ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை உரமேற்றி மாதவிடாயைச் சீர்படுத்துவதுபோல, பப்பாளி யின் பாலிஃபீனாலும் வைட்டமினும் கருப் பையை வலுவாக்கும் எனச் சொல்லித் திருத் துவது, பெற்றோரின் அதிஅவசியமான கடமை!

'நீருக்குள் நிற்கும்போதும்கூட வியர்க்கின்றது’ எனச் சிலாகிக்கும் காதல் சமீபமாக இல்லை. 'அயித்தயும் மாமனும் சுகம்தானா?’ என இப்போது மாமன் மகள்கள் கரிசனமாகப் பாடுவதில்லை. 'எதற்கு வம்பு?’ எனக் காதலை கசின் சிஸ்டரிடம் காட்டுவதும் இல்லை. உலா போகும் நிலா பார்த்துக் கனாக் காணும் கற்பனை எல்லாம் இப்போதைய காதலில் வற்றிப்போய், 'சரியா வரலைடி... அதான் ரிலேஷன்ஷிப் பிரேக் பண்ணிட்டேன்!’ எனக் காதலைப் பங்குச் சந்தையில் மாற்றிவிட்டுப்போகும் நவீன நோய் பரவி வருகிறது. கூடவே வெற்றிலை, வெண் பூசணி, வாழைப்பழம், சோற்றுக் கற்றாழை எனக் கருத்தரிக்க உதவும் பல மரபு உணவுகளும்கூட மறந்து போனதில், காதல் மாத்திரைகளும் கருத்தரிப்பு மருத்துவமும் மட்டும் வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன!

- பரிமாறுவேன்...