Published:Updated:

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

மறக்கவே நினைக்கிறேன்

மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
##~##

ணாகப் பிறப்பவர்கள் என்னவெல்லாம் ஆக முடியும்? அப்பாவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, எதிரியாக, துரோகியாக, பைத்தியக்காரனாக... முடிந்தால் தலைவனாக! அதே போல் பெண்ணாகப் பிறக்கிறவர்கள்? மகளாக, அம்மாவாக, அக்காவாக, தங்கையாக, அண்ணியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக, முடிந்தால் தெய்வமாக!

சரி... அரவாணியாகப் பிறக்கிறவர்கள்?

தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாப்புக்கு அருகில் உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் அன்று ஒரு பிரமாண்ட விழா. அந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக நிறைய பள்ளிகளிலிருந்து மாணவ-மாணவிகள் குழுமியிருந்தார்கள். எப்போதும் எனக்குப் பிடித்தமான, 'கெடைக்கல... கெடைக்கல... பொண்ணு ஒண்ணும் கெடைக்கல...’ என்ற பாடலுக்கு லாரன்ஸாக வாரியளை வைத்துக்கொண்டு வளைந்து நெளிந்து ஆடி முடித்துக் கீழே இறங்கித் தண்ணீர் பாக்கெட்டால் முகத்தைக் கழுவிக்கொண்டிருந்தேன். திடீரென்று விசில் சத்தமும் கைத் தட்டலும் காதைக் கிழிக்க, திரும்பிப் பார்த்தால் அப்படியே 'படையப்பா’ நீலாம்பரி சாயலில் தகதகவென பரத நாட்டிய உடையோடும் நளினத்தோடும் ஒரு பெண் மேடை ஏறினாள்.

'மின்சாரப் பூவே... பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்’ பாட்டுக்கு அவள் ஆடத் தொடங்க... அந்த நடன நளினத்திலும் அவள் காட்டிய முகபாவனைகளையும் பார்ப்பதற்குப் பித்துப்பிடித்தது போலிருந்தது எங்களுக்கு. பாடலின் இடையே ரஜினி பாடுவதுபோல வரும்போதெல்லாம், 'தலைவரை வரச் சொல்லு... தலைவா எங்கே? வா தலைவா... தலைவா...’ என்று கூட்டம் கத்திக் கிழித்தது. 'யாராவது ஆடத் தெரிஞ்ச பையன் ரஜினியா மேலே போங்களேன்ப்பா... சூப்பரா இருக்கும்’ என்று விழா அமைப்பாளர்களே சொல்ல... 'எங்க லாரன்ஸ்தான் இன்னைக்கு ரஜினி’ என்று நண்பர்கள் அலேக்காக என்னைத் தூக்கி மேடைக்கு ஏற்றிவிட்டார்கள்.

மறக்கவே நினைக்கிறேன்

நிஜமாகவே அந்தப் பெண் நீலாம்பரியாக அவ்வளவு ஆவேசமாக ஆடிக்கொண்டிருக்க, நான் உடனே 'படையப்பா’வாக மாற வேண்டிய கட்டாயம். வேக வேகமாகச் சட்டை பட்டன்களைக் கழட்டி, முடிகளைக் கோதிவிட்டு, முன்னாடி பின்னாடி இரண்டு நடை போட்டு,

'வெண்ணிலவைத் தட்டித் தட்டி
செய்துவைத்த சிற்பமொன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல
விஷமென்று கண்டேன்’
என்ற சரண வரிகளில் சடாரென முழு ரஜினியாக மாறி, அந்தப் பெண்ணின் விரல்களைப் பற்றியபோது எனக்கு உடல் சிலிர்த்தது. கூட்டம் இன்னும் கத்தக் கத்த... அவள் ஆட்டத்தில் சூடு பறந்தது. கடைசியாகப் பாடல் முடியும் தருணத்தில் சொல்லிவைத்தாற்போல மொத்தக் கூட்டமும் அந்தப் பெண்ணைப் பார்த்து, 'கிஸ் குடு... தலைவனுக்கு முத்தம் குடு... கிஸ் குடு...’ என்று கத்த, அந்தப் பெண் தயங்கித் தயங்கி கூட்டத்தையும் என்னையும் பார்த்தபடி நின்றாள். அந்த நொடி எதுவும் யோசிக்காமல், அந்தப் பெண்ணின் வலது கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டேன்.

அது அவள் வாங்கிய முதல் முத்தமாக இருக்க வேண்டும். அவ்வளவு வெட்கத்துடன் தன் கால் சலங்கைகள் தெறிக்க மேடையை விட்டு அவள் ஓடும்போது கூட்டம் ஆர்ப்பரித்து அடங்கியது. கீழே வந்து தேடினேன். அவள் அந்தப் பக்கம் நின்றாள். நான் இந்தப் பக்கம் நின்றேன். அவள் என்னைப் பார்த்து முறைக்க, நான் அவளைப் பார்த்துச் சிரிக்க, அந்தப் புள்ளியில் அவளுக்கோ, எனக்கோ ஒரு முதல் காதல் கதை தொடங்குவதற்கான எல்லா அறிகுறி களும் அழகாக, அப்பட்டமாகக் காற்றில் கசிந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் விழா அமைப் பாளர்கள் மேடையில் கலைநிகழ்ச்சி நடத்திய மாணவ-மாணவிகளுக்குப் பரிசு வழங்க அழைத்தார்கள்.

''படையப்பாவாக மேடையேறிப் பட்டை யைக் கிளப்பி அழகான நீலாம்பரி கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்ட மாணவர் மாரிசெல்வம் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம். அப்படியே... எத்தனை கதாநாயகி வந்தாலும் எங்க நீலாம்பரிக்கு ஈடாகுமா என்பதைப் போல, அப்படியே அச்சுஅசல் ஒரு பெண்ணைப் போல, அந்த நீலாம்பரியைப் போலவே அவ்வளவு நளினத்துடன் பரதநாட்டியம் ஆடி படையப்பா வின் ஆசை முத்தத்தைப் பரிசாக வாங்கிய மாணவர் கார்த்தி அவர்களையும் மேடைக்கு அழைக்கிறோம்'' என்று அவர்கள் ஆரவாரமாகச் சொல்லி முடிக்க, 'புளிச்’ என்று என் முகத்தில் எச்சமிட்டுப் பறந்தது என் மனபட்சி!

நான் ஆசையாக, அழுத்தமாக முத்தமிட்டது, கார்த்தி என்ற ஒரு பையன் என்று தெரிந்ததும் கூனிக் குறுகிவிட்டேன். கசிந்துகொண்டிருந்த காதல் கதையில் நண்பர்கள் கேலியால் மண்ணை யும் கல்லையும் அள்ளிப்போட, அந்த கார்த்தி மேடை ஏறுவதற்குள் வேகமாகப் போய் என் பரிசை வாங்கிக்கொண்டு ஓடி வந்துவிட்டேன். 'இனிமேட்டு ஒரு நிமிஷம் அந்த மேடையில நின்னாலும் அது அந்த ஆறுபடையப்பனுக்கு அவ்வளவு அவமானம்’ என்று நினைத்தபடி நண்பர்களிடம் சொல்லிவிட்டு, ஓட்டமும் நடையுமாகக் கிளம்பி அலைந்து திரிந்தேன்.

ராஜ் தியேட்டர் பக்கத்தில் போகையில், ஒரு பெண் சைக்கிளில் வேகமாக வந்து என்னை மறித்து நிறுத்தினாள். வேற யாரு..? அந்த 'நீலாம்பரி’ கார்த்திதான்!

''வீடா... ஹாஸ்டலா? எந்தப் பக்கம்?''''ஹாஸ்டல்... டூவிபுரம் நாலாவது தெரு.''

''வா... அதைத் தாண்டி ரயில் ரோடுகிட்டதான் என் வீடு!'' - என்ன சொல்வதென்று தெரியாமல் பின்னால் ஏறி உட்கார்ந்துகொண்டேன்.

''எதுக்கு இப்படிப் புடைவை எதையும் கழட்டாமலே, பொம்பள மாதிரி அப்படியே போற?''

''இல்ல... எங்க அம்மாகிட்ட போய்க் காட்டணும். நீ லாரன்ஸ் மாதிரி, ரஜினி மாதிரி லாம் நல்லா ஆடுன!''

''நீயும்தான். ஆமா, ஒரு ஆம்பளைப் பையனா இருந்துக்கிட்டு, எப்படி இப்படிப் பரத நாட்டியம் கத்துக்கிட்ட?''

'' 'படையப்பா’ படம் பார்த்து!''

''படம் பார்த்தா?''

''ஆமா, எனக்கு பொம்பளைங்க மாதிரி ஆடுறதுன்னா, சின்ன வயசுல இருந்தே ரொம்பப் பிடிக்கும். டி.வி-யைப் பார்த்து அப்படியே ஆடிருவேன்!''

'உனக்கு எல்லாருக்கும் முன்னாடி முத்தம் குடுத்துட்டேன். தப்பா நினைச்சுக்காத. ஸாரி... சும்மா, ஜாலியாக் குடுக்கணும்னு தோணுச்சு. அதான் கொடுத்துட்டேன்!''

''ஏன் தோணுச்சி? நான் பொம்பளப் பிள்ளைனு நினைச்சுத்தான கொடுத்த!''

''ஐயையோ... அதெல்லாம் இல்ல. நீ ஆம்பளைனு எனக்கு முன்னாடியே தெரியும்!''

''பொய் சொல்லாத... முத்தத்த வாங்குன எனக்குத்தான தெரியும், நீ என்ன நினைச்சிக் கொடுத்தேனு!'  

மறக்கவே நினைக்கிறேன்

அப்படியே ஒரு பெண்ணைப் போலவே அவ்வளவு நளினத்தோடு அவன் பேசிக்கொண்டு வந்தது ஆரம்பத்தில் எனக்கு அவ்வளவு பயமாக இருந்தது. அன்றோடு எனக்கும் அவனுக்குமான உறவு முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன். ஆனால், மறுநாளே என்னைப் பார்க்க விடுதிக்கு வந்துவிட்டான். வந்தவன் என்னிடம் ரொம்ப நாள் பழகியவன்போல ஏதாவது பேசுவான். பேசும்போது அவன் உடல் அசைவினை எல்லாரும் அப்படி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.

'இனி, இங்க வராத கார்த்தி. எங்க வார்டன் ரொம்பத் திட்டுறாரு’ என்று பொய்கூடச் சொல்லிப் பார்த்தேன். ஆனாலும், அவன் விடுவதாயில்லை. தினமும் வருவான். வரும்போது வீட்டில் செய்த பண்டங்களை எல்லாம் எடுத்துவந்து கொடுப்பான். அவன் வந்தாலே போதும், விடுதியில் இருக்கும் மற்ற மாணவர்கள் எல்லாரும் அவ்வளவு கேலி பேசுவார்கள். 'என்ன கார்த்தி... இன்னைக்கு மாமனுக்கு என்ன கொண்டுவந்துருக்க?’ என்று அவர்கள் நக்கலாகக் கேட்டால், எதுவும் பேசாமல் சும்மா சிரித்துக்கொண்டு நிற்பான். 'கார்த்தி சிரிப்பப் பார்த்தா, அப்படியே கரகாட்டக்காரி கனகா மாரி இருக்குல்லா’ என்று சொன் னால், எதுவும் சொல்லாமல் வெட் கப்பட்டு நெளிவான். 'கார்த்தி நீ மட்டும் பொம்பளையாப் பொறந்திருந்தியோ, நிச்சயமா சினிமா நடிகைதான்’ என்று மட்டும் யாராவது சொல்லிவிட்டால் போதும், எந்த இடமென்றும் பார்க்க மாட்டான்... அவர்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கலகலவென அப்படிச் சிரிப்பான் கார்த்தி.

சில நாட்கள் அவன் வீட்டில் அம்மா-அப்பா இல்லாத நேரங்க ளில் வலுக்கட்டாயமாக அழைத்துப் போய் அவனே காபி போட்டு ஒரு பெண்ணைப்போல ஆடி அசைந்து வந்து, 'யார் எங்க வீட்டுக்கு வந்தாலும் என் தங்கச்சி இப்படித்தான் காபி குடுப்பா’ என்று சொல்லி காபியை நீட்டுவான். திடீரென டேப்ரிக்கார்டரில் சினிமா ஜோடி பாடல்களைப் போட்டு ஆடுவதற்கு அழைப்பான். அவன் விரல்களைப் பற்றி ஆடும்போது, எந்தப் பாட்டுக்கு ஆடுகிறோமோ, அந்தப் பாட்டில் ஆடிய நடிகையின் விரலையே பற்றி நான் ஆடுவதுபோல் இருக்கும். கொஞ்ச நாட்கள்தான் பழகினாலும், பழகப் பழக... எனக்கு அவனைப் பிடித்திருந் தது. காரணம், அந்த நாட்களில் ஏதோ ஒரு புள்ளியில் எங்களுக்குள் ஓர் அழகான சினேகம் நிச்சயமாகத் தொடங்கியிருந்தது.  

ராஜாஜி பார்க்கில் வைத்து எத்தனை நாள், எவ்வளவு கதைகள் அழுதபடி சொல்லியிருக் கிறான் கார்த்தி. தன் தங்கச்சி உடைகள் மீது பிரியப்பட்டு, அதில் தனக்குப் பிடித்தமான உடை களை ஆசையாக யாருக்கும் தெரியாமல் எடுத்து ஒளித்துவைத்ததற்காக அம்மா அவன் காலில் சூடு வைத்தது, பள்ளியில் நோட்டுப் புத்தகங்களில் எல்லாம் கார்த்தி என்ற தன் பெயருக்குப் பதிலாக கார்த்திகா என்று எழுதிவைத்ததற்காகவும், பெண் கள் பாத்ரூமுக்குள் போனதற்காகவும் ஹெட்மாஸ்ட ரும், ட்ரில் மாஸ்டரும் ஒருநாள் முழுக்க அடித்துத் துவைத்தது, ஊரிலிருந்து வந்திருந்த பாட்டி முன்னால் அப்பாவிடம் அம்மா சண்டை போடுவதுபோல, அப்பாவை அம்மா கொஞ்சு வதைப் போல நடித்துக் காண்பித்த தற்காக, அப்பா அவனைத் தலைகீழா கத் தொங்கவிட்டது என ஒவ்வொரு நாளும் வந்து ஒவ்வொரு கதை சொல்லி, ஓர் அழகான பெண்ணைப் போல அப்படிச் சிரிப்பான் கார்த்தி. அந்த நேரத்தில் அவனை ஆசையாக கார்த்திகா என்று கூப்பிட வேண்டும் போலிருக்கும் எனக்கு. அப்படிக் கூப்பிட்டால் எங்கே கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துவிடுவானோ என்ற பயத்தில் கூப்பிட்டதில்லை.

ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் என்னைத் தேடி என் அக்கா வந்திருப்பதாகச் சொன்னார்கள். 'அக்காவா... இங்கேயா?’ என்று பதறி ஓடினால், அப்படியே அச்சுஅசல் ஒரு பெண்ணைப் போல அலங்கரித்துக் கொண்டு கையில் பெரிய பையோடு கார்த்தி பள்ளிக்கூட வாசலில் நின்றிருந்தான். பார்த்தவுடன் அவ்வளவு கடுப்பாகிவிட்டது எனக்கு. நான் திட்டத் தொடங்குவதற்குள்ளாகவே பொலபொலவெனக் கண்ணீர் வடித்துவிட்டான் அவன். அழுதபடியே சொன்னான்...

''எங்கம்மா, அப்பா, தங்கச்சி எல்லாரும் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குப் போயிட்டாங்க!''

''அதனால என்னடா?''

''போகும்போது என்ன சொல்லிட்டுப் போனாங் கன்னு தெரியுமா?''

''என்ன சொல்லிட்டுப் போனாங்க?''

''நாங்க வர்றதுக்குள்ள எங்கேயாவது ஓடிரு. இல்ல ரயில்ல விழுந்தாவது செத்துரு. திரும்பி வரும் போது ஊர்ல மட்டும் இருந்த, நாங்களே உன்னை விஷம்வெச்சிக் கொன்னுருவோம். உன் பாவத்தக் கழுவுறதுக்குத்தான் நாங்க கோயிலுக்கே போறோம்னு சொல்லிட்டு, கைல ஆயிரம் ரூபாயும் குடுத்துட்டுப் போயிருக்காங்க!''

மறக்கவே நினைக்கிறேன்

அப்படியே நொறுங்கிவிட்டேன். ஆணாகப் பிறந்து, பெண்ணாக வாழ நினைக்கும் இவன் இப்போதைக்குச் சாக வேண்டுமா... வாழ வேண்டுமா? சாவதென்றால் ஏன் சாக வேண்டும்? வாழ்ந்தால் எங்கு வாழ வேண்டும்? எவ்வளவு யோசித்தும் எதுவுமே புரியாமல் அவன் அழுவதை, கதறுவதை வேடிக்கை பார்ப்பது அவ்வளவு கொடூரமாக இருந் தது எனக்கு.

''இப்ப என்ன பண்ணப்போற?''

''எங்கேயாச்சும் போகப்போறேன்!''

''பேசாம கொஞ்ச நாளைக்கு உங்க சொந்தக்காரங்க யார் வீட்லயாவது போய் இரு!''

''அங்கல்லாம் நான் போனா, எங்க அம்மா-அப்பா செத்துருவாங்கடா!''

''அப்படின்னா எங்கேதான் போவ?''

''கண்டிப்பா என்னை மாதிரி எங்கேயாச்சும் நிறையப் பேர் இருப்பாங்க. அவங்களைத் தேடிப் போறேன். நீ என்கூட பஸ் ஸ்டாண்டு வரைக்கும் வர்றியா மாரி?''

''எப்ப திரும்ப வருவ?''

''தெரியலடா!''

அது மதுரை பஸ் என்று நினைக்கிறேன். அதில் தான் ஏறினான். இன்னுமென்ன ஏறினான்..? 'ஏறினாள்’ என் கார்த்திகா!

பஸ் கிளம்பும்போது அவசரமாக என்னை உள்ளே கூப்பிட்டு எந்தக் கூச்சமும் இல்லாமல் யாருக்கும் துளியும் பயப்படாமல் நான் கொடுத்த முத்தத்தை அதே வலது கன்னத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டு, சிரித்தபடி மறைந்துபோனாள் 'நீலாம்பரி’ கார்த்திகா. அன்றிலிருந்து பத்து வருடங்களாக போகிற ரயிலில் பிச்சை எடுக்கிற, அதிவேக சாலைகளில் கையை நீட்டி மறிக்கிற, ஏதாவது காவல் நிலையத்தின் வாசலில் எப்போதும் காத்திருக்கிற, கிராமத்துத் திருவிழா மேடைகளில் நயன் தாராவாக ஆடுகிற எத்தனையோ திருநங்கைகளின் முகத்தில் கார்த்திகாவைத் தேடி அலைந்தபடிதான் இருந்தேன்.

கடைசியாக 'கற்றது தமிழ்’ திரைப்படம் வெளியான அன்று தியேட்டர் ரவுண்ட்ஸுக்காக தூத்துக்குடி போனபோது, கார்த்திகா வீட்டுக்குப் போயிருந்தேன். அவளுடைய அம்மாவும் அப்பாவும்தான் இருந்தார்கள். என்னை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. 'கார்த்தி’யின் நண்பன் என்று சொல்லித்தான் விசாரித்தேன். கார்த்தி என்ற பெயரைக் கேட்டதுமே அவர்கள் கதறி அழத்தொடங்கிவிட்டார்கள். அப்படியே நிமிர்ந்து பார்த்தேன். வாசலில் பள்ளிச் சீருடையில் இருந்த கார்த்தியின் புகைப்படத்துக்கு ஒரு பெரிய மாலை போட்டிருந்தார்கள்.

கார்த்தி இறந்துவிட்டான். அது எனக்கு எப்பவோ தெரியும். என்னோட கார்த்திகா எங்கே போனாள்... அதைச் சொல்லுங்க..?

- இன்னும் மறக்கலாம்...